• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai    »    2014    »    Apr2014    »    அமுதமொழிகள்


சங்கைமிகுஷைகுநாயகம்அவர்களின்

அமுதமொழிகள்


சென்னைஅட்வகேட் கலீபா அப்துர்ரவூஃப்ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள்இல்லத்தில் நடைபெற்ற மஜ்லிஸில்ஆற்றிய அருளுரை



இறைவனை அடைவதற்கு பக்தி முக்கியமா ?அல்லது வழிபாடுகள் முக்கியமா ?என திண்டுக்கல் மஹ்பூபு சுப்ஹானி கேட்டார் .அதற்கு சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் ;இரண்டும் முக்கியம் எனக் கூறி “வழிபாடும் முக்கியம் பக்தியும் முக்கியம்” என பதிலளித்துத் தொடர்ந்தார்கள் .



வழிபாடு மட்டும் முக்கியம் என எண்ணினால் -பக்தி போய் விடும் .பக்தி மட்டும் போதுமென இருந்தால் வழிபாடு போய்விடும் .எனவே பக்தியுடன் வழிபாடும் தேவை .



வலிமார்கள் வரலாறுகளில் அவர்களைப் பின் தொடர்ந்த முரீதுகள் தங்கள் குருவின் மீது பக்தியாய் இருந்தே உயர் நிலையை அடைந்து விட்டதாக எழுதப்படுகிறதே” என மீண்டும் சுபுஹானி கேட்டார் .அதற்கு வாப்பா நாயகம் அவர்கள் ;இல்லை ,இரண்டும் முக்கியம் .உதாரணமாக ;ஷைகு இன்னதைச் செய்து வர வேண்டுமெனக் கூறுகிறார் .அப்போது அதைச் செய்து வர வேண்டும் .



பக்தியை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு ஷைகின் சொற்படி வழிப்பட்டு நடக்கவில்லையென்றால் அது சரிவருமா ?



அப்போது சென்னை பொறியாளர் முஹிய்யுத்தீன் அவர்கள் ;


பேரின்பப் பாதை” நூலில் எல்லாமே அல்லாஹ்வால் நிர்ணயிக்கப்பட்ட ஒன்று ;ஆனால் நாம் அல்லாஹ்வை அடைய முயற்சியும் செய்யவேண்டும் என எழுதப்பட்டுள்ளது .எல்லாமே நிர்ணயிக்கப்பட்ட பின் எப்படி முயற்சி செய்ய முடியும் ?என வினா எழுப்பினார் .அதற்கு சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் .



முயற்சி செய்யத்தான் வேண்டும் .உதாரணமாக :எல்லோருக்கும் அல்லாஹ் உணவுதருவான் என்பது அனைவருக்கும் தெரியும் .ஆனால் அல்லாஹ் தருவான் ....தருவான் ....என வானத்தை அண்ணாந்து பார்த்து வாய்திறந்து கொண்டிருந்தால் சாப்பாடு வாயில் வந்து விழுமா ?


ஒரு தடவை எம் பழைய சுண்ணாம்பு வீட்டில் ,கொடுக்கிற அல்லாஹ் கூரையைப் பிய்த்துக் கொண்டு தருவான் என்ற கதையைப் பேசிக் கொண்டு வீட்டில் படுத்திருக்கும்போது ..திடீரென இடையே இருந்த தூண் சாய்ந்து மேற்கூரையும் பிய்த்துக் கொண்டு விழுந்தது .நல்ல வேளை அல்லாஹ் காப்பாற்றினான் ( சிரிப்பு ).



சில சமயங்களில் அப்படி நடப்பதும் உண்டு .யாரோ ஒருவர் தன் வீட்டு வாசலில் வசதியாக ஏறுவதற்காக அருகே இருந்த படிக்கல்லை எடுத்துப்போட்டு உபயோகிக்கலாம் என எப்போதும் நினைத்து வந்தார் .ஆனால் சோம்பல் காரணமாக அதைச் செய்யாமல் விட்டுவந்தார் .ஒரு நாள் அந்தக் கல்லைத்தூக்கி வரலாமென எடுக்க முற்பட்டபோது அந்தக் கல்லுக்குக் கீழே மாணிக்கக்கல் ஒன்று அகப்பட்டதாம் .இதுதான் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுப்பது .



