• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai    »    2014    »    May2014    »    அறிந்தும் அறியாமலும்

அறிந்தும் அறியாமலும்

கோவிந்தக்குடி   B. மஹ்மூதா பீவி 

அறிவுகள் பல வகைப்படுகின்றன . அவற்றில் சிலர் தெரிந்து கொள்வதால் நன்மை ஏற்படக்கூடிய அறிவுகள் . வேறு சிலர் தெரிந்து கொள்ளாமல் இருப்பதால் நன்மை ஏற்படக்கூடியஅறிவுகள் .

ஓர் தத்துவக் கதை


மனோதத்துவம் தெரிந்த வைத்தியர் ஒருவரிடம் பணக்காரர் ஒருவர் வந்தார். தம் மனைவி குழந்தையே பெறுவதில்லை என்றும் அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். என் மனைவியின் உடல் நிலையில் கோளாறு எதுவும்இருப்பதாக எனக்குத் தெரியவில்லைஅவள் நோய்நொடி இல்லாமல் தான் இருக்கிறாள் . வேளாவேளைக்குச் சத்துள்ள உணவையே சாப்பிடுகிறாள். இப்படியிருந்தும் எப்படி அவளுக்கு மலட்டுத்தனம் ஏற்பட்டது என்றுதான் எனக்குத் தெரியவில்லை என்று முறையிட்டார்.



சிறிதுநேரச் சிந்தனைக்குப் பின்னர் வைத்தியர் பேசினார். உங்கள் மனைவியை அழைத்து வாருங்கள். நாடித்துடிப்பு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.



பணக்காரரின் மனைவி ஆஜரானார்இரட்டை நாடியான அவள் வைத்தியரிடம் கையை நீட்டினாள். அவளது கையைப் பிடித்து நாடித் துடிப்பைக்கவனித்த வைத்தியர் கொழுத்துப் பெருத்த அவளது உடலையும் கவனித்தார். இப்படிக் கணித்ததில் அவர் ஏதோ ஓர் உண்மையைத்தெரிந்து கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் முகத்தில் மகிழ்ச்சியின் கோடுகள் தோன்றியிருக்க வேண்டியதில்லை.


திடீரென்று முகத்தை மாற்றிக் கொண்டு ஒரு குழந்தைக்குத் தாயாக வேண்டும் என்ற ஆவலினால் தானே இங்கு வந்திருக்கிறாய் என்று கேட்டவர் வேதனையோடு சிரித்தார். எந்த மருந்தும் தேவையில்லை என்பது என் எண்ணம். ஏன் தெரியுமா? இன்னும் நாற்பது நாட்களில் நீ இறந்துவிடப்போகிறாய். இறப்பைத் தடுக்கக்கூடிய எந்த மருந்தும் என்னிடம் கிடையாது. உன் நாடித்துடிப்பு பலவீனமாக இருக்கிறது.   பணக்காரரும் அவர் மனைவியும் கலக்கத்துடன் வீடு திரும்பினார்கள். அன்றிலிருந்து அவள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டாள் . சத்துள்ள உணவு வகைகள் சீண்டுவாரின்றி வீணாயின. வாழ்க்கையே அவளுக்குக் கசந்தது . நாட்கள் ஒவ்வொன்றாகக் கழிந்தன.   நாற்பதாம்நாள் வந்தது; கழிந்தது. நாற்பத்தோராம் நாள் வந்தது. ஆனால் அவள் இறக்கவில்லை !



பணக்காரர் விருட்டென்று எழுந்தார். இத்தனை நாட்களும் தம் மனைவியின் மரணம் குறித்து எண்ணி வருந்திய அவருக்கு இப்போது வைத்தியரின் நினைவு வந்தது . பொசுக்கி விடும் அனற் கண்களுடன் அவர் வைத்தியரைத் தேடிப் போனார்.   வைத்தியர் அன்புடன் வரவேற்றார். நீங்கள் என்ன சொன்னீர்கள்? என் மனைவி உயிருடன் இருக்கிறாள், காதில் விழுகிறதா? என் மனைவி உயிருடன் இருக்கிறாள். அவள் உடல் இளைத்துத் துரும்பானது தான் கண்ட பலன். இளைத்துத் துரும்பாகி விட்டாளா? நான் சொன்ன மருந்து நல்ல பலனை விளைவித்திருக்கிறது.



