திருமறையில் எறும்பு
ஒரு நாள் ஹள்ரத் சுலைமான் ( அலை ) அவர்கள் தங்கள் படையுடன் சென்று கொண்டிருந்த பொழுது ஓர் எறும்புக்கூட்டத்திற்கருகில் வந்தார். உயிரினங்களின் மீது இருந்த அன்பின் காரணத்தினால், மிகச்சிறிய உயிரினமாக எறும்புகள் இருந்தாலும் அவற்றைப் பரிவுடன் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த பொழுது எறும்புகளுக்கிடையே நடந்த சைகை மொழி உரையாடலைக்கூர்ந்து கவனித்தார்கள். அவ்வெறும்புகளுக்கிடையே நடந்த தகவல் பரிமாற்றத்தைக் கீழ்க்காணும் இறைவசனம் எடுத்தியம்புகிறது.
இறுதியாக எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்தபொழுது ஓர் எறும்பு ( மற்ற எறும்புகளைநோக்கி ) எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள். சுலைமானும் அவருடைய சேனைகளும் அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு ( அவ்வாறு செய்யுங்கள் ) என்று கூறிற்று . ( அந் நம்ல் - 27:18)
அப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகைகொண்டு சிரித்தார். இன்னும் என் இறைவா ! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக நான் நன்றிசெலுத்தவும், நீ பொருந்திக்கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும் , எனக்கு அருள்செய்வாயாக! இன்னும் உன் கிருபையைக் கொண்டு என்னை, உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக ! என்று பிரார்த்தித்தார் .( அந் நம்ல் - 27:19)
மேலே சொல்லப்பட்ட இறைவசனங்களில் எறும்புகளுக்கிடையே நடந்த தகவல் பரிமாற்றமும் அதனை சுலைமான் நபி(அலை) புரிந்து கொண்டதும் எவ்வாறு சாத்தியமாகும் எனச் சிலர் நினைக்கலாம்.(அஸ்தஹ்பிருல்லாஹ்).இது இறை வசனம் என்பதால் இந்தக் கேள்விக்கே இடமில்லை. இருப்பினும் எறும்புகள் தங்களுக்கிடையில் பரிமாறிக் கொள்ளும் பல வகையான மொழிகளை அறிவியல் துணை கொண்டு ஆராய்ந்தறிந்தால் இது சாத்தியமேஎன்னும் முடிவுக்கு வர முடியும் . இவற்றை விரிவாக ஆராய்வோம் .
ஒவ்வோர் எறும்புக் கூட்டத்திற்கும் ஒரு வட்டார மொழி உண்டு. அம்மொழி அக்கூட்டத்திலுள்ள அனைத்து எறும்புகளாலும் அறியப்படும். அம்மொழி நம்மைப் போல வாயால் பேசப்படுவதல்ல. அவற்றின் மொழி 1) கற்பித்தல் கற்றல் முறை 2) தொடுதல் 3) சைகை செய்தல் 4) வேதிப் பொருளைவெளிப்படுத்துதல் 5) மின்காந்த அலைகளைப் பரப்புதல் போன்ற முறைகளாகும் . இவை ஒவ்வோர் எறும்பினத்திற்கும் வேறுபடும் .
மனித இனம் அல்லாத ஒரு விலங்கினச்சமுதாயத்தில் ஆசிரியர் - மாணவர்கள் உறவு ; அதாவது கற்பித்தல் மற்றும் கற்றல் முறையில் கருத்துப் பரிமாற்றம் இருக்குமானால் அது எறும்புச் சமுதாயத்தில் மட்டுமே உண்டு என்று அறிவியல் ஆய்வினால் சமீபத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது . கற்பித்தல் - கற்றல் முறையில் எறும்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாகச் சென்று உணவு இருக்கும் இடத்தை அடைகின்றன. இதனைப் பிரிஸ்டால்பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் நடத்திய ஆய்வின் மூலம் அறிகிறோம் . அவர்கள் ஒரு குறிப்பிட்ட இன எறும்பில் இவ்வாய் வினை மேற்கொண்டனர்.
