ஹதிஸ் பக்கம்
தேடு தேடு தேட்டத்துடன் தேடு!
கலீபா - ஆலிம் புலவர்.
ரயில் பிரயாணம். அந்த கேரேஜில் டிக்கட் பரிசோதகர் ஏறி ஒவ்வொருவராக டிக்கட்டைக் கேட்டு வாங்கிப் பரிசோதித்துக் கொண்டிருந்தார். ஒருவர் மட்டும் பரபரப்பாக தன்பாக்கெட், கைப்பை - சூட்கேஸ் என எதையோ தேடிக்கொண்டிருந்நதார். என்ன தேடுகிறீர்கள்? என அருகிலிருந்தவர் கேட்ட போது வியர்த்து விறுவிறுக்க“ டிக்கட்டைக்காணவில்லை...” என பரிதாபமாக விழித்தார்!
அது ஒரு ஷாப்பிங்மால். வித விதமான சாமான்களை வாங்கி தள்ளு வண்டியில் ஏற்றித்தள்ளிவந்து பணம் கட்டவேண்டிய வரீசையிலும் நின்றிருந்த ஒருவர் திடீரென்று “சார்! இதைக்கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள்.. என் பர்ஸைக்கானோம்...பொருள்கள் தேடிக்கொண்டிருந்த இடத்தில் பார்த்து வருகிறேன்” என பரபரப்பாக ஓடினார்....
குடும்பத்தோடு கண்காட்சியைச் சுற்றிப்பார்க்க வந்த ஒரு குடும்பத்தார் கூட்டிவந்த பிள்ளைகளில் ஒரு பிள்ளையைக் காணோம் என அங்கே தேடு... இங்கே தேடு என ஆளுக்கொருபக்கம் பரபரப்பாகத் தேட ஆரம்பித்தார்கள்.
இந்த மூன்று நிகழ்வுகளிலும் தேடல் ஒன்றுதான். தம்முடைய பொருள் ஒன்று கணாமற்போய்விட்டது. அது கிடைக்காவிட்டால் மோசமான விளைவைச் சந்திக்க நேரிடும். எனவே பதைப்பு... பரபரப்பு... கண்ணீர்... கைசேதம்.
அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த பரபரப்பான தேடுதல் என்ற இடத்தில்தான் கல்வியை வைத்து சமூகத்திற்கு ஓர் அறிவுரை பகர்கின்றார்கள்.
கல்வி உங்களின் காணாமல் போன பொருள்! அதை எங்கிருந்தாலும் தேடிக்கண்டுபிடித்து அடைந்து கொள்ளுங்கள்! என்று!
கல்வியின் அவசியத்தை இதைவிட உரிய முறையில் யாரும் எடுத்துவைக்க முடியாது?
இந்த மூன்று பேரிடமும் இருந்த தேடல் உணர்வு; அடையவேண்டுமே என்ற தாகம்; அறிவைத் தேடுவதில் இருக்க வேண்டும் என அண்ணலார் அறிவுறுத்தினார்கள்.. உலகமக்கள் இன்று பெருமானார் கூறிய அந்த இடத்துக்கு வந்து விட்டார்கள்.
அதனால்தான் ஒவ்வொரு பெற்றோரின் மூளையிலும் பிள்ளைகளைப் படிக்கவை! எப்படியாவது படிக்கவை! என்ற உந்துதல் பிறந்து அதற்காக எந்த தியாகத்தையும் செய்யும் நிலைக்கு வந்திருக்கிறார்கள்.
ஆனால் முஸ்லிம் சமுதாயம் பெருமானார் கூறிய அந்தத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கிறதா? என சிந்தித்தால் இல்லை என்றே விடை வரும்!
சரி! உலகக்கல்வியைத் தேடுவது ஃபர்ளா? என சிலர் எதிர்வாதம் புரியலாம்!
அவர்களிடம் நாம் கேட்போம்! “அப்படியானால் மார்க்க அறிவைத் தேடுவதிலாவது பெருமானார் கூறிய தாகம் உங்களிடம் உள்ளதா” என நாம் கேட்போம்!
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கல்வியைப்பற்றி அருளும் அறமொழிகளிலெல்லாம் “தலப்” தேடுதல்! என்ற மூலச்சொல்லைப் பயன் படுத்தியே உரைத்துள்ளது சிந்திக்க வேண்டியவிஷயம்.
“தலபுல் இல்மி ஃபரீளதுன்அலா குல்லிமுஸ்லிமின் வமுஸ்லிமா! ”
கல்வியைத் தேடுவது முஸ்லிமான ஆண், பெண் இருபாலர் மீதும் கட்டாயக் கடமை!
“உத்லுபுல் இல்ம வலவ் பிஸ்ஸீன்” சீனா சென்றாயினும் சீர் கல்வி தேடுக! என்றும் அவர்களின் அறமொழி உணர்த்துகிறது!
தேடுங்கள்! என்ற பெருமானாரின் கட்டளை பிறந்ததும் ஸஹாபாக்கள் தேடினார்கள். தாபியீன்கள் தேடினார்கள். அதற்கு அடுத்துவந்த முன்னோர்கள் இமாம்கள் தேடினார்கள். அதனால் அறிவுலகின் முன்னோடிகளாக மாறினார்கள்.
ஆனால் தேடுதலை விட்டு விட்ட இன்றைய முஸ்லிம் சமுதாயத்தை கல்வியாளர்கள் அறிவியலானார்கள் வரிசையில் எங்கே? எங்கே? என நாம்தேட வேண்டியுள்ளது!
இந்த நிலை நிச்சயமாய் மாற்றப்பட வேண்டும்!