• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai   »   2014   »   Jan 2014   »     குறிஞ்சிச்சுவை


குறிஞ்சிச்சுவை –காமூஸ் அறபு – தமிழ் அகராதி வெளியீட்டு விழா !



தமிழ் எம் உயிர் ; அதில் தவறு செய்பவரை மன்னிக்கமாட்டோம்

சங்கைமிகு செய்குநாயகம் அவர்கள்


அவ்னிய்யா உலக அமைதி அறக்கட்டளை , தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா, ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை சார்பில் சங்கைமிகு செய்குநாயகம் அவர்களின் குறிஞ்சிச்சுவைகுத்புல் ஃபரீத் ஜமாலிய்யா அஸ்ஸையித் யாஸீன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம்   ( ரலி )அவர்களின் - காமூஸ் அறபு , தமிழ் அகராதி ( இரண்டாம் பாகம் ) வெளியீட்டு விழா , மற்றும் இலக்கியப் படைப்புகள் அறிமுக விழா  22.12.2013 ஞாயிறு அன்று  காலை 10 மணியிலிருந்து   மதியம் 2 மணிவரை சென்னை எழும்பூர்  காந்தி   இர்வின் சாலை , ஹோட்டல் ரமதா உள்ளரங்கில் நடைபெற்றது

விழாவிற்கு டாக்டர் அவ்வை நடராஜன் ( முன்னைத் துணைவேந்தர் , தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் ) தலைமை ஏற்று குறிஞ்சிச்சுவை   நூலை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார் . காமூஸ் அறபு - தமிழ் அகராதி  நூலை மெளலவி , செய்யது நயாஸ் அஹமது ஜமாலி ( முதல்வர் ஜமாலிய்யா அறபுக்கல்லூரி , பெரம்பூர் , சென்னை ) வெளியிட  கண்ணியமிகு   நூருல் அமீன் மெளலானா அவர்கள் பெற்றுக் கொள்ள , அறபு மொழியில் வாழ்த்துரை வழங்கினார் .

முன்னதாக தலைமை கலீபா ஜனாப் எச் . எம் . ஹபீபுல்லா ( செயலாளர் , அவ்னிய்யா உலக அமைதி அறக்கட்டளை )   வரவேற்புரை   நிகழ்த்த ,ஹாபிழ் வி . எம் . முஹம்மது ஜகரிய்யா யாஸீனிய் கிராஅத் ஓத , ஆலிம் புலவர் கலீபா எஸ் . ஹுஸைன் முஹம்மது மன்பஈ இறைத்துதியும் , இறைமுரசு . வி . கே . முத்து முஹம்மது திருநபிபுகழ்  இசைத்தனர் .


பெருங்கவிக்கோ வா . மு . சேதுராமன்   ( தலைவர் ,பன்னாட்டுத் தமிழ் உறவு மன்றம் ) கவிஞர் மு . மேத்தா , டாக்டர் நாகூர் ரூமி ( ஆங்கிலத்துறைத் தலைவர் , மஜ்ஹருல் உலூம் கல்லூரி , ஆம்பூர் ) டாக்டர் .முநத்தர்சா ( தமிழ்த்துறைத் தலைவர் ,புதுக்கல்லூரி. சென்னை ,) மெளலவி ஹாபிழ் அப்ளலுல் உலமா எம் . ஷேகு அப்துல்லா ஜமாலி ஆகியோர் வாப்பா நாயகம் அவர்களின் சிறப்பு மிகு நூற்கள் குறித்து உரைநிகழ்த்தினர். விழாத் தொகுப்பினை திரு . முரளி அரூபன் ( துணைப் பேராசிரியர் , தமிழ்த்துறை , புதுக்கல்லூரி , சென்னை ) வழங்கினார் வழக்குரைஞர் கலீபா , . அப்துல் ரவூப் ( உயர்நீதிமன்றம். சென்னை )   நன்றியுரை நிகழ்த்த துஆவுக்குப்பின் விழா இனிதே நிறைவு பெற்றது 


