Pezhai » 2015 » Jan2015 » உதுமானியப் பேரரசு
உதுமானியப் பேரரசு
(தோற்றம், ஏற்றம், வீழ்ச்சி)
ஏற்றம் அடைய வேண்டும் என்று உலகில் விரும்பாதார் எவருமிலர். குறிப்பிட்ட ஒரு நாடோ, ஒரு சமூகமோ, ஒரு குடும்பமோ, ஒரு தனி நபரோ ஜாதிமத பேதமின்றி ஏற்றமடையவே விரும்புகின்றனர். அதனை அடைவதற்காக அவரவால் இயன்றவரை முயலுகின்றனர்.
ஆயினும், இதில் யாவரும் வெற்றியடைவதில்லை. சிலர் ஏற்றமடைகின்றனர்; சிலர் அதற்கு நேர்மாறாக வீழ்ச்சியடைகின்றனர். இதற்குரிய காரணத்தைப் பற்றிச் சிந்திக்கும்போது, ஒவ்வொருவரும் அவருக்குத் தெரிந்த ஏதோ ஒரு காரணத்தைக் கூறுகின்றனர். இதனைச் சிலர் ஏற்றுக் கொள்ளலாம்.
உண்மையில் இக்காரணங்கள் எதுவும் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் அஸ்திவாரங்கள் அல்ல. அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா எந்தச் சமூகத்தை எழுச்சியடையச் செய்கிறானோ, அந்தச் சமூகம் தான் ஏற்றம் பெறும். அல்லாஹ்வினுடைய அன்பை, கிருபையை, இரக்கத்தை அடைய வேண்டுமாயின், இறைவனின் பொருத்தமின்றி மனிதன் தன் ஆராய்ச்சியில் தீட்டும் திட்டங்கள் எதுவும் பலன் தரா. எந்தக் காரியம் சித்தியடைய வேண்டுமானாலும், இறைவனின் கிருபைதான் பலனளிக்கும்.
இதனை அடைவதற்கு இறைவனின் கட்டளைக்கு முற்றிலும் தலைசாய்த்துக் கீழ்ப்படிவது தான் அடிப்படை. இதனை உணர்த்துவதற்காக இங்கு ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுவோம்.
சென்ற 1924 ஆம் ஆண்டில் தான் துருக்கியில் உதுமானிய ஏகாதிபத்தியம் அடியுடன் ஒழிக்கப்பட்டு, அது குடியரசாக்கப்பட்டது; ஏறக்குறைய 800 ஆண்டுகட்கு முன்னர் தோன்றிய உதுமானிய அரசாங்கத்தின் ஆரம்பச் சரித்திரத்தையும் அது வீழ்ச்சியடைந்த வரலாற்றையும் நாம் உணர்வோமாயின், நமது முன்னேற்றமும் பின்னிறக்கமும் எங்கே இருக்கின்றன என்பதை நாம் உணர முடியும்.
எண்ணூறாண்டுகளுக்கு முன்பு மேற்காசியாவில் சல்ஜோக் என்ற ஓர் இனத்தார் இஸ்லாமிய நாட்டில் செங்கோலோச்சிக் கொண்டிருந்தனர். அந்த இனத்தாரின் பிரபல மன்னர்களுள் ஒருவராகிய அல்ப் அர்ஸலான் சல்ஜோக்கீ என்பார் இஸ்லாமிய நாட்டின் நிகரிலாப் பேரரசராக விளங்கினார்.
அவருடைய பேரரசின் வடக்கெல்லையில், கிறிஸ்தவ நாடு இருந்தது. அந்நாட்டிலிருந்த மக்கள் அடிக்கடி இஸ்லாமிய நாட்டிற்குள் புகுந்து, கொள்ளை, திருட்டு முதலியவை செய்வதுடன், எல்லைப்புறக் கிராமங்களைத் தீ வைத்துச் சேதப்படுத்திக் கொண்டுமிருந்தனர்.
இக்காலத்தில் உள்ளது போல் அக்காலத்தில் தந்தி, ரேடியோ போன்ற செய்திப் போக்குவரத்துச் சாதன வசதியுமில்லை. ஆதலால் எல்லைப் புறத்தில் நடக்கும் துயரச் சம்பவங்களைத் தலைமைப் பீடம் துரிதமாகத் தெரிந்து கொள்வதற்கு இயலாது.
