Pezhai » 2014 » Aug2014 » ஞானதுளிகள்
ஞானதுளிகள்
தொகுத்தவர் :- திருமதி G.R.J. திவ்யாபிரபு I.F.S., சென்னை
மக்களிடத்து தத்துவம் , ரஜஸ் , தமஸ் ஆகிய மூன்று முக்குணங்கள் இருப்பது போன்று பக்தியிலும் இந்த மூன்று குணங்கள் தென்படுகின்றன . சென்னை மக்களிடத்து உபாதிக்கு ஏற்ப மனிதனுடைய இயல்புமாறியமைகிறது. கறுப்புக் கரைபோட்டுள்ள வேஷ்டியை அணிந்திருப்பவனுக்குக் காதல் பாட்டுக்கள் தாமாக வருகின்றன. காலில்பூட்ஸ் அணிந்திருக்கும் நோயாளி கூட படிக்கட்டில் சீட்டியடித்துக் கொண்டே குதித்துக் குதித்து ஏறுகிறான் . பேனாவைக் கையில் பிடித்திருப்பவன் அகப்படுகின்ற காகிதங்களிலெல்லாம் ஏதாவது கிறுக்கிக் கொண்டேயிருப்பான் .அனைத்துக்கும் மனதே மூலகாரணம்.
ஒருவனுக்கு ஒரு பக்கத்தில் மனைவியும் மற்றெரு பக்கத்தில் மகளும் அமர்ந்திருக்கிறார்கள் . அவன் தனது அன்பை அவ்விருவரிடத்து இரண்டு விதமாகத் தெரிவிக்கிறான் . ஒரே மனது எத்தனையோ வித உணர்வுகளை எடுக்கவல்லது .கொஞ்சம் ஆங்கிலம் கற்றவன் ஆங்கிலச் சொற்களை எங்கெங்கோ கையாள ஆரம்பித்துவிடுகிறான் . சமஸ்கிருதம் கற்றிருக்கும் பண்டிதன் சுலோகங்கள் சிலவற்றைச் சொல்ல ஆரம்பிக்கிறான் ஆங்கிலேயரைப் போன்று உடையையும் பாதரட்சையும் அணிந்திருப்பவன் படிக்கட்டின் மீது குதித்துக் குதித்து நடக்கிறான் ; இடையிடையே சீட்டியடிக்கிறான்.
நல்லாரோடு சேர்ந்திருப்பவன் நல்ல விஷயங்களைப் பேசுகிறான் . கெட்டவர்களோடு கூடியிருப்பவன் அதற்கேற்ற புன்மொழிகளைப் பகருகிறான் . இப்படியெல்லாம் மனது பலப்பல உபாதிகளை எடுத்துக் கொள்கிறது . புயல் காற்றும் அலையும் ஏரளமாக இருக்கும்பொழுது படகைச் செலுத்துபவன் சுக்கானைச் சரியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறான் . அதிசாமர்த்தியமாக அலைகளை யெல்லாம் கடந்து அவன்மீள வேண்டும் . நதியிலுள்ள வளைவுகளில் சுக்கானைச் சரியாகக் கையாண்டால் தான் படகைச் சரியாகக்கொண்டு செலுத்த முடியும் . ஆனால் கஷ்டங்களையெல்லாம் தாண்டியான பிறகு சுக்கானைத் தொட்டும் தொடாத முறையில் படகுக்காரன் அமர்ந்து கொண்டிருக்கிறான். தனக்கு அனுகூலமாகக் காற்று வீசும்பொழுது பாயை விரித்துக்கட்டிவிட்டு அமைதியாக அமர்ந்திருக்கின்றான் . போகவேண்டிய இடத்துக்குப் படகுதானாக ஓடுகிறது .ஆத்மசாதகனுடைய நிலையும் அத்தகையது .
உலகஆசைகள் என்னும் காற்றும்அலையும் அடித்துக் கொண்டிருக்கிற பொழுது வாழ்வு என்னும் படகைத் தீவிரமான சாதனங்களின் வாயிலாகச் செலுத்தவேண்டும் . ஆசைகள் என்னும் புயல் காற்றும் , அலையும் ஓய்ந்து போன பிறகு இறைவனுடைய அருள் என்னும் மெல்லிய காற்றைப் பயன்படுத்திக் கொண்டு சிரமம் ஏதுமின்றி சாதகன் இறை சந்நிதானத்தை நோக்கிச் செல்லுகிறான் .ஆட்டு மந்தையின் மீது ஆடு ஒன்றைப்பிடிக்கப் பாய்ந்த புலியானது குட்டி போட்டுவிட்டு இறந்தது . அக்குட்டியோ ஆடுகளோடு வளர்ந்து வந்தது . தன்னையும் ஒரு ஆடு என்று அது எண்ணிக்கொண்டது . ஆடுகள் போன்று கத்துவதும் புல்லைமேய்வதும் அதன் இயல்புஆகிவிட்டது . அப்படி வளர்ந்து அது பெரியதாயிற்று . ஆட்டுமந்தையில் வளர்ந்து வந்த அப்புலியை மற்றொரு புலிபார்த்தது . அது திடீரென்று அப்புலியின் மீது பாய்ந்து அதைத் தனியான ஓர் இடத்திற்கு இழுத்துக் கொண்டு போனது . அப்படி அகப்பட்டுக் கொண்டு ஆட்டுப்புலி , ஆடு போன்று கதறி அழுதது ; தன்னைவிட்டு விடும்படி கெஞ்சியது . நீ ஆடு அல்ல , புலி என்று மற்றது மொழிந்தது . ஆனால் அது சொன்னதை ஆட்டுப்புலி நம்பவில்லை . நீர் நிலையொன்றில் அதன் பிம்பத்தைக்காட்டி அதைத் தன் வடிவத்தோடு சீர்தூக்கிப் பார்க்கும்படி காட்டுப்புலி கூறியது . அப்படிச்செய்த பிறகு தானும் ஒரு புலி என்கின்ற நம்பிக்கை அதற்கு வந்தது . அதன் வாயில் காட்டுப்புலி கொஞ்சம்இறைச்சியைத் திணித்தது . அதைச்சுவைத்ததும் தன் சொந்த சொரூபம் அதன் ஞாபகத்துக்கு வந்தது . புலியுடன் தானும் காட்டுக்குப் போய்விட்டது .
