சங்கைமிகு ஷைகுநாயகம் அவர்களின்
அமுத மொழிகள்
14.05.2014 அன்று திண்டுக்கல் தலைமை கலீபா யம். ஹபீபுல்லாஹ் ஹக்கிய்யுல் காதிரிய்
அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற மஜ்லிஸில் ஆற்றிய அருளுரை
முரீதீன்கள் அனைவருக்கும் அன்பான சலாத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
நாம் இப்போது ஓர் உயரிய தவ்ஹீதுடைய வழியில் போய்க் கொண்டிருக்கிறோம் . இதிலே குற்றம் குறைகள் வராமல் பாதுகாத்துக் கொள்வது மிக்க அவசியமாகும். எனெனில் இந்த வழி நடக்கும் போது குறை - குற்றம் - ஷிர்க் போன்றவை நேர்ந்திட வாய்ப்புண்டு. அவற்றைத்திருத்திக் கொள்ள வேண்டும் . அதனால் தான் நாங்கள் வரும் சமயங்களில் ஞான விளக்கக் கேள்விகள் கேளுங்கள்! எனத்தூண்டுகிறோம். ஏனெனில் கேள்விகள் கேட்டால் தான் நீங்கள் எந்த நிலையில் - எந்த இடத்தில் இருக்கின்றீர்கள் என்பதைப்புரிந்து உங்கள் சந்தேகங்களை நீக்கி உயர்த்த முடியும் .
இஸ்லாத்தில் முதலில் இருந்தது தெளஹீதுதான். அதற்குப்பின் தான் ஷரீஅத் வந்தது . ஆனால் ஷரீஅத் தான் முதலாவது என மக்கள் விளங்கி வைத்துள்ளார்கள் . அப்படியன்று . ஷரீஅத் என்றால் என்ன? மக்கள் வாழ்வதற்குரிய நிலைகளை உண்டு பண்ணுவது தான் ஷரீ அத்.அதாவது: மக்கள் ஓர் ஒழுங்கு முறையைப் பின்பற்றி அதன் படி நடப்பது தான் “ஷரீஅத்”. ஆனால் தவ்ஹீது என்பது முழு மார்க்கத்துக்கும் முதன்மையானது. இறைவனை வானத்தில் அல்லது பள்ளிக்குள் வைத்து வணங்குவது பொருத்தமற்றது - இந்தப்பொருத்த மற்றதை பொருத்த முற்றதாக ஆக்குவதற்குத்தான் தெளஹீது வந்தது. ஆரம்ப காலங்களில் மக்கள் - கல் - மண் - மரம் - மட்டை இவற்றையெல்லாம் கடவுள் என வைத்து வணங்கி வந்தனர். அப்போது தான் அல்லாஹ் நபிமார்களை அனுப்பி, நீங்கள் வணங்குவதெல்லாம் சிறு சிறு பகுதிகளைத் தான்; உண்மையான இறைவனை வணங்கவில்லை என தெளிவுபடுத்தினார்கள். சூரியனை-சந்திரனை கடவுள் எனக் கூற முடியுமா? மற்றும் மனதில் பல எண்ணங்களை வைத்துக் கொள்கிறார்கள். இவையெல்லாம் கடவுள் என்று கூற முடியுமா? எனவே நீ நினைப்பது போல அவையெல்லாம் இறைவன் அல்ல.லா இலாஹ - நீ நினைப்பது போல் - எண்ணிக்கொண்டு - சொல்லிக்கொண்டிருப்பது போல அவையெல்லாம் இறைவனல்ல - ஆனால் - ஒருவன் உள்ளான். இல்லல்லாஹ் - அல்லாஹ்வைத்தவிர. அவன்தான் இறைவன். பரிபூரணமானவன். அந்த அல்லாஹ்வைத் தான் வணங்க வேண்டும். உங்கள் கைகளால் செய்தவைகளை வணங்குவது புத்திசாலித்தனமல்ல ; வெட்கக்கேடானது எனத் தெளிவுபடுத்தினார்கள்.