இவ்விழாவிற்கு சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின் திருப்பேரர்களும்திருமுல்லைவாசல் மற்றும் மெளலானாமார்களும் , தமிழகத்தின் அனைத்து சபை நிர்வாகிகள் , முரீதுகள் மற்றும் அழைப்பாளர்களும் கலந்து கொண்டனர் . கலந்துகொண்ட அனைவருக்கும் சிறப்பு உணவு வழங்கப்பட்டது.  விழாவில் வழங்குவதற்காக துபை கவிஞர் கிளியனூர் இஸ்மத் அவர்களின் முயற்சியில் சென்னை மணிமேகலை பதிப்பகத்தாரால் பதிக்கப்பட்ட நாயகர் பன்னிருபாடல் , அகில அற்புத நாதர் , மறைஞானப் பேழை சிறப்பிதழ் வழங்கப்பட்டது.  விழா ஏற்பாட்டினை சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையினர் சிறப்பாகச் செய்திருந்தனர் .

 

 

விழா செய்தித் துளிகள்


உரைகள் தொகுப்பு :     ஆஷிகுல் கலீல் . B.Com .,   திருச்சி

பெருங்கவிக்கோ வா . மு .சேதுராமன்   ( தலைவர் ,பன்னாட்டுத் தமிழ் உறவு மன்றம் ) அவர்களின் உரையிலிருந்து


குருமகான் கலீல் அவ்னின் அதிகாரிகளே ( கலீபாக்களே ) சீடர்களே   எனத்தம்    உரையைத் தொடங்கினார் . நபிகள் நாயகம் அவர்கள் ஒரு மகத்தான சக்தியாவார்எனவேதான் அவர்களிலிருந்து   மகத்தான சேதிகள்  வெளியாயின . உலகில் மனிதன் வாழ்வாங்கு வாழ ஒன்று : நல்லதையே நினைக்க வேண்டும் நல்லதையே செய்ய வேண்டும் ; மற்றொன்று; மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் ;   இவ்விரு பொன்னான போதனைகளைத் தாம் நமது குரு சன்னிதானம் வாப்பா நாயகம் செய்து வருகிறார்கள்மனிதர்கள் எவை எவற்றையோ  தேடுகிறார்கள்ஆனால்  மனிதனை எப்போது தேடப் போகிறார்கள்;   மனிதத்தைத் தேடுவது தான் பேரின்ப ஞானமாகும் ! இதைத்தான் குரு மகான் கலீல் அவ்ன் நாயகம் போதிக்கின்றார்கள்


இசுலாம் ஒரு பெருங்கடல் .  அதில் முளைத்த முத்துக்களில் ஒன்றினை     மறைந்த அறிஞர் எம் . ஆர் . எம் . அப்துல் ரஹீம் அவர்களின் நூலொன்றில் உடலில் ஒரு சதைத் துண்டு உண்டுஅது சரியாகிவிட்டால் அனைத்துமே சரியாகிவிடும்அது கெட்டுப்போனால் எல்லாமே கெட்டுப்போகும் ’’ என்ற பெருமானாரின் பொன்மொழியயான்றினைப் படித்தேன் அதுதான் இதயம் ; இதயம் சரியாகிவிட்டால் அதிலிருந்து வெளிவரும் உதயமும் சரியாக இருக்கும் : எனவே தான் உள்ளத்தைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என மகானவர்கள் தங்களின் போதனைகளிலும் சீடர்களுக்கு எழுதக்கூடிய கடிதங்களிலும் ( பட்டோலைகளிலும் ) குறிப்பிடுகிறார்கள்


