மனிதன் மனிதனாக வாழ ஒரு பெருமன்னர் அவதரித்தார்கள்
உண்மையை மறந்து தாம் மனிதவினம் என்பதைத் துறந்து எப்படியும் வாழும் மிருகத் தன்மை பொதிந்த அஞ்ஞான இருளில் மூழ்கி மதிமருண்டு கிடந்த மக்கள் கூட்டத்தை நேர்வழிப்படுத்த வந்த இறை ஜோதியைக் கொண்டாடும் ஒரு நாள். அது திருநாளாகவேயிருக்க வேண்டுமென்பது உண்மையிலும் உண்மை . அதில் ஐயமில்லை .
வையம் போற்றும் பெருநபி வானமும் பேற்றும் அருமை இரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரபஞ்சம் முழுதும் நிறைந்த இறை ஜோதி என்பதை எல்லாச் சிருட்டிகளும் நன்கறியும் , கற்றறியாப் பெருந்தகை பெற்றுத் தந்த பெருமறை எப்போழ்தும் நிலைத்து நிற்கும் ஒரு பெருங்கருவூலம் . நபிமார்களையும் மற்றெல்லாச் சிருட்டிகளையும் நேர்வழிப்படுத்த வந்த கரைகாணவியலாத ஒரு பெருவோலம் என்பது கலங்கரை விளக்கம் . ஒரு மொழியேனும் கற்காத அருள் நபியவர்களின் அதரத்திருந்து உதிர்ந்த தரளங்களோ ஏத்தியுரைத்து ஓரெல்லைக்குள் வைக்கும் ஏற்புடைத்தன்று . பெருவாழி மடை திறந்தன்ன வரம்பு கடந்த அருங்கருத்துக்களை அள்ளியள்ளி வார்க்கும் அரும்போதம் .
நபி நாயகம் இன்றேல் மண்ணில்லை ; விண்ணில்லை ;மதியில்லை ; பரிதியுமில்லை ; வேறென்ன ? பிரபஞ்சமே இல்லை . அந்த நபியொளியிலிருந்து வந்த அனைத்துப் பொருள்களும் அவர்களால் சோதியாயின எனின் உண்மை எங்கேயுள்ளது ? எனவே , இத்தகைத்த அருணபியை ஒவ்வொரு வருடத்தினும் ஒவ்வொரு மாதத்தினும் ஒவ்வொரு நாளினும் , ஒவ்வொரு கணத்தினும் புகழ்வோம் ; பூவாரம் கோவை செய்வோம் ; தேவாரமாய்ப் படிப்போம் ; பாடுவோம் .
அவர்கள் கொணர்ந்த நடை , உடை , கொள்கை , மொழிமுறை முதலாமனைத்தையும் ஏற்று நடந்து இஸ்லாம் எல்லாவற்றுக்கும் முன்மாதிரி என்பதை மாந்தர் மத்தியில் எடுத்துக் காட்டுவோம் . நபிமார்களின் அன்பு , பண்பு , மன்னிக்குந்தன்மை , ஊன் , உறக்கம் , தொழிற்பாடு இவைகளைப் பெரும் படிப்பினையாகக் கொண்டு சாந்தம் , சமாதானம் முதலாமிவற்றைப் பரப்புவோம் . யாவரும் கேளிர் எனும் உறவையும் ஒற்றுமையையும் உலகின் கண்ணே பரப்புவோம் .
மனிதன் வேண்டுவது நிம்மதி , அஃது இப்போது நம் மாட்டேயில்லை . எண்ணிலாப் பொருளீட்டினும் சொகுசாய் வாழினும் நிம்மதியென்பதில்லை . உலகமே நிம்மதி , நியாயம் ,மனநிறைவு , சத்தியம் , எவ்வாறு நடக்க வேண்டும் , பாவம் ,புண்ணியம் , கண்ணியம் , எதுநியதி , மனிதகுணம் முதலாம் இவைகளையயல்லாம் மறந்துவிட்டது .
இஸ்லாத்தை மக்கள் விரும்பி வந்தமை அதன் வாழ்க்கை முறைக்கும் கண்ணியமான நடைமுறைக்குமாகும் என்பது உளமறிந்த உண்மை . இஸ்லாம் சத்தியமானது . உண்மைக்கு முரணானதல்ல . இன்றோ மக்கள் வாயில் உண்மை மிகைத்துள்ளது . ஆயினும் உள்ளமே அதைச் செயற்படுத்தும் நிலையிலில்லை . இன்று இஸ்லாம் உடையில் மட்டுமே காட்சியளிக்கிறது . ஆயினும் நடையில் இல்லை . சொல்வதொன்று ; செய்வதொன்று , பணத்துக்காகப் பாடுபடுகிறார்கள் . ஆனால் ,இனத்துக்காகப் பாடுபடவில்லை . இனத்துக்காகப் பாடுபடுகிறோம் எனக் கூறிப் பிறர் நலனைக் கெடுக்கிறார்கள் . இஸ்லாமிய கலாச்சாரம் வெளிப்படையில் மட்டுமே உள்ளது . உட்புறத்திலோ ஏனையோர் கலாச்சாரம் பேணப்படுகிறது .
வாக்களிக்கின்றனர் வாக்கு நிறைவேற்றப்படுவதில்லை வழிபாடுகள் ஏனோதானோவாகிவிட்டன. இவையயல்லாம் மக்களின் இஸ்லாமிய நம்பிக்கையைச் சிதறடித்துவிட்டன. சமுதாய ஒற்றுமை நிலைகுலைந்துவிட்டது . மதிப்பு ,மரியாதைகளெல்லாம் காற்றோடு பறந்து விட்டன . பண்டைய மிருகத் தன்மை தலைதூக்கி ஆடத் தலைப்பட்டுவிட்டது . கண்டவுடன் கொலை செய்யும் கானகமாக்களின் குணங்கள் மக்களிடத்திலிருந்து மாற வேண்டும் . உண்மைக்காக வாழ வேண்டும் . உண்மையையே பின்பற்ற வேண்டும் . இதுவே நபிகள் நாயகம் காட்டிய உண்மையான பாதையயன்பதைத் திடப்படுத்திக் கொள்ள வேண்டும் .
வாழ்க இறைமொழி !
வாழ்க நபிமொழி !!
வாழ்க சத்தியம் !!!