திருமறைப்பக்கம்
வீராதிவீரர்கள் !
எவரேனும் (பிறர் செய்த தீங்கைப் பொறுத்துக்கொண்டு மன்னித்து விட்டால் நிச்சயமாக இது மிக்க வீரம் பொருந்திய காரியங்களில் உள்ளதாகும். (42: 25 -43)
சண்டையில் பிறரை வீழ்த்துபவன் வீரன் அல்லன். கோபத்தை அடக்குபவனே வீரன்! ( முஸ்லிம் )
மேலே உள்ள திருவசனத்தில் பொறுமையாய் இருந்து மன்னிப்பு வழங்குவதை மிகப்பெரும் வீரம் என அல்லாஹ் அருளுகின்றான். அதே கருத்தை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் திருவாயினால் ஹதீஸ் எனும் பொன்மொழியாக வெளியிட்டுள்ளார்கள் .
இந்த ஆயத்தை வைத்துக் கொண்டு நம்மை நாமே சுயபரிசோதனை செய்து பார்த்தால், நம்வாழ்வில் நமக்குத் தீங்கிழைத்த எத்தனை பேரை மன்னித்திருக்கிறோம். எத்தனை பேரை பழிவாங்கியிருக்கிறோம். அல்லது பழிவாங்கும் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறோம் என்பதுபுரியும் .
அல்லாஹ்வும் ரஸுலும் மன்னிக்கும் பண்பை வீரம் என வர்ணிக்கிறார்கள் . அதேசமயம் அதற்கு மாற்றமான மன்னிக்காத தன்மை கோழைத்தனம் என்ற அர்த்தம் பெறுவதை நாம் உணரலாம் . அப்படியானால், இன்று உலகில் நடக்கும் பழிவாங்கும் செயல்களின் அடிப்படையெல்லாம் கோழைத்தனத்தின் வெளிப்பாடுஎன்பது குர்ஆனின் கருத்தாகக்கொள்ள முடியும் !
பொறுப்பது - மன்னிப்பது - ஏன்வீரமாகவும் கோபத்தைத்தொடருவது - பழிவாங்குவது ஏன் கோழைத்தனமாகவும் மாறுகிறது? பொறுமையும் மன்னிப்பும் தனக்குள் தானேநிகழ்கின்ற அற்புதமான செயல்கள் !
மனம் அவ்வளவு சீக்கிரம் பொறுக்காது! மன்னிப்பும்வழங்காது! அடங்காத மனத்தை அடக்கித்தான் அந்த நற்பண்புகளை மேலே கொண்டு வரவேண்டும். எதிரியைக் கைநீட்டி அடிப்பதை விட தன்மனதைக் தானே அடித்து பணியவைப்பதுமிக மிகக் கஷ்டம்! அதனால் தான் தன்னைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்தவர்கள் இறைவன் சமூகத்தில் மாபெரும் வீரர்களாக மதிக்கப்படுகிறார்கள் .
கோபம் என்பது நெருப்புக் கொள்ளியைப் போன்றது. கோபம் கொண்டவன் பகைவனைப் பழிவாங்கும் போது அந்தக் கொள்ளியை எதிரிக்கு இடம் மாற்றுகிறான் - அது அவனிடம் பற்றி எறிந்து - மீண்டும் எறியப்பட்டு - மாறிமாறி எறிந்து தங்களுக்குத் தாங்களே எரிந்து அழிந்துவிடுவார்கள் - ஆனால் மன்னிப்பு என்பதோ குளிர்ந்த நீரைப் போன்றது . அது தன் மனத்தீயையும் அணைத்து எதிரியின் உளத்தீயையும் - பொசுக்கிவிடும்.