அனுபவம்
ஞானத்துளிகள்
தொகுத்தவர்: - திருமதி G.R.J. திவ்யா பிரபு I.F.S.,I.A.S; சென்னை
நிறைஞானி ஒருவரும் பரம மடையன் ஒருவனும் வெளித் தோற்றத்துக்கு ஒரே விதமாகத் தென்படுகின்றனர். ஒரு மடையனைப் போன்று நிறை ஞானியும் மந்திரம் எதையும் உச்சரிப்பதில்லை; கிரியைகளை அனுஷ்டிப்பதில்லை. பேச்சற்று ஜடம் போன்று இருக்கிறார்.
சந்திரனிடத்துச் சிறிது களங்கத்தைக் காண்கிறோம். ஆனால் அதை முன்னிட்டு சந்திரனுடைய இனிமையோ, வெளிச்சமோ குறைவதில்லை. அங்ஙனம் ஞானிகளுடைய பரிபூரண நிலைக்குப் பங்கமொன்றுமில்லை.
ஞானிகள் பேராசைக்காரர்களாக இருந்து அருந்துவதில்லை. உள்ளிருக்கும் ஏதோ பெரிய பொருள் ஒன்றுக்கு ஆஹுதி படைப்பது போன்று அருந்துகின்றனர்.
சுய அபிமானம் சிறிதேனுமில்லாத சமய ஆசாரியர் ஒருவரிடத்துப் பரந்த மனப்பான்மை ஒன்றைக் காணலாம். அதாவது அவரிடம் யாரேனும் வந்து ஆன்மிக விஷயத்தைப் பற்றி ஏதாவது கேட்டால், தமக்குத் தெரிந்திருப்பதை விட அதிகம் தெரிந்திருக்கிற வேறு ஓர் ஆசாரியரைக் குறித்துக் கூறி அவரிடம் பேகும்படி அவர் தூண்டுவார்.
வெறும் வாய்ப் பேச்சாளர்கள் பரம் பொருளைப் பற்றியும் பிரபஞ்சத்தைப் பற்றியும் என்னென்னவோ ஏராளமாகப் பேசுகின்றனர். ஆனால் மெய்ஞ்ஞானிகளுடைய போக்கு வேறு. பொருந்திய சில வார்த்தைகளை மட்டும் அவர்கள் பேசுவார்கள்.
ஸ்பரிச வேதியைத் தொட்டதும் கீழான உலோகம் பொன்னாக மாறுகிறது. பிறகு மண்ணில் புதைத்து வைத்தாலும் அது துருப்பிடிப்பதில்லை. அப்படி பிரம்ம ஞானத்தை அடைகிறவன் பிரம்ம சொரூபம் ஆகின்றான். அந்நிலையில் இருந்து வழுவுதல் என்பது அவனுக்கில்லை.
சச்சிதானந்தத்தில் திளைத் திருக்கும் ஞானி விசாரம் பண்ணுவதையும் வைராக்கியம் கொள்ளுவதையும் தாண்டிப் போனவன் ஆகிறான்.
கேட்டாலொழிய ஞானிகள் பரமார்த்திக விஷயங்களைப்பற்றிப் பேச மாட்டார்கள். பார்க்க வந்தவர்களின் யோக க்ஷேமங்களை விசாரிப்பதோடு பொதுவாக அவர்கள் பேச்சு நின்றுவிடும்.
விறகில் தீயிருக்கிறதென்பதை அறிந்திருக்கிறவன் ஞானி. ஆனால் விறகில் தீ மூட்டி உணவு சமைத்து உண்பவன் விஞ்ஞானி.
பிரம்ம ஞானி ஒருவனைப் பற்றி பத்திரிகைகளில் விளம்பரம் பண்ணுவதால் ஆவதென்ன? யார் ஒருவன் இறைவனிடமிருந்து ஆதேசத்தைப் பெற்றிருக்கிறானோ அவனே பிரம்ம ஞானத்தைப் புகட்டத் தகுதி வாய்ந்தவன்.
ஒரு சொட்டு ஜலமும் அருந்தாது சிலர் ஏகாதசி உபவாசம் பண்ணுவர். அது மிகக் கடினமானது. சந்நியாசி ஒருவனுடைய வாழ்க்கையும் அத்தகையது.