மகான் கலீல் அவ்ன் மெளலானா அவர்களை நிறுவனராகக் கொண்டு மறை ஞானப் பேழை ’’என்னும் ஆன்மிக மாத இதழ் கால் நூற்றாண்டிற்கும் மேலாக வெளிவந்து கொண்டிருக்கின்றது ! அதில் அற்புத சேதிகள் மாதந்தோறும் அணிவகுத்து வருகின்றன! மறை ஞானப் பேழையில் ஹக்கு என்னும் வார்த்தை மிகுதமாக இடம் பெறும் !   ஹக்கு என்றால் என்ன ? என ஆலிம் புலவரிடம் கேட்டேன் .   சத்தியம் ;உண்மை ; பரம் பொருள் என்றார்கள் ! அந்தப் பரம் பொருள் இல்லாதிருந்தால் தானேயதனைத் தேடுதல்   வேண்டும் !அஃதிருப்பது உன்னிலும் அல்லவா ? எனவே , இறைத்தேடலை விடுத்து அஃது உன்னிலிருப்பதையறிவாய் ! அதுதான் அறிவாகும் ! இறையையறியா உள்ளம் இருந்தென்ன ? செத்தென்ன ? என்றுதான் மறை ஞானப்பேழையில் மகானவர்கள் பல கோணங்களில் அருளுகிறார்கள் ! ஞானம் என்றால் தேடல் என்று பொருள் ! ஆனால் ஞானத் தேடலாக மகான் குரு கலீல் அவ்ன் நாயகம் திகழ்கிறார்கள் என்பது தான் உண்மை ! குருமகான் கலீல் அவ்ன் மெளலானாஅவர்கள்மெய்ஞ்ஞானப் புதையலாக , காலப் பெட்டகமாகத் திகழ்கிறார்கள் .    மதமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் !   தமிழை தங்கள் வசமாக்கிக் கொண்டவர்களாதலிலால்தான் குறிஞ்சிச் சுவை போன்ற இலக்கிய நூல்களை அவர்களால் எளிதாக யாத்தளிக்க முடிகின்றது


குறிஞ்சிச்சுவை   நூலில் குரங்கு தனது குட்டியைச் சுமந்து செல்வதை இன்று பள்ளிக் குழந்தைகள் தங்கள் புத்தகப் பையைச் சுமந்து செல்வது போல்   வருணிப்பது மகான் கலீல் நாயகத்தின்   நயமான உரைநடைக்குச் சான்றாகக் கூறலாம்


கவித்திறன் ,மொழித்திறன் , இலக்கியத்திறன் , ஒப்பீடு , காவியத்திறன் , பன்மொழித் திறன் போன்ற எண்ணற்ற ஆற்றலைப் பெற்றிருந்த போதும் குரு கலீல் நாயகம் தன்னடக்கத்துடனும்   எளியதோற்றத்துடனிருப்பது தான் அன்னவர்களின் சூட்சுமம் ’’ என்பதனை நாம்விளங்கிக் கொள்ள வேண்டும்


கவிஞர் . மு . மேத்தா அவர்களின் உரையிலிருந்து .... 

சங்கைமிகு வாப்பா நாயகமவர்கள் நிலவு போன்றவர்கள்நிலவில் பற்பல தன்மைகள் உள்ளன .  அவையனைத்தையும் வாப்பா நாயகமவர்களிடம் காணலாம்.  ஒளி ,சாந்தி, சமாதானம் ,மனங்குளிரச் செய்யும் பாங்கு அனைத்தும் சங்கைமிகு நாயகமவர்களிடம் உண்டு .   நிலவைப்பேசிட ஒரு மெழுகுவர்த்தியைப்போன்று நாணி உங்கள் முன்நிற்கிறேன். சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்கள் தங்களின் திருத்தோற்றம் குறித்தும் கொள்கை குறித்தும் இவ்வாறு பிரகடனப்படுத்துகிறார்கள் உலகம் உய்வுபெற , எல்லாச் சமயங்களும் வேறுபாடற எங்கும் சாந்தியும் சமாதானமும் நிலவ , அனைத்துமொன்றே எனும் ஞானத்தை தாமடைய ஒவ்வொருவரும் முன்வரல் வேண்டும் . என விளக்குகிறார்கள்