எறும்பின் சமூக அமைப்பில் உணவின் இருப்பிடத்தை அறிந்த ஓர் எறும்பு ஓர் ஆசிரியரைப் போல செயல்படுகிறது. அது உணவின் இருப்பிடத்தை அறியாத மற்ற எறும்புகளை வழி நடத்திச் செல்கிறது. பின் தொடரும் எறும்புகள் நின்று நின்று வழியின் இரு பக்கமும் பார்த்துக் காட்சிகளை மனதில் பதிய வைத்து வழியையும் அறிந்து கொண்டு மெதுவாகத் தொடர்ந்து செல்கின்றன. பின் தொடரும் எறும்புகள் வழியை அறிந்து கொண்டதை அறிவிக்க முதல் எறும்பு தலைமை எறும்பின் வயிறு மற்றும் பின்னங் கால்களைத் தட்டி மேற்கொண்டு பயணத்தைத் தொடரலாம் என்று அறிவிக்கிறது . உடனே , தலைமை எறும்பு பயணத்தைத் தொடர்கிறது. மாணவர்கள் புரிந்துகொண்ட பின் ஆசிரியர் மேற்கொண்டு பாடத்தைப்போதிப்பது போல , பின் தொடரும் எறும்புகளுக்கேற்ப வேகத்தைக் கூட்டிக் குறைத்து, நின்று நிதானித்து தலைமை எறும்பு பயணத்தைத் தொடர்கிறது. எல்லா எறும்புகளும் வழியை நன்றாக அறிந்து கொள்ளவே அப்படிச் செய்கிறது. அவை நெருங்கி வந்தால் தலைமை வகிக்கும் எறும்பின் வேகம் அதிகரிக்கும். இவ்வாறு உணவு இருக்கும் இடத்தை அடைந்து உணவை எல்லா எறும்புகளும் பெறுகின்றன. உணவு இருக்கும் இடத்தை அறிந்த ஒவ்வொரு தொண்டன் எறும்பும் தலைமையேற்று நடத்திச் சென்று நேரத்தை மிச்சப்படுத்தி கூட்டில் உள்ள எல்லா எறும்புகளும் உணவைப் பெற்றிட வழிவகுக்கும். இவ்வாறு கற்பித்தல் - கற்றல் முறையிலும் தொடுதல் முறையிலும் தகவல் பரிமாற்றம் எறும்பின் நுண்ணிய மூளையாலும் முடியும் என்றுகாட்டி இறைவன் தன் படைப்பாற்றலை வெளிப்படுத்துகிறான் .
அதே சமயம் பெரும்பாலான எறும்பினங்கள் ஃபிரோமோன் வேதிப் பொருள்கள் மூலம் செய்தித் தொடர்பைக் கொண்டுள்ளன . ஓர் இரை தேடும் எறும்பு உணவைக் கண்டுபிடித்ததும் உணவிடத்திலிருந்து புற்றை அடையும் வரை இந்த வேதிச்சுரப்புப் பொருளால் ஒரு நீண்ட கோடு போல் வழித் தடத்தை ஏற்படுத்திவிடும் .
கூட்டிலுள்ள மற்ற எறும்புகள் இந்த வேதி வழித்தடத்தைத் தங்கள் தலையிலுள்ள நுகர் கொம்புகளால் நுகர்ந்து ஊர்ந்து சென்று உணவிருக்கும் இடத்தை அடையும். வழித்தடம் தடுக்கப்பட்டால் இரைதேடும் எறும்புகள் வழியை விட்டு நீங்கிப் புதிய வழியைக் கண்டுபிடிக்கும். இதனை நாம் நம் வீட்டுச் சுவரில் ஊர்ந்து செல்லும் எறும்புக் கூட்டத்திலும் காணலாம் . உதரணரமாகச்சுவரில் ஊர்ந்து செல்லும் அந்த எறும்பு வரிசையைத் தடுத்து விரலால் குறுக்கே ஒரு கோடு போல் தேய்த்தால் அவ்வெறும்புகளின் வரிசை கலைந்துவிடும் . வரிசையை விட்டுக் கலைந்த எறும்புகள் ஒரு புதிய வழியை ஏற்படுத்தி ஏற்கனவே உள்ள பழைய தடத்தில்சேர்ந்து , மீண்டும் வரிசையாகச் செல்ல ஆரம்பித்துவிடும் . ஆக இந்தவேதிப் பொருள் தடத்தைப் பின்பற்றியே உணவு இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கின்றன .
தேனீக்களில் உள்ளது போலவே எறும்பினத்திலும் வேதிப் பொருள்களின் உதவியால் உணவிருக்கும் இடத்தை அறியஇறைவன் வழிகாட்டியுள்ளான் .
இந்த ஃபிரோமோன் வேதிப் பொருளை உணவைக் கண்டுபிடிப்பதற்கு மட்டுமின்றி வேறு நோக்கத்திற்காகவும் எறும்புகள் பயன்படுத்துகின்றன . உதாரணமாக ஒரு நசுங்கிய எறும்பு எச்சரிக்கை ஃபிரோமோன் வேதிப் பொருளை வெளித்தள்ளுகிறது. இது அதிக அளவில் அடர்த்தியாக வெளிவந்து பக்கத்திலுள்ள எறும்புகளிடத்தில் தாக்குவதற்கான ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தும் . கொஞ்சமாகச் சுரந்தால் அவற்றைக் கவரும் .
