தலையங்கம்
ரபீவுல் ஆகிர்
முஹிய்யுத்தீன் ஆண்டகை ( ரலி )அவர்களின் நினைவு மாதம் இது !
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நினைத்தால் அன்பு -அருள் -அழகு -நன்னெறி -நற்குணம் -முழுமை மனதுக்குள் வருவது போல ;முஹிய்யுத்தீன் என எண்ணும்போதே ஞானம் -வல்லமை -வைராக்கியம் -அற்புதம் என அத்தனை எண்ணங்களும் நெஞ்சுக்குள்ளே உலா வரும் !
முஹம்மதெங்கள் கோமானின் “ நுபுவ்வத் ”உலக முடிவு நாள்வரை நிலைத்திருப்பது போல ;முஹிய்யுத்தீன் ஆண்டகை ( ரலி )அவர்களின் “ விலாயத் ”( இறைநேச அதிகாரம் )உலக முடிவு நாள்வரை தொடர்ந்து வரும் என்பது அவர்களே அறிவித்த அருள்வாக்கு !
அவர்களின் வாழ்க்கை ;இறைவனை அடைய விரும்பும் மனிதன் எத்துணை திடசித்தத்தோடு இருக்க வேண்டும் என்பதற்கு சரியான எடுத்துக்காட்டு !அதே சமயம் இறைவனை அடைந்த மனிதர்கள் எவ்விதம் மனிதர்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும் என்பதற்கும் சரியான எடுத்துக்காட்டாகும் !
அவர்கள் ;அரசர்கள் கலீபாக்கள் அதிகாரிகள் எவருக்கும் அஞ்சியதில்லை .அதே சமயம் துன்பத்தில் உழலுவோரின் துயர்துடைக்காமல் ஒரு நாளும் விடிந்ததில்லை .
அப்துல் காதிர் ( வல்லவன் அடிமை )என்ற நாமத்துக்கேற்ப இறைவனிடமிருந்து அவர்கள் பெற்றிருந்த அற்புத வல்லமை -ஆற்றல் -ஈஸா ( அலைஹிஸ் ஸலாம் )அவர்களை நினைவுபடுத்தியது .
மிகப்பெரும் ஆட்சி அதிகாரத்துக்கு முன் மண்டியிடாமல் நீதியை -சத்தியத்தை -துணிவாகக் கூறி அவர்கள் வென்றமை இப்றாஹீம் ( அலை )அவர்களை நினைவுபடுத்துகிறது .
அவர்களின் பரிசுத்த வாழ்க்கை யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் ,அவர்களின் ஆன்மிக அதிகாரம் ;அரசர்களான தாவூது அலைஹிஸ்ஸலாம் ,சுலைமான் அலைஹிஸ்ஸலாம் ஆகியோரையும் ,அவர்கள் இறைவனுடன் முனாஜாத்து உரையாடியவை மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் ,அவர்களின் இறைக்காதல் -இஷ்கு -பேரின்ப நிலை -சம்பூரணம் -அவர்களின் பாட்டனார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் நினைவுபடுத்துகிறது .
அவர்கள் முற்காலத்தில் தோன்றியிருந்தால் ஒரு நபியாக இடம்பெற்றிருக்கலாம் .இதனை “எனது சமுதாய உலமாக்கள் இஸ்ரவேலர்களின் நபிமார்கள் போன்றவர்கள் ”என்ற நபிமொழி உணர்த்தும் .இத்தகு சிறப்புகளுக்கெல்லாம் உரிய கெளது நாயகம் முஹிய்யுத்தீன் ( ரலி )அவர்களை நினைவுகூர்ந்து மற்றவர்களுக்கும் நினைவூட்டுவோம் !