செல்போனை அணைத்து வையுங்கள் ...’’ என்பார்கள் ! ஏனெனில் செல்போன் இதயத்திற்கு அருகிலிருக்கின்றது ; அதனை அணைத்து ’’ ப் பாதுகாக்கவேண்டும் ! ஆனால் சங்கைமிகு வாப்பா நாயகமவர்கள் நம் இதயம் போன்றவர்கள் ! அன்னவர்களை உயிர்போல் பாதுகாக்க வேண்டும் ! அன்னவர்களிடம் வினாக்கள் தொடுக்க வேண்டியதில்லை! அன்னவர்களினருகில் அமர்ந்திருந்தாலே போதும் அறிவு பெருக்கெடுத்து ஓடும் ! தேவையில்லாமல் கேள்விகள் கேட்பதால் வியாக்யானம் பெருகும் ! அறிவு இருக்கும் இடத்தில் வியாக்கியானம் தேவையில்லை !    


எதையயதை வேண்டுமானாலும் எழுதலாம் ; ஆனால் எழுத்து உயிர்த்தெழவேண்டுமானால் கோமான் நபி   ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போற்றி எழுதவேண்டுமாதலால் நாயகம் ஒரு காவியம் என்னும்   நூல் எழுதினேன் !   அந்நூல் எழுதிய என்னை , சங்கைமிகு வாப்பா நாயகம் அன்னவர்களே தலைமைதாங்கி நடத்திய முப்பெரும் விழாவில் அன்னவர்கள் என்னை வாழ்த்திப்பேசியது நான் செய்த பாக்கியமாகும்


சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை பிராட்வே கோகலே ஹாலில் மீலாது விழா , யா நபிய்யல்லாஹ் கேசட் வெளியீட்டு விழா , நாயகம் ஒரு காவியம் படைத்த எனக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. சங்கைமிகு வாப்பாநாயகமவர்கள் யாநபிய்யல்லாஹ் ஆடியோ கேசட்டை வெளியீடு செய்திட இசைப்புயல்  A.R. ரஹ்மான் முதல் படியைப் பெற்றுக் கொண்டார் .   அவ்விழாவில் எனக்கு வழங்கப்பட்ட நிமிடங்களில் நான் பிரமித்த விஷயத்தைக் கூறினேன்


மீண்டும் அதனை இச்சபையில் பதிவு செய்ய விழைகின்றேன் ! ஏக இறையை ஒவ்வொர சாராரும், ஒவ்வொரு கவிஞரும் ஒவ்வொரு விதமாக விவரித்தவற்றை நாம் கேட்டிருப்போம் ; படித்திருப்போம் ! ஏன் , வள்ளுவப் பெருந்தகை கூட ஏக இறையைஉவமையிலான் எனப்   புகழ்வார் .  உவமை கூறப்பட இயலாதவன் ; அவன் இப்படித்தான் ; இது போல்தான் என உவமானம் கூற முடியாதவன் என்றளவில் தான் வருணித்திருக்கிறான் !இவற்றையயல்லாம் தாண்டி , சங்கைமிகு வாப்பா நாயகமவர்கள் , “ எதுகையிலாதவன் “  எனக் குறிப்பிடுவது ( பேரின்பப்பாதை நூலில் ) அஃது அதுவேயானது என்பதாகும். இறையை விளக்க   இதனை விட சிறந்த வார்த்தை வேறில்லை


ஏகத்துவ மெய்ஞ்ஞான சபைக்குச் சற்குருவாக வீற்றிருக்கும் சங்கைமிகு வாப்பா நாயகமவர்கள் , இறைவனைப் போற்றி மகிழ்ந்து , அடுத்த   கட்டத்தில்    தமிழை செழுமைப்படுத்துவதற்குத்   தமிழுலகு தலை சாய்க்க வேண்டும் எனக் கேட்டு மகிழ்ந்து விடைபெறுகிறேன்


சென்னை புதுக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் நத்தர்ஷா அவர்களின் உரையிலிருந்து ..... 


