• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

ஹள்ரத் கௌதுல் அஃலம் முஹிய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி [ரலி]  அவர்கள் பேசுகிறார்கள் !



ஐம்பத்து ஏழாவது பிரசங்கம்



ஹிஜ்ரி 545 ரமளான் பிறை 27, வெள்ளிக்கிழமை காலை மதுரஸா மஃமூராவில் ஹள்ரத் அவர்கள் (சிறிது சம்பா­ணைக்குப் பிறகு) நிகழ்த்தியது:


அருமையானவனே! சத்தியம், சித்த சுத்தி ஆகியவற்றில் சிறியதை மட்டும் எனக்குத் தானமாகக் கொடு! உன் செல்வங்களை நீயே வைத்துக் கொள்! உன் புனிதமான சத்தியம், சித்த சுத்தி ஆகியவற்றை மட்டுமே நான் ஆசிக்கிறேன். 



அதுவும் எனக்காகவன்று; நீ புனிதமடைவதற்காகத்தான் கேட்கிறேன்.  உன் அகம், புறம் என்ற இரு நாவுகளின் பேச்சையும் புனிதமாகக் காப்பாற்று! (யோசிக்காமல் வார்த்தைகளைக் கொட்டிவிடாதே!) அல்லாஹ் ஜல்ல ஜலாலுஹூ உன்னைக் கண்காணிக்கக் காவலர்களை நியமித்திருக்கிறான்.  மலக்குகள் உன் வெளிக் கோலத்தைக் கண்காணித்தால், இறைவனே உன் அகத்தில் மறைத்து வைத்திருப்பதை நோட்டமிடுகிறான்.



மனிதா! உயர்வான மாட மாளிகையை நிர்மாணித்துக் கொள்கிறாய். பூலோகத்திலுள்ள ஏனைய மாட மாளிகைகளைப் போன்றே தான் நீ நிர்மாணிப்பவையும் ஒரு நாள் அழிந்துவிடக் கூடியவை. கலப்பற்ற நிர்ணயமில்லாமல் எதையும் செய்யாதே! உலகில் உனது எந்த நிர்மாணமும் சித் சுத்தியோடு தான் சமைய வேண்டும்.



நீயோ, உன் நப்ஸின் தூண்டுதலாலும், சுயநலத்தாலுந்தான் எதையும் நிர்மாணிக்கிறாய். நப்ஸின் பாசத்துக்கும், பழக்கதோ­த்துக்கும் சிரம் சாய்த்து, இறைவனின் சன்மார்க்க வரம்பை மீறி, தெய்வ சித்தப் பொருத்தத்துக்கும், ஆணைக்கும் மாற்றமாக எதையும் நிர்மாணிப்பவன் மதியற்ற மடையனாவான்.



ஆகையால், அவனிடம் அல்ல(ஹ்)வின் ஆணைக்கு நல்லிணக்கமுமில்லை. அவன் மாளிகையில் பரக்கத் மாரியும் பொழியப்பட மாட்டாது.  மாளிகையை நிர்மாணிப்பதோ அவன்; அங்கு வசிப்பதோ வேறு பலர். ஏன் மாளிகை நிர்மாணித்தாய்; எங்கிருந்து அதற்குச் செலவு செய்தாய்  என்று இத்தகைய  மதிகெட்ட மூடன் கியாம நாளன்று வினவப்படுவான்.



அல்லா(ஹ்)வின் திருச் சித்தப்பொருத்தத்தையும், நல்லிணக்கத்தையும் தேடும் புனிதனாகு! உனக்கு அளிக்கப்பட்டதைக் கொண்டு மனம் பொருந்திக் கொள்! உனக்கு விதிக்கப்படாத தனபாக்கியங்களைச் சுருட்டிக் கொள்ள நினைக்காதே! தனக்காகக் அருளப்படாத செளபாக்கியங்களைச் சேகரிக்க அலைந்து திரிவதுதான் அடியானுக்கு உலகத்தில் மாபெரும் வேதனை (அதாப்) என்று நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் எச்சரித்துள்ளதை உணர்ந்து பார்! என் ஞானோபதேசத்தை நீ முழுவதும் நம்பாமல் என்னை அணுகினால் என் போதனையால் ஒருக்காலும் நீ நலம் பெற மாட்டாய்.



