• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai      »     2014     »    Feb2014      »     அமுதமொழிகள்


சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்களின்


அமுதமொழிகள்



ஏகத்துவ மெய்ஞ்ஞானம்


( மறைந்த நாவலாசிரியரும் ,சிறந்த தமிழறிஞருமான அகிலன் ''அவர்களால் பேட்டி காணப்பட்டு 25.2.1976அன்று 18.15மணிக்கு சென்னை அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பேரர் -ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை நிறுவனர் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானா அவர்களின் சொற்பொழிவு )


எங்கும் நிறைந்த ஏக சக்தி திருவருட் பொழிக


கண்ணுக்குத் தென்படக்கூடிய பொருள்களாகவோ புலப்படக்கூடிய அணுக்களாகவோ ;புலன்களைக் கொண்டு விளங்கத் தக்கதாகவோ ,அறிவைக் கொண்டு அறிதற்குட்பட்டதாகவோ ,இல்லாததென்றோ உள்ளதென்றோ சொல்லவியலாத சுத்த சூனியமாய் விளங்கிய அது தன்னிற்றானே இசைக்கேற்பத் தாளத்தில் இயங்கத் தொடங்கிற்று .ஒடுங்கியிருந்த சூக்குமப் பிரணவமான ஓங்கார வடிவு வி ­ ஷமப்பட்டு சைதன்னிய சேஷ்டையில் இயங்கத் தொடங்கிற்று .இந்த உருக்களே இன்று அணுக்களெனவும் கோளங்களெனவும் மக்களெனவும் மாக்களெனவும் .பட்சிகளெனவும் தோற்றங்கொண்டு ;பரிபூரணமாய் ,ஏக சக்தியாய் ,காணும் பொருளாயும் காணவியலாததாயும் புலப்படாததாயும் விளங்கும் கால ,சூக்குமப் பிரணவமாய் ,ஜட ஆத்துமப் பொருளாய் விளங்கி நிற்கின்றது .இதுவே பரிபூரணமும் சச்சிதானந்தமும் ஆதியந்தமற்றதுமான சக்திப்பொருளாகும் .ஏகமெனவும் தனித்ததெனவும் ஒருவனெனவும் ஒப்பு இணைகளற்ற ஏகனெனவும் கூறும் பரம சக்தியும் இதுவேயாகும் .பலமொழிகளிலும் பல மதத்தவர்களும் தாம் இவ்வுண்மையினையே அறிந்தும் அறியாதும் அல்லாஹ் என்றும் கடவுளென்றும் சிவனென்றும் GODஎன்றும் கூறிக் கொள்கின்றனர் .



இம்மொழிகளாலே இதனைத் தத்தமக்குரிய தனித்தனித் தெய்வங்களெனப் பிரித்துக் கொள்கின்றனர் .எம்மொழி பேசுவாராயின் என்ன ,எம்மதத்தவராயின் என்ன ,உயர் ஞானியாயின் என்ன ,உயர் பதவி வகிப்பவராயின் என்ன ,பணக்காரனாயின் என்ன ,ஏழையாயின் என்ன ,எல்லோருக்கும் மேற்கூறிய தத்துவமே தெய்வமாகும் .எப்பொருளும் அதனிருந்தே வெளியாயின .எனவே ஒன்றிலிருந்தே வெளியான பலதரப்பட்ட நமக்கு மேற்கண்ட இந்த ஒன்றே தெய்வமாம் .முழுமையாய்க் காணும் அதுவே ஏகமாகும் .நாம் காணும் பொருள்கள் யாவும் அதனழகு பொதிந்தவையே .தனித்தனியாய் நாம் காணும் பொருள்களனைத்தும் பரமசக்தியின் அங்கங்களே .பல அலங்காரங்களையும் ,பலவகை உருவங்களையும் ,பல நாமங்களையும் பொதிந்த யாவும் ஓர் உடலாகும் .எல்லா மதங்களும் அவற்றின் தத்துவங்களும் அவ்வொரேயொரு உடலிலிருந்து வெளியானவையே .இதனை அறியும் அறிவையே ஆத்ம ஞானம் (SpiritualKnowledge) எனவும் தத்துவ ஞானம் எனவும் ,ஏகத்துவ ஞானம் எனவும் நாம் கூறுகின்றோம்


ஆகவே ,இந்த ஞானத்தைச் சிறப்புற அறியத்தக்க உத்தமப் பிறவி மானிடப் பிறவியாகும் .அவ்வாறே மானிடனும் உண்மைப் பொருளை வெளியாக்குவான் வேண்டியே தன்னிற்றானாய் வெளியானான் .மானிடச் சக்திக்குப் புறம்பாய் விளங்குவது யாதுமன்று .எல்லாம் மானிடனுக்குள்ளேயே அடங்கியுள்ளன .அவனிலிருந்தே அச்சக்தி வெளியாகுதல் வேண்டும் .தான் முன்னிருந்த முதனிலையை அவனேதான் வெளிப்படுத்தல் வேண்டும் .உண்மைப் பொருளின் தத்துவமாய் அவனேதான் விளங்குகின்றான் .விளங்கவும் வேண்டும்