எனவே எப்போதும் நமக்கு முயற்சி தேவை .முயற்சி இல்லாதவன் மனிதனில்லை .எந்த நேரமும் முயற்சி எடுக்க வேண்டும் .சோம்பலாக இருக்கக் கூடாது .அல்லாஹ்விடம் கேளுங்கள் ....அல்லாஹ்விடம் கேளுங்கள் ...என நேரே அல்லாஹ்விடம் கேட்டுப் பெற முடியுமா ?



அல்லாஹ் தருவான் என்றால் ,ஒரு மனிதன் தான் தர வேண்டும் .அது அல்லாஹ் தருவது தான் .அல்லாஹ் குர்ஆன் ரீபில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி“நீங்கள் மண்ணை எறிந்தீர்கள் ;ஆனால் நீங்கள் எறியவில்லை ;நாமே எறிந்தோம்” எனஅருளுகின்றான் .



ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள் .எங்காவது நீங்கள் போய் காட்டிலோ ,கடலிலோ வழிதடுமாறி அகப்பட்டுக் கொண்டீர்களானால் “அயீனுனீயா இபாதல்லாஹ்” அல்லாஹ்வின் நல்லடியார்களே எனக்கு உதவி செய்யுங்கள் என அழைத்து உதவி தேடுங்கள் என்றார்கள் .இது வஸீலாகிவிட்ட தல்லவா ?இப்போது அடியார்களிடம் கேட்கிறோம் .அந்த இடத்தில் நமக்குத் தெரியாமல் நல்லடியார்கள் இருக்கின்றனர் என்பது புரிகிறதல்லவா ?நம் அனுபவத்திலேயே கண்டிருக்கின்றோம் .எங்காவது நாம் வழிதெரியாமல் நிற்கும் போது யாராவது ஒருவர் அங்குவருவார் ....அவர் என்ன ?ஏது ?எனக் கேட்டு வழிகாட்டுவார் .அல்லது அவர் அந்தப் பக்கத்தில் செல்லுவார் .நாமும் பின் தொடருவோம் .இப்படி எங்களுக்கு எத்தனையோ வி ­ ஷயங்கள் நடந்திருக்கின்றன .அந்தக் காலத்தில் பணியின் நிமித்தமாக பள்ளிக்கூடங்களுக்குச் செல்லும்போது பாதை தெரியாமல் திகைக்கும் நேரத்தில் யாராவது ஒருவர் அங்கு வந்து “வாருங்கள் நாங்களும் அங்குதான் செல்கிறோம்” என அழைத்துப் போவார் .



எனவே முயற்சியின்றி ஏதும் கிடைக்காது .முஹிய்யுத்தீன் !நீங்கள் கஷ்டப்பட்டுப் படித்தனால்தான் இன்று இந்த அந்தஸ்தான நிலையை அடைந்தீர்கள் !( புன்னகை )ஒரு சிலர் நன்கு முயற்சி செய்து சிறப்பாக தொழில் செய்கிறார்கள் .நன்கு முன்னேறுகின்றார்கள் .நீங்கள் அல்லாஹ் படிப்பு தரட்டும் என வாளாவிருந்திருந்தால் படிப்பு வந்து விடுமா ?அல்லாஹ் தருவான் என வெறுமனே கூறி மக்களை மடையராக்குகின்றனர் .



இப்போது ஒருவர் எழுந்து ..


அறிவு என்றால் என்ன ?என வினவினார் .அதற்கு வாப்பா நாயகம் அவர்கள் .சிரித்துக்கொண்டே ....


