• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai     »    2014    »    Feb 2014     »      வஹாபிகள் ஸஹாபிய வேடங்களில்


வஹாபிகள் ஸஹாபிய வேடங்களில்
முடிவுரை

வணக்கவாளியுடைய எல்லா வணக்கங்களையும் விட அவுலியாக்களின் பேரில் உகப்பு ( முஹப்பத் ) வைப்பதானது மிகப்பெரிய வணக்கமாக இருக்கும் . ஆகவே , அல்லாஹ் உடைய அவுலியாக்களை எவர்கள் உகப்பு வைக்கிறார்களோ நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையே உகப்பு வைத்தார்கள் . எவர்கள் அல்லாஹ்வை உகப்பு வைப்பார்களோ அவர்களை அல்லாஹ்வும் உகப்பு வைப்பான் . அதாவது , அல்லாஹ்வின் அவுலியாக்களை நேசிப்பதானது அமல்களிலெல்லாம் பெரிய தவ வணக்கமாகும் . இந்த அடிப்படையிலேதான் மஹான்களெல்லாம் அல்லாஹ்வின் அவுலியாக்களை உகப்பு வைத்து நேசித்து தாங்களும் அவுலியாக்களானார்களாம் என்பதாம் . இதே போல குத்பு ­ ஷஃறானீ ( ரலி ) அவர்கள் தபகாத்துல் குப்ரா 1- வது பாகம் , 77- வது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள் .


ஒரு நாட்டுப்புற அரபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது சமூகம் வந்து யாரஸூலல்லாஹ் ! கியாமத்து நாள் எப்போது ? என்று கேட்ட போது அவர்கள் அவரை நோக்கி அதற்காக நீ என்ன சேகரித்து வைத்திருக்கிறாய் ? என்று வினவினார்கள் .அப்போது அவர் அல்லாஹ்வையும் , அல்லாஹ்வுடைய ரஸூலையும் உகப்பு வைத்திருக்கிறேன் . மற்றபடி நான் தொழுகை நோன்பு அதிகப்பட சேகரம் செய்யவில்லை என்றார் .


அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ( அல் - மர்உ - மஅ - மன் - அஹப்ப ) மனிதன் யார் யாரை உகந்தனோ அவர்களோடேயே ஆகியிருப்பான் என்று கூறினார்கள் “. எனது அவுலியாக்கள் என் பரிவட்டத்திற்குள் இருக்கின்றார்கள் . என்னை யன்றி   வேறு யாரும் அறிய மாட்டார்கள் என்று இறைவன் கூறியதாக ஹதீது குதுஸியில் வந்துள்ளது . அவுலியாக்கள் , குதுபுமார்கள் உலகத்துக்கு முளைகளாவார்கள் .


அல்லாஹ்வின் பாதையில் ஆவிகளைத் தத்தம் செய்திருக்கக் கூடிய நாதாக்களான அவுலியாக்கள் வஃபாத்திற்குப் பிறகும் ஹயாத் துள்ளவர்கள் எனத் திருமறை சான்று பகருகின்றது . அன்னவர்களே ஹகீகத்தில் உலகத்தைக் கண்காணிப்பவர்கள் என நாயக வாக்கியம் போதிக்கின்றது .


உலகின் எந்தக் கோணத்திலிருந்தும் மானிடர் எந்தக் காலத்திலும் இகபரத்திற்காக நற்கருமங்களைக் குறித்து அவர்கள் பால் உதவி தேடல் கூடும் . அவற்றை நிறைவேற்றிவைக்கும் சக்தியை அவர்களுக்கு அல்லாஹ் அளித்துள்ளான் .   இம்மாபெரும் தத்துவம் அவர்களிடத்தில் யுக முடிவு வரை இருக்கவே செய்யும் . அவர்களது திருநாமங்கள் ஆபத்துக் காலத்தில் அரு மருந்தாயும் , ஆனந்த சமயத்தில் அமிர்தமாயும் இருக்கின்றன .


சிறிது நேரம் அவர்களின் சகவாசத்திலிருப்பது , முகஸ்துதியற்ற நூறுவருட வணக்கத்தை விட மேலானது என்று மெளலானா ரூமி ( ரஹ் ) அவர்கள் மஸ்னவி ­ ரீபில் மொழிந்துள்ளார்கள் வலியுல்லாவை நேசிக்கிறவனே ! அவர்களது திருச்சன்னிதானத்தில் இருக்கையில் அவர்களை மறந்து ஒரு வினாடியேனுமிராதே ! ஜாக்கிரதை ! எனவும் ஸஃதீ ஷிறாஸீ ( ரஹ் ) அவர்கள் போஸ்தானில் எச்சரித்துள்ளார்கள் .


உயிரோடு இருக்கையிலோ உலகத்தை விட்டு மறைந்த பின்னரோ அல்லாஹ்வின் வலி இடத்தில் சொற்ப நேரமாயினும் இருப்பது அமல்களில் மேலானது என்பதாக ஸாலிஹீன்களில் சிலருக்கு நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்    அவர்கள் கனவில் காட்சி அளித்து கூறியுள்ளார்கள் என்பதாக அல்லாமா ­ ஷஹாபுத்தீன் இபுனு ஷீஜாயீ ( ரஹ் ) என்ற பெரியார் றிஸாலா - இதுபாத்து - கராமாத்தில் அவுலியா 232 வது பக்கத்தில் சொல்லியுள்ளார்கள் .   மேலும் இதை ஹதீக்கத்துன் - னதிய்யா - பீ - ­ ரஹித் தரீக்கில் முஹம்மதிய்யா என்ற நூலின் 2- வது பாகம் , 81- வது பக்கத்தில் அல்இமாம் ஷைகு அப்துல் கனி நாபுல்ஸி ( ரஹ் ) அவர்கள் அறிவித்துள்ளார்கள் .


ஆகவேதான் ,   உலகோம்பும் உத்தமர்கள் எல்லோரும் குத்புமார்கள் உடைய இல்லங்களின் வாயில்களைக் காத்துக் கிடந்தனர் .   மேலும் காத்துக் கிடக்கின்றனர் .    


                                                                      ( தொடரும் )