முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
மூலம் : திருநபி சரித்திரம் . தொகுப்பு : முஹம்மதடிமை , திருச்சி
அக்கடிதத்தில் ரோம சக்கரவர்த்திக்கு எழுதிய கடிதத்திலுள்ள வாசகமே வரையப்பட்டிருந்தது. கடிதம் கொண்டு போன ஹாதிபை அவ்வரசன்கெளரவமாக வரவேற்றான். ஹாதிப் (ரலி) ஒரு தூதவர் மட்டுமல்ல; அவர் ஒரு போதகராகவுமிருந்தார். அவ்வரசரிடம் கடிதத்தைக் கொடுத்துஅவரிடம் இஸ்லாத்தைப் பற்றிப் போதிப்பதற்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்அனுமதியையும் அத்தூதர் பெற்றிருந்தார். கடிதத்தைக் கொடுத்ததோடு நில்லாமல் அவர் இஸ்லாத்தின் உண்மையையும், அதன் மேன்மையையும் எடுத்துச்சொல்லி அவர் இஸ்லாத்தை ஒப்புக் கொள்ள வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் அவ்வரசனுக்குச்சிறிதும் பயப்படாது போதனை செய்தார்.
எகிப்து ராஜ்யத்தில் பிர்அவுன் அரசாட்சி செய்ததையும் மூஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவனுக்குப் போதனை செய்ததையும் எடுத்துக் காட்டினார். அவ்வரசனை நோக்கி , உமக்கு முன்னால் இங்கு ஒருவன் இருந்தான். அவன் தானே நாயன் என்று வாதித்தான் . ஆகையால் நாயனுடைய தண்டனை அவனைச்சூழ்ந்து கொண்டது என்று சொன்னார் . அப்போது அரசன், என்னுடைய நிலைமை வேறு, பிர்அவ்னுடைய நிலைமை வேறு , பிர்அவ்ன் பாவத்திலிருந்தான்.
தன்னையே கடவுள் என்று சொன்னான். ஆனால் நான் (முகெளகிஸ்) உண்மையான மதத்தைப் பின்பற்றுகிறேன். வெளியாக்கப்பட்ட வேதங்களில் நம்பிக்கை வைத்திருக்கிறேன். ஆனால் நான் என்னுடைய மதத்தில் நிலையாக இருந்து அரபி தேசத்துப்புதிய நபியவர்களை ஒப்புக் கொள்ளாமலிருந்தாலும், இறைவனுடைய சமூகத்தில் நான்பிர்அவ்னைப் போல் குற்றவாளியாக இருக்க முடியாது என்று சொன்னான் .
ஹாத்திப் அதற்கு விடையாகப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உண்மையான நபியென்றும், முன்னால் ஈஸா அலைஹிவஸல்லம் அவர்கள் உலகில் நபியாக அவதரித்த போது வேதங்களை உடைத்தாயிருந்த யூதர்களும் அவர்களை ஒப்புக்கொள்ள வேண்டியது எவ்வளவு அவசியமாயிருந்ததோ, அப்படியே மூஸா நபி, ஈஸா நபி அலைஹிவஸல்லம் அவர்களின் முன்னறிக்கையான உலகில் தோன்றிய கடைசி நபியான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை யூதர்களும் கிறிஸ்தவர்களும் ஒப்புக் கொள்ள வேண்டியது அவசியமென்றும் குறிப்பிட்டுக்கூறினார்கள்.
கடைசியாக மூஸா நபி அலைஹிவஸல்லம் அவர்களுக்கு வெளியான இஞ்சீல் வேதத்தை அங்கீகரிக்கும்படி நீங்கள் அழைப்பது போல, முஹம்மது நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு வெளியான திருக்குர்ஆன் வேதத்தை அங்கீகரிக்கும்படி நாங்கள் தங்களைஅழைக்கிறோம்.
மக்களுக்கு மத்தியில் வெளியாகும் நபியை அம்மக்கள் பின்பற்றி அந்நபியவர்களின் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டியது அவசியம். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் தங்கள் இருப்பதால் அவர்களின் மீது விசுவாசங் கொள்ள வேண்டியது தங்களுடைய கடமையாகும் என்று சொன்னார்கள்.
ஹாத்திப் (ரலி) அவர்கள் கூறியவற்றிற்கு அரசன் ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை. அதன் பின் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கடிதத்தைவாசித்து விட்டு ஹாத்திப் (ரலி) அவர்களைப் பார்த்து அவ்வரசன், நான் எதை விலக்க வேண்டுமோ, அதைச் செய்யும்படியும், நான் எதைச் செய்ய வேண்டுமோ அதை விலக்கும்படியும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிடவில்லை.
அவர்கள் மந்திரவாதியுமல்லர், வழி தவறியவர்களுமல்லர்; அவர்கள் குறி சொல்லுகிறவர்களாகவோ, பொய் சொல்லுகிறவர்களாகவோ தெரியவில்லை. நபித்துவத்திற்கு வேண்டிய அம்சங்களைநான் அவர்களிடம் காண்கிறேன் என்று சொன்னார்.
