Islamand the West
இஸ்லாமும் மேற்கு நாடுகளும்
உலகப்புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கல்வி மையத்தின் தொடக்கவிழாவின் போது (27.10.1993)
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் ஆற்றிய சொற்பொழிவு !
தமிழில் : கவிஞர் ஏம்பல் தஜம்மல் முஹம்மது .
சீமான்களே ! சீமாட்டிகளே !
இந்தச்சொற்பொழிவுக்கான பொருளைப் பற்றி நான் சிந்திக்கும்போது , ஒவ்வொரு தலையிலும் சிறிதேனும் அறிவு இருக்கவேசெய்கிறது என்ற அரபுப் பழமொழியில் இருந்து ஆறுதல் தேடிக் கொள்ளலாம் என்று எனக்கு எடுத்துக்கூறப்பட்டது . சிறந்தவர்களும் சிந்தனையாளர்களும் பெரும்கல்வியாளர்களும் மனித அறிவை வளர்ப்பதற்காகப் பேசிச் சென்ற இந்த மேடையில் பேசுவதற்குஎனக்குத் தகுதி இல்லை . உங்களுடைய புகழ்பெற்ற இந்தப்பல்கலைக்கழகத்தில் பயின்ற ஒரு மாணவனாக இருந்திருப்பேன் என்றால் இந்தப் பணிக்கு நான்ஓரளவு தகுதி உடையவனாக இருப்பேன் .
நீங்கள்அறபு மொழிக்கான ஒரு பேராசிரியர் பதவியை ஏற்படுத்துவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னரேபதினேழாம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அறபு மொழிக்கானஒரு பேராசிரியர் பதவி ஏற்படுத்தப்பட்டது என்பதை உங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள்என்று நம்புகிறேன் . உங்களில் பலரைப் போன்று நான் இஸ்லாம் பற்றி நன்கு அறிந்தவன் அல்லன் . ஆனால் என்பேச்சின் மூலம் நான் புலப்படுத்த விரும்பும் சில காரணங்களுக்காக கல்வி மையத்துக்குநான் புரவலராக மகிழ்ச்சியுடன் இருந்து வருகிறேன் .
பிரிட்டிஷ்மக்களுக்கு இஸ்லாமிய உலகைப் பற்றிய புரிந்துணரும் திறனை முன்னேற்றி , மேம்படுத்தக்கூடிய பணிகளில் முக்கியமான , மகிழ்ச்சியளிக்கின்ற ஒரு கருவியாகத் திகழும்வல்லமை வாய்ந்த நிறுவனமாக விளங்கும் கீழ்நாட்டு மையம் , மத்தியக் கிழக்கு மையம் ஆகியவற்றைப் போன்றுஇந்த மையமும் தனக்குரிய இடத்தைப் பெற்று நீங்கள் பெருமிதம் கொள்ளும் வகையில் திகழும்என்று நான் நம்புகிறேன் .
பெருமளவுக்கு மனத் தயக்கத்துடன் ஒரு சிக்கலான , விவாதத்திற்குரிய துறைபற்றி இவ்வழகிய ரென் கட்டிடத்திற்கு வருகை தந்து நான் ஏன் உங்களிடம் பேசத் துணிய வேண்டும்என்று நீங்கள் எண்ணலாம் . என்னுடைய தலைப்பு இஸ்லாமும்மேற்கு நாடுகளும் . இந்தத் தலைப்பை நான் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன ?
நண்பர்களே !
இன்று இஸ்லாமியஉலகத்திற்கும் மேற்கு உலகத்திற்கும் இடையே நல்லுறவு அமைய வேண்டியது என்பது முன் எப்போதும்இல்லாத அளவுக்கு முக்கியமான தேவையாக உள்ளது என்று நான் முற்றிலுமாக நம்புவதுதான் . ஏனெனில் இதுவரை இருந்திராத அளவுக்கு இஸ்லாமியஉலகைப் பற்றி மேற்கு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அபாயகரமாக , தவறுதலாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள் .