எதிரிகளை ஏமாற்ற அனேக இன எறும்புகள் பிரச்சார ஃபிரோமோனை உண்டாக்கும் . சில பெரிய இன எறும்புகளில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அவற்றின் தப்பிக்கும் தகவமைப்புத் திறன் உள்ளது. இந்த எறும்பை இலக்கு வைத்துப் பிடித்து உண்ணவரும் விலங்கைக் கண்டால் இது வேகமாக ஓடிச் சென்று நின்று 90 டிகிரி கோணத்தில் திரும்பி வேகமாக ஓடித் தப்பிக்கும். ஆஸ்திரேலியாவில் உள்ள பெரிய எறும்பினங்கள் கண்களைப் பயன்படுத்தியே உணவைக் கண்டுபிடிக்கின்றன. இவ்வெறும்புகள் கொடுக்கு மூலம் எதிரிகளைக் கொட்டி ஃபார்மிக் அமில வேதிப் பொருளைப் பாய்ச்சி தங்களைக்காப்பாற்றிக் கொள்கின்றன .
நாடோடி எறும்புகள் தற்காலிகக்குடியிருப்புகளில் வாழும் இவற்றின் எண்ணிக்கை இலட்சக்கணக்கில் இருக்கும் . இந்த எறும்புகள் இரைக்காகவும் இடமாற்றத்திற்காகவும் இரண்டு விதமான அணிவகுப்புகள் நடத்துகின்றன. இரைக்காக நடத்தும் அணிவகுப்பில் வழியில் எதிர்ப்படும் பூச்சிகளையும் சில சமயங்களில் எறும்புகளையும்கூட கொன்று தின்றுவிடும் .
பாலைவனத்திலுள்ள எறும்புகள் நிலப்பரப்பில் உள்ள காட்சிகளை அடையாளங்களாகக் கொண்டு பயணத்தை மேற்கொள்கின்றன . அவ்வெறும்புகள் கூட்டை விட்டு எவ்வளவு தூரம் வந்துள்ளோம் என்பதைக் கணக்கில் கொண்டு அதன்படி கூடு வந்தடையும் .
கருப்பு நிறத்தோட்ட எறும்பு இனத்தில் ஒவ்வொரு கூட்டிற்கும் ஒரு மொழி உண்டு . அம்மொழி அக்கூட்டிலுள்ள அனைத்து எறும்புகளாலும் அறியப்படும் . அவற்றின் மொழி தொடுதல் மற்றும் மின்காந்தத் தொடர்புகளை உள்ளடக்கியவை .இவையிரண்டும் ஒன்றுக்கொன்று இணையானவை . இரண்டு வேலைக்கார எறும்புகள் சந்திக்கும் பொழுது தலையிலுள்ள உணர்கொம்புகள், முன் கால்கள் மற்றும் தலை இவற்றை வேகமாகத் தட்டிக் கொண்டு அவை ஒன்றையொன்று வரவேற்றுக் கொள்கின்றன. உணவு இருக்குமிடம் கண்டு பிடிக்கப்பட்டதை அறிவிக்கவும் வெளியிலிருந்து வேறு எறும்புகள் ஏதேனும் கூட்டிற்கு வந்தாலும் இந்தச் சைகைகளை செய்து செய்தியை அறிவிக்கிறது . எறும்புகள் ஊர்ந்து செல்லும் பொழுது எதிர்ப்படும் எறும்புகளோடு உணர் கொம்புகளால் தட்டிக் கொண்டு செய்திப் பரிமாற்றம் செய்து கொண்டு செல்வதை நாம் சாதாரணமாகப் பார்க்கலாம் . இந்த கருப்புநிற எறும்புகள் பிரோமோன் வேதிப் பொருளைக் கொண்டு உணவு இருக்கும் இடத்தையும் கூட்டையும் அடையும் .
இரு வேறுபட்ட கூடுகளைச் சார்ந்தcஎறும்புகள் சந்திக்கும்cபொழுது சில நேரங்களில் சமாதான சைகை வெளிப்படுத்திச் சண்டையிடாமல் சென்றுவிடும்.
எப்படியெனில் உடம்பை முன்னுக்குத் திடீரெனத் தள்ளிப் பின் மெதுவாகப் பின்னுக்கு இழுக்கும். இரு வேறுகூடுகளைச் சேர்ந்த கறுப்பு இன எறும்புகள் சந்திக்கும் பொழுது தங்களுக்குள் ஒரு பொதுவான எல்லையை நிர்ணயிப்பதில் ஓர் உடன்பாட்டிற்கு வருகின்றன .அப்பொழுது பிரத்தியேகமான முறையில் தட்டிக் கொண்டு வரவேற்றுக் கொள்கின்றன .