பின்னர் அவ்வரசர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கடிதத்தை ஒரு தங்கப் பெட்டிக்குள் வைக்கும் படி செய்து அதை முத்திரையிட்டுப் பொக்கி தாரிடம் கொடுத்துப் பத்திரமாக வைக்கும்படிச் செய்தார். ஹாத்திப் (ரலி) அவர்கள் வசம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒரு கடிதமும் சில காணிக்கைகளும் அனுப்பினார்.
அக்கடிதத்தில், முஹம்மது இப்னு அப்துல்லா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எகிப்து அரசர் முகெளகிசி- னிடமிருந்து :- உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக! பின்பு தங்களுடைய கடிதத்தை நான் வாசித்தேன். அதில் தாங்கள் பிரஸ்தாபித்திருப்பதையும், என்னை அழைக்கப்படுவதையும் அறிந்து கொண்டேன். ஒரு நபி பிறப்பார்கள் என்பது மட்டும் எனக்குத் தெரியும். அவர்கள் ஷாம் தேசத்தில் வெளியாவார்களென்று நான் நினைத்திருந்தேன். தங்களுடைய தூதரைக் கவுரவப்படுத்தினேன். இரு பெண்களை அனுப்பியிருக்கிறேன். அவர்கள் கிப்திகளிடம் ( எகிப்து தேசத்தாரிடம்) மிகவும் மதிப்புப் பெற்றவர்கள். தங்களுக்காக ஆடையும் சவாரிக்காக ஒரு கோவேறு கழுதையும் அனுப்பியிருக்கிறேன் என்று வரையப்பட்டிருந்தது .
ஆனால் அவ்வரசன் முஸ்லிமாக வில்லை. இரு பெண்களில் மாரியா கிப்தியாவைப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் மனைவியாக ஏற்றுக் கொண்டார்கள். மற்றொருவரான ஸீரின் என்பவரை ஹஸ்ஸான் (ரலி) அவர்களுக்குக் கொடுத்தார்கள். கோவேறு கழுதையின் பெயர் துல்துல். இதன் மீதேறியே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹுனைன் சண்டைக்குச் சென்றார்கள். அவ்விரு பெண்களும் ஹாத்திப் (ரலி) அவர்களின் போதனையால் வரும் வழியிலேயே முஸ்லிமாய் விட்டார்கள்.
அவ்விருவர்களும் சகோதரிகள்என்றும் சொல்லப்படுகிறது, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அரசர்களுக்கு அனுப்பிய கடிதங்களில் எகிப்து தேசத்து அரசரான முகெளகிஸ் என்பவருக்கு அனுப்பப்பட்ட கடிதம், பத்திரப்படுத்தி வைக்கப்பட்டதாக, இஸ்லாமிய சரித்திரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 1858-ஆம் வருடத்தில் சில பிரெஞ்சுப்பிரயாணிகள் எகிப்து நாட்டில் சுற்றுப் பயணம் சென்றிருக்கும் போது ஒரு கிறிஸ்தவ மடத்தில் அவர்களுக்குப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கடிதம் அகப்பட்டது.
அதிலுள்ள எழுத்துள் முற்காலத்து அரேபிய லிபியில் வரயைப்பட்டிருந்ததால், டாக்டர் பாட்ஜர் என்பவர் அதைப் பிரித்தெடுத்து இக்கால எழுத்தில் எழுதினார் . அதிலுள்ள வாசகத்திற்கும் இஸ்லாமிய சரித்திரத்தில் எகிப்து தேசத்தரசனுக்கு எழுதப்பட்டதகச் சொல்லப்படும் கடிதத்தின் வாசகத்திற்கும் கிஞ்சித்தும் வித்தியாசமில்லை. அக்கடிதத்தின் இறுதியில் முஹம்மத்ரசூல் அல்லாஹ் என்ற முத்திரையொன்று இடப்பட்டிருக்கிறது.
அக்கடிதம் தற்சமயம் கான்ஸ்டாண்டிநோபில் ( துருக்கி ) அரண்மனையில் இருக்கிறது. அபிஸீனியா தேசத் தரசரான நஜ்ஜாஷி – க்கு அனுப்பப்பட்ட கடிதம் கிடைத்ததும் அவர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் உண்மையான தூதர் என்று ஒப்புக் கொண்டு பதில் அனுப்பிவிட்டார்.
அரபி தேசத்துச் சிற்றரசர்களுக்கு அனுப்பிய கடிதங்களுக்குப் பல விதமான பதில் கடிதங்கள் வந்து சேர்ந்தன. ஷாம் தேசத்தை ரோமச் சக்கரவர்த்தியின் பிரதிநிதியாயிருந்து அரசாண்டு கொண்டு இருந்தவராகிய ஹாரிஸ் கஸ்ஸானி என்பவருக்கு அனுப்பியகடிதத்தை அவர் பார்த்ததும் அவருக்கு அடங்காத கோபமுண்டாகிச் சேனைகளை ஆயத்தமாகும்படி உத்தரவு பிறப்பித்தார். முஸ்லிம்களை அவர் தாக்குவாரென்றுஒவ்வொரு நிமிடமும் எதிர்பார்க்கப்பட்டது. அவ்விரோதமே தபூக் என்னும் சண்டைக்குக் காரணமாயிருந்தது.
சாந்தியும் சமாதானமும் தொடரும் ...