இதனால் எல்லைப்புற மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகிக் கொண்டே இருந்தனர். எல்லைப் புறத்திலுள்ள ஒரு கிராமத்தில் ஒரு பிரபலஸ்தர் இருந்தார். அவரே அப்பகுதியில் முஸ்லிம்களுக்குள் பஞ்சாயத்துச் செய்து, சண்டை சச்சரவுகளைத் தீர்த்து, முஸ்லிம்களுக்குள் சமாதானத்தை ஏற்படுத்துவது வழக்கம். எல்லைப் புறத்து மக்கள் அவரைத் தம் நீதவானாகக் கருதி, அவரிடமே தங்கள் கஷ்டங்களை முறையிட்டுக் கொள்வர்.
ஒரு நாள் அவருக்கு, பக்கத்து கிராமத்திலுள்ள ஒரு தலைவரிடம் ஓர் அலுவல் ஏற்பட்டு இரண்டு மூன்று நண்பர்களுடன் அங்குச் சென்றார். அத்தலைவர் இவரை வரவேற்று உபசரித்து, அவருடைய அலுவலை நிறைவேற்றினார். ஆயினும், பொழுது சாய்ந்துவிட்டது.
அந்தி வேளை. உடனே அங்கிருந்து திரும்பினால், இருட்டாகுமுன் சொந்த ஊர் வந்து சேர முடியாது. ஆதலால் அக்கிராமத் தலைவர் இன்று தங்கிவிட்டு மறுநாள் போகலாம் என்று கூறி, நிறுத்திவிட்டார். அன்றிரவு தங்குவதற்கு, அவருக்கெனத் தனி வீட்டைத் தாயார் செய்து சகல வசதிகளும் செய்து கொடுத்தார்.
அவ்வீட்டினுள் ஓர் அலமாரி இருந்தது. அது மூடியிருந்தது. விருந்தினராகச் சென்ற இவர், அந்த அலமாரியில் என்ன இருக்கிறது? என்று வினவினார். அதனுள் குர்ஆன் கிதாபுகள் இருக்கின்றன என்று கூறி, அதனைத் திறந்து காட்டி, மிண்டும் மூடிவிட்டார் வீட்டுக்காரர்.
நல்லது படுத்துக் கொள்கிறேன் என்று இவ்விருந்தினர் கூறி, வீட்டுக்காரரை அனுப்பி வைத்து விட்டார். திருக்குர்ஆன் இருக்குமிடத்தில் அதற்கு மரியாதை செய்யாமல் எப்படிப் படுப்பது? என்ற எண்ணத்தில் அவ்விரவு முழுவதும் அவர் உறக்கமின்றி அமர்ந்திருந்தார். காலை நீட்டிப் படுக்கவே இல்லை.
மறுநாள் காலையில் வீட்டுக்காரர் பசியாறுவதற்கு உணவளித்தார். அமைதியாக உணவருந்திவிட்டு வீட்டுக்காரரிடம் விடை பெற்றுக் கொண்டு தம் நண்பர்களுடன் தமது கிராமத்திற்குத் திரும்பினார். அக்காலத்தில் அந்தப் பகுதியில் விசாலமான ரஸ்தாவோ, வண்டிப்பாதையோ, சுலபமாக வாகனங்கள் செல்வதற்குரிய பாட்டையோ இல்லை.
எல்லைப் புறத்தை அடுத்திருந்ததால் எதிரிகள் சுலபமாக வருவதற்கு இடம் கொடுக்கலாகாது என்ற கருத்தில், அரசாங்கம் பொதுமக்களுக்குத் தகுந்தவாறு சாதனங்களை ஏற்படுத்தவில்லை. ஆதலால், அவர் நடந்தே வர வேண்டியிருந்தது.
இவ்வாறாக, அவர் தம் சகாக்களுடன் வந்து கொண்டிருக்கையில், எதிரில் ஒருவர் இவரைச் சந்தித்தார். இருவரும் முன்பின்அறிமுகம் இல்லாதவர்கள். வந்தவர் யார்? என்பது இப்பெரியாருக்குத் தெரியாது.
