மறைந்தும் வாழும் பதுரு சஹாபாக்கள்!
உர்வதிப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மஸ்ஜிதுன் நபவி கட்டப்பட்ட போது நபியின் ரவ்லா ஷரீஃபை உள்ளடக்கிய அறையின் சுவர் கீழேஇடிந்து விழுந்தது.
அந்த சமயம் அங்கிருந்த ஒருகப்ரில் கால் பாதம் தெரிந்தது. இதைக் கண்ட மக்கள் அனைவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்பாதமாகும் எனக் கூறினார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் மீது ஆணையாக இது உமர் (ரலி) அவர்களுடையபாதமாகும் என உறுதியாகக் கூறினேன். என்னைத் தவிர அதைத் தெரிந்தவர் யாரும் அங்கிருக்கவில்லை எனக் கூறுகிறார்.
இந்த நிகழ்ச்சி சுமார் ஹிஜ்ரி நூறாம் ஆண்டு நடந்தது. பத்ரு ஸஹாபியான உமர் (ரலி) அவர்கள் மரணித்து சுமார் எண்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் பாத அடையாளம் கூட அழியாமல் புத்தம்புதிய ஜனாஸாவாக இருந்ததை மேற்கூறிய ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. (நூல் : புகாரி)
உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் போருக்காக இஸ்லாமியப் படையை தயார் செய்த போது அபூதல்ஹா (ரலி) அவர்கள் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தார்கள். அவ்வேளை போருக்குப் புறப்படுங்கள் என்ற வசனம் வந்த போது, தன் பிள்ளைகளை அழைத்து நானும் போருக்கு வருகிறேன்.
தனக்கும் வாகனம் மற்றும் சாமான்களை தயார் செய்யும்படிச் சொன்னார்கள். அதற்கு அவர்களின் பிள்ளைகள் எங்களின் அருமைத் தந்தையே! தாங்கள் உங்கள் வாலிப காலத்தில் நாயகத்துடனும் அவர்களுக்குப் பின் வந்த கலீபாக்களுடனும் போரில் ஈடுபட்டுள்ளீர்கள். தற்போதுநாங்கள் உங்களுக்குப் பகரமாகச் செல்கிறோம். உங்களுக்கு வயதாகிவிட்டதனால் ஓய்வெடுங்கள் என்றார்கள். அதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை. இந்த வயதான பருவத்திலும் இந்த குர்ஆன்வசனம் போருக்குப் புறப்படத் தூண்டுவதை நான் உணர்கிறேன் என கூறினார்கள்.
அந்த சமயம் நடந்த அறப்போரில்கலந்து கொண்டார்கள். நடுக்கடலில் கப்பலில் இவர்கள் இருந்தபோது உடல்நலக் குறைவு ஏற்பட்டுமரணித்து விட்டார்கள். ஸஹாபாக்கள் அவர்களின் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காக ஒரு தீவைத் தேடினார்கள். ஏழு நாட்களுக்குப் பின்பு தான் ஒரு தீவு தெரிந்தது. அதுவரை அவர்களின் ஜனாஸாவில் சிறிய நாற்றம் கூட இல்லை. தூங்குவதுபோல் காட்சியளித்தார்கள்.
(நூல் : ஸுவரும் மின்ஹயாதிஸ் ஸஹாபா பக்கம் : 5)
ஸஹாபாக்கள் மரணித்த பின் இறைவனின் சன்னிதானத்தில் மானசீகமான ஒரு வகை உயிர் வாழ்க்கை வழங்கப்பட்டதின் காரணமாகத்தான் அவர்களில் சிலரின் மண்ணறையிலிருந்து நறுமணம் வீசியதை உணர முடிகிறது.
