இஸ்லாத்தில் தீவிரவாதத்திற்கு
இடமில்லை !!
M. அப்துல் ரவூஃப் ( ஹக்கிய்யுள் காதிரி ) மதுக்கூர் .
உலகில் பல்வேறு மதங்கள் தோன்றி மனிதர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறவும், ஈடேற்றம் பெறவும் வழிகாட்டுகின்றன . முஸ்லிம்கள் பின்பற்றுகின்ற இஸ்லாம் மதம் இறைநம்பிக்கையோடும் சாந்தி வழியிலும் இருவுலக வாழ்க்கையில் வெற்றி பெறும் நேர்வழியைப் போதிக்கிறது . நல்வாழ்க்கை வாழ வழிகாட்டுகிறது . இஸ்லாம் என்ற சொல்லுக்கு சாந்தி என்று பொருள் . இஸ்லாம் மதத்தின் நடைமுறைகள் , அனைத்தும் அமைதியான முறையில் வாழ்ந்து ஈருலக வாழ்க்கையில் வெற்றிபெறும் வகையில் வகுக்கப்பட்டிருக்கின்றன .
இஸ்லாம் மார்க்கத்தில் இறைவனால் அனுப்பப்பட்ட நபிமார்கள் ( இறைத் தூதர்கள் ) அனைவரும் மக்கள் சாந்தி வழியில் வாழ்ந்து ஈடேற்றம் அடையும் பொருட்டு நல் போதனைகளையும் நல் வழிகாட்டுதலையும் அருளினார்கள் . இறுதி நபியாக உலகில் தோன்றிய முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்கு நல்வழி காட்டி வந்த வேளையில் பல்வேறு போர்களை சந்திக்கும்படி நேர்ந்தது . மக்கள் அமைதியின் பக்கம் திரும்பவும் நல்ல வழிக்குரிய வாழ்க்கை முறையை அவர்கள் தேர்ந்தெடுத்து வாழவும் அந்தப் போர்களை பயன்படுத்திக் கொண்டார்கள் . இந்தப் போர்களுக்குப் பின்னால் மக்கள் அமைதி வழியில் வாழ்ந்து இஸ்லாத்தைப் பின்பற்றினார்கள் . சாந்தி பெறும் பொருட்டு தொழுதார்கள் . மக்கள் குழப்பமான அமைதியற்ற வாழ்க்கை வழியிலிருந்து நேர்வழிக்குத் திரும்பினார்கள் .
ஆனால் இன்றைய கால கட்டத்தில் உலகில் பல்வேறு அமைப்புகளும் மீடியாக்களும் ஒரு பொய் பிரச்சாரத்தைப் பரப்பி இஸ்லாம் தீவிரவாதத்தில் நம்பிக்கையுள்ளது போலவும் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்ற அடைமொழி வார்த்தைகளால் குறிப்பிட்டும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் . இதன்மூலம் இஸ்லாத்தின் சாந்தி வழி தூய்மையையும் இஸ்லாத்தின் உயர் தத்துவ தாற்பரியங்களையும் மாசுபடுத்த முயற்சி செய்கிறார்கள் என்பது கண்கூடு . மத துவே ஷத்தால் ஆதாயம் தேட முயலும் சிலரே இத்தகைய காரியங்களில் ஈடுபடுகின்றனர் என்பதும் அனைவரும் அறிந்ததே ! என்றாலும் இஸ்லாம் மதம் இத்தகைய பொய்ப் பிரச்சாரங்களைத் தூக்கி யெறிந்து விட்டு சாந்தி வழியிலும் சத்திய நேர்வழியை மக்களுக்கு போதித்து வழிகாட்டுவதிலும் உலகில் முன்னிலை பெற்றுத் திகழ்வதுதான் உண்மை யாகும் .
இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரானது மட்டுமல்லாது தீவிரவாத இயக்கம் தோன்றுவதற்கான மூல வேர்களை அறுத்துவிட்டது என்பதை மேலும் நிரூபிக்க முடியும் . நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்லாத்தில் நெருப்பைக் கொண்டு ஒருவர் மற்றொருவருக்கு தீங்கு செய்வதை ‘ ஹராம் ’ ( ஆகுமானதல்ல ) என்று கூறியுள்ளார்கள் . நெருப்பைக் கொண்டு தண்டனை வழங்குவது அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது என்றும் கூறியுள்ளார்கள் . வேறு யாருக்கும் நெருப்பைக் கொண்டு தீங்கு செய்யும் உரிமை இல்லை என இஸ்லாம் தடை செய்திருக்கிறது .
