கர்பலாவுக்குப்பின் ...
அன்னை ஜைனப் ( ரலி ) அவர்களின் அரிமாவீரம்
இப்னு ஸியாதின் சபையில் ஹள்ரத் ஜைனப் ( ரலி ) அவர்கள்.
நபித்துவக் குடும்பப் பெண்களும் குழந்தைகளும் இப்னுஸியாதின் முன்னிலையில் வந்த போது பாத்திமா நாயகியாரின் அன்பு மகளார் ஹள்ரத் ஜைனப்அம்மையார் மிகவும் கந்தலான ஆடைகள் அணிந்திருந்தார்கள். அவர்களை இனங்கண்டு கொள்ள முடியவில்லை. அடிமைப் பெண்கள் அந்த அம்மையாரை தங்களுக்குமத்தியில் உட்கார வைத்துக் கொண்டார்கள். இப்னுஸியாத் அந்த அம்மையாரைச் சுட்டிக் காட்டி இந்தப் பெண் யார் ? என்று கேட்டான் . அம்மையார் ஏதும் பதிலளிக்கவில்லை. இதே கேள்வியை மூன்று முறை கேட்டான். பதில் வரவில்லை இறுதியில் ஒரு பணிப்பெண் இவர் ஜைனப்பின்த் பாத்திமா என்றான்.
இப்னுஸியாத் ஏளனச் சிரிப்பு சிரித்து விட்டு , இறைவனுக்கே எல்லாப் புகழும்! அவன் உங்களை அவமானப்படுத்தி அழித்தொழித்தான். உங்கள் பெயர் நாமத்தின் மீது கரை படியச்செய்தான் என்று எக்காளமிட்டான். உடனே ஜைனப் அம்மையாரவர்கள் அல்லாஹு தஆலாவிற்கே ஆயிரமாயிரம் புகழ்! அவன் எங்களுக்கு முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வாயிலாகக் கண்ணியமளித்தான்; எங்களைப் பரிசுத்தப்படுத்தினான். நீர் கூறுவது முற்றிலும் தவறு. துன்மார்க்கர்களே இழிவடைவர் ; பாவிகளின் பெயர் நாமத்திலேயே கரைபடியும் என்று கர்ஜனை புரிந்தார்கள் .
இறைவன் உமது குடும்பத்தாருடன் எப்படி நடந்து கெண்டான் என்பது உமக்குத் தெரியாதா ? என இப்னு ஸியாத் கேட்டான்.
இறைவன் அவர்கள் விதியில் கொல்லப்பட்டு இறப்பர் என எழுதியிருந்தான். அதனால் அவர்கள் கொலைக்களம் வந்தார்கள். அதிசீக்கிரத்தில் அவன் உம்மையும் அவர்களையும் ஓர் இடத்தில் ஒன்று சேர்க்கப் போகிறான். அப்போது நீங்கள் பரஸ்பரம் உரையாடிக் கொள்வீர்கள் என்று ஹள்ரத்ஜைனப் ( ரலி ) சுடச்சுடப் பதிலளித்தார்கள் .
துடுக்கான இந்த வார்த்தைகளைக் கேட்ட இப்னு ஸியாதின் கண்கள் சிவந்தன . அவன் கோபமடைவதைக் கண்ட அம்ருப்னு ஹரீத், இறைவன் அமீருக்குப் பொறுமையைக் கொடுப்பானாக! இவர் ஒரு பெண்; பெண்களின் பேச்சை பொருட்படுத்தலாகாது என்று கூறினார் . பிறகு சற்று நேரம் பொறுத்து இப்னுஸியாத், இறைவன் உமது அக்கிரமக்காரரான தலை வரிலிருந்தும் நபித்துவக் குடும்ப குழப்பக்காரர்களிலிருந்தும் எனது கண்களைக் குளிரச் செய்திருக்கிறான் என்று கூறினான் .
இந்த வார்த்தைகளைக் கேட்ட ஹள்ரத் ஜைனப் ( ரலி ) அவர்களால் சகித்திருக்க முடியவில்லை . வாய்விட்டு அழுதார்கள் . நீ எனது தலைவரைக் கொன்றாய் ; எனது குடும்பத்தை அழித்தாய் ; எனது கிளைகளைத் துண்டித்தாய் ; எனது வேரைப் பிடுங்கி எறிந்தாய் ; இந்தக் கொடும் செயல்களால் உனது கண்கள்குளிருகிறதென்றால் நன்றாகக் குளிரட்டும் ! என்றார் .
இப்னுஸியாத்புன் முறுவல் செய்தவனாக , இதுவல்லவோ வீரம் ! உனது தந்தையும் வீரர் ; தீரர் என்றான் .
பெண்ணுக்கும் வீரத்திற்கும் என்ன சம்பந்தம் ? என்னைச் சூழ்ந்திருக்கிற துன்பம் வீரத்தைப் பற்றி மறக்கச் செய்துவிட்டது . நான் எதனைக் கூறுகிறேனோ அது என்னுடைய உள்ளத்தில்பற்றி எரிகிற நெருப்பாகும் என அம்மையார் பதிலளித்தார்கள் .