ஞானி ஒருவன் தன்னுடலைப் பற்றியோ உடைமையைப் பற்றியோ ஒன்றும் நினைப்பதில்லை. கட்டியிருக்கிற வேஷ்டி தன் மீது இருப்பதும் இல்லாது போவதும் அவன் கவனத்துக்கு எட்டுவதில்லை.
சொக்கட்டான் விளையாட்டில் எப்படியாவது குறியை அடைய முயலுபவர்கள் சாமானியமானவர்கள். ஆனால் தேர்ந்த விளையாட்டு வீரர்களோ தங்கள் கைவரிசையைக் காட்டுதலில் ஈடுபட்டிருப்பார்கள். கைதேர்ந்த சொக்கட்டான் விளையாட்டுக்காரர்கள் உலகத்தவர்களை நல்வழியில் திருப்புதலில் அவர்கள் கருத்துமிகச் செலுத்துகின்றனர்.
நெல் ஒன்று முளைக்கும் தன்மையது. ஆனால் அதை அவித்துவிட்டால் முளைக்காது. இறை ஞானத்தை அடையப் பெற்றவன் அவித்த நெல்லுக்கு நிகர். அவன் உலக விளையாட்டுக்களில் ஈடுபடுவதில்லை.
சமயங்கள் எல்லாம் புகட்டுகின்ற சாதன வகைகள் அனைத்தையும் இறை திருவருளைக் கொண்டு நான் அனுஷ்டித்திருக்கிறேன். அந்தச் சாதன வகைகள் அனைத்துக்கும் உரிய மரியாதையை நான் தருகிறேன். ஆதலால் ஒவ்வொரு சமயத்தைச் சேர்ந்தவனும் என்னை அவன் சமயத்துக்குரியவன் என்று கருதுகிறான்.
சாதாரண சாது ஒருவனிடம் போகிறவர்கள் அருட்பேறு ஏதேனும் பெறுகிறார்களா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் பரபோதத்தில் சொக்கிக் கொண்டிருக்கும் சான்றோரிடம் செல்லுகிறவர்கள் ஒன்றும் பெறாது திரும்புவதில்லை. அப்படிச் செல்லுகிறவர்களுள் ஒரு சிலர் உலக வாழ்க்கைக்குத் திரும்பி வருவதில்லை.
பொரியைப் பொரிக்கும்போது அவைகளுள் சில சட்டியினின்று வெளியில் குதித்து மலர்கின்றன. மற்றவைகள் சட்டிக்குள்ளேயே பொரிகின்றன. வெடித்து விழுந்தவை களுள் மல்லிகைப் பூப்போன்று புள்ளியொன்று மில்லாதவைகளா யிருக்கின்றன. பொரிந்து சட்டிக்குள்ளேயே இருப்பவைகளிடத்துப் பழுப்புப் புள்ளிகள் இருக்கின்றன. அங்ஙனம் சிறு வயதிலேயே துறவிகளாகி ஞானம் பெறுபவரிடத்து ஒரு குறையும் இருப்பதில்லை.
அவர்கள் பரிபூரணராக இலங்குகின்றனர். ஆனால் ஞானமடைந்த பின்பும் உலகிலேயே இருப்பவர்களிடத்துச் சிறிதளவாவது குறைபாடு தென்படும். சாகுபடி செய்கிறவர்களுள் சிலர் படாதபாடு பட்டு நீர் இறைஞ்சிப் பயிர் பண்ணுகின்றனர். வேறு சிலருக்கு சில இடங்களில் வேண்டியவாறு மழை கொட்டி நீரைத் தந்துதவுகிறது. அத்தகைய இடங்களில் இருப்பவர்கள் விவசாயம் பண்ணுவதற்குக் கஷ்டப்பட வேண்டியதில்லை. அதே விதத்தில் சித்தர்களுள் இரு தரத்தார் உளர். கடினமான சாதனங்கள் பல புரிந்து சித்தர்கள் ஆகின்றவர்கள் ஒரு கூட்டத்தார். கிருபா சித்தர்கள் என்பார் மற்றொரு கூட்டத்தார். இறை கிருபையால் அவர்கள் திடீரென்று பரிபூரண நிலையைப் பெறுகின்றனர். ஆனால் கிருபா சித்தர்களைக் காண்பது அரிதிலும் அரிது.