• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Islam and the West


இஸ்லாமும் மேற்கு நாடுகளும்


உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கல்வி மையத்தின்தொடக்கவிழாவின் போது (27.10.1993)
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் ஆற்றிய சொற்பொழிவு !

தமிழில் : கவிஞர்ஏம்பல் தஜம்மல் முஹம்மது


இஸ்லாமிய மறுமலர்ச்சிக்குப்பின்னால் சமய, சமுதாய, அரசியல் காரணங்கள் இருக்கின்றனஇவற்றிற்கு இடையேயுள்ள நம்முடைய மேலைப்புலன் நுகர் கலாச்சாரத்தைக் குறித்த அதிருப்தி மிக முக்கியமானதாகும் .

வாழ்க்கையின் சாதாரண இன்பங்களுக்கெல்லாம் மேலான ஒரு பேரின்பம் - மனித வாழ்க்கைக்கு ஆழ்ந்த பொருளைத் தரக்கூடிய ஏதோ ஒன்று - இஸ்லாமிய சாரத்தில் புதைந்து கிடக்கிறது. (அஃது என்னவென்று அறிந்துணர வேண்டும்). இது மட்டும் அல்லாமல் முஸ்லிம்கள் என்றாலேயே அவர்களுடைய இயல்பானதன்மையும் அடையாளமும் தீவிரவாதமே என்று ஒரு நம்பிக்கை பரவி வருகிறது .  தீவிரவாதம் முஸ்லிம்களின் ஏகபோகத்தனியுரிமை அல்ல . சில முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களிடைய காணப்படும் தீவிரவாதத்தையும் அவர்களுடைய அதீதமான கொள்கைகளையும் வைத்து மாத்திரம் நாம் இஸ்லாம் பற்றி அறிந்து கொள்ள முற்படுவதால் அதைப்பற்றிய உண்மையான ஞானம் பெறாமல் குறைபட்டு இருக்கிறோம் . தீவிரவாதம் என்பது கிறிஸ்தவ மதம் உட்பட எல்லா மதங்களிலும் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது . மிகக்கடுமையான விரோத மனப்பான்மையோடு இஸ்லாத்தைக் கணக்கிட்டு அதுவே சரியான அணுகுமுறை என்றுசிலர் எண்ணிக் கொள்கின்றனர் .


(
இஸ்லாமிய ஷரீஅத் சட்டம் கொடுமையானது –காட்டுமிராண்டித்தனமானது - அநீதியானது என்று மக்கள் எண்ணுவது மிகவும் தவறானது என்பதை நான் மீண்டும் கூறுகிறேன்.  பெரும்பாலான முஸ்லிம் மக்கள் தனிப்பட்ட முறையில் ஆழ்ந்த இறை விசுவாசிகளாக இருந்தாலும் அரசியலில் நடுத்தரமான போக்கு உடையவர்கள் தாம் . அவர்களுடையது நடுநிலையான மார்க்கம் ஆகும்.  இறைத்தூதர் முஹம்மது நபியவர்கள் எப்போதுமே தீவிரவாதத்தை வெறுத்தவரேயாவார். ஆனால் எண்பதுகளில் இஸ்லாமிய சமயமறுமலர்ச்சியைக் கண்டு ஏற்பட்ட ஐயம் இப்போது சற்றே விலகிவருகிறது . ஆனால் இந்தப் பேரலைகளுக்குப் பின்னால் உள்ள ஆன்மிக வலைகளை மேற்கு நாடுகள் புரிந்துகொள்ள அந்த மறுமலர்ச்சி வழிவகுத்து இருக்கிறது.


இஸ்லாமியர்களுக்கு இடையில் ஏற்பட்டு உள்ள இந்த மறுமலர்ச்சியை நாம் சரியாகப்புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இஸ்லாமியர்களில் பெரும்பான்மையானவர்களுடைய நம்பிக்கையை
, ஒருசிறுபான்மையினருடைய வன்முறையிலிருந்து நாம் பாகுபடுத்திப் பார்க்கவேண்டும் . வன்முறை எங்கிருந்தாலும் நாகரிகமுள்ள நன்மக்கள் அனைவரும் அதைக்கண்டிக்க வேண்டியதுதான் நண்பர்களே இஸ்லாம் மார்க்கத்தின் இயல்பு பற்றி மேற்கு நாடுகளில் மிகவும் தவறான எண்ணம் நிலவி வருகிறதென்றால் நம்முடைய கலாச்சாரமும் நாகரிகமும் இஸ்லாமிய உலகிற்குப் பட்டிருக்கக்கூடிய நன்றிக்கடன் பற்றிய அறியாமையும் அதே அளவுக்கே இருந்து வருகிறது .நாம் வழிவழியாகப் பெற்ற வரலாற்று நூல்கள் அமைந்த குறுகிய வளையம் நம்மைத் தளைப்படுத்திவிட்டது .


