• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai     »     2014     »     Feb 2014     »      இறையச்சம்


இறையச்சம்

- சையது அபூதாஹிர் நூரீ -


எங்கும் நிறைந்திருக்கும் ஏக வல்லவனாம் அல்லாஹ்வின் பெயர் கூறி ஆரம்பம் செய்கின்றேன் .   இறைவன் அருள்மறையில் அல்லாஹ்வை பயந்தவர்களுக்கே இரண்டு சொர்க்கம் உண்டு என்கின்றான் .   யாருக்கு ? அல்லாஹ்வை பயந்தவர்களுக்கு . பயம் என்றால் என்ன ? பயம் என்பது ஒரு பொருளைப் பற்றி தெரிந்திருந்தால் அது பற்றி உண்டாகும் அச்ச உணர்வு நம் உள்ளத்தில் ஏற்படுவதாகும் .   உதாரணமாக ; பாம்பைப் பற்றி நமக்கு நன்றாகத் தெரியும் .   அது தீண்டினால் விஷ ­ ம் ... தீண்டியவர் மரணித்து விடுவார் எனத் தெரிந்து வைத்துள்ளோம் .   அதை நாம் யாராவது பிடித்துப் பார்க்கின்றோமா ? அல்லது அதன் அருகிலாவது நெருங்குகின் றோமா ? இல்லை ? எனினும் அதுபற்றி உண்டான பயம் நம் மனதில் குடி கொண்டுள்ளது .


இது போன்றுதான் அல்லாஹ்வைப் பற்றி நாம் நன்றாக அறிந்து வைத்துள்ளோமா ? பாவம் , அநியாயம் , அட்டூழியம் போன்ற செயல்களையும் இன்னும் அல்லாஹ் எக்காரியங்களைத் தடுத்து ஹராமாக்கியுள்ளானோ அதையெல்லாம் நாம் நம்முடைய வாழ்வில் செய்தால் நாளை மஹ்ஷ ­ ரில் அல்லாஹ் தண்டனை தருவான் என்று தெரிந்து வைத்துள்ளோம் . இவ்வாறிருந்தும் அவனைப் பற்றி   பயம் நம்மிடத்தில் உள்ளதா ? ஒரு பொருளைப் பற்றி தெரிந்திருந்தால் அதைப் பற்றிய பயம் நமக்கு   வேண்டும் .   இது தானே நியதி ? ஏன் நமக்கு இறைவனைப் பற்றி   பயம் வரவில்லை ?


மனிதனுக்கு தன்னைப் படைத்த அல்லாஹ்வின் பயம் கண்டிப்பாக இருக்கவேண்டும் .   இறையச்சம் நம்மிடத்தில் இருந்தால் தான் இறையன்பைப் பெற முடியும் .   நமது முன்னோர்கள் இறையச்சம் என்ற கடலில் மூழ்கியதால் தான் இறையன்பு என்ற முத்தை எடுக்க முடிந்தது .   நாமும் இறையச்சம் என்ற கடலில் மூழ்கி இறையன்பு என்ற முத்தை எடுக்க வேண்டும் .   இறைவன் ; நபி தாவூத் ( அலை ) அவர்களுக்கு அறிவித்தான் .   தாவூதே ! வன விலங்குகளைக் கண்டு அஞ்சுவது போல் நீர் எனக்கு அஞ்சி நடந்து கொள்ள வேண்டும் .  

அல்லாஹ்வை   நன்கு அறிந்தவன் கண்டிப்பாய் அல்லாஹ்விற்கு அஞ்சுவான் .   அவன் உள்ளத்தில் இறையச்சத்தை உற்பத்தி செய்வதற்கு அரும்பாடு பட வேண்டியதில்லை .   அது தானாகவே உண்டாகிவிடும் .   வன விலங்குகளிடம் அகப்பட்டுக் கொண்டவன் அஞ்சத்தான் செய்வான் .   அச்சத்தை இழுத்து வர வேண்டும் என்ற தேவை இருக்காது .   அவன் அனுமதியின்றியே அவன் உள்ளத்தில் பயம் பற்றிக் கொள்ளும் .   இதே போன்றுதான் இறையச்சமும் அமைந்திருக்கிறது .   அதனால்தான் இறைவன் இறையச்சத்திற்கு வன விலங்குகளின் அச்சத்தை ஒப்பிட்டுக் கூறினான் .