அபூஸயீதுல் குர்ரீ (ரலி) அவர்கள்கூறுகிறார்கள். பத்ரு ஸஹாபியான ஸஅதிப்னு முஆத் ( ரலி) அவர்கள் மரணித்த போது நான் அவர்களின் கப்ரைத் தோண்டிக் கொண்டிருந்தேன். அப்போது அதிலிருந்து கஸ்தூரி வாசம் வீசிக் கொண்டே இருந்தது. முஹம்மதிப்னு ஷர்ஹபீல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஸஅத் (ரலி) அவர்களின் கப்ரை மூடும் போது அங்கிருந்த மனிதரொருவர் தன் கையில் எடுத்திருந்த மண்ணை கப்ரில் போடாமல் வைத்திருந்தார். வீட்டில்வந்து கையை விரித்துப் பார்த்த போது அது கஸ்தூரியாகவே மாறியிருந்தது.
( நூல் : இப்னு ஸஅத் 3 : 507)
அலிய்யுப்னு ஜைது (ரஹ்) அவர்கள்தன்னுடைய தந்தையிடமிருந்து அறிவிக்கிறார்கள் . ஒருவர் பத்ருஸஹாபியான தல்ஹா (ரலி) அவர்களை கனவில் கண்டார் . அவரிடம்தல்ஹா (ரலி) அவர்கள் நீங்கள் என்னுடைய கப்ரை தோண்டி வேறு இடத்தில் அடக்குங்கள் . என்னை அடக்கியஇடத்தில் உள்ள நீரூற்றினால் நான் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன் எனக் கூறினார்கள்.
இவ்வாறு தொடர்ந்து மூன்றுதடவை கண்டதும் அவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று கூறினார்கள். உடனே அவர்கள்சில முக்கியமானவர்களை அழைத்து ஆலோசித்து விட்டு அவர்களின் கப்ரைத் தோண்டிப் பார்த்தபொழுது, ஜனாஸா வைக்கப்பட்டது போலவே இருந்தது. கற்பூரம் கூட வைக்கப்பட்ட இடத்திலிருந்து நீங்காமல் அதே இடத்தில் இருந்தது.
அவர்களின் விலாப் புறங்களில் நீரூற்றினால் நனைந்து இருந்தது . அபூபக்ரத் என்பவருடைய நிலத்தை பத்தாயிரம் ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கி அந்த இடத்தில் மறுபடியும் தோண்டி அடக்கினார்கள். இந்த நிகழ்வு அவர்கள் மரணித்து பத்து வருடங்களுக்குப் பின்புநடந்ததது.
( நூல் : உஸ்துல்காபா 61:3)
இமாம் தஹபி (ரஹ்) அவர்கள் தன்னுடைய வரலாற்று நூலில் கூறுகையில், தல்ஹா (ரலி) அவர்களை அவர்கள் மரணித்து முப்பத்தி மூன்று வருடங்கள் கழித்து அவர்களின் மகள் ஆயிஷா கனவில் கண்டார்கள். கனவில் அவர்கள், தாம் தண்ணீர் உள்ள இடத்தில் அடக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், அதனால் தன்னை இடமாற்றும்படியும் கூறினார்கள். அப்போது அவர்களது கப்ரைத் தோண்டிய பொழுது முப்பத்திமூன்று வருடங்களுக்கு முன்புள்ள பழமையான ஜனாஸாவைப் போலில்லாமல் சில நிமிடங்களுக்கு முன்பு வைக்கப்பட்ட புத்தம்புதிய ஜனாஸாவைப் போலிருந்தது.
( நூல் : ஸியருன் அஃலாமுன் நுபலா பாகம் 3)
பத்ரு ஸஹாபியான அப்துல்லாஹ்பின் அம்ரு (ரலி) அவர்களும் மற்றும் அம்ரு பின் ஜமூஹ் (ரலி) ஆகிய இருவரும் உஹதுப் போரில் உயிர் நீத்த தியாகிகளாகும். நீரோடைக்கருகில் இருந்த இவ்விருவரின் கப்ருகளை (அடக்கஸ்தலங்களை) வெள்ளம் அரித்து விட்டது. இருவரின் உடல்களையும் வேறொரு இடத்தில் அடக்கம் செய்வதற்காக கப்ரைத் தோண்டிய போது, சிறிதும்சிதையாமல் உடல்கள் அப்படியே இருந்தன.