மத்தியஆசியாவிலிருந்து அட்லாண்டிக் கடற்கரைவரை நீண்டு கிடந்த இஸ்லாமிய உலகம் பல அறிஞர்களையும் சிந்தனையாளர்களையும் பெற்றுத்தழைத் தோங்கிய உலகமாகும். ஆனால் நாமோ இஸ்லாம் மார்க்கத்தை மேற்கு நாடுகளின் எதிரியாகக்கருதி , நமக்கு அந்நியமான கலாச்சாரமாக , சமூகமாக , வாழ்க்கை முறையினையுடையதாக எண்ணிநம் முடைய வரலாற்றுடன் அதற்குள்ளமகத்தான பொருத்தத்தைப் புறக்கணிக்கிறோம் அல்லது அழிக்கிறோம் .


எடுத்துக்காட்டாக எட்டாவது நூற்றாண்டு முதல் பதினைந்தாவது நூற்றாண்டுவரை எண்ணூறு ஆண்டு காலம்இஸ்லாமிய சமுதாயமும் கலாச்சாரமும் பெற்றிருந்த முக்கியத்துவத்தை நாம் குறைத்து மதிப்பீடு செய்துள்ளோம். இருண்டகாலக் கட்டத்திலும் மறுமலர்ச்சி தோன்றிய காலக் கட்டத்திலும் கல்வி , கலாச்சாரத்தைப் போற்றுவதிலும் பேணிக்காப்பதிலும் முஸ்லிம் ஸ்பெயினின் பங்களிப்பு கண்டறியப் பட்டுவிட்டது. ஆனால்அந்தநாடு எழுச்சியுற்ற நவீனமேலை உலகம் பின்னால் நுகர்ந்த கிரேக்க ரோமானியக் கலாச்சாரத்தின் ஒரு பொக்கிஷமாக மட்டும் திகழவில்லை . அந்தத் தொன்மையான கலாச்சாரத்தை விளக்கி , விரிவடையச்செய்தது ; மனிதன் பெருமுயற்சி செய்யும் பல்வேறு துறைகளான அறிவியல் , வானவியல் , கணிதம் , அல்ஜீப்ரா ( இதுவேஓர் அரபுச் சொல் ), சட்டம் , வரலாறு , மருத்துவம் , மருந்தியல் , பார்வையியல் , வேளாண்மை , கட்டடக்கலை , சமயவியல் , இசை ஆகியவற்றில் வலிமை வாய்ந்த , அதற்கே உரிய தனித்தன்மை வாய்ந்த பங்குப்பணியை ஆற்றியிருக்கிறது .


அவெர்ரோய்ஸ்
, அவென்ஸோர் போன்றவர்கள் கீழை நாடுகளைச் சேர்ந்த அவிசென்னா ராஸில் போன்றவர்களைப் போலவே மருத்துவ அறிவியலைப் பல பயனுள்ள வழிகளில் வளர்த்தனர் . இந்த வழிகளை ஐரோப்பியர்கள் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்திவந்தனர் இஸ்லாம் அறிவாற்றலைப் பேணி வளர்த்தது ; அறிவுத்தாகத்தை ஏற்படுத்தியது . நபிமொழியில் சொல்லப்படுவது போல ....

அறிஞர் தம் பேனாவில் இருந்து வரும் மைத்துளிகள் நெறிகாக்க தியாகிசிந்தும் குருதியிலும் புனிதம்ஆம் !

பத்தாவது நூற்றாண்டில் கார்டோவா நகரம் ஐரோப்பாவிலேயே ஆக மிக நாகரிகமான நகரமாகத் திகழ்ந்து, இந்தநாட்டிலே ஆல்ஃபிரெட் அரசர் சமையல் கலையிலே பயனற்ற பல பரிசோதனைகளைச் செய்து கொண்டு இருந்த நாட்களிலேயே ஸ்பெயின் நாடு மக்களுக்கு நூல்களைக் கொடுத்து வழங்கும் வழக்கமுள்ள நூலகங்களைப் பெற்றிருந்ததை நாம் அறிகிறோம் . அந்நாட்டு ஆட்சியாளர்களின் நூலகத்தில் இருந்த நான்கு லட்சம் புத்தகங்கள் அன்றைய ஐரோப்பாவின் அனைத்து நூலகங்களின் எண்ணிக்கையிலும் இருந்த மொத்த நூல்களின் எண்ணிக்கையை மிஞ்சியதாகும் .  இஃது எப்படி இயன்றது ? அன்றைய முஸ்லிம் உலகம் காகிதம் செய்யும் கலையை முஸ்லிம்அல்லாத பிற ஐரோப்பிய நாடுகள் கற்பதற்கு நானூறு ஆண்டுகளுக்கும் முன்னரேயே - அதைச் சீனவிடம் இருந்து முயன்றறிந்து கற்றுக் காகிதத்தைச் செய்து வந்ததனால் தான் .