என்ன உளறுகிறீர்கள்? என்று சீறினார் பணக்காரர். வைத்தியர் விளக்கினார் .   அவசரப்படாதீர்கள் . என்னிடம்வைத்திய ஆலோசனைக்காக வந்தபோது நீங்கள் எண்ணி இருந்தது முற்றும் தவறு. நீங்கள் நினைத்தது போல் உங்கள் மனைவிக்கு எந்தக்கோளாறும் கிடையாதுமனைவியின் ஆரோக்கியத்துக்காக சத்துள்ள உணவு வகைகளைக் கொடுத்தீர்கள் அல்லவா? அவளுக்கு எந்தச் சத்துத் தேவை என்பதைத் தெரிந்து கொள்ளத் தவறிவிட்டீர்கள். நீங்கள் கொடுத்த உணவு கொழுப்புச் சத்துநிரம்பியவை. இதனால் ஏற்பட்ட விளைவுதான் மலட்டுத் தன்மை. அதாவது தற்காலிக மலட்டுத்தன்மை .


பணக்காரருக்குப்புரியவில்லைநீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றே எனக்கு தெரியவில்லைஒரு பெண்ணுக்குக் கொழுப்புச்சத்து தேவையில்லை என்று சொல்கிறீர்களா ? என்று கேட்டார்.



இல்லைநான் அப்படிச் சொல்லவில்லை என்றார் வைத்தியர். மனிதனின் உடலில் எத்தனையோ விதமான சத்துகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட அளவிலேயே அமைக்கப் பட்டிருக்கின்றன. குறிப்பிட்ட சத்து மிகைத்து நின்றால் அதனால் தீமைகள் விளையும்மனிதனுக்கு இரத்தம் தேவைதான் என்றாலும்மிதமிஞ்சிய இரத்தத்தினால் இரத்தக்கொதிப்பு ஏற்படுவதில்லையா?


பணக்காரரின் கோபம் படிப்படியாகக் குறைந்தது.   உங்கள் மனைவியின் உடலில் கொழுப்புச்சத்து அதிகமாகச் சேர்ந்து விட்டதால் கொழுப்புப் பிண்டம் ஒன்று   அவளது கருவக வாசலை அடைத்து விட்டது. அந்தக் கொழுப்புப் பிண்டத்தை முதலில் கரைக்க வேண்டியிருந்தது . அதற்கு ஒரே வழி அவள் சில நாட்கள் பட்டினி கிடக்க வேண்டும். அவள் உடல் இளைத்துப் போக வேண்டும். பணக்காரர், அப்படியானால் நாற்பது நாட்கள் பட்டினிகிட என்று சொல்லியிருக்கலாமே ! இப்படியொரு பயங்கரப் பொய்யைச் சொல்ல வேண்டுமா ?



தம்உடல் தேவைக்கு அதிகமாய் வளர்ந்து விட்டது என்று எத்தனையோ பேர் அங்கலாய்க்கிறார்கள். பட்டினி கிடப்பதால் நல்ல பயன் கிடைக்கும் என்றும் அவர்களுக்குத் தெரியும். இருந்தும் அவர்கள் உணவை வெறுப்பதில்லை. ஏனெனில்   உணவை வெறுப்பது அப்படியொன்றும் சாதாரண காரியமல்ல. பெண்களைப் பொறுத்தமட்டில் இது இன்னும் சிரமமானது. ஒரு பெண் உணவை வெறுக்க வேண்டுமென்றால் அவள் மனதில் நீங்காத கவலை ஏற்பட வேண்டும். இதற்காகத்தான் நான் மரணத்தைக் கற்பனை செய்தேன் . ஒரு பெண் மரணத்துக்குப் பயப்படுவது போல்வேறு எதற்கும் பயப்படுவதில்லை. இப்போது எல்லாம் சரியாகி விட்டது . இனிமேல் உங்கள் மனைவிக்கும் மலட்டுத்தன்மைக்கும் சம்பந்தம் கிடையாது .