இருவரில் ஒருவருக்கு காயம்ஏற்பட்டு அக்காயத்தின் மீது கையை வைத்த நிலையில் அவர் உயிர் நீத்திருந்தார். அவ்வாறே அடக்கமும் செய்யப்பட்டிருந்தார். இப்போது மீண்டும் கப்ரைத் தோண்டிய போது அந்தக் கையை எடுத்துவிட்ட போதும் காயத்தின் மீதே திரும்பவும் அவர் கையை வைத்துக் காண்டார். அடக்கம் செய்யப்பட்டதற்கும், தோண்டி எடுக்கப்பட்டதற்கும் இடையே நாற்பத்துஆறு ஆண்டுகள் கழிந்திருந்தன.
(நூல் : முஅத்தா மாலிக்)
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : என் தந்தையார் அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் ஒரே கப்ரில் மற்றவர்களுடன் நல்லடக்கம் செய்யப்பட்டிருந்தனர். ஆறு மாதங்களுக்குப் பின்னர் என் தந்தையை மட்டும் தனியாக அடக்கம் செய்வதற்காக அவர்கள் அடக்கம் செய்யப்பட்டகப்ரைத் தோண்டி அவரது உடலை எடுத்தேன். அப்போது காதிலும், தாடி முடியிலும் ஏற்பட்டிருந்த சிறு மாற்றத்தை விர வேறு எந்த மாற்றமுமின்றி உடல் உறுப்புகள் அனைத்தும்அப்படியே இருந்தன. அதில் நறுமணம் பூசலாம் என நினைத்தேன். என் நண்பர்கள் தடுத்துவிட்டனர். அதனால் கப்ரை அப்படியே மூடிவிட்டேன்.
(நூல் : புகாரி , பாகம் : 2)
ஹிஜ்ரி நாற்பதாம் ஆண்டு முஆவியா (ரலி) அவர்கள்ஆட்சிக் காலத்தில் உஹது மலையடிவாரத்தில் ஒரு வாய்க்கால் தோண்டும்படி மதீனாவின் கவர்னருக்கு கடிதம் எழுதியிருந்தார்கள். உடனே மதீனா கவர்னர் உஹது மலையடிவாரத்தில் உஹது ஷிஹதாக்களின் எழுபது பேர்களுடைய ஜனாஸாக்கள் அடக்கப்பட்டிருப்பதால், அதைத் தோண்டிவேறு இடத்திற்கு அடக்கம் செய்யப்படுவதற்காக அவரவர் குடும்பத்திற்கு தகவல் அனுப்பினார்.
ஜாபிர் ( ரலி ) அவர்கள்கூறுகிறார்கள்:
மக்கள் அந்த ஜனாஸாக்களைத் தோண்டி எடுத்து தங்களுடைய தோள்களில் சுமந்து செல்லும் காட்சியைக் கண்டேன். அந்தக் காட்சி தூங்கக்கூடியவர்களை தோளில் சுமந்து செல்வதைப் போலிருந்தது. நாற்பது வருடங்களாகியும், அழியாமல், சிதையாமல் புத்தம் புதிய ஜனாஸாக்களாக இருந்தன. நானும் என்தந்தை அப்துல்லாஹ் இப்து அம்ரு (ரலி) அவர்களுடைய ஜனாஸாவையும் தோண்டி எடுத்தேன்.
அதன் பிறகு ஆறு வருடங்கள்கழித்து என் தந்தையின் மண்ணறையில் தண்ணீர் புகுந்ததால், மீண்டும் தோண்டி வேறொரு இடத்தில் அடக்கம் செய்தேன். இவ்வாறு மூன்று தடவை இவர்களின் மண்ணறையைத் தோண்டி அடக்கப்பட்டது. ஹம்ஸா (ரலி) அவர்களின் மண்ணறையைத் தோண்டும்பொழுது மம்மட்டி அவர்களது காலில்பட்டு காலிலிருந்து இரத்தம் பீறிட்டு வந்தது. அதிலிருந்து கஸ்தூரி வாசம் வந்து கொண்டிருந்தது. மதீனாவின் மண் ஒருவகை கெமிக்கல் தன்மை உடையது. உடலை மிகவிரைவில் அழிக்கும் தன்மை கொண்டது. அப்படியிருந்தும் அந்த மண்ணில் அடக்கப்பட்டிருந்த உஹது ஷிஹதாக்களின் உடல்கள் மண்ணறையில் அழியாமல் அப்படியே இருந்த அதிசயம் ஸஹாபாக்கள் உயிருள்ள ஜனாஸாக்கள் என்பதற்கு உறுதியான சான்றாகும்.