நவீன ஐரோப்பா தனக்குச் சொந்தமான தென்றுபெருமைப்பட்டுக் கொள்ளும்பல பண்புகளின் தனிச்சிறப்புக்கூறுகள் முஸ்லிம் ஸ்பெயினில் இருந்துதான் வந்தன .  அரசியல் வெல்திரம் ( ராஜதந்திரம் ), வரிக்கட்டுப்பாடுகள் இல்லாத வணிகம் ( அயல்நாடுகள் வந்து வாணிகம் செய்ய ஒரு நாடு வழங்கும் காசில்லாத சலுகைக்கான ) திறந்த எல்லைகள், கல்விஆய்வின் நுட்பங்கள், மானிட வரலாற்றியல், சமூகநெறிமுறைகள், நடைமுறைவாழ்வின் நாகரிகங்கள் , மாற்றுமருத்துவ முறைகள் , மருத்துவமனைகள் ஆகியனவெல்லாம் நகரங்களுக்கெல்லாம் நகரமான கார்டோவாவிலிருந்து வந்தன. மத்தியகால இஸ்லாம் , மதச்சகிப்புத்தன்மைக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தது. யூதர்களும் கிறிஸ்துவர்களும் அவர்கள் மரபுரிமையாய்ப் பெற்ற நம்பிக்கைகளைக் கடைபிடிக்க உரிமை வழங்கப்பட்டது. ஆனால் இந்த முன் மாதிரியைத் துரதிருஷ்டவசமாக ஐரோப்பா பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றவில்லை .



நண்பர்களே வியப்பூட்டும் செய்தி என்னவென்றால் இஸ்லாம் ஐரோப்பிய சமூக வாழ்வின் ஓர் அங்கமாகப் பன்னெடுங் காலமாக இருந்து வந்திருக்கிறது ; முதலில் ஸ்பெயினில், அடுத்து பால்கனில் ,  பின்னர் பல பகுதிகளில் செய்யப்பட்ட நாகரிகத்துக்கான மிகப்பெரும் பங்களிப்பு இஸ்லாத்தின் பங்களிப்பே ஆகும்.


நாமெல்லாம் அடிக்கடித் தவறாக நினைத்துக் கொள்வது போல முற்றிலும் மேற்கு நாடுகளினுடைய பங்களிப்புஅல்ல . கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் இஸ்லாம் நம் சமூக வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கிறது.


மனித முயற்சி தொடர்புள்ள எல்லாத்துறைகளிலும் அது பின்னிப் பிணைந்திருக்கிறதுஇஸ்லாம் இன்றைய ஐரோப்பாவை உருவாக்க உதவியிருக்கிறது; இது நம் பாரம்பரியத்தின் ஒரு பகுதி ; நம்மிடமிருந்து அந்நியப்பட்ட ஒன்றல்ல .இதற்கெல்லாம் மேலாக இந்த உலகைப் புரிந்து கொண்டு அதில் வாழ்வது எப்படிஎன்று இஸ்லாம் போதிக்கிறது .


மனிதனையும் , இயற்கையையும் பிரிப்பதை , மருந்தையும் அறிவியலையும் பிரிப்பதை , மனதையும் பொருளையும் பிரிப்பதை இஸ்லாம் ஏற்பதில்லை நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள உலகையும் புலன்கடந்த நுண்ணாய்வுடனும் ஒன்றிணைந்த கருத்தோட்டத்துடனும் பார்க்கும் பான்மையைப் பேணிக்காத்து வருகிறது . இந்த நோக்கை இழந்தது தன் இன்றைய கிறிஸ்தவ சமயத்தின் மாபெரும் இழப்பு . இதை மீண்டும் பெற இஸ்லாமிய அணுகு முறைதுணை செய்கிறது .


கிறிஸ்துவ சமயத்துள்ளும் இந்த ஒன்றிணைந்த ஒருமைப்பாட்டு உணர்வு இருக்கத்தான் செய்கிறது . இவ்வுலகின் புனிதத்தன்மை , மனிதனின் பொறுப்பாண்மை பற்றிய தெளிவான உணர்வு , இயற்கைச்சூழல் பராமரிப்பில் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு ஆகியவை கிறிஸ்துவ சமயத்தில் அடித்தளத்தில் இருக்கிறது . வியத்தகு கவிஞரும் பாசுரப் படைப்பாளியுமான பதினேழாம் நூற்றாண்டைச் சார்ந்த கவிஞர் ஜார்ஜ் ஹெர்பர்ட் இசைத்தது போல ,

புல்லைப்பார்க்கும் மனிதன் தன்கண்களால் 
அதனையேபார்த்துக் கொண்டு இருக்கலாம்
ஆனால்அவன் விரும்பினால் 
அந்தப்புல்வழியாகவே சொர்க்கத்தைக்காணலாம் !