விரைவில் வரவிருக்கும் ரபீஉல்அவ்வல் என்னும் முதல் வசந்தம் மாதத்தை எதிர்கொள்ள நோக்கியுள்ள நமக்கு , ஒரு முன்னோட்ட வசந்தமாக இவ்விழாவைக் கருதுகிறேன்சங்கைமிகு கலீல் அவ்ன் மெளலானா அவர்கள் , அறபு மொழிக்கும் தமிழ் மொழிக்கும் ஓர் உறவுப் பாலமாக விளங்குகிறார்கள்


நாயகர் பன்னிரு பாடல் நூலில் 114 பாடல்கள் இடம் பெற்றுள்ளன ! இந்நூலின் மூலம் சங்கைமிகு கலீல் அவ்ன் மெளலானா அவர்கள் , கவியுலகிற்கு   ஓர் புதிய பிரபந்தத்தைத் தோற்றுவித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல   வேண்டும்


ஏனெனில் தமிழுகில் 5, 10 அடிப்பாடல்கள் ( சதகம் , பதிகம் ) தாம் இதுவரை தமிழுலகம் அவதானித்து வந்தது ! ஆனால் 12 விருத்தங்கள்   யாத்தளித்த முதல் இலக்கியவாதி சங்கைமிகு கலீல் அவ்ன் மெளலனா அவர்கள் தாம் என உரத்த குரலில் கூறலாம்


12 அடிகளுடன் தமிழ்க் கவி இலக்கியத்திற்கு ஒரு தனிச்சிறப்பை யாத்தளித்த மெளலானா அவர்களைக் காலங்கள் கடந்தும் தமிழ் உலகம் வாழ்த்தி மகிழும் என்பது திண்ணம் ! 12 தலைப்புகளில் நாயகம் அவர்களின் முழு வரலாற்றை முழுமையாகப் பதிவு செய்த கலீல் அவ்ன் மெளலானா அவர்கள் , தமிழாய் வாழ்ந்து தமிழ்த் தாய்க்கு தங்களின் அர்ப்பணிப்புகளைத் தொடர்ந்து அள்ளி வழங்க வேண்டும் என தங்களனைவரையும் போல் நானும் ஆசிக்கிறேன் ! செம்மொழியாம் தாய்மொழி தமிழ் மொழிக்கும் இசுலாமியச் சமுதாயத்திற்கும் தொப்புள் கொடி உறவு உண்டு என்பதற்கு இருவர் சாட்சி என்பேன்


முன்னவர் ஹள்ரத் ஸதகதுல்லா அப்பா ( ரஹ் ) அவர்கள் ! சிறப்பிற்குரிய முகலாய மன்னர்களில் ஒருவரான அவ்ரங்கசீப் அவர்களுக்கு மார்க்கச் சட்டஆலோசகராக ஹள்ரத் ஸதகதுல்லா அப்பா ( ரஹ் ) விளங்கினார்கள்


ஓர் இந்தியச் சக்கரவர்த்திக்கு ஓர் இஸ்லாமியத் தமிழறிஞர் சட்ட ஆலோசகர் ஆனார் என்பது தமிழ் பெற்ற பெருமையன்றோ ?  இன்று இலங்கையிற் பிறந்த போதும் செம்மொழிக்குச் சிகரமாக குறிஞ்சிச் சுவையையும் அறபு மொழிக்கு ஆரமாக காமூஸ் என்னும் அகராதியையும் யாத்தளித்த   சங்கைமிகு கலீல் அவ்ன் மெளலானா அவர்கள் , பன்மொழிப் புலவராகத் திகழ்வதை நாம் பக்தி மனத்தோடு படித்து மகிழ்வோம் !


பேராசிரியர் நாகூர் ரூமி அவர்களின் உரையிலிருந்து ... 