ஆகவே அறிவாளிகள் எது கடவுள் என்பதை விளங்கி வணங்க வேண்டும். அப்படி விளங்கி வணங்கினால் தான் அதில் பிரயோசனம் - பலன்உண்டு ! முஸ்லிம்களாகிய நாங்கள் பள்ளிக்குள் அல்லாஹ் இருக்கிறான் என எண்ணி அல்லாஹு அக்பர் என தக்பீர் கட்டுகிறோம் . கோவிலுக்குச்செல்பவர்கள் கோவிலுக்குள் கடவுள் இருப்பதாக எண்ணி வழிபடுகின்றனர் . அவர்கள் ஒரு பொருளை வணங்குகின்றனர் . முஸ்லிம்களாகிய எங்கள் மக்கள் இமேஜை - ஒரு யோசனையை - ஒரு சிந்தனையை வைத்து வணங்குகின்றனர் . அல்லாஹ்வைப்பார்ப்பது போல் வணங்க வேண்டும் என்று பெருமானார் அவர்களின் அருள் மொழியைத் தவறாக விளங்கி அல்லாஹ்வை எதுவோ இருப்பதாக எண்ணிப் பார்ப்பது போல ஏதோ ஒரு பொருளை வணங்குவது போல வணங்குகிறார்கள். பொருளை வணங்குவது மார்க்கத்துக்கு விரோதமானது. ஆக மூடத்தனமாக வணங்கிய மக்களுக்கு சரியான அல்லாஹுவைக்காட்டிக் கொடுப்பதற்காக வந்ததுதான் தவ்ஹீத் . ஆனால் அறியாத- புரியாத மூட மக்கள் இது அங்கிருந்து இறக்குமதியானத... இங்கிருந்து இறக்குமதியானது , இந்துக்கள் சொல்வதை இவர்கள் கூறிக் கொண்டு அலைகிறார்கள் எனச் சொல்கிறார்கள். இப்படிக்கூறுவோர் எத்துணை பெரிய அறிவிலிகள்! ஆனால் அறபு மொழிக்கு என்ன தமிழ் வார்த்தை வருமோ அதைத்தான் ஞானிகள் உபயோகிக்கிறார்கள் . அறபிகள் சொன்ன விஷயத்தை தமிழ் வார்த்தைகளில் கூறுகிறார்கள். இது எங்கிருந்து இறக்குமதியானது எனச் சொல்லப்போனால் மக்காவிலிருந்து - மதீனாவிலிருந்து இறக்குமதியானது என்றே சொல்லாம்.ஆக இது ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தொடங்கி ஒவ்வொரு நபிமார்கள் முலமாக தொடர்ந்து வந்தது . அல்லாஹ்ஒருவன் என்று சொல்வதற்காகவே ஒவ்வொரு நபிமாரும் வந்தார்கள். ஈஸா நபி - முஸாநபி - இப்றாஹீம் நபி( அலைஹிமுஸ்ஸலாம் ) என பல நபிமார்கள் வந்தனர். இப்றாஹீம் ( அலை ) அவர்கள் ஆராயத் தொடங்கி சூரியன் - சந்திரன் - நட்சத்திரத்தை இறையாக இருக்குமோ என ஆராய்ந்து , முடிவில் அவையெல்லாம் பிழையென முடிவு செய்து , ஒரே இறைவன் தான் என நிர்யணம் கொண்டார்கள். இன்று மக்கள் ஏதோ ஒரு பொருளை நினைத்து அல்லாஹு அக்பர் என தக்பீர்கட்டி தொழத்தொடங்கிவிடுகிறார்கள் . பரிபூரணமாக எங்கும் நிறைந்த ஒருவனை இப்படி வணங்க முடியுமா? அது தவறு. அதனால் தான் நபிமார்களை அனுப்பி அல்லாஹ் ஒழுங்கு செய்தான். அப்படி வணங்கிய மக்களிடம் ஷரீஅத்துடைய நிலை ஒழுங்கின்றி மாறி மாறிப்போய் விட்டது. இன்று வரை அது தொடரவும் செய்கிறது. ஈஸா ( அலை ) அவர்களை நம்பிய கிருத்தவர்கள் அவர்களுடைய தோற்றத்தை - அல்ல .... அல்ல - அவர்களைக்கொலை செய்ய ஓடி வந்து இறைவனால் ஈஸா நபி போல் உருவம் மாற்றப்பட்டவனின் உருவத்தை வணங்குகிறார்கள். இப்படியேமற்ற நபிமார்களின் உம்மத்துகளும் மாறிப் போனார்கள். இறுதியாகரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எல்லாவற்றுக்குமே பொருத்தமானவர்களாக வந்துதெளஹீதுடன் ஷ ரீஅத்தையும் கலந்து கொண்டார்கள். மக்களின்அன்றாட வாழ்க்கை முறையை முதலில் ஒழுங்கு செய்தார்கள். சிறுநீர் கழித்தால் சுத்தம் செய்யாத மக்களாகவே மக்கள் வாழ்ந்து வந்தனர். அதனை மாற்றி சுத்தமாக இருப்பதற்கு காட்டிக் கொடுத்தார்கள். இது தான் ஷரீஅத் .
( அமுதம்பொழியும் )