ஞானதுளிகள்
தொகுத்தவர் : - திருமதி G.R.J. திவ்யா பிரபு I.F.S., சென்னை
வினா : நான் உணவு அருந்தும் பொழுது பூனை என் உணவில் வாய் வைக்கிறது . அதை விரட்டியோட்ட எனக்கு மனம் வருவதில்லை. அந்த நிலைமையில் நான் என்ன செய்ய வேண்டும் ?
விடை : ஏன் ? பூனையை விரட்டியோட்டு . அதற்கு இரண்டொரு அடியும் கொடுக்கலாம் .ஆனால் அதைத் துன்புறுத்துகிற முறையில் அடியாதே. குடும்பி ஒருவன் கோபித்துக் கொள்வது போன்றும் தீங்குக்குப் பிரதி தீங்கு செய்வது போன்றும் நடந்து கொள்ள வேண்டும் இல்லையேல் நீ துன்பத்துக்காளாவாய். ஆனால் வாஸ்தவத்தில் யாருக்கும் தீங்கிழைக் கலாகாது; ஞானி ஒருவனோ தீங்கிழைக்கப் போவது போன்று பாசாங்கு பண்ணுவதும் அவனுக்குத் தகாது.
ஒருவன் நள்ளிரவில் தூக்கத்தினின்று எழுந்திருந்து அண்டை வீட்டுக்குப் போய்க் கதவை
ஓயாது தட்டித் தூங்கியவனை எழுப்பினான். அவர்கள் கதவைத் திறந்து வந்து தங்களை எழுப்பியதற்குக்காரணம் என்னவென்று விசாரித்தார்கள். வந்தவன் தனக்கு சுருட்டுப் பற்ற வைக்கத் தீப்பெட்டி வேண்டும் என்றான்.
உறக்கத்தினின்று உபத்திரவப்படுத்தப்பட்டவர் பகரலானார். ஆ, நீ செய்ததுமிக நன்று! கையில் கொளுத்திய லாந்தரை வைத்துக் கொண்டு எங்களை வந்து இப்படி உபத்திரவப் படுத்தியிருக்கின்றாயே ? மனிதன் தேடுகின்ற பொருள் தன்னிடத்திலேயே இருக்கிறது. அதை அறிந்து கொள்ளாது அவன் உலகெல்லாம் தேடி அலைந்து திரிகிறான்.
காமுகன் ஒருவன் தன் காமக்கிழத்தியின் மீது பூரண மனதைச் செலுத்தியவனாக அவள் வீட்டுக்கு விரைந்து போய்க் கொண்டிருந்தான். வழியில் தியானம் பண்ணிக் கொண்டிருந்த ஞானி ஒருவரைக் கவனியாது அவர் மீது போய் மோதினான். அவர் திடுக்கிட்டெழுந்து என் தியானத்தை ஏன் இப்படிக் கலைக்கின்றாய்? என வினவினார். அதற்கு அக்கா முகன் ஐயனே, நான் கொண்டிருந்த பெண்ணாசை உலக ஞாபகத்தையே என்னிடமிருந்து போக்கிவிட்டது. நீர் உட்கார்ந்திருந்ததும் என் கண்ணுக்குப் படவில்லை. ஆனால் நீரோ இந்த அல்ப இடைஞ்சலை முன்னிட்டு இறை சிந்தனையை ஒதுக்கிவிட்டு என்னோடு பேச்சுக்குவருகிறீர் என்றான்.
பணக்காரன் ஒருவன் வீட்டண்டையிலிருந்த குளத்தில் ஒருவன் இரவில் சென்று மீன் திருடிக் கொண்டிருந்தான். அந்தச்சத்தத்தைக் கேட்டதும் வீட்டுக்காரன் சில ஆட்களுடன் வந்து குளத்தை வளைத்துக் கொண்டான். ஆனால் அதற்கு முன்பே திருடன் அங்கிருந்த ஒரு மரத்தடியில் சென்று தியானத்தில் இருப்பவன் போன்று பாசாங்கு பண்ணினான். குளத்தைச்சுற்றிலும் நின்றவர்கள் திருடனைக் கண்டுபிடிக்கவில்லை. அக்கம் பக்கம் முழுவதும் அவர்கள் தேடிப் பார்த்தார்கள். ஒரு மகாபுருன் அவ்வூருக்குவந்து மரத்தடியில் அமர்ந்திருக்கிறார் என்னும் செய்தி எங்கும் பரவியது. அவரைத்தரிசித்துப் போற்றுவதற்காகப் பலர், பழம், புஷ்பம், பக்ஷணவகைகள் எடுத்துக் கொண்டு வந்தார்கள் . அவருக்குக்காணிக்கைகளும் செலுத்தினார்கள். இதையெல்லாம் பார்த்த மீன் திருடனுக்கு ஓர் எண்ணம் வந்தது. நான் சாது போன்று பொய் வேஷம் போட்டதன் பயனாக இவையாவும் எனக்கு வந்து கொண்டிருக்கின்றன. உண்மையாகவே நான் சாது ஆகிவிட்டால் இதற்கெல்லாம் மேலாக நான் பரம் பொருளை அடைவேன் அல்லவா ? என்று எண்ணிக் கொண்டு அவன் துறவியாகப் போனான் .
முன்னாளையரிஷிகள் பிரம்ம ஞானத்தை அடையப் பெற்றனர். லெளகிக மனப்பான்மை லேசாக இருந்தாலும் பிரம்ம ஞானம் கிட்டாது.
நிர்க்குணப்பிரம்மம் எனப்படுவதும் சகுணப் பிரம்மம் எனப்படுவதும் ஒரு பொருளே என்பதை பிரம்ம ஞானிநன்கு அறிகிறான்.
வீட்டின் மேல் தளத்துக்குச் செல்லுகிற மனிதன் ஒருவன் நெடுநேரம் அங்கிருப்பதில்லை. கீழே இறங்கியும் வருகிறான். அப்படி வந்தான பிறகு பிரம்மமே ஜகத் உலகமாகவும் இறையடியார்களாகவும் ஆயிருப்பதாக அவன் அறிகிறான்.
காலிக்குடம் ஒன்றை நீரினுள் முக்கினால் அது பக் பக் என்று சத்தமிடுகிறது. நீர் நிறைந்த பிறகு அந்தச் சத்தம் நின்றுவிடுகிறது. பிறகு அக்குடத்தினின்று நீரை மற்றொரு பாத்திரத்தில் கொட்டும் பொழுதும் அதே விதத்தில் சத்தமிடுகிறது. பிரம்மஞானிகள் நிலை அக்குடத்தின் நிலை போன்றது.