இறைநேசர்கள் என்றால் யார் ? என்பதனை நாம் அறிய வேண்டும் மறைவானவற்றை நம்புபவர்கள் மனிதர்கள் ! மறைவானவர்களாகவே விளங்குபவர்கள் இறைநேசர்கள் !. ஒருமுறை சங்கைமிகு வாப்பா நாயகமவர்களிடம் இறைநேசர்கள் என்றால் யார் ? எனத் திருமுல்லைவாசலில்  இருந்தபோது கேட்டேன் !

கடல் ,அலை அலைகளாக உருவாவதைக் கண்டு இரசிக்கின்றோம் அல்லவா ? அதுபோல் ஹக்கிலிருந்து தோன்றும் அலங்காரமான அலைகள் இறைநேசர்கள் என்றருளினார்கள் ! இன்னும் ஆழமாகச் சொல்வதானால் ஹக்கின் சர்வசக்தி படைத்த அலங்காரச் செல்வங்களே இறைநேசச் செல்வர்கள்

மற்றொரு முறை எனக்குத் தனிப்பட்ட பிரச்சனை ஒன்று !   ஒரு விஷயத்தில் என்   எதிர்த் தரப்பு வாதி 3 மாதங்கள் கால அவகாசம் கேட்டார் .   இது விஷயமாக சங்கைமிகு வாப்பா நாயகமவர்களிடம் முறையிட்டபோது   மூன்று மாதம் எதற்கு ? ஒரு மாதம் போதுமே ? என்றார்கள் ! சத்தியமாகச் சொல்கிறேன் சங்கைமிகு வாப்பா நாயகம் அருளி , 31 வது நாளில் முடிந்தது வி ஷயம் !  கராமத்திற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும் ?


ற்றுமொருமுறை திருமுல்லைவாசலில் நான் சங்கைமிகு வாப்பா நாயகமவர்களிடம், முரீதுகள் ஷைகுக்கு ஸுஜூது செய்வதாகவும் அது ´ ஷிர்கு என்றும் சிலர் கூறுவதாகக் கேள்வி கேட்டேன் ! அதற்கு சங்கைமிகு வாப்பா நாயகமவர்கள் ,ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இப்லீஸைத் தவிர எல்லா மலக்குமார்களும் ஸுஜூது செய்ததாக அல்லாஹ்வே கூறுகிறான் ! அப்படியானால் எல்லா மலாயிகாமார்களும் ´ ஷிர்க் செய்தவர்களா ? அவ்வாறு சொல்வது பொருந்துமா ?அஃது அப்படியல்லஒவ்வொன்றிற்கும் பற்பல காரணங்கள் உள்ளனபொதுவாக ஸுஜூது என்பது அல்லாஹ்விற்காக எட்டு உறுப்புக்கள் தரையில் பட்டு கிப்லாவை முன்னோக்கி நிய்யத்துடன் , ஒளுவுடன் செய்வதே ஸுஜூதாகும் ! இவையயான்றில் எது விடுபடினும் அது ஸுஜூதாகாது ! எனவே   சங்கை நிமித்தம் சீடர்கள் , குருவிற்கு மரியாதை செய்வதை   ஸுஜூது எனச் சொல்லவியலாது என அற்புதமாக விளக்கமளித்தார்கள் !


சங்கைமிகு வாப்பா நாயகமவர்கள் அருளிய ஆக்கங்கள் அனைத்தும் அற்புதமானவைஅளைகளையயல்லாம் அன்னவர்கள் தங்களைப் பற்றி தாங்கள் கூறும் சில இஷாரக்கள் குறியீடுகள் என்பதனையும் நாம் மறந்துவிடக் கூடாது ! இப்படைப்பிலக்கியங்கள் நமக்குப் பிரமாண்டமாகக் காட்சியளிப்பவை தாம் .   இவற்றையும் எங்களால் மிக எளிதாகச் செய்திட இயலும் என்பது இப்படைப்புகள் மூலம்   நமக்கு உணர்த்துகிறார்கள்


