திருமறைப்பக்கம்
யாரஸுலல்லாஹ் !
பாகவி பின் நூரி
பேராசிரியர் ,மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் திருச்சி .
விசுவாசிகளே !உங்களிற் சிலர் ,மற்றவர்களை அழைப்பது போன்று எனது அன்புத் தூதர் நபி ( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )அவர்களை நீங்கள் அழைக்க வேண்டாம் .( குர்ஆன் :சூரத் :நூர் )
மேற்கூறப்பட்ட வசனம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மங்காப் புகழினைப் பாங்குடன் எடுத்து இயம்பும் திருமறை வசனங்களில் ஒன்றாகும் , இந்த இறைமறை வசனத்திற்கு மூன்று விதக் கருத்துகளை ஆன்மிக ஞானிகள் கூறுகின்றனர் .அவற்றை இங்கே நாம் காணுவோம் .
1. ஒருவர் மற்றவர்களை அழைப்பது போன்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மூமின்களாகிய நீங்கள் அழைக்க வேண்டாம் !என அல்லாஹ் ஆணையிட்டுள்ளான் என்பது இத்திருவசனத்திற்கு ஒரு பொருளாகும் .
ஒருவரை ஒருவர் அழைக்கும்போது அவர்களின் இயற்பெயர் கொண்டோ ,அல்லது பட்டப் பெயரைக் கொண்டோ அல்லது உறவு முறை கூறியோ கூப்பிடுவது பழக்கம் .ஆனால் கோமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இயற்பெயர் கொண்டு ஜீவிதத்தலும் ஜீவிதத்தின் பின்பும் அழைத்தல் கூடாது ( ஜீவிதத்தின் பின் அவர்களின் பெயரை யா முஹம்மத் ( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )எனக் கூறினால் ஒரு முறை கட்டாயம் ஸலவாத் கூறியே ஆக வேண்டும் .தவிர ,மனிதரே ,சகோதரரே ,தந்தையே ,தமையனே ,அண்ணனே ,போன்ற உறவுமுறை உபயோகித்து அழைக்கக் கூடாது .
“ யா ரஸூலல்லாஹ் ” ,“ யா நபிய்யல்லாஹ் ”“ யா ஹபீபல்லாஹ் ”“ யா ரஹ்மதன் லில் ஆலமீன் ”“ யா சையிதல் முர்ஸலீன் ”“ யா ஃபீஅல் முத்னிபீன் ”போன்ற நபியவர்கட்கே உரிய அடைமொழிப் பெயர்களைக் கூறி ,பண்போடும் பணிவோடும் மரியாதையோடும் மாண்போடும் அழைக்க வேண்டும் .
தன்னுடைய நபிமார்கள் அனைவரையும் அவரவர்களின் இயற்திருநாமம் கொண்டே அழைத்த இறைவன் ,இறுதி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மட்டும் அழகிய சிறப்புப் பெயர்களைக் கொண்டே விளித்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும் .எனவே ,நாயகத் திருமேனி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சிறப்புப் பெயர் கொண்டே அழைப்பது சாலவும் சிறந்ததாகும் .
“ யா நபிய்யல்லாஹ் ”“ யா ரஸூலல்லாஹ் ”“ யா ஹபீபல்லாஹ் ”என்ற அடைமொழி சிறப்புப் பெயர்களைக் கொண்டு அழைப்பது கூடாது என்று கூறுபவர்கள் காஃபிரும் சாபத்திற்குள்ளான மல்ஊனுமாவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும் .
2. ஒருவர் மற்றொருவரை அழைக்கும்போது ,அழைக்கப்பட்டவர் ,அழைத்தவரிடம் செல்வதும் ,செல்லாமல் இருப்பதும் அவரவர்தம் விருப்பம் .எனவே ,பிறர் விளித்தவுடன் சென்றாக வேண்டும் என்ற கட்டாயக் கடமையோ ,நிர்பந்தமோ கிடையாது .ஆனால் ,அதே போன்று நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழைப்பையும் மூமின்கள் கருதி விடக் கூடாது என்பதையும் இவ்வசனத்தில் கட்டளையிட்டு இருக்கின்றான். பூமான் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அழைக்கின்றார்கள் என்றால் ,அதற்கு செவிசாய்த்து விரைவது ,முஸ்லிம்களின் தலையாயக் கடமையாகும் .தங்களின் விருப்பு ,வெறுப்பு ,பணிகளைப் பற்றிய சிந்தனையை எறிந்துவிட்டு ,நாயகத் திருமேனி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஓடோடிச் சென்று ,அவர்களிட்ட கட்டளையின்படி நடப்பது தலையாய கடமையாகும் என்பதையும் அல்லாஹ் இங்கே சுட்டிக் காட்டுகின்றான் .நபித் தோழர்களான ஸஹாபாக்களின் புனித வாழ்வு இப்படித்தான் அமைந்திருந்தது .மார்க்கக் கடமையாகிய தொழுகையில் ஆழ்ந்த நிலையில் இருந்த நேரத்தில் கூட அண்ணலார் அழைக்கின்றார்கள் என்றால் ஓடோடிச் சென்று ,அல்லாஹ்வின் கட்டளைப்படி அடிபணிந்து காட்டினார்கள் .
3. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் “ துஆ ”மற்றவர்களின் துஆ போன்றதாகும் என முஸ்லிம்கள் எண்ணிவிடலாகாது என்ற பொருள்பட இவ்வசனத்தில் எச்சரிக்கை செய்கிறான் என்ற ஒரு விளக்கமும் இத்தொடருக்கு உண்டு .
மனிதன் ஒருவன் அல்லாஹ்விடம் கேட்கும் ( துஆவை )இறைவன் ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை .ஆனால் தனது பேரன்புக்கும் பாத்திரமான நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்கும் துஆவை நிராகரிப்பதில்லை .நிச்சயம் ஏற்றுக் கொள்கிறான் ,எனவே பெருமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்கும் துஆக்களின் தன்மையும் ,வல்லமையும் ,மற்றவர்கள் கேட்கும் துஆவிற்கு மாறுபட்டதாகும் ,பெருமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ உடனே ஒப்புக் கொள்ளப்படுகிறது .இதற்கு ஏராளமான ஆதாரங்கள் ஹதீது கிரந்தங்களில் நிரம்பிக் கிடக்கின்றன .விரிவஞ்சி விடுகின்றேன் .மெய்தான் ,இறைவனின் பேரன்புக்கும் ,பேரருளுக்கும் பாத்திரமான நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆன்மிக சக்திமிக்க துஆ எங்கே !பலவீனர்களாகிய நம்மவர்களின் துஆக்கள் எங்கே !பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறப்பையும் ,வாய்மையையும் உயர்வையும் யார்தான் அடைய முடியும் !நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கட்கு நிகர் அவர்களேதாம் . அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அடைமொழி சிறப்புப் பெயர் கொண்டழைத்து அருள் பெற்ற நன் மக்களோடு நம்மையும் அல்லாஹ் சேர்ந்தருள்வானாக !ஆமீன் .
( ஆதார நூல்கள் :தப்ஸீர் ரூஹுல் பயான் ,தப்ஸீர் அராஇஸுல் பயான் ,தப்ஸீர் ஸாவி ,தப்ஸீர் ஜலாலைன் ஹாஷியா .)