நிச்சயமாக அல்லாஹ் பய பக்தியாளர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள் .                                       ( அல்குர்ஆன் 9: 123 )

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உங்களுக்கு முன் சென்ற காலத்தில் ஒரு மனிதர் இருந்தார். அல்லாஹ் அவருக்கு செல்வத்தை வழங்கியிருந்தான் .   அவருக்கு மரணம் நெருங்கிவிட்ட போது தன் மக்களிடம் உங்களுக்கு நான் எப்படிப்பட்ட தந்தையாக இருந்தேன் என்று கேட்டார் .   அவர்கள் சிறந்த தந்தையாக இருந்தீர்கள் என்று பதில் கூறினர் .   அதற்கு அவர் நான் நற்செயல் எதுவும் செய்யவில்லை .   ஆகவே நான்   இறந்து விட்டால் என்னை எரித்து விடுங்கள் .   பிறகு என்னைப் பொடிப் பொடியாக்கி சூறாவளிக் காற்று வீசும் நாளில் காற்றில் என்னைத் தூவி விடுங்கள் ! என்று சொன்னார் .   அவர்களும் அவ்வாறே செய்தனர் .   அவரை ( அவரது உடல் அணுக்களை ) அல்லாஹ் ஒன்று திரட்டி முழு உருவை மீண்டும் அளித்து இப்படிச் செய்ய உத்தரவிடும்படி உன்னைத் தூண்டியது எது ? என்று கேட்டான் .   அவர் உன் மீதுள்ள அச்சம் தான் இப்படி உத்தரவிட என்னைத் தூண்டியது என்று சொன்னார் .   உடனே அல்லாஹ் அவரைத் தன் கருணையால் அரவணைத்துக் கொண்டான் .   ( சொர்க்கத்தில் நுழையச் செய்தான் )

அறிவிப்பாளர் : ஹள்ரத் அபீ சயீத் ( ரலி )    நூல் : புகாரீ 3478.

அவரது இதயத்தில் வேரூன்றியிருந்த இறையச்சம் தான் அவரைக் கரை சேர்த்தது பார்த்தீர்களா ? நாமும் இறையச்சத்தை மேற்கொண்டால் வெற்றி பெறலாம்.   முழுமையான இறைவிசுவாசியாக வாழ இறையச்சம் மிக அவசியமாகும் .   அதனால் தான் இறைவன் திருமறையில் பல இடங்களில் இறையச்சத்தை வலியுறுத்தியுள்ளான் .


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இறையச்சம் குறித்து பல்வேறு கோணங்களில் பலமாதிரி அறிவுறுத்தி உள்ளார்கள் .   நான்கு சுவருக்குள் இருப்பினும் இறைவனைப் பயந்து கொள் !”   என்கிறது நபி பழமொழி .   ஆகவே இறையச்சம் நம் உள்ளத்தில் இடம் பெற்றுவிட்டால் அது நற்செயல் புரிவதன் பக்கமும் , தீய செயல்களை விடுவதின் பக்கமும் நம்மைத் தூண்டிக் கொண்டே இருக்கும் .   ஒரு சிறந்த இறை விசுவாசியிடம் இறைவனின் பயமும் மறு உலகில் நடக்க இருக்கும் சம்பவங்களைப் பற்றிய அச்சமும் இருப்பது அவசியமாகும் .  

சேமித்துக் கொள்ளுங்கள் .   இறையச்சமே சிறந்த சேமிப்பாகும் .   ஆதலால் அறிவாளிகளே ! எனக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள் .                                                           ( அல்குர்ஆன்   (2 : 197))


ஹள்ரத் துன்னூன் மிஸ் ரீ ( ரஹ் ) அவர்கள் கூறுகிறார்கள் .


தன் மீது அல்லாஹு தஆலா வானம்   பூமியிலுள்ள அனைத்து பரக்கத் இறங்கும் வாயில்களையும் திறந்து விட வேண்டும் ; மேலும் கணக்கின்றி தனக்கு ரிஸ்கு அளித்து , தன் பாவங்களை மன்னித்து , தனது நன்மைக்கு மகத்தான கூலியையும் கொடுத்து , தனது அனைத்து செயல்களையும் மிக இலகுவாக ஆக்கி , தன்னுடன் அல்லாஹ் எப்போதும் இருந்து , தன் மீது பிரியம் வைத்து அனைத்து சோதனைகளிலிருந்தும் தன்னை ஈடேற்றி , தன்னை வெற்றியாளர்களில் ஆக்கிவிட வேண்டும் என யார் நாடுகிறாரோ அவர் அல்லாஹ்வை தக்வாவைக் கொண்டு அஞ்சிக் கொள்ளட்டும் !   தக்வா உடையவர் இறைவனை அஞ்சக் கூடியவர் என்றால் அல்லாஹ் கட்டளையிட்டதைச் செய்து அவன் தடுத்தவற்றிலிருந்து தவிர்ந்து கொள்பவர் ஆவார் .   இப்படிப்பட்ட மனிதனை அல்லாஹ் தனது நேசராக ஆக்கிக் கொள்கிறான் .