அந்தோ கைதேசமே! நீ அல்லாஹ் ஜல்ல ஜலாலுஹூவையும் மாசற்ற ஞானநாதாக்களையும் வீணே குற்றம் சொல்லிக் கொண்டு, சங்கையான முஸ்லிமென்று வேறோ கூறிக் கொள்கிறாய்! மாபெரும் பொய்யன் நீ! இஸ்லாம் என்பது ஆசார மேன்மைக்கும், இறைவனின் புனித ஏவலுக்கும், நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் ஆணைக்கும், இறைச் சித்தத்துக்கும், அவன் இட்ட முடிவுக்கும் பணிந்து நல்லிணக்கம் காட்டுவதுதான்.



அப்போதுதான் உன் இஸ்லாம் உயர்வானதாகும். தீய இச்சாபாசங்களே ரட்சகனுக்கு எதிராகப் பாவம் புரிந்து அவனை உன் பகைவனாகச் சமைத்து விடும். உன் இகத்தின் ஆசாபாசங்களை இல்லாமலாக்கிக் கொண்டால்தான் அல்லாஹ்வின் அருளும், கருணையும் உன்னை நாடிவரும்.



ஜெயசீலனாக நாடுவாயானால், என் ஞானோபதேசத்தை வலுவாகப் பற்றிக்கொள்! ரட்சகன் விதிப்பு எதுவாயினும் ­ரீஅத்துக்கு இணக்கமுடன் - விஸ்வாசத்துடன் ஒப்புக் கொள்வது சான்றோர்களான முஸ்லிம்களுக்குக் கடமையானதாகும்! அந்தக் கடமைக்குப் பணியும்போது நப்ஸின் தீய தூண்டுதலோ, பேராசையோ, இச்சாபாசமோ, ஷைத்தானின் ஊசலாட்டமோ வரக்கூடாது.



இத்தீய சக்திகளை எதிர்க்க அடியான் ஆசைப்பட்டால் மெய்ப்பொருளின் சகாயம் நிச்சயம் சித்தியாகும்.  தீய சக்திகள் அறவே இல்லை என்று கூற முடியுமா? நபிமார்கள் மறைந்துவிட்ட பின் நம்மில் சுத்தவாளிகள் யாருமே இல்லை. புனிதமான நப்ஸை வரப்பிரசாதமாகப் பெற்ற புனித முஸ்லிம்கள் தங்கள் நாச பாசங்களைத் தோற்கடித்து, சுபாவ சேஷ்டை என்ற அக்கினியை அணைத்துத் தணித்து விடுகின்றனர்.



ஷைத்தான் தன் சேஷ்டைகளைக் காட்டாமல் அடக்கி விடுகின்றனர். அம்மகான்களை வழிகெடுக்க இப்லீஸ் அணுகினாலும் அவனிடம் புனித முஸ்லிம்கள் சிக்குவதில்லை.



சுயநலத்துக்காக அல்லாஹ்வின்மேல் பாரம் (தவக்கல்) போட்டுவிடக் கூடாது. அல்லாஹ்வின் புனித ஏகத்துவத்தை நிலைநிறுத்தும்போது யாருடைய நன்மை, தீமைகளையும் லட்சியப்படுத்தக் கூடாது. நீயோ நப்ஸுக்கும். அதன் பாகங்களுக்கும் பரிபூரண அடிமையாய் விட்டிருக்கிறாய். தவக்குல், தவ்ஹீத்  என்பவற்றையே அறிந்து கொள்ளாத ஞான சூன்யனாய்த் திகழ்கிறாய்.



முதலில் கசப்பும், பின்னரே இனிப்பும் கிட்டும்! தொடக்கத்தில் உடைசல், முடிவில்தான் கூடிச் சமைத்தல் சித்தியாகும். ஆரம்பத்தில் மரணமும் கடைசியில்தான் நித்திய ஜீவனென்ற புனித ஹயாத்தும் அருளப்படும். தாழ்வுக்குப் பிறகே வாழ்வு.



