ஹதிஸ்பக்கம்
உரிமைக்குரல் ஒலித்த உத்தமி !
இஸ்திஹாப் எனும் நூலில் இப்னு அப்துல்பர்(ரலி) அவர்கள் அஸ்மா பின் யஜீது அவர்களின் வரலாற்றைப் பற்றி எழுதும் பொழுது கூறுகிறார்கள் .
அஸ்மா(ரலி) அவர்கள் அறிவும், தீனும் நிரம்பிய பெண்ணாக இருந்தார்கள். அவர்கள் வாயிலாக பின்வரும் ஹதீஸ் அறிவிக்கப்படுகிறது. அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் சமூகம்வந்து “நான் இந்தப்பெண்கள் அனுப்பிய தூதர் ஆவேன். அவர்கள் அனைவரும் என் சொல்லைப் போன்றே, என்கருத்தைப் போன்றே சொல்கிறார்கள் .
நிச்சயமாக அல்லாஹ் தங்களை ஆண்களுக்கும், பெண்களுக்கும் நபியாக அனுப்பி வைத்தான். நாங்கள் தங்களை ஈமான் கொண்டு பின்பற்றுகிறோம். நாங்கள் பெண்களின் சமூகத்தினர். வீடுகளில் தங்கி கட்டுப்பட்டவர்களாக - வீடுகளை நிர்வகிக்கிறவர்களாக இருக்கிறோம். ஆண்கள் ஜும்ஆ தொழுகையில் கலந்து கொண்டும், ஜனாஸாவின் நல்லடக்கத்திலும், ஜிஹாதிலும் கலந்து கொண்டு எங்களைவிட சிறப்படைகிறார்கள். அவர்கள் ஜிஹாதில் புறப்பட்டு விட்டால், அவர்களின் பொருள்களை நாங்கள் பாதுகாக்கிறோம். அவர்களின் குழந்தைகளை வளர்க்கிறோம். ஆகவே, அந்த ஆண்களின் நற்கூலியில் எங்களுக்கும் பங்கு உண்டா?” என்று கேட்டார்.
இதனைக்கேட்ட அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் தோழர்களின் பக்கம் திரும்பி, “இந்தப்பெண்ணை விட, தன் தீனைப் பற்றி மிக அழகியமுறையில் கேள்வி கேட்கும் பெண்ணைக்கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? எனவினவினார்கள். அதற்குத்தோழர்கள் இல்லை, யாரஸூலல்லாஹ் ! எனக்கூறினார்கள். பிறகு அண்ணலார் அப்பெண்மணியிடம், நீர்திரும்பிச் சென்று உமக்குப் பின்னால் உள்ள பெண்மணிகளுக்கு அறிவிப்புச் செய்வாயாக! உங்களில் ஒரு பெண்மணி தன் கணவருக்கு வழிப்பட்டு, அவருடைய திருப்தியைத் தேடி , அவருடைய பொருத்தத்தைப் பின்பற்றி நடப்பது, ஆண்களுக்கு என்று நீர் குறிப்பிட்ட எல்லாவற்றுக்கும் (எல்லா நன்மைகளுக்கும்) சமமாகும் எனப் பகர்ந்தார்கள்.” உடனே அஸ்மா (ரலி) அவர்கள், அங்கிருந்து தக்பீரும் (அல்லாஹுஅக்பர் என்றும்), தஹ்லீலும் (லாயிலாஹஇல்லல்லாஹ் என்றும்) கூறியவர்களாக , நபியவர்கள் கூறிய செய்திக்காக மிக மகிழ்ச்சி அடைந்தவர்களாக திரும்பினார்கள் .