ஆனால் ஒருவருக்கொருவர்சார்ந்து வாழ வேண்டிய உலகில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இஸ்லாமிய உலகமும் மேலைஉலகமும் இணைந்து வாழ வேண்டிய , செயல்பட வேண்டிய தேவைஇருக்கிறது . இது குறித்துப்பேசுவது மிகவும் கடினமாகும் . ஒரு கடினமான புதிய பாதையில்செல்கின்ற திறமை இல்லாத பயணி பல இடர்பாடுகளைச் சந்தித்துதான் ஆக வேண்டும் . நான் கூறுவனவற்றுள் சிலவற்றை மக்கள் பெரும்பாலும்மறுக்கலாம் , விமர்சிக்கலாம் , தவறுதலாகவும் புரிந்து கொள்ளலாம் . ஒருவேளை அவ்வாறே சொல்லப்படுகிறது - செய்யப்படுகிறது என்றால் , எது உதட்டில் இருந்து வருகிறதோ அது செவிகளைத்தான்சென்றடையும் ; எது இதயத்தில் இருந்து வருகிறதோ அது இதயங்களையேசென்றடையும் என்னும் இன்னோர் அறபுப் பழமொழியை நினைவு கூர்தல் நலமாகும் .
இன்று மக்களிடையேதொழில்நுட்ப முன்னேற்றங்கள் , இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உள்ள செய்தித் தொடர்பு , பேக்குவரத்து வசதி , இனங்களிடையே ஏற்படும் கலப்பு , உலகின் ( படைப்பிலுள்ள ) இரகசியங்களைத் தொடர்ந்து அறிவதன் மூலம்அவற்றின் எண்ணிக்கைகளைக் குறைத்தல் - அல்லதுஅவ்வாறு நாம் நம்புதல் - முதலியவற்றில் எல்லாம்நாம் முன்னேற்றங்களைக் காண்கிறோம் . ஆனால் வருந்தத்தக்கதோர்அவல நிலையைப் பாருங்கள் ! இஸ்லாத்துக்கும் மேற்கு நாடுகளுக்கும்இடையில் சரியான உறவுகள் இல்லை . சொல்லப் போனால் இடைவெளிமிகுந்து கொண்டே வருகிறது . மேலை நாடுகளைப் பொறுத்தவரைஇதற்கு அறியாமை ஒரு காரணமாக இருக்க முடியாது .
உலகெங்கும்நூறு கோடி முஸ்லிம்கள் உள்ளனர் . அவர்களில் பல மில்லியன்முஸ்லிம் மக்கள் காமன்வெல்த் நாடுகளில் வாழ்கின்றனர் . பத்து லட்சம் முஸ்லிம்கள் பிரிட்டனிலும்வாழ்கிறார்கள் . நம் நாட்டிலுள்ள இஸ்லாமியச் சமுதாயம் கடந்தபல்லாண்டுகளாக வளர்ந்து வருகிறது ; செழுமையாகத் திகழ்கிறது . பிரிட்டனில் ஐந்நூறு பள்ளிவாசல்கள் உள்ளன .
இஸ்லாமியக்கலாச்சாரத்தின் மீதுள்ள ஈடுபாடு பிரிட்டிஷ் மக்களிடையே பெருகி வருகிறது .1976- ஆம் ஆண்டில் நம்முடைய மேன்மை தங்கிய அரசியார்தெடங்கி வைத்த அரிய நிகழ்ச்சியான இஸ்லாமிய விழாவினை உங்களில் பலர் நினைத்துப் பார்ப்பீர்கள் ; உங்களில் சிலர் அதில் பங்கேற்றும் இருப்பீர்கள்என்று நினைக்கிறேன் .
இஸ்லாம்நம்மைச் சுற்றிச் சூழ்ந்துள்ளது . எனினும் அவநம்பிக்கை , ஏன் அச்சம் கூடத் தொடர்ந்து இருக்கத்தான்செய்கிறது . பனிப்போர் முடிந்துவிட்ட இந்தத் தொண்ணூறுகளில்இந்த நூற்றாண்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு உலக சமாதானத்துக்கான வாய்ப்புகள் இருக்கவேண்டும் . மையக் கிழக்கு நாடுகளில் சில வாரங்களாகக்குறிப்பிடத்தக்கவையாயும் ஊக்கமூட்டுபவையாயும் நடந்து வரும் நிகழ்ச்சிகள் நமக்கு நம்பிக்கையூட்டுவனவாகஅமைந்துள்ளன . பல்லாண்டுகளாக உலகைப் பிரித்து வந்த வன்முறைக்கும்வன்மதத்துக்கும் காரணமான பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி அமைவதுபோலத் தோன்றுகிறது . ஆனாலும் அபாயம் இன்னும் அகன்று மறையவில்லை . இஸ்லாமிய உலகில் தெற்கு ஈராக்கில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான சதுப்பு நில அரபு மக்களின் வாழ்க்கை முறை திட்டமிட்டு அழிக்கப்படுகிறது . அங்கு நடக்கின்ற , எடுத்துச் சொல்ல முடியாத கொடுமைகளைப் பற்றிஎண்ணும் தோறும் என் உள்ளம் குமுறுகிறது . அந்தக் குமுறலை எடுத்துக் கூறும் ஒரு வாய்ப்பைத் தேடிக் கொண்டு இருந்தேன் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன் .
