முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களின்
வாழ்க்கை வரலாறு !
மூலம் : திருநபி சரித்திரம் . தொகுப்பு : முஹம்மதடிமை , திருச்சி .
ஹுதைபிய்யா உடன்படிக்கை - நுட்பம்
புனித மக்காவிற்கு தூதுவராகச் சென்ற உதுமான் ( ரலி ) அவர்கள் கொல்லப்படவில்லை என்று பின்னர் தெரிய வந்தது. முஸ்லிம்களிடம் காணப்பட்ட ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஆவேசத்தையும் தெரிந்த குறைஷிகள் மனம் தளர்ந்து விட்டனர். குறைஷிகள் நன்கு ஆலோசனை செய்து பேசுவதில் திறமை பெற்ற ‘ ஸுஹைல் இப்னு அம்ரு ’ என்பவரைத் தூதராகத் தேர்ந்தெடுத்து முஸ்லிம்களுடன் சமாதானமாய்ப் போய்விட வேண்டுமென்ற எண்ணத்துடன் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் போய் பேசும்படி அனுப்பினார்கள் . அவரையனுப்பும் போது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களுடன் வந்த முஸ்லிம்களும் இந்த ஆண்டு மக்காவிற்குள் பிரவேசிக்கக் கூடாதென்ற நிபந்தனையின் மேல்தான் சமாதானப் பிரச்சனையை அணுக வேண்டுமென சொல்லி அனுப்பியிருந்தார்கள். ஸுஹைல் , பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சமூகத்தில் வந்து குறைஷிகளின் கட்சியை எடுத்துச் சொன்னார் . வெகுநேரம் வரை பேச்சு தொடர்ந்தது. முடிவில் சில நிபந்தனைகளின் பேரில் சமாதானம் செய்து கொள்வதென ஏற்பாடாயிற்று .
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அலி ( ரலி ) அவர்களை அழைத்து அவ்வுடன்படிக்கையை எழுத்து மூலமாக எழுதிக் கொடுக்கும்படிக் கட்டளையிட்டார்கள் . அலி ( ரலி ) அவர்கள் துவக்கத்தில் “ பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் - அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோ னுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் ” என்று எழுதினார்கள் . ஆனால் அரபி தேசத்தார் துவக்கத்தில் , “ பிஸ்மிக்கல்லாஹும்ம ” என்றுதான் எழுதுவது வழக்கம் . ஆதலால் அவ்விதமே எழுத வேண்டும் என்று ‘ ஸுஹைல் ’ வற்புறுத்திச் சொல்ல , பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதற்கு இணங்கினார்கள் . அப்படியே எழுதப்பட்டது . அதன்பின் அவ்வுடன்படிக்கையில் “ முஹம்மது ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கீகரித்த உடன்படிக்கையாவது ” என்று அலி ( ரலி ) அவர்கள் எழுதியதைப் பார்த்து , ஸுஹைல் “ நாங்கள் உங்களை நபியாக ஒப்புக் கொண்டிருந்தோமேயானால் நமக்கும் உங்களுக்கும் எதற்காக வேற்றுமை உண்டாக வேண்டும் ? ஆகவே , நீங்கள் உங்கள் பெயரையும் , உங்கள் தந்தையின் பெயரையும் மட்டுமே எழுத வேண்டும் ” என்று சொன்னார் .
அதற்குப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் , “ நீங்கள் என்னை ஒப்புக் கொள்ளாவிட்டாலும் அல்லாஹ்வின் பேரில் சத்தியமாக நான் அல்லாஹ்வின் தூதனாகவே இருக்கிறேன் ” என்று சொல்லி , அலி ( ரலி ) அவர்களிடம் தங்களுடைய பெயரை மட்டும் எழுதும்படிச் சொன்னார்கள் . பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதில் அலி ( ரலி ) அவர்களுக்குச் சமமமாக ஒருவரும் இருக்க மாட்டார்கள் . அவர்களுக்கு அன்புப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதுள்ள அன்பின் மிகுதியால் நாயகமே உங்கள் சிறப்பு நாமத்தை , “ நான் ஒருபோதும் அழிக்க மாட்டேன் “ என்று சொல்லி விட்டார்கள் . அதன்பின் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் , அவ்வார்த்தை எழுதப்பட்டிருக்கின்ற இடத்தைச் சுட்டிக் காட்டும்படி சொல்லி தங்களின் திருக்கையினால் ‘ ரசூலுல்லாஹ் ’ என்ற பதத்தை அழித்தார்கள் . பின்னர் சமாதான நிபந்தனைகள் எழுதப்பட்டன .
உடன்படிக்கையின் நிபந்தனைகளாவன :
1. இவ்வாண்டில் முஸ்லிம்கள் மக்காவிற்குள் பிரவேசிக்காமல் திரும்பிப் போய்விட வேண்டும் .
2. அடுத்த ஆண்டு முஸ்லிம்கள் வந்து மூன்று தினங்கள் மட்டும் மக்காவிற்குள் தாமதித்துப் போக வேண்டும் .
3. அப்படி வரும்போது , வாளைத் தவிர வேறு ஆயுதமொன்றும் கொண்டு போகக் கூடாது .
4. மக்காவில் முன்னமே தங்கியிருந்த முஸ்லிம்களை மதீனாவிற்குக் கூட்டிக் கொண்டு போகக் கூடாது . முஸ்லிம்களில் யாராவது மக்காவில் இருக்கப் பிரியப்பட்டால் அவர்களைத் தடுக்கவும் கூடாது .
5. முஸ்லிமல்லாதாரில் அல்லது மக்காவிலுள்ள முஸ்லிம்களில் யாராவது மதீனாவிற்குச் செல்வதாய் இருந்தால் , அவர்களைத் திருப்பி மக்காவிற்கு அனுப்பி விட வேண்டும் . ஆனால் முஸ்லிம்களில் யாராவது மக்காவிற்கு வந்தால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் .
6. அரபிக் கூட்டத்தார் தங்கள் விருப்பப்படி இரண்டு கட்சியில் யாரிடமானாலும் உடன்படிக்கை செய்து கொள்ளலாம் .
7. இந்த உடன்படிக்கை பத்து ஆண்டு காலம் அமலிலிருந்து வரும் .