இப்போது நான் வேண்டா வெறுப்புடன்வசிக்கும் இடம் ஒரு பிரதேசச் சத்திரம், உண்மையில் உலகம் என்பது ஒரு பிரேதக் கொல்லைதான் . அதற்கு அடியில்இருப்பவர்கள் செத்துப் போனவர்கள், அதற்கு மேலே நடமாடுகிறவர்கள் விரைவில் செத்துப் போகக் கூடியவர்கள்.
உன்னை என்னில் ஒரு பகுதி என்று எண்ணியிருந்தேன். என்னிலிருந்து வந்த நீ எனக்கு ஒரு பகுதியாகத்தான் இருக்க வேண்டும்என்று நினைத்தேன். ஆனால் அது வேறு என்று இப்போது தான் எனக்குத் தெரிகிறது. ஏனெனில் நீ ஒரு பகுதியல்ல. நான் வேறு நீ வேறல்ல; நானும் நீயும்ஒரே பொருள் தான்; நான் தான் நீ; நீதான் நான், இதனால் தான்உன் மகிழ்ச்சி என்னை மகிழ வைக்கிறது; உன் வேதனை என்னைக் கதற வைக்கிறது.
தீய எண்ணமும் உலக ஆபாசமும் நிறைந்திருக்கும் உள்ளத்தில் நல்ல அறிவுரைகளுக்கு இடம் கிடையாது. தம்மை முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொள்ளும் அவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? திருக்குர்ஆனையும் அதன் கருத்துகளையும் அவர்கள் சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை. தம் கருத்துக்கும் நலத்துக்கும் சாதகமாகத் திருக்குர்ஆனின் வசனங்களுக்குப் பொருள் கொடுக்கிறார்கள். இருக்கும்கருத்தை இல்லை என்றும் , இல்லாத கருத்தை உண்டு என்றும் விரிவுரை செய்கிறார்கள். எனவே அவர்கள்கருத்து வேற்றுமைகளுக்கு மத்தியில் தெளிவிழந்து தவிக்கிறார்கள்.
எனவே இறையச்சத்துக்கு உன் இதயப் பரப்பில் முழுமையான இடத்தைக் கொடு, அது உன் இதயத்துக்கும் பெருமை கொடுக்கும். இறையச்சம் இல்லாதவர்கள் எந்தத் தீமையையும் துணிந்து செய்வார்கள்.
மனிதனின் முன்னேற்றங்கள் அத்தனைக்கும் நம்பிக்கையே அடிப்படை. மனிதன் செய்யும் அரும் செயல்கள் அத்தனையும் ஆழமான நம்பிக்கையிலிருந்தே உருவாகியிருக்கின்றன. நம்பிக்கை இழந்தவர்கள் உலக வரலாற்றில் என்றைக்கும் முன்னேறியது கிடையாது. வாழ்வில் கண்ணை மூடிக் கொண்டுநடக்கிறவர்கள் இறுதியில் கண்ணீர் விட்டுக் கதற வேண்டி ஏற்படும்.
இறைவழி என்பது புனிதமான ஒன்று. ஏனெனில் அது மனிதனுக்காக இறைவன் வகுத்துக் கொடுத்தது. ஆனால் அந்தவழியில் செல்வதற்கு மனப்பக்குவம் தேவை. ஏனெனில் முதலில் உன் மனதைப் பக்குவப்படுத்து. அப்புறம்கண்ணை மூடிக் கொண்டு அந்த வழியில் இறங்கிவிடு. இறைவழியில்குறுக்கிடும் உணர்வுகளுக்கு அடிமையாகிவிடாதே , முந்திக்கொண்டு அவற்றை நீ அடிமையாக்கிவிடு. இந்த வகையில் நீ யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை.
துன்பம் ஏற்படும்போது புலம்பிஅழுவது இறை பக்தர்களுக்கு அழகல்ல. உன் சிந்தனையை விதண்டாவாதத்திலோவீண் குழப்பத்திலோ செலுத்திவிடாதே. சிந்தனையின் இறுதியில் உனக்கு எந்த உண்மையும் தெரியாமற் போய்விடும். உண்மையைத்தெரிந்து கொள்ளும் எண்ணத்துடன் சிந்தனையில் ஈடுபடு. அதற்கு முன் இறைவனின் உதவியையும் நல்லருளையும் வேண்டிக் கொள். அவனுடைய உதவியின்றி உன்னால் மட்டுமின்றி , வேறு யாராலும்எந்த உண்மையையும் தெரிந்து கொள்ள முடியாது.
நீ சிந்திக்கும் போது ஏற்படும்குழப்பத்தையும் அதிலிருந்து உருவாகும் விபரீதத்தையும் தவிர்த்தருளுமாறு இறைவனிடம் பிரார்த்தனைசெய்து கொள். உன் உள்ளம் தெளிவதற்கு நீ இப்படியெல்லாம் செய்யத்தான் வேண்டும்.
தவிர்க்க முடியாததை மலர்ந்தமுகத்துடன் ஏற்றுக் கொள்வதுதான் அறிவுடைமை. உலகில் மனிதன் தோன்றுவதற்கு இவை மட்டும் காரணங்கள் என்று நான் சொல்லவில்லை. ஏனெனில் இறைவனின் செயல்களுக்கு அப்படி யாராலும் வரம்பு கட்ட முடியாது. நமக்குத்தெரியாத, நம்முடைய சிந்தனைக்குப் புலப்படாத எத்தனையோ மர்மங்கள் அவனுடைய தீர்மானத்தில் இருக்கக்கூடும்.