வறுமைக்குப் பின்னரே சம்பத்து. அழிவுக்குப் பிறகே மெய்யான உள்ளமை - இவ்விதம் ஹக்குத் தஆலா அருள் செய்து வருகிறான். முதலில் வியாகுலங்களைச் சகித்து நல்லிணக்கம் காட்டியதால் அல்லா(ஹ்)விடமிருந்து நீ வேண்டியவை யாவும் கிட்டும்.



நல்லிணக்கமில்லையேல் ஏதும் சித்தியாகாது. அல்லாஹ்வின் புனித தியானத்தில் உன் கல்பைத் தரிப்படுத்தாத எந்தப் பொருளுமே உன்னை நாசப்படுத்தி விடும். பர்லான, சுன்னத்தான தொழுகை, நோன்பிற்குப் பின் நீ கடைப்பிடிக்கும் நபிலான தொழுகை, நோன்பாயிருந்தாலும் சரியே.



உன் நபிலான நோன்பில் காணும் பசியும், தாகமும் இறைவன் திருச் சமூகத்தை நீ நெருங்க விடாமல் செய்யுமாயின், அந்த நபிலான (அதிகப்படியான) வணக்கம் கூட உன்னைத் தடுக்கப்பட்ட அடியானாயும், நப்ஸின் மிரட்சிக்குச் சிரம் சாய்த்தவனாயும் சமைத்துவிடும்.



ஞான நாதர்கள் மெய்ஞ்ஞான அகமியங்களைத் தரிசிப்பதாலும், தூய உள்ளத்தாலும், இறைவனைச் சமீபத்து அந்தத் துறவறத்தின் கீழ் நிலை கொள்கின்றனர்.  இறை நாட்டமென்ற கலா, கத்ருடன் பரவசமாகச் சுற்றுகின்றனர்.



கலா, கத்ருடன் சுற்றும்போது களைப்புத் தட்டினாலும் இறைவனின் (கருணைக் கரம்) அவர்களை ஆசுவாசப்படுத்துகிறது; ஆட அசையச் சளைத்தாலும் ஆட்டுகிறதுசாந்தி பெற்றிருக்க விரும்பும் மகான்கள் அவ்விதம் பெறவும் அருளப்படுகின்றனர்; சர்வ நிலையிலும் அஸ்ஹாபுல் கஹ்புகள் போன்றே சீர்பட்டுவிடுகின்றனர். ஆட, ஒடுங்க அவர்களுக்கு அலுப்புத் தட்டியதும் (சாந்தியருளி) தூங்க வைக்கப்படுகிறார்கள்.



ரட்சகனின் வரப்பிரசாதமான சக்தி அருளப்பட்டதும் ஆட்ட அசைவு உண்டாகிறது; சாந்தியும், பணிவும் கருணையாகப் பொழியப்பட்டதும், அமைதியும் மெளனமும், உன் உள்ளமை புனிதப்பட்ட போது, ஆட்டமும் உன் உள்ளமை மெய்யாக மறைந்தபோது அமைதியும் அவசியம் ஏற்படும். உயர்வான ­ரீஅத்தை ஓட்டி நீ மெய் வணக்கம் புரியும்போது, ஆட்ட அசையும், ஞானோதயம் பெற்றபோது சாந்தியும் அவசியம் உண்டாகுபவையாகும்.



படைப்புப் பொருள்கள், சுபாவ சேஷ்டைகள், பாச மோகங்கள் அனைத்தையும் நீ வெறுத்த பின்னரே உன் நப்ஸ் சீர்பட்டுப் புனிதமாகும்.  இம்மையின் படைப்புகளை லட்சியமென நிச்சயமாக நினைக்காதே! உன் நன்மை, தீமை, ரிஜ்கு யாவும் அல்லா(ஹ்)வின் கைவசத்தில்தானிருக்கின்றன.



சதாவும் மெய் வணக்கத்திலும், ஆசார மேன்மையிலும் புனிதமாக ஈடுபாடு கொள்; ஏனெனில் ரட்சகனைத் தவிர வேறெந்தப் படைப்புப் பொருளும் உன் கரத்தில் தரித்திருக்காது. அப்போதுதான் படைப்புகளனைத்திலும் நீ செல்வனாய் கனவானாய்த் திகழ முடியும்.



