சத்தியக் கண்ணாடி, சமரசநாயகர் , மனிதர்களைஇணைக்கும் மாண்பாளர் , ஆன்மிகஅருட்தோன்றல் ,
குத்புஸ்ஸமான் ஷம்ஸுல் உஜூத் , ஜமாலிய்யா அஸ்ஸையித்
கலீல் அவ்ன் மெளலனா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்களின் அருள் மொழிகளில் ஒரு சில ...
- உலகம் உய்வுபெற, எல்லாச் சமயங்களும் வேறுபாடற, எங்கும் சாந்தியும் சமாதானமும் நிலவ, அனைத்துமொன்றே எனும் ஞானத்தை தாமடைய ஒவ்வொருவரும் முன்வரல் வேண்டும்.
- அனைத்தும் ஒன்றே எனும் ஏகத்துவ ஞானத்தைத் திறம்பட அறிபவர், சாதிபேதம், உயர்வுதாழ்வு , மதவேறுபாடு , முதலாளி - தொழிலாளிமுதலாம் வேற்றுமைகளை விட்டும் நீங்கிச் சத்திய ஒளியில் நித்தியம் ஜீவிப்பராவர்.
- உலகம் உய்வது ஞானத்தாலே , ஆதலால் ஹக்கில் ( இறைவனில் ) பூரணமான. பிரிவற்ற , ஏகதத்துவ ஞான நிலையிற்றானே உலகம் தங்கியுள்ளது .
- சக்திக்கு இனமில்லை , மதமில்லை , சாதியில்லை , நிறமில்லை , பாபமில்லை, புண்ணியமில்லை . அது தன் மயமே , தனிமயமே , ஜோதிமயமே , நிறைந்தநிலையே, கனிந்தஅருளே . எல்லாம் அதுவே , நிறைந்த நிறைவே - இதுவே ஹக் , இதுவே இறை !
- அனைத்தும் ஹக்கேயென்ற உண்மைத் தத்துவம் உங்கள் உள்ளங்களில் நிறைந்திருக்க வேண்டும் . காண்பவையாவும் , கேட்பவையாவும் , மணப்பவையாவும். உண்பவையாவும் , உணர்பவை அல்லது அனுபவிப்பவை முதல்யாவும் , மெய் , வாய், கண் , மூக்குச்செவிகளால் நாமுறுபவை யாவும் , காலநேரம் , ஆண்பெண் , ஆதிஅந்தம், இறப்புநிகழ்வு , வரவுசெலவு , சாதிமதம் , சிறுமைபெருமை , உயர்வுதாழ்வு, எஜமான்அடிமை , தெய்வம்படைப்பு , மேல்கீழ் , வானம்பூமி , இகம்பரம் , சடம்ஆவி, நிறைவுகுறைவு , பிறப்புஇறப்பு , இன்பம்துன்பம் . உறக்கம்விழிப்பு , அன்புவன்பு, முதலாம் எதிர்வுகளின்றி யாவும் நாமே எனக் கொள்ள வேண்டும் . அப்போதே நாம் பரிபூரண ஈமானுடையவராவோம் .
- ஊனாலும் உடலாலும் பொருளாலும் ஒற்றுமையைக் காட்ட வேண்டும் . மந்தமாய் இருத்தலின்றிப் பூரண மனோஎண்ணத்துடனும் சக்தியுடனும் உற்சாகத்துடனும் செயல்பட்டு வரவேண்டும் . போலி ஒற்றுமை நிலைக்காது . உள்ளம் பொருந்த ஒற்றுமையாய் இருங்கள் .
- ஒருவர் அனுபவிக்கும் இன்பத்தை அனைவரும் நுகர ஆவன செய்வது நன்மை பயக்கும் .
- நல்லவற்றையே சிந்தியுங்கள் . நல்லனவே செய்யுங்கள் . வல்லவனுக்கு இது உகந்தது.
- நல்லவற்றைச் செய்பவர்களை மற்றோர் ஊக்குவித்தல் வேண்டும் . வீணாகத்தலை போட்டு அவர்களின் ஆர்வத்தைக் கெடுத்துவிடக் கூடாது . சிலர் மூக்கு நுனியிலேயே கோபத்தை வைத்துக் கொண்டுள்ளார்கள் . சிந்தனையில்லாமல் நேர காலம் , இடம், தன்மை , உயர்வு , தாழ்வு இன்றிப் பேசி வருகிறார்கள் . இது சமூக நிம்மதியைக் குலைத்துவிடும் .
- மனித இனம் ஒரே இனம் . சாதியெனும் உயர்வு , தாழ்வு ஒழிய வேண்டும் . இதைக் கடமையாகவும் கொடுமையாகவும் கடைப்பிடிப்பவர்கள் அழிய வேண்டும் . இறைவன் மனிதனில் உயர்வு தாழ்வைப் பார்ப்பதில்லை . அதன்படி தண்டனை கொடுப்பதில்லை. மனிதனின் உள்ளத்தையே இறைவன் நோக்குகிறான் . ஒற்றுமை , சுதந்திரம், சகோதரத்துவம் மனிதனுக்குள் இருக்க வேண்டும் . மனிதனின் உள்ளம் பாற்பால் இருக்கவேண்டும் . இவனே ஜயம் பெற்றவன் .
- ஒவ்வொரு சமூகமும் அதுவே தன் கண்ணுக்குள் குத்திக் கொள்கின்றன . இதனால் பிரிவினை ஏற்பட்டுக் குழப்பங்கள் உண்டாகின்றன . இதனால்அந்தச் சமூகம் ஆபத்தையும் வேதனையையும் அடைகின்றது .
- தன்னைப் பூரணமாய்க் காண்பவனே மனிதன் . அவன் , தன்னில் மற்றவற்றையும், மற்றவற்றை தன்னிலும் காண்கிறான் .
- நம் சபை நல்ல முறையில் நடக்கவேண்டும் . நல்ல முறையில் செயல்பட்டு வாருங்கள் அதனால் மக்கள் பூரண நன்மையடைய வேண்டும் என்பதே எமது அவா. நாம்இல்லாத காலத்திலும் தௌஹீது சிறப்புடன் மிளிர வேண்டும் என்பதே எம் உயர்ந்த நோக்கமாகும் ஹக்கு அதனைப் பூர்த்தி செய்தருளுமாக .
- நாம் விரும்புவது ஓர் ஒற்றுமையான சக்திவாய்ந்த உண்மையான சமூகத்தை உயிர்ப்பிக்க வேண்டும் என்பதேயாகும் .
- இந்தியா செழிப்புற்ற நாடு , நல்லநாடு , தத்துவ ஞானத்துக்கு உகந்த நாடு ..
- ஹக்கின் ( இறையின் ) திருநாமம் எங்கும் பரவ வேண்டும் . அதற்கான வழிவகைகளைச் செய்தல் வேண்டும் . இதற்காகவே நாம் உருவம் பெற்று உதயமானோம் .
- இறந்து , மடிந்து , மருண்டு , மயங்கி இருக்கும் இதயங்களை ஹயாத்தாக்கவே (உயிர்ப்பிக்கவே ) நாம்அருவாயிருந்து உருவானோம் .