உமர் ( ரலி ) புராணம்
ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா
அல்ஹாஷிமிய் நாயகம் அவர்கள்
முதலாவது உதய காண்டம்
கொண்டுகூட்டு :
எல்லா பொருட்கும் இறையோன் நீயே. வல்லவன் நீயே. மன( ம் ) நிறை( ந்தவன் ) நீயே. இல் அவன் என்று இ ( ல் ) லா உள்ளவன் நீயே. நல்லவன் நீயே. நாம் உ ( ன் ) னைப் போற்றுதும்.
பொருள் :
எல்லாப் பொருள்களுக்கும் இறையவன் நீயே. வல்லவன் நீயே. மனத்துள் நிறைந்துள்ளவன் நீயே. இல்லாதவன் என்று இல்லாது உள்ளவனாய் உள்ளவன் நீயே . ( நல்லவனாய் நின்று நன்மை பயப்பவனும் நீயே ) நல்லவனும் நீயே. நாம் உன்னைப் போற்றுகின்றோம். இல்லையென் போர் அதையே உள்ளது எனின் அதுவே கடவுளாகும் . இல்லாதது எங்கே எனத் தேடிப் பார்த்தால் அஃது அங்கேயே இருக்கும். எனுங்
கருத்துடைத்து .
குறிப்பு :
போற்றுதும் : தவ்வொடு இறப்பும் எதிர்வும் ” து - தும் (- நன்னூல் : பா என்றதனால், வந்து என்பது வந்தேன் என ஒருமை இறப்பும், வந்தும் என்பது வந்தோம் எனப்பன்மை இறப்பும், வருது என்பது வருவேன் என ஒருமை எதிர்வும் வருதும் என்பது வருவோம் எனப் பன்மை எதிர்வுமாய்அவை வருமென்க.
இறையோன் + நீயே , வல்லவன் + நீயே , உள்ளவன் + நீயே , நல்லவன் + நீயே . ன் + ந : ன வெனப் புணர்ந்தவை.
கால்வல் : நெடுந்தேர் : கால்வ னெடுந்தேர் ( திருக்குறள் )