• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

இலக்கியம்

பாட்டில் சிறந்தது தாலாட்டு
பெருங்கவிஞர் , அதிரை தாஹா மதனீ


ஒலியல் வார் மயிர் உளரினள் , கொடிச்சி 
பெருவரை மருங்கில் குறிஞ்சிபாட 
குரலும் கொள்ளாது , நிலையினும் பெயராது 
படாஅப் பைங்கண் பாடு பெற்று ஏய்யென 
மறம்புகழ் மழ களிறு உறங்கும் நாடன் ( அகம் -102- ம் பா )


மலைச்சாரல் , திணைப்புலம் , காவலுக்கு நின்றாள் கொடிச்சி , குறிஞ்சிப் பாடலைப் பாடினாள் . வீரம் விளைக்கும் யானை இன்னிசை மிதந்த அப்பாடலைக் கேட்டது. மயங்கிற்று . தின்பதற்கு விரும்பி வந்த தினைக்கதிரினை தீண்டவில்லை . அசைவற்று நின்றது . இசைத்த அப்பாடலின் இனிமையால் யானை அவ்விடத்திலேயே உறங்கிவிட்டது .

இக்கருத்தை மேற்கண்ட அகப்பாடல் குறிப்பிடுகிறது . தாய்தால் என்னும் நாவை அசைத்து இசைக்கிற பொழுது குழந்தைகேட்டு கண்ணயர்கிறது . யானைஇசை கேட்டு உறங்கியது போல .


உளவென மொழிப இசையொடு ( தொல்நூற்பா 33) தொல்காப்பியமும் இசையமுதைக் குறிப்பிடுகின்றது .


தாலாட்டிற்கு அடிப்படையாகத் திகழ்வது இசையே . இன்னிசைப்பாடல்களே என்பது புலனாகிறது . யாழ் - குழல் முதலான இசைக் கருவிகளிலிருந்து பிறந்து வரும் இனிமையை குழந்தையின் மழலைச் சொல்வென்று விடுகிறது என்கின்றார் வள்ளுவர் - இதில் இசையின் மேன்மையையும் வெளிப்படுத்துகிறார் வள்ளுவர் .


எம்மதத்தைச் சேர்ந்தவராயினும் , எம்மொழியைச் சேர்ந்தவராயினும் குழந்தையைத் தூங்கச் செய்ய இசை கலந்த இன்னிசைப் பாடல்களைப் பாடும் பழக்கத்தை மேற்கொண்டுள்ளனர் .


தாலாட்டு - பொதுவுடமைச்சொத்து . இலக்கியநயம் செறிந்த பாடல்கள் தான் தாலாட்டுப் பாடல்கள் . படிக்கவும் செய்யலாம் , தாலாட்டிலும் கேட்டு ரசிக்கலாம் . தாலாட்டு முறை தமிழகத்திற்கு மட்டுமல்லாது இசுலாமியர்களுக்கும் உரிய தனிக்கலையாகப் பரிணமிக்கிறது ஆன்மீகத்தில் உச்சம் கண்ட புலவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் இன்னிசைப் பாடல்களாகவே இனிக்கின்றன . அதனையும் மற்ற தாலாட்டுப் பாடல்களைப் போல வட்டாரப் பெண்கள் எடுத்துத் தாலாட்டுப் பாடல்களாகப் பாடினார்கள் . இன்று அம்முறைப் பரவலாகக் குறைந்து கொண்டே வருகிறது .


வாய்மொழியாக வழிவழிச் சொத்தாக மலர்ந்தது. செவ்விலக்கியமாகி தாலாட்டு - இசுலாமிய இல்லங்களில், அந்தந்த காலக்கட்டங்களில் இசுலாமியப் புலவர்களால் பாடப்பட்டு - அச்சேறாமல் வாய்மொழியாகவே பாடப்பட்டு வந்தன . தாலாட்டுப் பாட்டின் சிறப்பை எவரும் கண்டு கொள்ளவில்லை . சேகரித்துப் பாதுகாக்காமல் விட்டதால் வார்த்தைகள் சிதைந்தன .

இசுலாமியப் புலவர்கள் தங்கள் உள்ளத்தில் இடம் பெற்ற பாட்டுத் தலைவர்களையெல்லாம் தாலாட்டுப்பாடல்களில் வரைந்துள்ளனர் . அது வரலாறாகியது . மகிழ்ச்சியைத் தருதற்கு மட்டும் எழுதப்பட்டதல்ல தாலாட்டுப் பாடல்கள் . சிறந்த எண்ணங்களை உருவாக்கவும் ஒழுக்கம் , பண்பாடுகளை உயர்வாக்கவும் நோக்கமாகக் கொண்டு இசுலாமியப் புலவர்கள் தாலாட்டுப் பாடல்களை எழுதியுள்ளனர் தமிழன்னைக்கு வண்ண வண்ணமாக இலக்கிய அணிகலன்களை அணிவித்தவர்கள் முஸ்லிம் புலவர்கள்கவிஞர்கள். படைப்பிலக்கியங்களை படைபடையாகப் படைத்தளித்தவர்கள் .