பத்ஹுல் மூஸிலி ( ரஹ் ) அவர்கள் இறைநேசச் செல்வர்களில் இறையச்சம் நிறைந்தவர்களாக வாழ்ந்தவர்கள் .   ஒருநாள் பத்ஹுல் மூஸிலி ( ரஹ் ) அவர்கள் அழுதவண்ணமாக அமர்ந்திருந்தார்கள் . காண வந்தவர் திடுக்கிட்டு பெரியார் அவர்களே ! ஏன் அழுகிறீர்கள் ? என்ன நடந்து விட்டது ? எதற்காக இப்படி இரத்தக்கண்ணீர் வடிக்கிறீர்கள் ? என்று கேட்டார் .   அதற்கு பத்ஹுல் மூஸிலி ( ரஹ் ) அவர்கள் இறைவன் விதித்த கட்டளைகளை நான் சரிவர நடத்தினேனா ? இல்லையா ? என்ற அச்சத்தால் அழுகிறேன் என்று சொன்னார்கள் .   பத்ஹுல் மூஸிலி ( ரஹ் )    அவர்கள் மண்ணுலகை விட்டு மறைந்த பின் அவர்களைக் கனவில் கண்ட அவர்களுடைய நண்பர் , அல்லாஹ் உங்களை எப்படி நடத்தினான் ? என்று கேட்டார் . அல்லாஹ் என் பிழைகளை மன்னித்தான் என்று பத்ஹுல் மூஸிலி ( ரஹ் ) அவர்கள் கூறினார்கள் .   இரத்தக்கண்ணீர் சிந்தி அழுதீர்களே அதைப் பற்றி இறைவன் என்ன சொன்னான் ? என்று கனவு கண்ட நண்பர் கேட்டார் .   இறைவன் என்னை தன்னருகில் அழைத்து எதற்காக இரத்தக் கண்ணீர் சிந்தி அழுதீர்கள் ? என்று கேட்டான் .   இறைவா நீ இட்ட   கட்டளைகளை நான் முழுமையாக நிறைவேற்றினேனா ? இல்லையா ? என்பதை எண்ணிய போது விழிகளில் இரத்தம் கசியும் வரை அழுதேன் என்று கூறினேன் .   அப்போது இறைவன் பத்ஹே ! இப்படி இரத்தக் கண்ணீர் சிந்தி அழுவதை நான் விரும்பவில்லை . ஏனெனில் உங்களுடைய நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குரிய குறிப்புக்களையும் வானவர்கள் தினமும் என் சமூகத்தில் சமர்ப்பித்திருக்கிறார்கள் .   அந்தக் குறிப்பேட்டில் நீங்கள் குற்றம் செய்ததாக ஒரு வரி கூட இடம் பெறவில்லை என்று இறைவன் கூறினான் என பத்ஹுல் மூஸிலி ( ரஹ் )   அவர்கள் தங்களுடைய நண்பரிடம் கனவில் சொன்னார்கள் .


நாற்பதாண்டுகளில் எந்தவொரு பிழையும் நேரா வண்ணம் வாழ்ந்திருக்கிறார்கள் என்றால் எந்த அளவிற்கு இறைவனுடைய அன்பு அப்பெரியாருக்குக் கிடைத்திருக்கும் என்பதை இங்கு நாம் எண்ணித் தெளிந்திட வேண்டும் .   உலக சுகம் தான் வாழ்க்கை என நினைத்து வாழ்ந்திருந்தால் பத்ஹுல் மூஸிலி ( ரஹ் )   அவர்கள் இறைவனுடைய சமூகத்தில் இந்த அளவிற்கு சிறப்பிக்கப்படுவார்களா ? என்று நாம் சிந்தித்திட வேண்டும் .   இறைவனையும் இறுதிநாள் தீர்ப்பையும் அஞ்சி நடந்ததால்   தானே இத்தனை சிறப்பை பெரியார் பத்ஹுல் மூஸிலி ( ரஹ் ) அவர்கள் பெற முடிந்தது .


