• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

உமர் ( ரலி ) புராணம்

ஆசிரியர் 
ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா 
அல்ஹாஷிமிய் நாயகம் அவர்கள் 



முதலாவதுஉதய காண்டம்



காட்சியாகிக் காட்சிப் பொருளாய்ச் 
சாட்சியாகித் தன்னி னின்று 
ஆட்சிசெய்யு மருவ னீயே 
மாட்சிமையுடை மறையோற் குப்புகழ்

கொண்டுகூட்டு :

காட்சி ஆகி காட்சிப்பொருள் ஆய் சாட்சி ஆகி தன்னில் நின்று ஆட்சி செய்யும் அருவன் நீயே மாட்சிமை உடைய மறையோனாகிய உனக்கே எல்லாம் புகழும் .


பொருள் :

காட்சியாகிக் காட்சியை உண்டு பண்ணும் காட்சிப் பொருளாகி அது யானே என்னும் சாட்சியாகித் தானாகித் தானே தன்னில் நின்று ஆட்சி புரியும் உருவற்ற அருவன் நீயே . இத்தகை மாட்சிமை யுடைய மறையோனாகிய உனக்கே புகழ் .


குறிப்பு :

தானே தான் ஆட்சியாளன் என்பதற்குத் தானே சாட்சியாய் நிற்கின்றனன்அரு : அருவமானவன்மாட்சிமை மாண்புமறையோன் : மறையையுடையோன் . அனைத்திலும்புகுந்து கலந்து மறைந்துள்ளவன் .


( இறைவாழ்த்துப் படலம் முற்றும் )


( பாடல்கள் 22)