நபி ஆதம் (அலை) அவர்களுக்குச் சர்வ படைப்புகளும் சுஜூது செய்தது போல, உனக்கு அவை பணியும். நான் கூறும் இந்த மகத்தான ஞான சமிக்ஞைகளெல்லாம் சாதாரணமானவன் என்ன, ஆத்ம ஞானம் பெற்ற பலருக்குமே விளக்கமாகாத அகமிய மர்மங்களாகும். எனவே, அவர்கள் (இறைவனின் மெய் வணக்கத்தில் சீர்பெற்ற மகான்கள்) நபி ஆதமின் அணுவாயும், வித்தாயுமிருக்கின்றனர்.



குறைமதியாளனே! ­ரீஅத்தின் (வெளி நடவடிக்கை) ஞானங்களைச் சம்பூரணமாய்ப் பெற்றுக் கொள்; பிறகே ஏகாந்த வணக்கம்  சிலாக்கியமானதாகும்.  இறைவனின் மெய்யடியார்கள் சன்மார்க்க ஞானம் சம்பூரணமாகச் சித்தியான பின்பே, சடலத்தைப் படைப்புகளின் ஊழியத்துக்கு விட்டுவிட்டுத் தூய இதயத்தை மெய்ப்பொருளின் அருகிலாக்குவதில் ஈடுபடுத்துகின்றனர்.



சன்மார்க்கத்தை களங்கமின்றி கடைப்பிடிக்கும்போது மக்களுடன் சேர்ந்திருந்தாலும், புனிதக் கல்பு மட்டும் படைப்புகளைத் தொட்டுவிடாமல் விலகிக் கொள்ளும். இவர்களே இருந்தும் இல்லாத உத்தமர்கள். ­ரீஅத்தை உயர்வாகவும், உறுதியாகவும் கடைப்பிடிப்பதே இந்த மகான்களின் வெளிப்படையான அமல்களாகும்.



சன்மார்க்கத்தின் உடை சிறிதேனும் அழுக்காயினும் இவர்கள் அதை வெளுத்து நறுமணமேற்றிக் கந்தம் கமழச் செய்கின்றனர். அது கிழிந்தாலும் அதில் ஒட்டுப் போட்டுத் தைத்து விடுகின்றனர். இவர்களே மக்களைச் சீர்படுத்தி மேன்மைப்படுத்தும் மன்னாதி மன்னர்கள். இவர்களில் மிக மிகக் கீழ்ப்படிவதில் சித்தி பெற்ற சீலர்கள் கூட மாபெரும் மலைகளுக்கு ஒப்பானவர்கள்.



இவ்வுத்தமர்களின் மேன்மை பயபக்தியுடன் அமர்ந்து அவனைத் தியானிப்பதில் மூழ்கி மெய்ஞ்ஞான சாகரத்தில் குளித்துப் பேரானந்தம் அடைகின்றன. காருண்யனான எங்கள் ரப்புல் ஆலமீனே! உன் புனித தியானத்தை (திக்ரையே) எங்களுக்கு ஆரமுதாக்கு! உன் மகோன்னத சமீபத்துவத்தையே செளபாக்கிய சம்பத்தாக ஆக்கியருள்! ஆமீன்.



செத்த இதயம் கொண்டவர்களிடம் விசுவாசம் வைத்துள்ள நீயே மரணித்த இதயம் படைத்தவன்; ஜீவஜோதி பெற்ற (தங்களையே மாற்றிக் கொண்ட) அப்தால்களின் பட்சமான விசுவாசத்தைத் தேடு! நீ கப்ரு போன்றவன்; இந்த நிலையில் கப்ரு போன்ற அஞ்ஞானிகளிடந்தானே நெருங்குகிறாய்! பிணம் போன்ற நீ, உன்னையயாத்த பிணங்களிடந்தானே அணுகுகிறாய்! நொண்டி முடமே! உன் போன்ற நொண்டி உன்னை இழுத்துச் செல்கிறான்.