தங்களைஉலகப் பற்றில் ஆழ்ந்தவர்கள் என்று எண்ணிக் கொள்கிறவர்கள் உலகப்பற்றுடையவர்களாகவே ஆகிவிடுகிறார்கள் . ஆனால் அத்தகையவர்களுக்கு குருகிருபை இருக்குமானால் அவர்கள் தங்கள் நிஜசொரூபத்தை அறிந்து முக்த புருஷர்கள் ஆகிறார்கள் . தமோ குணத்தை உலக நன்மைக்காகப் பயன்படுத்திக் கொள்கிறவர்கள் இருக்கிறார்கள் .
மருத்துவர்களுள் மூன்று தரத்தார் இருக்கின்றனர் . கடைத்தரமருத்துவன் நோயாளிக்கு மருந்தைக் கொடுத்து இதைச்சாப்பிடு , நீ சொஸ்தமடைவாய் என்று சொல்லி விட்டுப்போகிறான் . அதற்கு மேல் நோயாளியிடத்து அவன் எந்தவிதமான அக்ரையும் எடுத்துக்கொள்வதில்லை . இடைத்தரமான மருத்துவன் நோயாளிக்கு மருந்தைக் கொடுத்து அதைச்சாப்பிடும் படி அவனிடம் பரிந்து வேண்டுகிறான் . உனக்காக வென்றேநான் இந்த மருந்தை ஆயத்தப்படுத்தியிருக்கின்றேன் . இதை நீ அருந்தாவிட்டால் நீ எப்படி குணமடைவாய் ? இப்படியெல்லாம் அன்போடு நோயாளியுடன் உரையாடுகிறான் . ஆனால் தலைமைத்தரமான மருத்துவனோ தனக்குற்ற அலாதியான முறையைக் கையாளுகிறான் . வேண்டுதல் எதற்கும் இணங்காத நோயாளியின் நெஞ்சின் மீது மண்டிபோட்டு அமர்ந்துகொண்டு அவன் வாயைப்பிளந்து மருந்தை உள்ளே செலுத்துகிறான் . இதை விழுங்காவிட்டால் நான் உன்னை விட மாட்டேன் என்று பயமுறுத்துகிறான் . மருத்துவனிடத்து தமோகுணம் இங்கு மிளிர்கிறது . ஆனால் இது நோயாளிக்கு எவ்விதத் தீங்கையும் உண்டு பண்ணுவதில்லை அவனுக்கு நலனையே உண்டு பண்ணுகிறது .
இதே விதத்தில் மூன்று தரப்பட்ட குருமார்கள் இருக்கிறார்கள் . கடைத்தரகுரு நல்ல கருத்துக்களைதங்கள் சிஷ்யர்களுக்கு எடுத்துச் சொல்லுவதோடு தன் முயற்சியை நிறுத்தி விடுகிறான் . இடைத்தர குரு விஷயங்களைப்ப போதிப்பதுமல்லாது அவைகளை அனுஷ்டிக்க வேண்டுமென்றும் மக்களை வற்புறுத்துகிறான் . பின்பு தலைத் தரமான குரு போக்கு தனிப்பட்டது . சிஷ்யன் நல்லவழிக்குத் திரும்பாவிட்டால் பலாத்காரத்தைக் கையாளவும் அவன் முந்துகிறான் . சத்துவகுணம் ஓங்கப் பெறுகிற ஒருவனுக்கு இறையருள் எளிதில் வாய்க்கிறது .சத்துவகுணங்களோடு கூடியிருப்பவன் இறைச்சிந்தனையைத் தவிர வேறு எதிலும் தன் மனத்தைச் செலுத்தான் . நிலையான கர்மம் புரிவதன் விளைவாகச் சித்த சுத்தி உண்டாகிய பிறகு சத்துவ குணம் வருகிறது .முக்குணங்களுக்கேற்ப பக்தியும் மாறியமைகிறது. சத்துவகுணத்தில் நிலைத்திருக்கிறவன் உலக விஷயங்களில் மிகக் குறைவாகத் தன் கருத்துக்களைச் செலுத்துகிறான் . முக்குணங்களையும் தாண்டியவர்கள் இறைநேசர்கள் .