இங்கு நம்முடைய நிலையை நாம் அலசிப் பார்த்திட வேண்டும் . நபி மூஸா ( அலை ) அவர்கள் காலத்தில் இறைநேசர் ஒருவர் வாழ்ந்து வந்தார் .   அவர் நோயாளியாகி வீட்டில் முடங்கி விட்ட போது அவருடைய குடும்பத்தார் பஞ்சத்திற்குப் பலியானார்கள் .   வறுமையில் வீழ்ந்து விட்ட அந்தக் குடும்பம் பசியால் வாடியது . இறை நேசருடைய மனைவிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை .


குழந்தைகள் பசி தாங்க முடியாமல் கதறினார்கள் .   தாய் மனம் தணலில் விழுந்த புழுப்போல துடித்தது .   குழந்தைகளின் கதறலைப் பார்த்து சகிக்க முடியாத தாய் வீட்டை விட்டு வெளியேறினாள் .   ஒரு வியாபாரியின் வீட்டிற்கு வந்து அந்த வியாபாரியிடம் தன்னுடைய குடும்ப நிலையை விளக்கினாள் .   அந்த வியாபாரியோ அந்தப் பெண்ணின் அழகில் மயங்கியவராக நான் உனக்கு   உதவிடத் தயாராக உள்ளேன் .   ஆனால் ஒரு நிபந்தனை ! என்ன நிபந்தனை ? என்று கேட்டாள் இறைநேசரின் மனைவி .   நீ என்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் .  இணங்கினால் உனக்கு வேண்டியதை நான் செய்து தருவேன் என்று   கூறினார் .   வியாபாரியின் விருப்பத்தைப் புரிந்து கொண்ட அப்பெண் சிறிது நேரம் மெளனமாக நின்று விட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறி வீட்டிற்குச் சென்றாள் .   தாயைப் பார்த்த குழந்தைகள் அம்மா பசி பொறுக்க முடியவில்லை . இனி நாங்கள் செத்து விடுவோம் என்று கூறினார்கள் .   குழந்தைகளின் அழுகுரலை சகிக்க முடியாத   தாய் ஏதோ முடிவு கண்டவளாக மீண்டும் அந்த வியாபாரியின் வீட்டிற்குச் சென்றாள் .   மீண்டும் தன் வீடு நோக்கி வந்தவளிடம் என்ன சொல்கிறாய் ! என்று வியாபாரி கேட்டார் .   பேச வாயின்றி சிலையாக நின்றாள் அப்பெண் ! மெளனம் சம்மதத்திற்கு அடிக்கல் எனப் புரிந்து கொண்ட வியாபாரி   அவளை நெருங்கினான் .   தன்னை நெருங்கி   வரும் வியாபாரியைப் பார்த்தவுடன் அந்தப் பெண்ணின் அங்கங்கள் எல்லாம் காற்றில் ஆடும் நாணலைப் போல துடித்தன .


அந்தப் பெண்ணின் இந்த நிலையைக் கண்ட வியாபாரி வியர்த்துக் கொட்டிய வியர்வையுடன் கலகலத்து நின்ற அந்தப்   பெண்ணைப் பார்த்து பெண்ணே ! ஏன் இப்படி நடுங்குகிறாய் .   இதற்கு முன் நீ இப்படியொரு சூழ்நிலையை சந்தித்ததில்லையா ? என்று கேட்டார் .   நான் இறைவனை அஞ்சுகிறேன் .   இறுதி நாள் தீர்ப்பை அஞ்சுகிறேன் என்று கூறினாள் அப்பெண் . அப்போது அந்த வியாபாரி வறுமையிலும் இறைவனை அஞ்சி நடப்பது உன்னுடைய இலட்சியம் என்றால் , எல்லா வசதிகளும் பெற்றிருக்கும் நானல்லவா அந்த பயத்திற்கு உரியவனாக நடக்க வேண்டும் . வறுமையில் வாடும் போதும் வல்லவனிட்ட கட்டளையை மதித்து நடக்கும் உன்னுடைய வைராக்கியத்தை எண்ணி அழுகிறேன் . பெண்ணே ! நான் அழுகிறேன் ! செல்வத்தின் பெருமையில் சிந்தனை தடுமாறி நின்ற எனக்கு இலட்சிய வாழ்க்கையை உணர்த்திவிட்ட உன்னுடைய   உறுதிக்கு முன் நான் முடமாகி நிற்கிறேன் .   பெண்ணே ! உனக்கு வேண்டிய அனைத்து உணவுகளையும் நான் தருகிறேன் என்று கூறி அவளுடைய தேவையை நிறைவேற்றி வைத்தார் அந்த வியாபாரி .   இறைநேசரின் மனைவி இரு கையேந்தி   அந்த வியாபாரியின் எதிர்கால நல்வாழ்விற்காக   இறைவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டு   தன் வீட்டிற்குச் சென்று பசியால் வாடும் தன் பிள்ளைகளுக்கு உணவைக் கொடுத்து மகிழ்ந்தாள் .


