உமர் ( ரலி ) புராணம்
ஆசிரியர்
ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா அல்ஹாஷிமிய் நாயகம் அவர்கள்
அகழ்யுத்தம்
( கலிவிருத்தம் )
தீயகன் யூதனைத் தீர்த்திடுவேனென
நாயகி ஸபிய்யாநடந்து தடிகொடு
சீயமாய்ச்சென்னியிற் றாக்கிக் கொன்றனர்
மாயமாய்நடந்தவன் மாய்ந்தன னாமே .
கொண்டுகூட்டு :
தீ அகன் யூதனைத் தீர்த்திடுவேன் என நாயகி ஸபிய்யா தடிகொ ( ண் ) டு நடந்து சென்று சீயமாய் யூதனின் சென்னியிற் றாக்கிக்கொன்றனர் . மாயமாய் நடந்தவன் மாய்ந்தனன் ஆமே .
பொருள் :
கொடிய தீ போன்ற அகத்தை யுடைய யூதனைக் கொன்று முடித்து விடுவேன்எனக் கூறி ஸபிய்யா நாயகி தடியினைக் கையிற் கொண்டு நடந்து சென்று சிங்கம் போன்று அந்தயூதனின் தலையில் தாக்கிக் கொன்றனர் . மாய எண்ணங்களோடு நடந்துவந்தவன் மாய்ந்து போயினன் .
குறிப்பு :
அகன் : உள்ளத்தையுடையவன் . தீர்த்தல் : முடித்துவிடல் . கொடு : கொண்டு சீயம் : சிங்கம் சென்னி : தலை .