எனவே உலகில் நடக்கும் செயல்கள் அத்தனைக்கும், உருவாகும்சூழல்கள் அத்தனைக்கும் காரணம் கண்டுபிடிக்கமுயற்சி செய்யாதே. ஏனெனில், இந்த வழியில் உன்னால் நிச்சயமாக முழு வெற்றி அடைய முடியாது. உன் திறமையைப் பற்றி நீ முதலில்நன்கு தெரிந்து வைத்துக் கொள். உன் திறமையை உயர்த்தி மதித்துவிடாதே. உன் திறமைபலவீனமானது. எனக்கு நன்றாகத் தெரியும். உன் சிந்தனை அப்படியொன்றும் பேராற்றல் பொருந்திய கருவியல்ல. உன்னால் இதை மறுக்க முடியாது. உன் சிந்தனை இன்னும் அவ்வளவு தூரத்துக்கு முன்னேறிவிடவில்லை. இறைவனின்உதவி உனக்கு எப்போதும் தேவைப்படும் ; உன்னால் அதைப் புறக்கணிக்க முடியாது.
உன் உள்ளம் நடுநிலையில் நின்றுஇயங்க வேண்டும். அது ஒரு நிறுவையைப் போலிருக்கட்டும். நல்லதையும் கெட்டதையும் அதில் வைத்து நிறுத்துப் பார். அடிமனத்தில் நெளியும் எண்ணங்கள், வெளி மனத்தில் தோன்றும் எண்ணங்கள், வெளிவரும் செயல்கள் இப்படி அனைத்தையும் அள்ளிப்போட்டு நிறுத்துப்பார். இந்த வேலை சிறிது சிரமமாக இருக்கலாம். ஆனால் இதிலிருந்து உனக்குக் கிடைக்கும் அறிவு உயர்ந்ததாக இருக்கும்.
உனக்கென்று எதை நீ விரும்புகின்றாயோஅதையே மற்றவர்களுக்கென்றும் விரும்பு. நீ அடைய விரும்பாத எதையும் மற்றவர்களின் தலையில் வைத்துக் காட்டாதே . யாரையும்அநீதிக்கு உட்படுத்தாதே. ஏனெனில் உன்னை யாரும் அநீதிக்குட் படுத்துவதை நீவிரும்பவில்லை. நீ அனுபவிக்கவிரும்பாத எந்தச் சூழலையும் மற்றவர்களுக்கு ஏற்படுத்தாதே.
மற்றவர்கள் உனக்கு நல்லதுசெய்ய வேண்டுமென்று நீ விரும்புகிறாயா ? அப்படியானால் முதலில் அவர்களுக்கு நல்லதுசெய். தாம் பெற்றதை அவர்கள் உனக்குத் திருப்பித் தருவார்கள். உன்னைச் சுற்றியிருப்பவர்கள்உன்னிடம் பண்போடு நடக்க வேண்டும் என்று நீ விரும்பினால், முதலில் அவர்களிடம் நீ அப்படி நடந்து காட்டு; உன்னிடமிருந்து அவர்கள் பாடம் படிக்கட்டும். நீ நடந்து செல்லும் வழியை அவர்களும் பின்பற்றட்டட்டும்.
குறைவாகப் பேசு; தெரிந்ததைப்பற்றி பேசு; சரிவரத் தெரிந்து கொள்ளாமல் எதைப் பற்றியும் ஒரு வார்த்தை பேசாதே. அது உன் அறியாமைக்கு விளக்கம் கொடுத்து விடக் கூடும். தேவையையொட்டிப்பேசு. தேவையில்லாமல் எதைப் பற்றியும் பேசாதே. அது உன்னுடைய பலவீனத்தை வெளியில் கொண்டு வந்துவிடக் கூடும்.
உன் அன்பு மனைவியின் மனத்தில்ஆழமாகப் பதிந்திருக்கட்டும். உன் மீது அன்பு செலுத்தாதவர்களுக்கு நீ அன்பு காட்டுவது கடமையல்ல. உன்னை வெறுத்து விட்டவர்கள் யாரேனும் இருக்கிறார்களா? அப்படியானால் அவர்களிடம் நீ எந்த விதமான உதவியையும் எதிர்பார்க்காதே . உன்னுடையநட்பை நண்பர்களின் உள்ளத்தில் ஆழமாகப் பதித்து வை . உன்னுடைய நட்பை அவர்கள் உதறித்தள்ள முடியாத அளவுக்குப் பண்புடன் பழகு.
உன்னுடைய அன்பு உயர்ந்தால் நிச்சயம் உன்னுடைய நட்பு வளரும் . பண்புடைய நண்பனை யாரும் இழக்க விரும்புவதில்லை. என்ன இருந்தாலும் நண்பர்களுக்குரியசிறப்பு மறுக்க முடியாதுதான். அவர்கள் செல்வத்துக்கு நிகரானவர்கள். இன்னும்சொல்லப் போனால் செல்வத்தை விட உயர்ந்தவர்கள். பணமில்லாதவனை ஏழை என்றால் நண்பர்கள் இல்லாதவனைப் பரிதாபத்துக்குரிய ஏழை என்று குறிப்பிடலாம்.