மகளிர்பக்கம்
அல்லாஹ்வின் உத்தரவுப்படி ஹள்ரத் அலீ ( ரலி )அவர்களுக்கும் பாத்திமா ( ரலி )அவர்களுக்கும் திருமணம் நடத்த ஏற்பாடாயிற்று .
அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹள்ரத் அலீ ( ரலி )அவர்களை அழைத்து“திருமணத்திற்கு வேண்டிய பொருள் உள்ளதா உம்மிடம் ?”என்று வினவினார்கள் .
“என்னிடம் குதிரை ஒன்றும் ஐந்து திர்ஹம் மதிப்புள்ள இரும்பு அங்கி ஒன்றும் வாள் ஒன்றும் ஆட்டுத் தோல் ஒன்றும் போர்வை ஒன்றும் இருக்கின்றன” என்றார்கள் அலீ ( ரலி )அவர்கள் .
“வாள் உமக்கு மார்க்கப் போருக்குத் தேவைப்படுவதாகும் .ஆனால் இரும்பு அங்கி அவசியமில்லை :அதனை நீர் விற்றுவிடலாம் .ஏனெனில் கேடயத்தை விட உம்முடைய கையே நெஞ்சை நன்கு பாதுகாத்துக் கொள்ளக் கூடியதாகும்” என்றார்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் .
அவ்வாறே அலீ ( ரலி )அவர்களும் தம்மிடமிருந்த இரும்பு அங்கியை விற்றுத் திருமணச் செலவுக்குப் பணம் பெற விரும்பினர் .அலீ ( ரலி )அவர்களின் வறிய நிலையை உணர்ந்த உதுமான் ( ரலி )அவர்கள் ஐந்து திர்ஹமே மதிப்புள்ள அலீ ( ரலி )அவர்களின் இரும்பு அங்கியை ஐந்நூறு திர்ஹம் விலை கொடுத்து வாங்கினர் .அளித்த திர்ஹம் ஐந்நூறும் அலீ ( ரலி )அவர்களின் கைசேர்ந்ததும் களிகூர்ந்த உத்தமர் உதுமான் ( ரலி )அவர்கள் அலீ ( ரலி )அவர்களைப் பார்த்து ,“ இவ்வங்கியை நான் இனி எவ்வாறும் நான் செய்யலாம் அல்லவா” என வினவினர் .உதுமான் ( ரலி )அவர்கள் புதிர்போடுவதுபோல் விடுத்த வினாவைச் செவிமடுத்த அலீ ( ரலி )அவர்கள் ,“ ஐயமின்றி அது தங்களுடையதே .விரும்பிய படிச்செய்யத் தடை ஏது ?”என்றார்கள் .
உடனே உத்தமர் உதுமான் ( ரலி )அவர்கள் ,“ இவ்வங்கியை வைத்திருப்பதற்கு என்னினும் தகுந்தவர் தாங்கள்தாம் .எனவே இதனைத் தாங்களே வைத்துக் கொள்ள வேண்டும் ;என் அன்பளிப்பாய் இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்கள் .மணம் நிகழ்ந்தது ,மணம் கமழ்ந்தது .
உதுமான் ( ரலி )அவர்கள் அளித்த பணத்துடனும் வழங்கிய அங்கியுடனும் வந்த அலீ ( ரலி )அவர்கள் ,கொணர்ந்த பணத்தை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொடுத்தனர் .அவர்கள் அதனைப் பெற்று ,பிலால் அவர்களிடம் கொடுத்து திருமண விழாவிற்கான பொருள்கள் வாங்கி வரும்படிப் பணித்தனர் .அவ்வாறே வேண்டிய பொருள்களை வாங்கி வந்து சேர்ந்தனர் பிலால் .இதன் பின்னர் அல்லாஹ்வின் தூதரின் நற்றவக் கொழுந்தான பாத்திமத்துஸ் ஸஹ்ரா ( ரலி )அவர்களுக்கும் அபூதாலிபின் அருந்தவப் புதல்வரான அலீ ( ரலி )அவர்களுக்கும் எளிமையான முறையில் இனிதே திருமணம் நடந்தேறியது .அப்பொழுது பாத்திமா அவர்களுக்கு வயது பதினைந்தரை .மண்ணகமும் விண்ணகமும் ஏத்திப் போற்றும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் ஆவியன்ன அன்புமகளுக்குச் சீதனமாய் மூங்கில் கட்டில் ஒன்றும் தோல் விரிப்பு ஒன்றும் ,தோல் தலையணை ஒன்றும் ,தோல் துருத்தி ஒன்றும் ,குவளை ஒன்றும் வெள்ளிக்கடகம் இரண்டும் மட்குடமிரண்டும் அளித்து மகிழ்ந்தனர் .
மணவிழா முடிந்ததும் மக்கள் கலைந்தனர் .அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஏதோ அலுவலாய் வெளியே கிளம்பினர் .பாத்திமா அவர்கள் புதுமணப் பெண்ணாய் ,மணவுடையும் கலையாது வீட்டிலிருந்து கொண்டிருக்கும் வேளையில் வெளியில் எவரோ ஏழை ஒருவர் யாசகம் கேட்கும் குரல் அவர்களின் செவியில் விழுந்தது ,தம் வீட்டு வாயில் ஏறி ஏதாவது அளிக்கும்படிக் கெஞ்சும் அந்த ஏழையை வெறுங்கையாய் அனுப்ப பாத்திமா அவர்களின் மனம் இடந்தரவில்லை .உடனே இரப்போர்க்கு என்றும் ‘இல்லை’ என்று கூறியறியாத பாத்திமா அவர்கள் தம் தந்தையார் அன்று தான் மணவிழாவிற்கென வாங்கித்தந்த புதிய ஆடையைக் களைந்து கையில் எடுத்துக் கொண்டார்கள் .பீற்றல் நிறைந்த வேறொரு ஆடையைத் தாம் அணிந்து கொண்டு வீட்டு வாயிலில் நின்றுகொண்டிருந்த ஏழையிடம் தம்மண ஆடையை மகிழ்வுடன் அளித்து விட்டார்கள் .சற்று நேரத்திற்கெல்லாம் தந்தையார் புதல்வியைக் காண வந்தார்கள் .மணக்கோலத்தில் தாம் எடுத்துக் கொடுத்த புத்தாடையணிந்து பொலிய வேண்டிய பாத்திமா பழைய கந்தல் ஆடையொன்றை அணிந்திருப்பதைக் கண்டதும் வியந்தவர்களாய் வினவினார்கள் :
“ஏன் அம்மா !கிழிந்த ஆடை அணிந்திருக்கிறாய் ?நான் வாங்கித் தந்த புத்தாடை எங்கே ?”“ அதனை ஏழை ஒருவருக்கு வழங்கிவிட்டேன் .”
“வேறு ஏதாகிலும் கொடுத்து இருக்கக் கூடாதா ?”
“தாங்கள் தாமே பிறர்க்கு நீங்கள் வழங்கும் பொழுது உங்களிட முள்ளவற்றில் சிறப்பானதை வழங்குங்கள்” என்று கூறியுள்ளீர்கள் .அதனால்தான் நான் என்னிடமிருந்ததில் ஏற்றமானதை வழங்கினேன் .”
கண்மணி மகள் அளித்த பதில் கரும்பைப்போல் சுவைத்தது அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு .எல்லையிலா மகிழ்வால் அவர்கள் உள்ளம் பரவசமானார்கள் .