(நூல் : இப்னு ஸஃது , பாகம் : 2)
ஹிஜ்ரி ஐம்பத்தி இரண்டில் ரோம் நாட்டில் நடந்த போரில் கலந்து கொண்டு ஷஹீதான பிரபலமான பத்ரு ஸஹாபிகளில் ஒருவரான அபூஅய்யூ பில் அன்சாரி (ரலி) அவர்களின் ரவ்லா ஷரீஃப் துருக்கி தலைநகர் இஸ்தம்பூலில் உள்ளது. அங்கு வாழ்ந்த ரோமர்கள் பஞ்சத்தால் பீடிக்கப்பட்டதால் அபூஅய்யூபில் அன்சாரி (ரலி) அவர்களின் மண்ணறையை சூழ்ந்து கொண்டு மரியாதையுடன் உட்கார்ந்து அவர்களின் கப்ரின் பரக்கத்தினால் மழை வேண்டி பிரார்த்தனை செய்வார்கள். அவர்களின் ரவ்லாவில் போடப்பட்டுள்ள திரையை விலக்கியதும், மழை கொட்டோவெனக்கொட்டும். இந்த அற்புதம் இன்று வரை நடந்து வருகிறது. அந்த பத்ரு ஸஹாபியுடைய மண்ணறையைக் கொண்டு இன்றும் மக்கள் பரக்கத் பெற்று வருவதுடன் அதன் பொருட்டு வஸீலா தேடியும் வருகிறார்கள்.
(நூல்கள் : உஸ்துல் காஃபா , 5:144, இப்னு சஃது பாகம் 3:485)
அஷ்ஷைகு மஹ்மூதுல் குர்திஷ்ஷைஹானி (ரஹ்) அவர்கள் மதீனாவில் வாழ்ந்த மாமேதையாவார். ஒரு நாள்அவர்கள் ஹம்ஸா (ரலி) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்தார்கள். அதுசமயம் அவர்களுக்கு ஸலாம் கூறியபொழுது அவர் காதில் பதில் ஸலாம் வந்ததை செவிமடுத்தார்கள். அவரின் மகனுக்குஹம்ஸா ( ரலி ) அவர்களின் பெயரை வைக்க உத்தரவும் பிறப்பித்தார்கள் . அந்த மகனுக்கு ஆண்குழந்தை பிறந்தது. ஹம்ஸா என அக்குழந்தைக்கு பெயரிட்டார்கள். அதுபோல நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸலாம் சொன்னபோது பதில் வந்ததை தன் காது கொடுத்துக்கேட்டார்கள்.
(நூல் : ஜாமிவுகராமத்துல் அவ்லியா)
அலி (ரலி) அவர்களின் மகனான உமர் இப்னு அலி (ரலி) அவர்களின் பேரர்களில் ஒருவரான ஹிஷாம் இப்னு முஹம்மது (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :
ஒரு சமயம் என்னுடைய தந்தை என்னைப் பிடித்துக் கொண்டு மதீனாவில் உள்ள பத்ரு ஷுஹதாக்களின் கப்ருகளை ஜியாரத் செய்வதற்காக ஜும்ஆ உடைய தினத்தில் சுபுஹ் நேரத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் சென்றார்கள். ஸஹாபாக்களின் கப்ருகளின் அருகில் வந்ததும் சப்தத்தை உயர்த்தி ஸலாம் கூறினார்கள். அப்போது ஷுஹதாக்களின் கப்ரிலிருந்து வ அலைக்கஸ் ஸலாம் யா அப்தல்லாஹ் என பதில் வந்தது. உடனே என்தந்தை என் பக்கம் திரும்பி, நீயா ஸலாமுக்கு பதில் சொன்னாய்? என்று கேட்டார்.