அறிவை எப்படி விளக்குவது ?நாங்கள் படிப்பதே அறிவுதான் !இப்போது பேசிக் கொண்டிருப்பதும் அறிவு தான் !ஆனால் அறிவு வேறு !ஞானம் வேறு !அதற்கும் ஞானம் என்றுதான் சொல்கிறார்கள் .ஆனால் அறிவுக்கும் ஞானத்துக்கும் வேறுவேறு கருத்துகள் உண்டு .அறிவு நீங்கள் படிக்கும் படிப்பு .பொதுவாக அறிவது அறிவு .இறைவனை அறிவது ஞானம் .ஏகத்துவ ஞானம் என்பது போல .ஒரு மரத்தை பொதுவாக அறியத் தொடங்கி அதன் இலை ,பாளை ,இளநீர் ,தேங்காய் என அறிந்து அதன் முலம் என்ன ?அதன் தாற்பரியம் என்ன ?என விளங்குவதே ஞானம் .டாக்டர்கள் உடலை அறிகின்றவர்கள் .ஒவ்வொரு மனிதரையும் அறிந்து வைத்திருப்பார்களா ?நோயென்றால் கண்டறிந்து அதற்கு மருந்து தருவார்கள் .ஆனால் மனிதனை முற்றுமாக அறிவது அவனது தாற்பரியத்தை அறிந்து கொள்வதாகும் .எல்லோருக்கும் அறிவு இருக்கிறது .அவரவர்கள் தாங்கள் தாற்பரியத்தை விளங்க வேண்டும் .எப்படி மனிதனாக இருக்கிறோம் என்பதை விளங்க வேண்டும் .உடலை டாக்டர்கள் அறியும் முறை வேறு .நாங்கள் அறிந்த முறை வேறு .



இப்போது சென்னை புதுக்கல்லூரிப் பேராசிரியர் குலாம் அவர்கள் ,வாப்பா !உலகில் நாம் உடலுடன் வாழும்போது ஒருவருக்கு உதவி செய்கிறோம் .அல்லது சிலரால் சிலருக்கு கெடுதிகளும் செய்ய முடிகிறது !ஆனால் ஆத்ம உலகில் அவ்வாறு உதவியோ இடையூறோ செய்ய முடியுமா என வினவினார் .அதற்கு வாப்பா நாயகம் அவர்கள் ;



ஆத்மா ஒன்றுக்கொன்று உதவி செய்யும் .சண்டைபிடிக்காது !எல்லாம் ஒற்றுமையாகத்தான் இருக்கும் என விளக்கி விட்டு மேலும் சொன்னார்கள் .ஆனால் ஒரு விஷ ­ யம் இருக்கிறது .ஆத்மா பிரியும் நேரத்தில் எந்த மனோ நிலையில் இருந்ததோ அந்த நிலையைத்தான் அங்கு அடையும் .அதாவது ;ஒருவர் மீது கடைசி வரை பகையாக இருந்து மறைகின்றான் .இங்கு அவனது மனோநிலையில் பகையேதான் இருந்து அவன் அங்குப் போனால் பகைதொடர்ந்து இருக்கும் .ஒரு பகைவன் அங்கு உண்டாகின்றான் .இரு ஆத்மாக்களுக்குமிடையே பகை இருக்கத்தான் செய்யும் .அதனால் தான் மனோநிலையை பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் .ஒருவன் ஒருவனை அடித்துக் கொன்றுவிடுகிறான் என வைத்துக் கொள்ளலாம் .அந்த ஆத்மா பலமான ஆத்மாவாக இருந்தால் இவனுக்கும் இதே மாதிரி நடத்த முயற்சி செய்யும் .இவனுக்கும் அதே நிலைவரும் .அப்படி எவ்வளவோ நடந்திருக்கிறது .அதனால்தான் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து எல்லா முஸ்லிம்களும் அன்போடு பழகி நண்பர்களாக இருந்து வரவேண்டும் .நாங்கள் கவனமாக இருந்து முழுமையான நிலையை உண்டுபண்ணிக் கொள்ள வேண்டும் .


( அமுதம் பொழியும் )