முதல் மனிதர் இல்லறங்கண்டு முதல் குழந்தை பிறந்த நாளிலேயே பிறந்த முதல் இலக்கியம் தாலாட்டுப்பாடல் . அழும் பிள்ளையை அடக்கவே தாலாட்டு வந்தது என்றாலும் - தாயின் மனச்சுமையை இறக்கி வைக்கவும் உதவிற்று . தாய்மையைப் பிரிக்க முடியாத தனித்துவம் தங்கியது தாலாட்டு . தலைப்பிள்ளை பெற்றவுடன் தானே வரும் தாலாட்டு என்பது தமிழர் இலக்கணம் .

குழந்தை தாயின் ஓர் அங்கம் . தாயின் மனக்கவலை அல்லது மகிழ்ச்சி கருவில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கும் . அதனல் தான் கர்ப்பவதிப் பெண் குர்ஆனை ஓதுமாறு ஆற்றுப்படுத்திய இஸ்லாமியப் புலவர்கள் , குழந்தை வளரும் பருவத்தில் மன வளர்ச்சி பெறும் பொருட்டு பாடல்களைப் புனைந்தனர் . அது தாலாட்டில் பயனானது .

கருவில் குழந்தை ஓசை நயத்தை உணர்ந்து வளர்கின்றது . முஹிய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரஹ் ) அவர்கள் , தாயார் கருவில் சமைந்திருந்த காலத்தில் அன்னை தெடர்ந்து 17 பாகங்களை குர்ஆனிலிருந்து ஓதினார்களாம் . குழந்தை குருவினிடத்தில் 17 பாகங்களையும் ஓதிக் காட்டிற்று என்பதுஅவர்கள் வரலாற்றில் உள்ள மறுக்கமுடியாத பதிவு .

அழுங்குழந்தை உலகத்தில் இருக்கும் வரை தாலாட்டு அழியாது . உள்ளத்து உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகால் தாலாட்டு . துன்புறுத்துவார் நடுவன் தன் உளப்பாங்கை வெளிப்படுத்தும் ஓர் ஊடகம் , ஓர் இசைத் தென்றல் . எளிமையும் இனிமையும் பொருட் செறிவும் உள்ளது . நற்போதனைக் களஞ்சியம் தாலாட்டு . இஸ்லாமியத் தாலாட்டில் அமங்கலச் சொல் இடம் பெறுதல் இல்லை . பெருவாழ்வு வாழவும் - மறுமையில் அருட்கொடைகளைப் பெற்றுய்யவும் வார்த்தைகளால் பக்குவப்படுத்தும் . வாய்மொழிப் பிறந்தது தாலாட்டு . இது தாலாட்டுப் பிறந்த கதை . இஸ்லாத்தில் சாதாரண மனிதர்களிலிருந்து - புலவர்கள் வரை இறைவனைப் புகழ்ந்தே ஆரம்பம் செய்வார்கள் .

ஆராரோஆரரிரோ ஆராரோ ஆரரிரோ 
அல்லாவோதந்தானோ ஆணிமுத்து ஆரத்தை 
நாயனோதந்தானோ நைப்பவழ ஆரத்தை 
இணையில்லாதஅல்லாஹ்வின் இனிக்கிறபுகழெல்லாம் 
எட்டுத்திசையும் எத்திவைக்க பிறந்தவனேராராரோ 
பேரருள்பெத்தவனே ராராரோ

என்று பாடுகிறாள் . தாங்கள் எவ்வளவு தான் உயர்ந்திருந்தாலும் , அவர்கள் உள்ளத்தில் உறைந்து , எழுவது அல்லாஹ்வும் - ரசூலும் - மார்க்கமும் தான் .

பாதை மறந்தாலும் படைச்சவனை மறவாதே” . இதில் “தக்வா” என்னும் இறையச்சத்தைப் புகட்டுகிறாள் .

உறக்கம் சிறு மவுத்தான் ; விழிப்பெல்லாம் ஹயாத்து என்று தாலாட்டுகிறாள் . பிஞ்சு நெஞ்சிலே மரண சிந்தனையைப் பதிய மிடுகிறாள் . குழந்தை வளர்ந்து வாலிபம் அடையும் போது - மரணத்தை ஒப்புக் கொண்டு - நன்னெறிகளோடு வெல்கின்றான் !

இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் தமிழுக்குச் செய்திருக்கும் தொண்டு அளப்பரியது . தமிழ் இலக்கியத்தைப் புரட்டிப் பார்த்தால் அறியலாம் . இலக்கண இலக்கியச் சுவையோடு எழுதப்பட்ட எத்தனையோ தாலாட்டுப் பாடல்கள் ஓலைச் சுவடியிலும் கையெழுத்துப் பிரதிகளிலும் , எடுத்தாள ஆளில்லாமல் மடிந்தன . கிடைப்பவற்றை அச்சேற்றி மாற்றுமத சகோதரர்களும் படித்துப் பயன்பெறும் நிலையை உருவாக்குதல் நம் கடமை . ஏனைய சமூகத்தவர்களும் அவரவர் பங்கை தமிழுக்குச் செலுத்தி இருக்கிறார்கள். அதில் இஸ்லாமியர்களின் பங்கு கணிசமானது . இஸ்லாமிய இலக்கிய அமைப்புகள் காலத்தின் கட்டாயமாக இதில் முழு பங்கு பெறுதல் வேண்டும் .