உலகிற் காணும் மற்ற எல்லாப் பொருள்களும் தன்னிலையை அல்லது தன்மையை அறிதல் கடமையன்றெனினும் ,பகுத்தறிவைப் பொதிந்த மானிடன் தன் இலட்சியத்தையும் ,தனித்தன்மையையும் ,உண்மை நிலையையும் எங்கிருந்துதித்தான் என்பதையும் சிந்தித்தல் அவனது தலையாய கடமையாகும் .இதையறியும் அறிவே மேற்கண்ட உத்தம ஞானமாகும் .அனைத்தும் ஒன்றே எனும் இந்த ஞானத்தை திறம்பட அறிபவர் சாதிபேதம் ,உயர்வு தாழ்வு ,மதவேறுபாடு ,முதலாளி -தொழிலாளி முதலாம் வேற்றுமைகளை விட்டு நீங்கி ,சத்திய ஒளியில் நித்தியம் ஜீவிப்பவராவார் .ஆதலால் ,மானிடன் இறையை அறிவதான தன்னைத்தானறியும் அறிவைக் கொள்வதாயின் ,திடசித்தமும் ,சுத்த பக்தியும் ,பூரண நம்பிக்கையும் அவனிடத்திருத்தல் மிக முக்கியமாகும்


தனக்குரிய உருவத்தினை அடைந்து கொண்டபோது ,மானிடன் தன்னிற்றானாய்ப் பரந்த விரிந்த பிரம்மத்திலிருந்து வெளியானான் என்பதை முற்றும் மறந்து விடுகின்றான் .தனது உண்மையை மறந்தமையின் காரணத்தால் ,அவனது வாழ்வு ஏனைய மாக்களின் வாழ்வை ஒக்கின்றது .உண்டும் ,உடுத்தும் ,உறங்கியும் ,பெருமை பேசியும் ,பொறாமை கொண்டும் ,வேறுபாடுகளையும் பிரிவினைகளையும் உண்டு பண்ணியும் ,வாதங்கள் புரிந்தும் ,சண்டைகள் செய்தும் ,வாழ்வைப் பாழ்படுத்தும் செய்கைகளில் ஈடுபட்டும் ,மனிதத் தன்மையை இழந்து நிம்மதியற்ற வாழ்வு வாழ்கிறான் .இப்படியே வாழ்ந்து தனக்குக் கடமையான அறிவைத் தான் கற்காது புதைகுழி செல்லும் வரை வாழ்வை வீணாக்குகிறான் .உலகம் உய்வுபெற ,எல்லாச் சமயங்களும் வேறுபாடற ,எங்கும் சாந்தியும் சமாதானமும் நிலவ அனைத்துமொன்றே எனும் ஞானத்தைத் தானடைய ஒவ்வொருவரும் முன்வரல் வேண்டும்


அகர முதல 

" அகர முதல எழுத்தெல்லாம் ;ஆதிபகவன் முதற்றே உலகு ''என்றாற் போல் எழுத்துக்கள் அனைத்திலும் ,அல்லது எழுத்துக்கள் கொண்ட ஒலிகள் அனைத்திலும் ,அகர எழுத்து அல்லது அகர ஒலி எவ்வண்ணம் பின்னிப் பிணைந்து கலந்திருக்கின்றதோ அவ்வண்ணமே சுத்த சத்தியப் பொருள் அனைத்திலும் பின்னிப் பிணைந்து விரவிக் கலந்துள்ளது .அகரம் ஏனைய எழுத்துக்களிலில்லாது போயின் அவ்வெழுத்துக்களே தென்படாது போயிருக்குமாப்போல் இந்த சக்திப் பொருளே இல்லையாயின் உலகமோ ஏனைப் பொருட்களோ இல்லாது போயிருக்கும் .ஓங்காரமோ அகரமின்றி இயங்கவில்லை .உகரமகர எழுத்துக்களிலும் அகரமே ஒலிக்கின்றது .இவ்வாறே எங்கும் பிரணவமே நிறைந்துள்ளது .மானிடன் உலகில் வாழுங்கால் எவ்வண்ணம் அவன் தெய்வத் தன்மையை அடைய முனைந்த போதும் ,ஆத்மீக உணர்வடைய முன்வந்த போதும் ,ஓங்காரத்தினுட்மகரம்போல் மானிடனுட்பதிந்துள்ள மாயை தன்னை உலக ஆசாபாசங்களில் இழுத்து விடுகின்றது .இந்த மாயையைத் தன்னகத்திலிருந்து நீக்க மனிதன் முழு முயற்சி எடுத்தல் வேண்டும் .இம்மாயை தன்னகத்திருக்கும்வரை இறைவனை அடைதல் முடியாததாகும் .இகம் பரம் ஆகிய இரண்டும் நம்மகத்தே யுள்ளன .உடலும் ,உயிருமாய் இவை காட்சியளிக்கின்றன .உயிர் மேல் நோக்கி மனிதனைத் தெய்வீகத்தின் பக்கம் இழுத்துச் செல்ல ,உடலோவெனில் அதனை அப்பக்கம் செல்லவிடாது அலங்காரமாகிய மாயையில் மயங்கி அதனைத் தன்பக்கம் பலாத்காரமாய் இழுத்து விடுகிறது .எனவே மனிதன் உலக மாயையில் மயங்கிவிடாது பூரண ஞான ஒளியின் பக்கம் செல்லத் துணிதல் வேண்டும் .அவன் உலகினுக்கு எவ்வழியில் வந்தானோ அவ்வழியில் செல்ல ஆயத்தம் செய்து கொள்ள வேண்டும் .தன்னை அறிந்து செல்லும் வழியே ,தான் செல்ல வேண்டிய உண்மை வழியாகும்