இவ்வாறு ஞான விளக்கங்களும் இலக்கியப் படைப்புகளும் சமுதாய மக்களுக்குப் போதுமானவை ! வஹ்ஹாபிகளோடு வாக்குவாதம் புரிதலால் என்னதான் விளைந்தது ? என்னதான் விளையப் போகின்றது ? களியக் காவிளையியில் ஜமாலி ஹள்ரத்தும் மேற்படியாரும் சுமார் 14 மணிநேரம் வாக்குவாதம் புரிந்தனர் ! அந்நிகழ்ச்சிக்குப் பின்னர் அவரவர் தம் கொள்கையின் பால்தானே திரும்பினர் ! இதில் என்ன புண்ணியம் ?                                     

அறிவாளிக்குத் தீனி போடலாம் !    முட்டாளுக்குத் தீனி போட முயன்றாலோ  முட்டுவான் ; திட்டுவான் ;நாம்தாம்   எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனக் கூறி விடை பெறுகிறேன்


மெளலவி ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி ஹள்ரத் னி . பு .,அவர்களின் உரையிலிருந்து ..


முன்பெல்லம் ஓர் அறபு வார்த்தைக்குப் பொருள் தெரிய வேண்டுமானால்    Arabic to English Dictionary க்குச் செல்ல வேண்டும் ! பின்னர் ஆங்கிலத்திலிருந்து சரியான தமிழ் சொல்லைக் கண்டறிய வேண்டும் ! இவ்வளவு பெரிய பாரத்தை - சுமையைத்தான் சங்கைமிகு வாப்பா நாயகமவர்கள் குறைத்திருக்கிறார்கள்

அறபு வார்த்தைக்கு அழகான தமிழில் பொருள் தருகிறார்கள் ! அறபு வார்த்தைகளுக்குப் பொருள் தெரிந்து கொள்வது காலத்தின் கட்டாயமாகும் ! எழுத்து என்பது இறைவன் தந்த தன்மைமிக்கப் பரிசாகும் !


பேனா எழுதும் போது தாழ்மையாகின்றது ; அதனை வாசிப்பவர்களை நிமிரச் செய்கின்றது ! எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா வஷ்ஷம்ஷி ( சூரியன் மீது சத்தியமாக ) வல்கமரி ( சந்திரன் மீது சத்தியமாக ) வல்லைலி ( இரவின் மீது சத்தியமாக ) வந்நஹாரி ( பகலின் மீது சத்தியமாக ) எனப் பிரம்மாண்டமானவை மீது சத்தியஞ் செய்கிறான் ! அவற்றைத் தொடர்ந்து வல்கலமி , பேனாவின் மீது சத்தியம் செய்வதாகவும் அருளுகிறான் ! அதாவது பிரம்மாண்டவைகளில் பேனாவும் ஒன்று என நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக


எத்தனையோ சாம்ராஜ்யங்கள் பேனாவினால் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன ! அதுபோல எத்தனையோ சாம்ராஜ்யங்கள் பேனாவினால் மண்ணைக் கவ்வியிருக்கின்றன ! அதனால் தான் சொல்வார்கள் ; ஒரு வார்த்தை வெல்லும் ; ஒரு வார்த்தை கொல்லும் என்று ! எழுத்து ஓர் அற்புத ஆற்றல் மிகு ஆயுதம் என்பதால்தான் , சங்கைமிகு வாப்பா நாயகமவர்கள் அதனை எடுத்து பற்பல காவியங்களை யாத்தளித்து வருகிறார்கள் ! எழுத்து பற்பல உள்ளங்களை இழுத்து விடும் என்னும் கலையை இயற்கையாய் அமையப் பெற்றதால் சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்களின் ஆக்கங்கள் அபூர்வமானவைகளாய் மிளிர்கின்றன ! சங்கைமிகு வாப்பா நாயகமும் தமிழ்மொழி போல் என்றும் வாழ்க என வாழ்த்துவோம்


முனைவர் அவ்வையார் உரையிலிருந்து .... 