பணக்காரர் நன்றி செலுத்தினார். இறுதியாக ஒரு கேள்வி கேட்டார். இதை அப்போதே என்னிடம் சொல்லி யிருக்கக்கூடாதா ? என் மனைவி இறந்துவிடுவாள் என்ற கவலை அவளை விட எனக்குத் தான் அதிகமாக இருந்தது. உண்மையை என்னிடம் சொல்லியிருந்தால் நன்மையாக இருந்திருக்கும்.



வைத்தியர் சொன்னார். உண்மையைச் சொல்லியிருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள் . இது நீங்கள் தெரிந்து கொள்ளக்கூடாத ஒன்று. தெரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் உங்களுக்குநல்லது .


ஏன்தெரிந்துகொள்ளக் கூடாது ? என் மனைவிதான் கவலைப்பட்டுச்சாப்பாட்டை வெறுக்க வேண்டுமே தவிர நான் கவலைப்பட வேண்டிய தில்லையே ?



வைத்தியர்சொன்னார். உண்மையை நீங்களும் தெரிந்து கொள்ளக்கூடாது .   உங்கள் மனைவியும் தெரிந்து கொள்ளக் கூடாது. உங்களுக்கு மட்டும் நான்   உண்மையைச்சொல்லி விட்டதாக வைத்துக் கொள்வோம். அப்போது கவலை ஏதும் இல்லாமல் நீங்கள் நாட்களை எண்ணிக் கொண்டு இருந்திருப்பீர்கள். உங்கள் மனைவி இதைக்கவனித்தால் நிச்சயம் சந்தேகப்படுவாள். தனக்கு ஒரு விதமாகவும் தன் கணவருக்கு ஒருவிதமாகவும் வைத்தியர் சொல்லியிருக்கலாம் என்று அவர் எண்ணக்கூடும் . நாற்பது நாட்களில் மனைவியின் உயிர் நிற்கும்போது எந்தக் கணவனாலும்மகிழ்வோடு இருக்க முடியாதல்லவா? அல்லது மரணத்தை எண்ணிக் கலங்கிப் பட்டினி கிடக்கும் உங்கள் மனைவியின்மீது உங்களுக்கு இரக்கம் ஏற்படலாம். உணர்ச்சி மிகுந்து நீங்கள் உண்மையை அவளிடம் கூறி விட்டாலும் ஆச்சரியப்பட முடியாது. நாளை வரக்கூடிய நன்மைக்காக இன்றைய இன்பத்தை பெரும்பாலானோர் தியாகம் செய்வதில்லைஅந்தப் பெரும்பாலானோரில் நீங்களும் ஒருவராகத்தான் இருக்க வேண்டும் என்று நான் நினைத்திருந்தேன்.



கணவருக்கும் மனைவிக்கும் தெரியாமல் ஓர் உண்மைக் கதை ஆரம்பத்தில் மறைக்கப்பட்டிருக்கிறது.   ஏனெனில் அந்த உண்மை அவர்கள் தெரிந்து கொள்ளக்கூடாத ஒன்று.   தெரிந்திருந்தால் நிச்சயமாகப் பலன் கிடைத்திருக்காது. தெரிந்து கொள்ளாமல் இருந்ததால், பணக்காரரின் மனைவிக்கு ஈன்றெடுக்கும் ஆற்றல் கிடைத்தது. வைத்தியத் துறையில் நுட்பமான பல விபரங்கள்மறைந்திருப்பது போல் , மதத் துறையிலும்நுட்பமான பல உண்மைகள் மறைந்திருக்கின்றன . தன்னை அறிந்தவன் தன் ரப்பை அறிந்தான் .