அதுபோலவே இஸ்லாத்தில் தற்கொலை செய்து கொள்வது ‘ ஹராம் ’ ( ஆகுமானதல்ல ) என்று தடை செய்யப்பட்டுள்ளது . தற்கொலை செய்து கொள்பவர்கள் இஸ்லாமிய மார்க்க வழியிலிருந்து தவறியவர்களே !
இப்போது உலகிலுள்ள அனைத்து புலன் விசாரணை அமைப்புகளுக்கும் சவால் விட்டு கேட்கிறோம் . நெருப்பைக் கொண்டு தீங்கு செய்யும் யுக்தியும் தற்கொலை செய்து கொள்ளும் உரிமையுமில்லாத நிலையில் எந்த தீவிரவாத இயக்கமும் இயங்க முடியுமா ? என்பதை இந்த அமைப்புகள் எடுத்துக் கூறட்டும் .
இஸ்லாம் தீவிரவாதத்தின் அடிப்படை யுக்திகளை தடை செய்துவிட்ட நிலையில் , இஸ்லாமிய தீவிரவாதம் என்ற வாதம் தூக்கியெறியப்பட்டு , இஸ்லாத்தின் சாந்தவழி தத்துவம் போற்றப்பட வேண்டும் . இன்னும் இஸ்லாத்தில் தீவிரவாதம் என வாதம் புரிந்தால் அது சமூக நீதிக்கு அவலம் சேர்க்கும் வகையிலும் இயற்கைக்கும் உண்மைக்கும் புறம்பானதாகவே இருக்கும் என்பதை நல்லறிவு படைத்த சான்றோர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் .
நெருப்பையுண்டாக்கித் தீங்கு செய்யும் வெடிப் பொருட்கள் மனித வெடிகுண்டு போன்ற ஆழியை ஏற்படுத்தும் தீவிரவாத தாக்குதலுக்கு இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையில் இடமில்லை .
சில இடங்களில் நடைபெறும் வன் செயலில் சில முஸ்லிம்கள் சம்மந்தப்பட்டிருக்கலாம் . இதற்குரிய காரணத்தையறிந்து விசாரித்து அதற்கேற்ப தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் . அவர்கள் Provocaty என்ற முறையில் சீண்டப்படுகிறார்கள் . அல்லது மதத்துவே ஷ அடிப்படையில் தாக்கப்படுகிறார்கள் . இது நியாயமான முறையில் விசாரித்து நீதி வழங்கப்பட வேண்டும் . இதுதான் உலக சமூக நீதிக்கும் நேர்மையான ஆட்சி முறைக்கும் உகந்ததாக இருக்கும் .
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவை வெற்றி பெற்ற பிறகு தமது தோழர்களுக்கு அறிவுறுத்தினார்கள் .
‘ஜிஹாத் ’ ( போராட்டம் ) முடிந்து விட்டது . இனி ‘ ஜிஹாதுல் அக்பர் ’ ( பெரிய போராட்டம் ) மட்டுமே உங்களுக்குரியது என்றார்கள் .
ஜிஹாதுல் அக்பர் பற்றி விளக்கம் கேட்ட தோழர்களிடம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் . ஜிஹாதுல் அக்பர் என்றால் இறையுண்மையை யடைய உங்கள் மனதோடு புரிய வேண்டிய பெரும் போராட்டம் என்று விளக்கித் தெளிவு படுத்தினார்கள் . இத்தகைய உன்னத வழி காட்டுதலையும் அனைத்து வன்செயல்களிலிருந்தும் பாதுகாக்கப்பட சாந்தி வழி நேர்வழிகளைப் பெற்ற உயரிய மார்க்கம்தான் இஸ்லாம் .
தனிப்பட்ட மனிதர்கள் அல்லது ஒரு கூட்டம் செய்யும் வன்முறைச் செயல்கள் நீதி விசாரணை மூலம் உண்மையைக் கண்டு அதற்கேற்ற தண்டனை வழங்குவதுதான் சமூக நீதியையும் தர்ம நெறியையும் நிலைநாட்டுவதாக அமையும் . அப்படி இல்லாமல் இஸ்லாத்தின் மீது மாசு கற்பிப்பது உலக நீதி பரிபாலனத்தின் நெறிமுறைக்கு களங்கம் உண்டாக்கும் என்பதை நடுநிலையாளர்களும் நீதி மன்றங்களும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும் .
நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும் ( அல்குர்ஆன் )