என்றாலும், இப்பெரியாரை நோக்கி எதிரில் வந்தவர், உங்களுக்கு இப்பகுதியில் எவ்வளவு பெரிய செல்வாக்கு இருக்கிறது? எத்தனை விதமான வசதிகள் இருக்கின்றன? இவையயல்லாம் இறைவன் கொடுத்திருக்கும்போது இப்பகுதியில் எல்லைப்புறத்துக்கப்பால் உள்ள மக்களால் ஏற்படும் தொல்லைகளையும் துயரங்களையும் தடுத்தொழிக்க நீங்கள் ஏன் முயலக் கூடாது? இப்பகுதியில் காவற் படைகளை ஏற்படுத்தி, எல்லையைத் தாண்டி வரும் பகைவரை எதிர்த்துத் துரத்தலாகாதா? என்று நீண்ட கால நண்பர் போல் வற்புறுத்திப் பேசினார்.
நாட்டிலே ஒருவருக்குச் செல்வாக்கிருந்தால், அச்செல்வாக்கு அந்த நாட்டு மக்களிடம் பணம் கேட்காமலும், அவர்களுக்குக் கஷ்டம் வரக்கூடிய காரியங்களில் அவர்களை ஈடுபடுத்தாமலும் இருந்தால்தான் நிலைக்கும். நீங்கள் குறுகிற காரியத்தைச் செய்ய நான் முற்பட்டால், பணமும் ஆள் பலமும் வேண்டும்.
எல்லைப்புறத்துக்கப்பால் உள்ளவரிடம் சண்டையிட்டால், உயிர் நஷ்டம், பொருட் செலவு ஆகிய யாவும் ஏற்படுவது இயற்கை. இதனை நான் நமது மக்களிடம் கேட்டால், நீங்கள் கருதுகிற செல்வாக்கு ஒரு தினம் கூட என்னிடம் இருக்காது; எல்லாம் பறந்து விடும் என்று பதிலளித்தார் அப்பெரியார்.
இதனை வந்தவர் ஏற்றுக் கொள்ளாமல், மீண்டும் தமது கருத்தையே வற்புறுத்திக் கூறி, நீங்கள் மக்களை அழையுங்கள். அவர்கள் இணங்காவிட்டால், உங்கள் கடமை தீர்ந்தது என்று கவலையற்றிருக்கலாம். இல்லையேல், மறுமையில் இதனைக் குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள் என்று கூறி, ஒரு நீண்ட கழியை வெட்டி, அதில் தமது தலைப்பாகையைக் கிழித்துக் கட்டி, இதோ கொடி. இதை வைத்துக் கொண்டு ஜிஹாதுக்கு (அறப் போருக்கு) வருமாறு மக்களை அழையுங்கள் என்றார் அம்மனிதர்.
முன் பின் அறிமுகமில்லா ஒருவர், நீண்ட காலம் பழகி, குடும்ப நிலையையும் முற்றிலும் அறிந்தவர் போலச் செய்திகளைக் கூறி, கொடியையும் கொடுத்த சேதியைத் தம் கிராம மக்களிடம் ஆச்சரியமாகக் கூறினார். இதைக்கேட்ட அம்மக்கள், ஆம் அவ்வாறுதான் செய்ய வேண்டும்.
நாங்களனைவரும் உங்கள் சொல் கேட்டு, உங்களுடன் ஒத்துழைக்கிறோம். எல்லைப் புறத்துப் பகைவர்களை எதிர்த்துத் துரத்தாவிடில் நமக்கு விமோசனம் கிடையாது என்று கூறி, அவர்களுடைய அக்கொடியின் கீழ் ஒன்று திரண்டனர்.
எதிர்பாராமல் நடக்கும்இந்நிகழ்ச்சிகளை நேரில் பார்த்த இப்பெரியார், தற்காப்புப் போருக்குத் தம்மை முற்றிலும் அர்ப்பணித்து, அவ்வூர் முழுவதும் காவல் நிலையங்களை ஏற்படுத்தி, ஆங்காங்கு தக்கவர்களை நிறுத்திக் காவல் புரியலானார்.