அதற்கு இல்லை என நான் கூறினேன். உடனே என்னை தன்னுடைய வலது பாகத்தில் ஆக்கிக் கொண்டு மறுபடியும் மேல் கூறியது போல் ஸலாம் சொன்னார்கள். அப்போதும் பதில் வந்தது. என் தந்தை ஸலாம் சொல்லும் போதெல்லாம் பத்ரு ஷுஹதாக்களின் மண்ணறையிலிருந்து பதில் வந்து கொண்டே இருந்தது. இவ்வாறு மூன்று தடவை ஸலாம் சொன்னார்கள். அதன் பின் அல்லாஹ்வை புகழ்ந்துவிட்டு நன்றி செய்யும் முகமாக ஸுஜூத் செய்தார்கள்.
(நூல் : பைஹகி 123 : 3)
அல்லாமா இதாஃப் (ரஹ்) அவர்கள் தம் சிறிய தாயாரிடமிருந்து அறிவிக்கிறார் : ஒருமுறை அந்த அம்மையார் உஹத் ஷுஹதாக்களை ஜியாரத் செய்யச் சென்றிருந்த போது தன் கண்ட சம்பவத்தை கூறுகிறார்கள் :
நான் ஷுஹதாக்களுக்கு ஸலாம் கூறினேன். அப்போது அங்கிருந்து பதில் ஸலாம் வந்ததை நான் செவிமடுத்தேன். மேலும் அங்கிருந்து அல்லாஹ்வின் மீது ஆணையாக எங்களில் சிலரை சிலர் தெரிந்து கொள்வது போல் உங்களையும் நாம் தெரிந்து கொண்டோம்! என்ற சப்தம் வந்தது. அதைக் கேட்டதும்என் உடம்பெல்லாம் புல்லரித்துவிட்டது. உடனே என் வாகனத்தைப் பாதுகாத்துக் கொண்டிருந்த என் இரண்டு அடிமைகளிடம் வந்து வாகனத்தை எடுத்துக் கொண்டு பயந்த நிலையில் விரைவாக நான் திரும்பி வந்து விட்டேன் என்று கூறினார்கள்.
(நூல் : பைஹகி : 306, 307:3)
இதாஃப் இப்னு காலித் அவர்கள் கூறுகிறார் :
என் சிறிய தாயார் உஹத் ஷுஹதாக்களின் அடக்கஸ் தலத்திற்குச் சென்று ஜியாரத் செய்யும் பழக்கமுடையவர்களாக இருந்தார்கள். அது பற்றிய தன் அனுபவத்தைக் கூறும்பொழுது, நான் ஹம்ஸா (ரலி) அவர்களின் கப்ருக்கு அருகில் நான் விரும்பிய தொழுகையை தொழுதுமுடித்தேன். அந்தப் பகுதியில் ஆட்கள் நடமாட்டமே இருக்கவில்லை. என்னுடைய அடிமை மட்டுமே என் வாகனத்தைப் பிடித்தவராக நின்று கொண்டிருந்தார். நான் தொழுது முடித்ததும் அஸ்ஸலாமு அலைக்கும்! என்று ஸலாம் கூறினேன். அப்போது பூமிக்கடியிலிருந்து இரவிலிருந்து பகலைத் தெரிவது போன்று என்னைப் படைத்தவனை நான் தெரிவது போல ஸலாமை நான் விளங்கிக் கொள்கிறேன்! என்று கூறிவிட்டு பதில் ஸலாம் வந்ததைக்கேட்டேன். அதைக் கேட்டு என் உடம்பில் இருந்த ரோமங்கள் பயத்தில் எழுந்து நின்றன என்று கூறுகிறார்கள்.
(நூல் : பைஹகி : 307 : 3)
இவ்வாறு இறந்த பின்பும் , நித்திய ஜீவனோடு வாழும் சத்திய பத்ரு ஸஹாபாக்களை மதித்து அவர்களை கண்ணியம் செய்யக்கூடிய நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி வைப்பானாக! மேலும் அவர்களின் பொருட்டால் ஈருலகிலும் வெற்றியை நல்குவானாக!