• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai    »    2014    »    Apr2014    »    திருமறைப் பக்கம்


திருமறைப் பக்கம்


அதில் சந்தேகமே இல்லை


நாம் ஒரு பொருளை வாங்கும்போது அதில் ஐயம் இருந்தால் அதனை உபயோகிக்க மாட்டோம் ! அது சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக இருந்தால் நிம்மதியாக அதனை உபயோகிப்போம் . அதனால்தான் அக்மார்க் முத்திரை குத்திய பொருளை நம்பிக்கையோடு வாங்குகிறோம் . இது மனித வழக்கு !

இதே போலத்தான் ஒரு நூல் - ஒரு வேதம் - ஒரு கடிதம் சந்தேகத்திற்குரியதாக இருந்தால் அதனைப்படிப்பதால் எந்தப் பயனும் ஏற்படாது !

ஆனால் அப்படி ஒரு நம்பிக்கையை - உத்தரவாதத்தை - உலகில் எந்த நூலுக்காவது - வேதத்துக்காவது நாம் கொடுக்க முடியுமா ? என்றால் முடியவே முடியாது !

 

தொல்காப்பியம் - திருக்குறள் - சிலப்பதிகாரம் - கம்பராமாயணம் அல்லது பழந்தமிழ் இலக்கியங்கள் ; இவற்றிலெல்லாம் இடைச் செருகல் இருப்பதாக தமிழ் ஆய்வாளர்களே ஒப்புக்கொள்கிறார்கள் .

 

இந்தியாவில் தோன்றிய பழைய வேதங்களை எடுத்துக் கொண்டால் அவற்றின் தரமும் அவ்வாறுதான் ! இதனை இன்னார்தான் எழுதினார் தெகுத்தார் என எவரும் அறுதியிட்டுக் கூற முடியாது !

           

அதேபோலத்தான் பைபிளும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது என அக்மார்க் முத்திரையைப் பெற்றதில்லை .  ஏனெனில் அது இறக்கப்பட்ட மொழியிலே இன்று பாதுகாக்கப்படவில்லை . அதுமட்டுமின்றி ஏசுவின் சீடர்கள் தொகுத்த தொகுப்பாகத்தான் அது திகழ்கிறது .

 

இன்ஜீல் எனும் பைபிளில் அதன் பாதுகாவலர்களான பாதிரிமார்களே நிறைய இடைச்செருகல் செய்து விட்டதாக குர்ஆன் உண்மையை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது .

 ஆனால் இந்த வடுக்களெல்லாம் அற்ற பரிசுத்த வேதமாக குர்ஆன் ­ ஷரீப் திகழ்கிறது !

 

            சந்தேகம் இரண்டு வகை !

 

ஒன்று : அந்தப் பொருள் நம்பகமானதா ? என்பது பற்றி ! இரண்டு : அதில் உள்ள கருத்துக்கள் நம்பத்தகுந்ததா ? என்பது பற்றி !

 

தற்காலத்தில் ஓர் எழுத்தாளர் எழுதி , தாமே பதித்து விற்கும் நூற்களில் இடைச் செருகல் இருக்க வாய்ப்பில்லை . ஆனால் அதன் பொருளில் - கருத்தில் - சொல்ல வந்த விஷ ­ யத்தில் - நம்பகத்தன்மையை உறுதி செய்ய முடியுமா ? என்றால் முடியவே முடியாது !

 

ஏனெனில் ஒரு கருத்தை நூலில் முன்பக்கங்களில் பதிவு செய்த எழுத்தாளர் கடைசிப் பக்கங்களில் தம் கருத்துக்குத் தாமே முரண்படுவதைப் பார்க்கிறோம் !

 

30 வயதில் ஒரு கருத்தை எழுதியவர் 60 வயதில் தம் கருத்தை தாமே மறுத்து எழுதுவார் ! பக்குவமற்ற காலத்தில் ஒன்றை எழுதுவதும் - பக்குவம் பெற்ற பின் மற்றொன்றை எழுதுவதும் எழுத்தாளர்களின் வாழ்வில் மாற்ற முடியாத உண்மை !

 

ஒரு சட்டப் புத்தகத்தை எடுத்துக் கொண்டால் கூட ஒரு காலத்தில் இயற்றிய சட்டம் மற்றொரு காலத்துக்கு பொருத்தமற்றதாக மாறிவிடுகிறது !

 

அறிவியல் உண்மைகளும் அவ்வாறுதான் ! காலம்தோறும் மாற்றத்துக்கு உட்படுவதுதான் அறிவியல் நூற்கள் !

           

எனவே உலகில் எந்த நூலும் அதன் கருத்துகள் முற்றிலும் 100/100 நம்பகமானவை என அடித்துக் கூற முடியாது !

 

ஆனால் குர்ஆன் ரீஃப் மட்டும் ஆதியிலிருந்து அந்தம் வரை எந்த வித சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டதாக விளங்குகிறது .

 

அதன் கருத்துகள் , காலத்தில் மூலமான இறைவனின் பதிவாக இருப்பதால் அதில் மாற்றங்கள் என்றும் நிகழப்போவதில்லை .

 

அதனால்தான் நூற்களின் மகுடமான - வேதங்களின் தாயான - கருத்துகளின் கருவூலமான - உண்மைகளில் உறைவிடமான - குர்ஆன் ஷரீஃப் ; தொடக்கத்திலேயே முத்திரை பதித்து கம்பீரமாகக் கூறுகிறது .   அதில் சந்தேகமே இல்லை !