இதன் பலனாகச் சில நாட்களுக்குள் கிராமத்தினுள் பகைவர் நுழைவது முற்றிலும் நின்றது. அவ்வூர் மக்கள் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது. இதனைப் பார்த்த பக்கத்து ஊராரும் அப்பெரியாரிடம் வந்து, உங்கள் காவல் வட்டாரத்தினுள் எங்களூரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் கட்டளைக்கு நாங்களும் முற்றிலும் பணிகிறோம் என்று வேண்டி நின்றனர். அதன்படியே அவ்வூரும் இணைத்துக் கொள்ளப்பட்டது.
இவ்வாறாக, எல்லைப்புறம் நெடுகிலும் பல கிராமங்கள் பல மைல் நீளத்திற்கு அப்பெரியாரின் பாதுகாப்பின் கீழ் வந்துவிட்டன. கணிசமான அளவிற்குக் காவல்படைகளும் நிலையங்களும் ஏற்பட்டு, அப்பிரதேசம் முழுவதும் அமைதி நிலவிற்று.
இச்செய்தியை ஒற்றர் மூலம் அறிந்த பேரரசர் அல்ப் அர்சலான் சல்ஜோக்கீ தமது தர்பாருக்கு அப்பெரியாரை அழைத்து வரச் செய்து விசாரணை புரிந்தார். இப்பெரியாரும் பேரரசரின் வினாக்களுக்கு முற்றிலும் உண்மையாகச் செய்திகளைக் கூறினார்.
அவரைப் பேரரசர் பாராட்டி, இவ்விதமாக நீர் தன்னந்தனியே எல்லைப் புறத்துப் பகைவரை எதிர்த்தால் நிலைமை மோசமடைந்து விடும். பகைவர்கள் கூட்டமாக வந்து தொல்லை கொடுத்தால், உம்மால் சமாளிக்க முடியாது.
எனவே, உம்மையும் உம் ஆட்களையும் எமது எல்லைப் புறத்துப் பாதுகாப்புப் படையின் சிப்பாய்களாக நாங்கள் பதிவு செய்து கொண்டு, உமக்குத் தேவையான போர்க்கருவிகளையும் பொருள்களையும் கொடுத்து உதவுவதுடன், உம் ஆட்களுக்குப் போர்ப்பயிற்சியளிக்க எம் வீரர்களில் சிலரை அனுப்பி வைக்கிறேன் என்று கூறி, அவரை அப்பகுதியிலுள்ள எல்லைப் பாதுகாப்புப் படைக்குத் தேவையான தலைவராக நியமித்து, அவனுடைய ஆட்சிகளைத் தமது படைவீரர்களாகப் பதிவுசெய்துகொண்டார்.
இதிலிருந்து அப்பெரியாருக்கு எல்லைப் புறத்தில் செல்வாக்குப் பெருகிற்று. அவரது படைக்கு ஆட்களும் ஏராளமாகச் சேர்ந்தனர். நல்ல பயிற்சியும் கிடைத்தது. சல்ஜோக்கிய அரசாங்கத்து முதல் தரப் படையாக அப்படை விளங்கிற்று.
எல்லைப்புறம் பாதுகாக்கப்பட்டது. இதனால் அவர் அடிக்கடி தலைநகருக்கு வந்து, பேரரசரையும், பிற அமைச்சர்களையும் சந்திக்கும் வாய்ப்புப் பெருகிற்று. இந்நிலையில் அல்ப் அர்சலான் காலமானார்.
அவருடைய குமரர்கள் சிறுவர்கள். இவர்களைப் பராமரித்துப் பாதுகாப்பதற்குத் தக்கவர்கள் தலைநகரில் இல்லையயன அரசவையினர் கருதினர். இப்பெரியார் தாம் அக்குழந்தைகளைப் பராமரிப்பதற்குத் தக்கவர்; நல்லவர்; வல்லவர் என்று அரசவையினர் தீர்மானித்து, அவரை அழைத்து அவரிடம் அரசக் குடும்பத்தை ஒப்படைத்தனர்.
நாளடைவில் அவரே, இராணுவத் தளபதியாகவும் ஆக்கப்பட்டார். சில ஆண்டுகட்குப் பின்னர் அரச குடும்பத்தில் தக்க ஆண் மகன் அரசோச்சுவதற்கு ஏற்றவாறு இல்லையாதலால், இவரையே அரசவையினர் அரசாங்கத் தலைவராக நியமித்து விட்டனர்.