ஒரு விழாவிற்குத் தலைமை தாங்குங்கள் என்றால் அதிகம் பேசாதீர்கள் என்றுதான் பொருள் .   அந்நிலையிலேயே நானுள்ளேன் .   அவைத் தலைவருக்கு     Speaker    என ஆங்கிலத்தில் கூறப்படும் .   Speaker Should not Speak  அவைத் தலைவர் பேசக் கூடாது என்பது அவை மரபு .எனவே ,பேசாதிருக்க பேச்சாளர்களின் உரையைக் கூர்ந்து கவனித்தேன் .    பல  விஷ யங்களைக் கற்றுக் கொண்டேன்

மொழியறிவு எவ்வளவு முக்கியம்

ஒரு மாநாட்டிற்கு அமெரிக்காவிற்கு நானும் பெருங்கவிக்கோ . மு அவர்களும் சென்றிருந்தோம் .   மாநாட்டுத் தலைவர் பேசிக் கொண்டிருந்தார் . என்ன பேசுகிறார் எனப் புரியவில்லை . வா . மு என்னிடம் , இவர் ஜப்பான் காரர் .   அவரது தாய்மொழியில் பேசுகிறார் .எனவே எழுந்து பொது மொழியான ஆங்கிலத்தில் பேசுங்கள் எனக் கூறும்படி உசுப்பி விட்டார் .   நானும் உற்சாகமாக எழுந்து ஆங்கிலத்தில் பேசுங்கள் எனக் கூறினேன் . அவை முன்னவர் ,.... ஆம் அவர் ஆங்கிலத்தில் தான் பேசிக் கொண்டிருக்கிறார் என்றார் . எனக்கு வெட்கமாய் போய்விட்டது ! எனக்கு ஆங்கிலம் தெரியும் ... ஆனல் அவருக்குத் தெரிந்த ஆங்கிலம்   எனக்குத்   தெரியவில்லை


தெரிந்த மொழியிலேயே தெரியாத விஷயங்கள் இருக்கும் போது தெரியாத மொழியைக் கற்பது எவ்வளவு கடினம் ? இக்கடினத்தைப் போக்கவே சங்கைமிகு கலீல் அவ்ன் நாயகம் காமூஸ் என்னும் அகராதியை தமிழுலகிற்கு அர்ப்பணித்திருக்கிறார்


நூல் : என்றால் திரிப்பது எனப் பொருளாகும் .   திரிப்பது ,எழுதுவது என நீடித்துக் கொண்டது !முன்பெல்லாம் கட்டடத்தை அளந்து பார்க்க நூல் என்பார்கள்பஞ்சிலிருந்து நூல் வருவதுபோல்   எழுத்து நெஞ்சிலிருந்து உதயமாக வேண்டும் . நுவல்வது என்பதிலிருந்து நூல் வந்ததாகவும் கொள்ளலாம் .   சங்கைமிகு கலீல் அவ்ன் மெளலானா அவர்களின் தமிழ் வல்லமையும் பொன்னாரமும் குறிஞ்சிச் சுவையில் புலப்படுகின்றன ! மெளலானா அவர்களின் எளிமை வலிமை பெற்று செழுமை பெற்றிருப்பதை அன்னவர்களின் ஆக்கங்கள் பறை சாற்றுகின்றன


அறபு மொழியிலிருப்பவற்றைத் தமிழிலும் தமிழ் மொழியிலிருப்பவற்றை அறபியிலும் சமைப்பது எவ்வளவு கடினம் என்பது எம்மைப் போன்ற பேராசிரியர்களுக்குத் தெரியும்


எங்களுக்குச் சங்க கால இலக்கியங்களைக் கற்றுத் தருவதால் கலீல் அவ்ன் மெளலானா அவர்களை நாங்கள் எங்களின் பேராசிரியராக ஏற்றுக் கொள்கிறோம் !