ஹள்ரத் ஜைனபின் அஞ்சாமை
ஹள்ரத் பாத்திமா பின்த் அலீ கூறுகிறார்கள் : நாங்கள் யஜீதின் முன்னிலையில் உட்கார வைக்கப்பட்ட போது எங்களைக்கண்டு யஜீது சஞ்சலமடைந்தான் . எங்களுக்கு எல்லா வித உபசரணைகளும் செய்வதற்கு ஏற்பாடு செய்தான் . இதற்கு மத்தியில் செந்நிறத் தோற்ற முடையஷாம் தேசவாசி ஒருவர் எழுந்து என்னைச் சுட்டிக் காட்டி , அமீருல் முஃமினீன் ! இந்தப் பெண்ணை எனக்கு அன்பளியுங்கள் என்றான் . நான் அப்போது இளம்வயதுச் சிறுமியாகவும் , அழகு செளந்தர்யமுள்ளவளாகவும் இருந்தேன் . எனக்கோஒரே பயம் ; பீதியால் நடுங்கலானேன் ; எனது சகோதரி ஜைனபின் மேலாடையைப் பிடித்துக்கொண்டேன் . அவர் என்னைவிட மூத்தவர் ; நல்ல புத்திக் கூர்மையுடையவர் . அவர் அவனை நோக்கி , நீ அற்பன் ; இதற்கு உனக்கோ யஸீதுக்கோ எந்தவித அதிகாரமும் கிடையாது ! என்றார் .
துணிச்சலான இந்தப் பேச்சைக் கேட்டு யஸீது சினங் கொண்டவனாய் நீ பொய் புகலுகிறாய் ; அல்லாஹ்வின் மீது ஆணை ! எனக்கு இந்த உரிமை இருக்கிறது . நான் விரும்பினால் இப்போதே இதனைச் செய்ய என்னால் முடியும் என்றான் .
முடியாது ; இது ஒருபோதும் சாத்தியமில்லை ; இறைவன் இந்த அதிகாரத்தை உனக்குக் கொடுக்கவில்லை . ஆனால் நீ எங்கள் மார்க்கத்தை கை விட்டு விட்டு வேறு மதத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் அது வேறு விஷயம் என ஜைனப் அம்மையார் சுடச்சிடப் பதிலளித்தார்கள்.
யஸீதுகோபத்தால் கொதித்தெழுந்தான். சன்மார்க்கத்திலிருந்து உனது தந்தையும் , உனது சகோதரரும் தான் வெளியேறியவர்கள் என்றான். அல்லாஹ்வின் மார்க்கத்திலிருந்து எனது தந்தையின் மார்க்கத்திலிருந்து, எனது சகோதரியின் மார்க்கத்திலிருந்து , எனது பாட்டனாரின் மார்க்கத்திலிருந்து தான் நீயும் உனது தந்தையும் நேர்வழி பெற்றீர்கள் என்றார் ஜைனப் அம்மையார். “ அல்லாஹ்வின் விரோதியே , நீ சொல்லுவது பொய் ” என்று யஸீது கூக்குரலிட்டான்.
இல்லை ; நீ அக்கிரமமாக ஆட்சிக்கு வந்திருக்கிறாய் ; எவ்வித நியாமுமின்றி ஏசிப் பேசுகிறாய் ; உனது பலங்கொண்டு மக்களை அடக்கி ஆளுகிறாய் என்று ஜைனப் அம்மையார் இடித்துரைத்தார்கள் .
இந்தத்தீரமிக்க உரையாடலைக் கேட்டு யஸீது வெட்கித் தலை குனிந்தான். அடுத்து அவன் ஏதும் பேசவில்லை. மீண்டும் அந்த ஷாம்தேசவாசி எழுந்து முன்போலவே கூறினான் . யஸீது கடுங்கோபமுற்றவனாக , அட அற்பனே , விலகி நில் ; இறைவன் உனக்கு சாவின் காணிக்கையைக் கொடுப்பானாக ! என்று கடிந்துரைத்தான்.
அஹ்லுல் பைத்களின் தயாளம்
யஸீது , அஹ்லுல் பைத்களை தமக்கு நம்பகமான ஒரு ராணுவவீரரின் பாதுகாப்பில் வழியனுப்பி வைத்தான் . அந்த வீரர் வழிநெடுகிலும் துன்பத்திற்குள்ளான அந்த தூயவர்களுடன்மிகவும் பாசமுடன் நடந்து கொண்டார் . எல்லை வந்தடைந்ததும் , ஹள்ரத் ஜைனப் அம்மையாரும் , ஹள்ரத் பாத்திமா அம்மையாரும் தனது கை வளையல்கள் , காதணிகள் ஆகியவற்றைக் கழற்றிக் கெடுத்து , அந்த வீரருக்கு அவர் புரிந்த உபகாரத்திற்குப்பரிசளிக்கும்படி கூறி அனுப்பினார்கள் . ஆனால் அந்த வீரர் ஆபரணங்களைத் திருப்பிக் கொடுத்து நான் உலக ஆசையை மனதில் வைத்து உங்களுக்கு உதவவில்லை ; ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நினைவை மனதிற்கொண்டேபணி செய்தேன் என்றார் .
மதீனாவின் கூக்குரல்
அஹ்லுல் பைத்கள் மதீனாவுக்கு வந்தடைவதற்கு வெகு நாட்களுக்கு முன்பே இந்த சோகச் செய்தி எட்டியிருந்தது . ஹாஷிம் குலத்துப் பெண்கள் அலறிப் புடைத்தவர்களாக வீடுகளிலிருந்து வெளியேறி வந்தார்கள் . ஹள்ரத் உகைல் இப்னு அபீதாலியின் புதல்வி முன்னணியில் வந்தார் . அவருடைய திருவாயிலிருந்து சில அறபுக் கவிதைகள்வெளிப்பட்டன .
திருநபியவர்கள்உங்களிடம் நீங்கள் கடைசி உம்மத்தினர்களாயிற்றே , எனது மக்கள் , எனது குடும்பத்தாரிடம் நீங்கள் எப்படி நடந்து கொண்டீர்கள் என்று கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் ? அவர்களில் சிலர் கைதிகளாகவும் சிலர் இரத்தத்தில் தோய்ந்துமல்லவோ இருக்கின்றனர் .