குருடா, குருடன் வழிகாட்ட நீ பின் செல்கிறாயே! நல்லிணக்கமும், மெய் விசுவாசமும் பெற்ற சான்றோர்களின் சகவாசத்தைத் தேடு! அவர்களின் ஞானோபதேசத்தைப் பொறுமையுடன் ஏற்றுச் சீர்படு! அதன்படியே விசுவாசத்தோடு ஒழுகி நடந்தால் நிச்சயம் ஜெயசீலனாவாய்.



ஞானவான்களின் அமுத போதங்களைச் செவி தாழ்த்திக் கேட்டு நல்வணக்கம் புரி. ஆசாரசீலர்களான மகான்களைக் கண்ணியப்படுத்து; உனக்கு வெற்றி கிட்டுவது நிச்சயம். எனக்கொரு ஞானகுரு (ஷைகு) இருந்தார். எனக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்படும் போதெல்லாம் நான் வினவுவதற்கு முன்பே, அந்த மகான் அதைக் கூறி என் சந்தேகத்தைத் தீர்ப்பார்.



நான் அந்த மகானை மிக மிகக் கண்ணியப்படுத்தியதே இந்தக் கிருபை அருளுக்குக் காரணம்.  ஞான நாதர்களைக் கண்ணியப்படுத்திக் கெளரவிக்க நான் எப்போதும் தவறியதில்லை. மகான்களுடன் நான் எப்போதும் ஆசாரத்தோடும், சங்கையோடும் தான் பழகுவேன்.



பற்றற்ற துறவி (சூபி) கள் எப்போதும் கருமித்தனம் பண்ணவே மாட்டார்கள்; அவர்களிடம் என்னதானிருக்கும்? எல்லாவிதப் பந்த பாசங்களையும் அறுத்துக் கொண்டவர்களாயிற்றே! எதையும் வாங்கும்போது தமக்காகவன்றிப் பிறருக்காகவே அதை களங்கமற்று ஏற்கின்றனர்.



ஞானிகளின் மனம் மக்களையும், ஏனைய படைப்புகளின் பாசத்தையும் விட்டு விலகிப் புனிதமாக இலங்குகிறது. சம்பத்துள்ளவர்களிடந்தான் கஞ்சத்தனமிருக்கும்.  மாசற்ற சூபிகளோ, தனபாக்கிய சம்பத்துகளனைத்தையும் படைப்புகளுக்காக விட்டுவிட்டவர்களாவர்.



அவர்களிடமா கஞ்சத்தனமிருக்கும்? சூபிகள் நாயகங்களுக்கு  நண்பனோ, பகைவனோ எவருமில்லை. புகழையோ, இகழையோ பொருட்படுத்தாத உத்தமர்கள் அவர்கள். கொடுப்பதும், மறப்பதும், லாபமும், நஷ்டமும் இறைவனையன்றி வேறு யாராலும் உண்டாக்கிவிட முடியும் என்று இவர்கள் ஒருக்காலும் நம்ப மாட்டார்கள்.



உயிர் வாழ்வதில் மகிழ்ச்சியோ, மரணத்தில் வியாகுலமோ கொள்ளாத இவர்கள் ரட்சகனுக்கு நல்லிணக்கமில்லாக் காரியங்கள் நிகழ்ந்துவிட்டால் அதையே மரணமாகவும், உயர்ந்த செயல்கள் நடந்துவிட்டால் அதையே வாழ்வாகவும் நினைக்கிறார்கள்.



ஜனங்களிடையே வாழ்வதை வெறுத்து, இவர்கள் ஏகாந்தத்தை இறைவன் நேசம் என்று ஏற்கின்றனர். இவர்களுக்கு இறைவனின் புனிதத் தியானமே ஆகாரமாயும், அவன் சமீபத்துவமே அமுதாயுமிருக்கின்றன. இதனால்தான் இவர்கள் இம்மையின் சம்பத்துக்கள் வி­யத்தில் கருமிகளாயிருப்பதில்லை.



இம்மையின் செளபாக்கியங்கள் யாவையும் வெறுத்து ஒதுக்கி விடுகின்றனர். இறைவா! இம்மையிலும் மறுமையிலும் எங்களுக்கு நன்மையைக் கடாட்சித்து, நரக நெருப்பிலிருந்து விமோசனத்தையும் அளித்து அருள்புரிவாயாக! ஆமீன்.