• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai        »      2014    »   Feb 2014     »    கலீபாபெருந்தகைகள்


தரீகத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யாவின் கண்ணியமிகு
கலீபா பெருந்தகைகள்

ஒரு சிறப்புப் பார்வை !
மெளலவி என் . எஸ் . என் . ஆலிம் . பி . காம் . திருச்சி



வலிய்யுல் அஹ்ஸன் அவர்கள் ஒருமுறை என்னிடம் கூறிய அதி அற்புத வரலாறு :

ஆன்மிகப் பேரொளி ஹள்ரத் முஹிய்யுத்தீன் இபுனு அறபி ( ரலி ) அவர்கள் , தங்களின் சுயத்தை அறிந்த போது - அடைந்த போது அனல்லாஹ் ” ( சர்வமும் நானே ) எனப் பிரகடனப் படுத்தினார்கள் !


அப்போது அன்னவர்கள் வாழ்ந்த பகுதியில் ஒரு பிரளயமே தோன்றிற்று ! பாமரர்களோடு சேர்ந்து மார்க்க அறிஞர்களும் போர்க் கொடி தூக்கினர்ஏசினர் . எள்ளி நகையாடினர். ஏளனஞ் செய்தனர் . எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர் ! சேதி எங்கும் பரவி மன்னர் வரை போய்ச் சேர்ந்தது ! மன்னர் , ஹள்ரத் இபுனு அறபீ ( ரஹ் ) அவர்களை அழைத்து , “ தாங்கள் கூறுவது உண்மையா ?” என்றார் . “ நாம் எப்போதும் உண்மையைத் தவிர வேறொன்றும் கூறுவதில்லை !” என்பதாக ஹள்ரத் இபுனு அறபீ ( ரஹ் ) அவர்கள் கம்பீரமாகக் கூறினார்கள் !

மன்னர் சினமுற்று தாங்கள் நானே சர்வம் எனக் கூறி வருவது ­ ஷரீஅத்திற்குப் புறம்பானது என்பதாக மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள் ; இவ்வாறு தாங்கள் தொடர்ந்து கூறி வந்தால் தங்களைக் கொல்வதற்குண்டான சந்தர்ப்பம் ஏற்படும் என மிரட்டினார் .


இதற்கெல்லாம் நாம் அஞ்சிடோம் ; நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள் என்பதாக ஹள்ரத் இபுனு அறபீ ( ரஹ் ) கூறினார்கள் .


மார்க்க அறிஞர்களின் ஆலோசனைப்படி , மன்னர் தூக்குத் தண்டனையை அறிவித்தார் . சேதி காட்டுத் தீ போல் பரவவே மக்கள் அலைகடலெனத் திரண்டனர் !


மன்னர் முன்னிலையில் ஹள்ரத் இபுனு அறபீ ( ரஹ் ) அவர்களுக்கு   மரண தண்டனை நிறைவேற்ற ஆயத்தமாயினர் .  மன்னர் தங்களின் இறுதி   விருப்பம் ஏதேனும் உண்டா ?” என்று கேட்டார் .



ஆம்   உண்டு ... நான் முகச் சவரம் செய்து கொள்ள வேண்டும் ; நகம் வெட்டிக் கொள்ள வேண்டும் என்றார்கள் ஹள்ரத் இபுனு அறபீ ( ரலி ) அவர்கள் !. நாவிதர் வரவழைக்கப்பட்டார் . முகச் சவரம் செய்து முடித்தார் !  அப்போது ஹள்ரத் இபுனு அறபீ ( ரஹ் ) அவர்கள் , நாவிதரின் காதில் தங்களின் கலிமா விரலில் லேசாக இரத்தம் வரும்வண்ணம் கீறி விடுமாறு கூறினார்கள் . முதலில் நாவிதர் மறுத்தார் . பின்னர் அவ்விதமே செய்தார் .   என்ன ஆச்சர்யம் . மன்னர் முதற்கொண்டு ஆங்குக் கூடியிருந்த அனைவர் கலிமா விரல்களிலும் இரத்தம் கசிந்தது ; நாவிதர் உட்பட மன்னரும் ஏனையோரும் மருண்டு விட்டனர் !


இதோ ... தூக்குத் தண்டனைக்கு நான் தயார் ... என்று ஹள்ரத் இபுனு அறபி ( ரலி ) அவர்கள் கூறியதும் விபரீதத்தைப் புரிந்து கொண்டு அனைவரும் விட்டால் போதும் ... எனச் சிட்டாகப் பறந்து விட்டனர் , மன்னர் உட்பட !        

                          

( தொடரும் )

 

 


செல்வ மகனே , என்னிடம் ஞான தீட்சை ( பைஅத் ) பெற்று என் தோழமையை ஏற்றுக் கொண்டாயே ! நான் காட்டிய ஞான வழியை ஒட்டியே நீ வணக்கங்கள் புரியாவிட்டால் , என் பைஅத்தும் , தோழமையும் உனக்குப் பயன்படுமென்றா நினைக்கிறாய் ? பைஅத்தின் வெளிக்கோலத்தைத் தவிர்த்து அதன் ஆழமான ஆத்மீகத் தத்துவார்த்தங்களை உணர்ந்து அமல்புரிவதே சிறந்தது ; ஞான தீட்சையைப் பெற்ற அவன் நான் காட்டிய படியெல்லாம் சன்மார்க்கத்துக்கும் பணிவு காட்டவேண்டும் ; நான் எங்கெல்லாம் திருப்புகிறேனோ அங்கெல்லாம் திரும்பவேண்டும் . அதற்குச் சம்மதமில்லாவிடின் என் தோழமையைப் பெறவேண்டாம் . ஏனெனில் , என் பரமார்த்திக வழியில் நடந்தால் கிடைக்கும் மறுமையின் ஆதாயங்களைவிட எனக்கு மாறு செய்வதால் உண்டாகும் நாசம் மகத்தானதாய் இருக்கும் .


சமூகத்தார்களே , ­ ஷரீஅத்துக்கு இணக்கமான முறையில் தான் ஒழுக வேண்டும் என்ற நடைமுறை உங்களிடையே பெருத்த அளவில் இல்லாமல் போய்விட்டது . வெளிரங்கத்திலும் , உள்ரங்கத்திலும் அதைப் பேணாமல் விட்டுவிட்டீர்கள் . உங்கள் நஃப்ஸுக்கும் , இச்சைக்கும் வசப்பட்டு அடிமையாகி விட்டீர்கள் . வேதனையையும் தண்டனையையும் தராமல் அல்லாஹ் பொறுமையோடிருப்பதால் நீங்களும் மயங்கிக் கிடக்கிறீர்கள் . ஏதோ ஒரு கெடுவரை வேதனையும் தண்டனையும் தரப்படாமல் நிறுத்தப்பட்டிருக்கலாம் .   ஆனால் , மறுமையிலோ அவை யாவும் பல திசைகளிலிருந்தும் வந்து உங்களைத் தாக்கிப் பிடிக்குமே ! அப்போது இறைவன் உங்கள் மீது குற்றஞ்சாட்டித் தன் அடக்கியாளும் சக்தியைக் காட்டுவானே !

             - ஹள்ரத் கெளதுல் அஉளம் முஹிய்யுத்தீன் ஆண்டகை ( ரலி ) -