உலக சமுதாயத்திடம் , சதுப்பு நிலங்களை வேளாண்மைக்கு உரியதாகமாற்றும் வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறோம் என்று சொல்லப்படுகிறது . நாம் செயல்படுவதற்கு முன்னால் இது போலஎவ்வளவு இழிவான பொய்களைக் கேட்கப் போகிறோமோ ! இந்தக் கடைசி நேரத்தில் கூட ஒரு முழுமையான அழிவைத் தடுப்பதற்கான அவகாசம் இருக்கவேசெய்கிறது . இஸ்லாமும் மேற்கு நாடுகளும் பொதுவான மனிதநேயஅடிப்படையில் ஒன்றிணைந்து செயல்பட இதை ஒரு குறைந்தபட்சக் காரணமாகக் கொள்ளலாம் என்றுகேட்டுக் கொள்கிறேன் . இந்தக் குறிப்பிட்ட எடுத்துக்காட்டைஅனைவரும் அறியுமாறு நான் எடுத்துக் கூறக் காரணம் என்னவென்றால் இந்தப் பிரச்சினை எளிதில்தீரக் கூடியது என்பதால் தான் .
வேறு சிலஇடங்களில் இருக்கும் வன்முறையும் வன்மமும் எளிதில் சமாளிக்கக் கூடியவை அல்ல . யூகோஸ்லேவியா , சோமாலியா , அங்கோலா , சூடான் , இதுகாறும் சோவியத் குடியரசில் இருந்த பலநாடுகள் ஆகியவற்றிளெல்லாம் காணப்படும் அவலநிலை , மிகவும் ஆழமாகப் புதைந்து கிடக்கும் காரணங்களைக்கொண்டவை . யூகோஸ்லேவியாவில் போஸ்டினிய முஸ்லிம்கள்அடைந்த அளப்பரிய துயரங்கள் , கூடவே ஏனைய இன மக்களும்அந்தப் போரில் எய்திய இன்னல்கள் ஆகியவற்றால் இஸ்லாமிய உலகமும் மேற்கு உலகமும் ஒருவர்மீது ஒருவர் விடாமல் வைத்திருக்கின்ற பல அம்சங்களும் தப்பெண்ணங்களும் அப்படியே இருக்கும்படிச்செய்கின்றன .
அதிகாரத்தைத்தவறாகப் பயன்படுத்துவதில் இருந்தும் கருத்து வேறுபாடுகளில் இருந்தும்தான் மோதல்கள்வருகின்றன . வெறிபிடித்த தலைவர்களின் தீவினைக்கு அஞ்சாதசெயல்பாடுகள் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல இவற்றை அதிகப்படுத்துகின்றன . மேலும் மக்களுடைய புரிந்து கெள்ளும் திறனின்மை , தவறாகப் புரிந்து கொள்வதில் இருந்து வெளிப்படும்கட்டுங்கடங்கா மனஎழுச்சி ஆகியன அவநம்பிக்கையும் அச்சத்தையும் ஏற்படுத்தும் அவலமாய்எழுகின்றன . நண்பர்களே ! நாம் பிரிவினையும் அபாயமும் நிறைந்த ஒருகாலச் சூழலுக்குள் சிக்கிக் கொள்ளக் கூடாது . ஏனென்றால் வெறுத்து ஒதுங்கும் உலகில் அரசுகளும் மக்களும் , சமயங்களும் சமுதாயங்களும் இணைந்து வாழஇயலாது .
இஸ்லாம்மார்க்கத்திற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலே தப்பெண்ணம் இருப்பது பல வழிகளிலும்இயல்புக்கு முரணானதாக - விநோதமாக இருக்கிறது . ஏனென்றால்நம்மை இணைக்கும் சக்திகள் நம்மைப் பிரிக்கும் சக்திகளை விட மிக்க வல்லமை வாய்ந்தவை
(தொடரும் )