இவ்வழியிற் செல்ல ,காணும் பொருட்களில் சிந்தனை செலுத்துதல் வேண்டும் .இவை யாவும் எங்கிருந்து வந்தன என்பதைச் சிந்தித்தல் வேண்டும் .நாம் தாயின் வயிற்றிலிருந்து பிறப்பதற்கு முன் எங்கிருந்தோம் ?தாயின் வயிற்றுக்கு எங்கிருந்து வந்தோம் ?விந்து எங்கிருந்து வந்தது ?விந்துக்குக் காரணமாயிருந்தது எது ?நாம் உண்ணும் பொருட்கள் எங்கிருந்து எதிலிருந்து வெளியாயின ?உலக உற்பத்தி எப்படி ?அணுக்கள் என்பவை யாவை ?எல்லா உற்பத்திக்கும் முதற்காரணம் யாது ?எனவெல்லாம் மனிதன் சிந்தித்தல் வேண்டும் .இச்சிந்தனை மனிதன் தன் நிலையறியத் துணைபுரியும் ஆயுதமாகும் .இச்சிந்தனை தியானத்திற்கு வழிகாட்டும் .சிந்தனை ஆழச் செல்லச் செல்ல தியானத்தில் தன்னைச் சிறிது நேரமேனும் நிலைக்கச் செய்ய தானே பிரணவமயம் ,தானே அனைத்துப் பொருளின் அங்கம் ,தானே அதிற்கலந்தவன் ,பனிக்கட்டி நீரென்ற நாமத்தை மறைப்பதுபோல் தன் உடல் அதனை மறைத்திருப்பினும் தான் அனைத்துமானவன் எனும் உண்மை ஒளி தன் உள்ளத்தில் பிரகாசிக்கத் தொடங்கும் .அவன் ஐம்புலனடக்கித் தியானத்திலீடுபடுவான் .மயக்கம் தன்னை விட்டும் நீங்கி தயக்கமற்ற தனி நிலை நிற்பான் .இவனே பிறவித் துன்பத்தை நீக்கிச் சத்திய ஒளியிற் கலந்தவனாவான் .பாபமற்ற பரமசத்துமாவான்


ஆதலால் ,மனிதன் அவனை மறைத்திருக்கும் மறைப்புக்களை ஒன்றன்பின் ஒன்றாய் நீக்கல் வேண்டும் .அவனது உண்மையை மறைத்திருக்கும் பெயர் ,உடை ,உடல் முதலாம் மறைப்புக்களை நீக்கித் தனது உன்னத நிலையைப் பார்த்தல் வேண்டும் .நம்மகத்தே உறங்கிக் கிடக்கும் ஏக சக்தியை நம்மகத்திலிருந்து தட்டிஎழுப்பிச் செயற்படவிடல் வேண்டும் .அதற்கு நாம் ஞானத்திற்கு எதிரிகளான ஐந்தையும் அடக்கல் வேண்டும் .அப்போது உள்ளத்துள் அடங்கியுள்ள பரிசுத்த பரமாத்மாவாகிய ஞானப் பிரகாசம் வெளியாகி சித்தி பெற்றுச் சின்மயமாவான்


ஆதலால் அனைவரும் சுத்த சத்திய மெய்யறிவான மெய்ஞ்ஞானத்தை அறிந்து ,பூரண பக்தியில் ஆழ்ந்து நித்திய ஜீவனில் இரண்டற விரவிக் கலந்து ,பாபம் நீக்கி ,பிறவிக்கடல் கடந்து ,பேரானந்தப் பரவசமடைவார்களாக .அனைவரும் அன்புருப் பெற்றுப் பண்புருவாகி சுத்த சத்திய நித்திய வாழ்வு வாழ்வார்களாக !