• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai        »     2014     »    Feb 2014    »    மகளிர்பக்கம்


மகளிர் பக்கம் நெடுந்தொடர் ....



நல்ல பெண்மணி

எம் . ஆர் . எம் .முஹம்மதுமுஸ்தபா -


பல மாமியார்கள் மருமகளிடம் கடுமையாக நடந்து கொள்வதற்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்த அறிஞர்கள் கூறுகின்றனர் :பெண்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஆண்களுக்கு அடங்கிக் கிடந்தனர் .காலம் அவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியது .அவர்களை அடிமைகள் போல் கருதி அடக்கியாண்ட காலம் மலையேறியது .இந்தப் புதிய சுதந்திரம்தான் அவர்கள் கடுமையாக நடந்து கொள்வதற்குக் காரணமாகும் .


இந்தப் பலவீனத்திற்கு ,நீங்களும் இரையாகி விடாதீர்கள் .உங்கள் மருமகளை ,உங்கள் வயிற்றில் பிறந்த மகள்போல் கருதுங்கள் !அவ்விதம் கருதுவீர்களேயானால் ,அவர்கள் பண்ணும் சிறு தவறுகள் எல்லாம் உங்கள் கண்ணில் படாமலேயே போய்விடும் .உங்கள் மகள் செய்யும் தவறுகள் எல்லாம் உங்கள் கண்ணில் பட்டுக் கொண்டா இருக்கின்றன ?


இந்த விஷயத்தில் அல்லாஹ்வுக்கும் அஞ்சுங்கள் ,அரசுக்கும் அஞ்சுங்கள் !மருமகளைக் கொடுமைப்படுத்துவது கூடிக் கொண்டே போவதால் நம் நாட்டின் அரசு ,அதற்குக் காரணமானவர்களைக் கடுமையாகத் தண்டிக்கப் போகிறது .ஒரு பெண் திருமணம் ஆகி ,முதல் ஏழு ஆண்டுகளில் வரதட்சணைக்காக மனநிலையோ ,உடல் நிலையோ பாதிக்கப்படும் வகையில்கொடுமைப் படுத்தப்பட்டால் அந்தக் குற்றத்தைச் செய்தவர்களுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படவிருக்கிறது .எனவே தவறியும் மருமகளைக் கொடுமைப்படுத்தும் குற்றத்தைச் செய்து விடாதீர்கள் .


சில பெண்களுக்கு மகள் பெற்ற பிள்ளைகள் மீது அன்பிருக்கும் .மகன் பெற்ற பிள்ளைகள் மீது அன்பிருக்காது .அதற்குக் காரணம் மகள் மீது இருக்கும் விருப்பு .மருமகள் மீது இருக்கும் வெறுப்பு .மருமகள் மீது இருக்கும் வெறுப்பால் ,அவள் பெற்ற பிள்ளைகள் தம் மகன் பெற்ற பிள்கைள் என்பது கூட அவர்களுக்கு மறந்து போய்விடுகிறது .இப்படி நீங்கள் இருக்கவே கூடாது .மகள் பெற்ற பிள்ளைகளையும் நேசியுங்கள் !மகன் பெற்ற பிள்ளைகளையும் நேசியுங்கள் !மகன் பெற்ற பிள்ளைகள் மட்டும் என்ன ?மகள் பெற்ற பிள்ளைகள் மட்டும் என்ன ?உலகத்தில் உள்ள எல்லாப் பிள்ளைகளையும் நேசியுங்கள் !


( இத்தொடர் இத்துடன் நிறைவு பெறுகிது )



மஞ்சள் மகிமை



ஏழைகளின் குங்குமப்பூ எனும் சிறப்புப் பெயருக்குரிய மஞ்சள் பொடி இந்திய சமையலில் அன்றாடம் முக்கிய இடம் பெறும் மசாலாப் பொருட்களில் முதன்மையானது .


இந்தியாவில் உலர்த்திய மஞ்சளை அரைத்து மஞ்சள் பொடியாக சமையலில் சேர்க்கிறோம் என்றால் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உலர்த்திய மஞ்சளை விட புத்தம் புதிய பச்சை மஞ்சளைத் துருவி சமையலில் சேர்க்கிறார்கள் .


இந்தோனேசியா ,மேற்கு சுமித்திராவில் பச்சைமஞ்சள் இலைகளையும் கூட சமையலுக்கு மணமூட்டச் சேர்க்கிறார்கள் .மாமிசமோ ,மரக்கறியோ ,மீனோ .. எதுவானாலும் அங்கு மஞ்சள் கட்டாயம் இடம் பெறுகிறது .சீசனில் பச்சை மஞ்சளும் உபயோகிக்கிறார்கள் சமையலுக்கு .


எத்தியோப்பியாவில் ஆங்காங்கு இந்திய சமையலின் தாக்கமாக மஞ்சள் பொடி சமையலில் பயன்படுகிறது .


மத்திய காலத்தில் தென்னாட்டின் சோழ மன்னர்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றையும் கைப்பற்றி தன் ஆட்சியை நிலை நாட்டியபோது மஞ்சள் மகிமையும் சேர்ந்து பரவியிருக்கலாம் !


இந்தோனேசிய கிழக்குத் தீவுகளில் தேங்காய்ப்பால் ,பட்டைகிராம்பு ,ஏலக்காய் ,மஞ்சள் ,வாசனைப் பொருட்கள் சேர்த்து சமைக்கும் மஞ்சள் சோறு பிரபலமானது.இந்தோனேசியாவின் பிரபல தீவான ஜாவாவில் ஜனத்தொகை அதிகம் .இங்குள்ளோர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியரானாலும் இந்த மஞ்சள் சோறு காலங்காலமாக அவர்களிடையே பிரபலமாக இருந்து வருகிறது .


இந்தோனேசிய பாலித் தீவுகளில் தென்னிந்தியாவைப் போலவே வளமும் நலமும் மக்கட்பேறும் பெற்று பெருவாழ்வு வாழ ஆசீர்வதிக்க மஞ்சள் அரிசியைத் தூவும் பழக்கம் உள்ளது .


தாவரங்களிலிருந்து எடுக்கப்படும் இயற்கை நிறங்களில் மஞ்சளும் இன்டிகோவும் பிரபலமானவை !இந்த இரு நிறங்களையும் பற்பல விகிதங்களில் சேர்த்தால் விதவிதமான பச்சை நிறங்கள் கிடைக்கும் என்பதால் பழங்காலத்திலிருந்தே மஞ்சளுக்கு மவுசு அதிகம் .மஞ்சளிலிருந்து நிறமிகள் பிரித்தெடுக்கப்பட்டு சணல் கயிறுகளுக்கும் துணிகளுக்கும் நிறமூட்டுகிறார்கள் .


இயற்கையான கிருமிநாசினியாயுள்ள மஞ்சளுக்கு மருத்துவ குணங்கள் ஏராளம் !சோறு வடித்த கஞ்சியில் சிறிது மஞ்சள்தூள் கலந்து குடித்தால் வயிற்று உப்புசம் குறையும் .மஞ்சளை அரைத்து நீரில் கலந்து தெளிய வைத்து நீரைக் குடித்தால் உடல் உஷ்ணம் குறையும் என்கிறது பாட்டி வைத்தியம் !