மானம் காத்த அந்த மங்கையர் மணியின் பத்தினிக் கோலத்திற்கு மதிப்பளித்து அந்த வியாபாரியிடம் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்து நீ ஏதேனும் நல்ல காரியம் செய்திருக்கிறாயா ? என்று கேட்டார்கள் .   நடந்த நிகழ்ச்சிக்கும் நபி மூஸாவிற்கும் எதுவும் சம்மந்தம் இருக்குமோ என்று பயந்த வியாபாரி   நான் எதுவும் நன்மை செய்திடவில்லை என்று கூறினார் .   இல்லை ! நீ சிந்தித்துப் பதில் சொல் ! என்று மூஸா ( அலை ) அவர்கள் மீண்டும் சொன்ன போது , ஆம் !   இன்று நான் ஏழைப் பெண்ணின் புனிதச் செயலுக்காக ஏராளமான உதவிகளை அவளுக்கு நான் செய்திருக்கிறேன் என்று கூறினார் அந்த வியாபாரி .அவர் உண்மையைச் சொன்னதும் நபி மூஸா ( அலை ) அவர்கள் இந்த நற்செயலுக்காக இறைவன் உன்னுடைய பிழைகளை மன்னித்து விட்டதாக அறிவித்திடச் சொன்னான் என்று கூறினார்கள் .


இங்கே நாம் எண்ணித் திருந்திட வேண்டிய எழிலான காட்சியைக் காண்கிறோம். பெண்ணொருத்தியிடம் தவறான முறையில் நடந்திட வாய்ப்புக் கிடைத்த நேரத்திலும் , அறிவுக்கும் ஆற்றலுக்கும் வேலை கொடுத்து சரியான முடிவு கண்ட அந்த வியாபாரி இறைவனுடைய மன்னிப்பைப் பெறுகிறார் என்றால் , அது அவருடைய   வாழ்வில் நடந்து விட்ட மிகப் பெரிய சாதனை என்று தானேசொல்ல   வேண்டும் .   எனவே மார்க்கத் தொடர்பை மறந்து , மண்ணுலகத்திற்கே முன்னுரிமை வழங்கி மகிழ்ந்திடும் நேரத்தில் மறுமை நாளை கவனத்தில் வைத்திட மறந்து விடக் கூடாது .   மறுமைத் தொடர்பு அது பற்றிய சிந்தனை எப்பொழுது நம்மை விட்டும் அகன்று விடுகிறதோ அன்றே நாம் மனித நெறியிலிருந்து அகன்று வெகுதூரம் சென்று விடுகிறோம் என்பதை உணர வேண்டும் .  


இறையச்சத்தால்   மனிதனுடைய உடம்பு சிலிர்க்குமானால் மரத்திலிருந்து இலைகள் உதிர்வது போன்று   அவனுடைய பிழைகள் உதிர்ந்து விடுகின்றன ! என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்கள் கூறினார்கள் .   இந்த நபிமொழியை சிந்தித்து இறையச்சத்தோடு நடந்து கொள்வோமாக !   எல்லாம் வல்ல அல்லாஹ் அவனைப் பயந்து வாழ்ந்து இறையன்பைப் பெற்ற நல்லடியார்கள் கூட்டத்தில் நம் அனைவரையும் சேர்த்தருள்புரிவானாக ! ஆமீன் !

---------------------------------------------------------------------------------------------------------------------

ஆத்ம வழியில் செல்பவர்களுக்கு இச்சைகளால் சோதனை ஏற்படுகிறது. ஆத்மஞானிகளுக்கு ஏகாந்தத்தில் இருக்கும்போது மனத்திலெழும் தவறான நாட்டங்களால் சோதனை ஏற்படுகிறது . மெய்ஞ்ஞானிகளுக்கு ( அப்தால்களுக்கு ) இறைவனின் ஒரே நாட்டம் சிதைவுறுவதில் சோதனை ஏற்படுகிறது .

ஞானம் நூற்களிலில்லை .   பூரணத்துவம் பெற்ற ஞானிகளின் வாயில் இருக்கிறது .   அந்த இன்ஸானே காமில்கள் யார் ? மெய்யான துறவிகள் , தவயோகிகள் , கலப்பற்ற நல்லமல் புரியும் மகான்களேயாவர் .                                               

ஹள்ரத்
கெளதுல் அஉளம் முஹிய்யுத்தீன் ஆண்டகை ( ரலி ) -