இவர் அரசாங்கத் தலைமைப் பதவியை ஏற்றவுடன் திருக்குர்ஆன் தான் இந்நாட்டின் அரசியல் சட்டம்; திட்டம் என்று பிரகடனம் செய்து, திருமறையின் சட்டப்படி நாட்டை ஆளத் தொடங்கினார். இவருடைய பெயர் உதுமான் ஜைய்யி என்பதாகும்.
இதிலிருந்துதான் துருக்கி ஏகாதிபத்தியத்திற்கு உதுமானிய அரசாங்கம் எனப் பெயர் வந்தது. இத்திட்டப்படி மன்னர்கள் பலர் ஒருவர் பின் ஒருவராக அந்நாட்டை ஆட்சி புரிந்தனர். திருக்குர்ஆனின் சட்டம் அரசியல் சட்டமாகச் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் செயல்படுத்தப்படும் வரையில் துருக்கி நாட்டை ஐரோப்பாவோ, வேறு அக்கம் பக்கத்து நாடுகளோ வெற்றி கொள்ளவில்லை.
துருக்கி படைகள் சென்றவிடமெல்லாம் வாகை சூடின. நாட்டின் எல்லைப் புறங்களும் விரிவாக்கப்பட்டன. அப்பால் துருக்கிப் பொதுமக்கள் இளந் துருக்கியர் என்ற பெயர் வைத்து, கொடுங்கோலாட்சி, ஜனநாயக ஆட்சி என்ற பெயர்களைக் கூறிப் பல இயக்கங்களைத் தோற்றுவித்து, அரசியல் நிர்வாகத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டுமென்று கோரி, அரசாங்க நிர்வாகத்தில் உரிமை பெற்றனர். குர்ஆன் சட்டத்தில் தலையிட்டு ஒவ்வொன்றாகச் சட்ட அமலை நிறுத்தி வைத்தனர்.
துருக்கியின் வெற்றியும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது. ஐரோப்பாவின் பெரும் பகுதி அந்நியர் ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டது. ஐரோப்பாவின் நோயாளி என்பதாக ஐரோப்பியர்களால் துருக்கி அழைக்கப்பட்டது.
ஐரோப்பாவில் ஆஸ்ட்ரியா நாட்டு வியன்னா வரையிலும், கிழக்கில் உக்ரைன், கிரமியா, பாக்கூ உட்பட காக்கே´யன் மலை வரைப் பரவியிருந்த துருக்கி நாடு, சின்னா பின்னமடைந்து பாஸ்பரஸ் ஜலசந்திக்கு வடக்கே திரேஸ் மாகாணம் ஒன்றில் மட்டும் அடங்கிற்று.
வட ஆப்பிரிக்காவில் இருக்கும் இன்றைய லிபியாவும், எகிப்து, சூடான், அரபுத் தீபகற்பம் முழுவதும், ஆசியா மைனர் முழுவதும் துருக்கி அரசாங்கமாக வியாபித்திருந்த பேரரசு, இப்பொழுது எல்லா நாடுகளையும் இழந்து, ஆசியா மைனருக்குள் சுமார் 2 1/2 கோடி மக்களே உள்ள ஒரு சிறு நாடாக ஆகிவிட்டது!
திருக்குர்ஆன் சட்டத்தை அந்த நாடு கடைப்பிடித்த வரையில் இறைவனின் கிருபைக்கு ஆளாகி, வெற்றி மேல் வெற்றி பெற்று உலகத்தில் உள்ள பெரும் வல்லரசில் ஒன்றாக இருந்த நாடு, வாலிபர்களின், அனுபவமற்றவர்களின் கையில் சிக்கி, ஜனநாயகம் என்ற பெயர் வைத்து, இறைச் சட்டங்களை மாற்றி, லோகாதயச் சர்க்காராகத் திரும்பியதன் பலனாக கிலாபத் பதவியையும் இழந்து, சுண்டைக்காய் அளவுள்ள சிறு நாடாக இப்பொழுதிருக்கின்றது.