ஆனால் மேலை நாடுகள் படிப்படியாக இந்த ஒருங்கிணைந்த நோக்கை இழந்துவிட்டன. கோப்பர்நிகஸ், டேகார்ட்ஸ் போன்றவர்களாலும் ( அவர்களால் ஏற்படுத்தப்பட்ட) அறிவியல் புரட்சியினாலும் இந்த ஒருங்கிணைந்த நோக்கு பறந்து போய்விட்டது. இயற்கையைப் பற்றிய அனைத்தையும் உள்ளடக்கிய ஓர் ஆராய்ச்சி - ஒருபார்வை முறை - நம்முடைய அன்றாட நம்பிக்கைகளில் இருந்து மாய்ந்து போய்விட்டது . இந்த ஒருங்கிணைந்த நோக்கைத்திரும்பப் பெற்றால்தான் வாழ்க்கையின் உட்கருத்தை நாம் உணர முடியும் . அப்பொழுதுதான் நாம் இந்த மேலோட்டமான வாழ்க்கையை விட்டுவிட்டு உலகில் இருக்கும் அமைதியையும் அழகையும் நம் தன்னலனுக்காகச் சீர்கெடுக்காமல் இருக்க முடியும் .


இணக்கமும் எழிலும்மிக்க இந்த உலகை சமநிலை அற்றதாகவும் , குழப்பம் மிக்கதகவும் ஆக்கியுள்ளோம் . இவ்வுலகின் சூழ்ச்சிகளை மேற்கொள்ளவும் ஆதிக்கம் செலுத்தவும் நாம் கற்றுள்ளோம். கடந்த சில நூற்றாண்டுகளில் நாம் உருவாக்கி இருக்கிற இந்தப் புறஉலகம் பல வழிகளிலும் நம்முடைய வேறுபட்ட,  குழம்பிய மனநிலையைப் பிரதிபலிப்பதாகத்தான் ஆக்கியிருக்கிறது . இஃது ஒரு வருந்தத்தக்க உண்மை . மேலை நாடுகளின் கலாச்சாரம் தன்னலம்மிக்கதாகவும் சுரண்டல் மனப்பான்மை உடையதானவும் நம்முடைய சுற்றுச்சூழல் பராமரிப்புப் பொறுப்புக்களைக் காற்றில் பறக்க விடுவதாகவும் அமைந்திருக்கிறது .


இந்த உலகிற்கு மிக முக்கியமானவையான ஒருமை உணர்வு , மனிதரின் புனிதமான சூழல் பராமரிப்புப் பொறுப்பாண்மைஆன்மீகப்பண்பு ஆகியவற்றை நாம் இஸ்லாம் மார்க்கத்திலிருந்து திரும்பக் கற்றுக் கொள்ளலாம்ஆனால் உங்களில் சிலர் வழக்கமாகச் செய்வதைப் போல இப்போதும் , நான் கடந்த காலத்தில் வாழ்கிறேன் என்றும் இன்றைய வாழ்க்கையின் உண்மைகளைச் சந்திக்க மறுக்கிறேன் என்றும் என் மீது குற்றம் சாட்டுவீர்கள் . ஆனாலும் நண்பர்களே ! நான் வாதாடுவது உலகைப் பற்றி இப்போது இருப்பதை விட ஓர் அகன்ற , ஆழ்ந்த மிகக் கவனமான அணுகுமுறைக்காகத் தான் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் .


பொருளளவிலும் புலன் உணர்வுகளைக் கடந்த நுட்பமான ஆய்வு பற்றிய தத்துவஅளவிலும் நம்முடைய வாழ்க்கையைநாம் மாற்றியமைத்துக் கொள்ளவேண்டும். நாம் துறந்துவிட்ட ஒரு நெறிமுறையை - சமநிலையை நாம் திரும்பப் பெற்றாக வேண்டும். இவற்றை இழந்து இருந்தால் காலப்போக்கில் நமக்குக் கேடு பயக்குமென நான் நம்புகிறேன் .

இந்தத் தேடுதலில் இஸ்லாமியச் சிந்தனைமுறைகள் நமக்கு உதவுமென்றால்அவற்றை நாம் கற்றறியத்தான் வேண்டும் . அவற்றைக் கற்காது நாம் புறக்கணித்தால் அதன் விளைவுகள் அபாயகரமானதாக இருக்கும் .


( பேச்சு தொடரும் )