Pezhai » 2014 » Nov2014 » அமுத மொழிகள்
சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்களின்
அமுத மொழிகள்
துபையில் கலீபா ஏ.பி.ஸஹாபுத்தீன் பி.இ.எம்.பி.ஏ. ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற மஜ்லிஸில் ஆற்றிய அருளுரை
இரண்டறக்கலத்தல்!
முரீதுப் பிளளை ஒருவர் எழுந்து “வாப்பா! எல்லாமே ஹக்காய் இருக்க ஹக்கோடு இரண்டறக் கலப்பது எப்படி?” என வினா விடுத்தார். அப்போது அவரிடம் “நீங்கள் இப்போது இரண்டறக்கலந்து இருக்கின்றீர்களா? என மறு வினாத்தொடுத்தார்கள். அதற்கு அவர் “இல்லை” என விடயளித்தார்! அதனால்தான் இரண்டறக்கலக்க வேண்டுமெனக் கூறுகிறோம் என விளக்கமளித்தார்கள்.
இரண்டறக்கலப்பது கட்டாயம்... மிக முக்கியமென நாம் கூறுகிறோம். நீங்களும் இரண்டறக்கலக்க முயற்சிக்க வேண்டும்! எல்லாமே ஒன்று எனக்கூறிக்கொண்டு நான் இரண்டறக் கலக்கவில்லை எனச் சொன்னால் எப்படி? அது சரிவராது! இரண்டறக்கலப்பது என்றால் ஐஸும் தண்ணீரும் போல ஆகிவிட வேண்டும்!.
நிய்யத்தின் அவசியம்!
கேள்வி கேட்டவர் மீண்டும்; வாப்பா! தொழுவதற்கு நிய்யத் செய்து விட்டுத்தான் தொழ வேண்டுமா? எனக் கேட்டார்! அதற்கு வாப்பா நாயகமவர்கள். நீங்கள் கடைக்குச் சென்று ஒரு சாமான் வாங்கிவர வேண்டுமென எண்ணிக்கொண்டு செல்கிறீர்கள். சாமான் வாங்கிவர நிய்யத் செய்யாமல் (எண்ணாமல்) ஏதோ செய்துவிட்டு வந்தால் சாமான் வாங்கிவர முடியுமா?
அதுபோலத்தான் தொழுகையும். நிய்யத் அவசியம் வைக்க வேண்டும். நிய்யத் பர்ளு. அது இல்லையென்றால் தொழுகையே இல்லை. அதுவும் கிப்லாவை முன்னாக்கி நின்று அந்தந்தத் தொழுகைக்கென நிய்யத் இருக்கிறது! அதனைச் செய்து தொழவேண்டும். எல்லாவற்றுக்கும் நிய்யத் இருக்கிறது. நாம் கவனமாகப் பார்த்துத்தான் வெளியே போகவேண்டும். அப்படி இல்லையென்றால் எங்காவது போய்த் தட்டுத்தடுமாறி முட்டிக்கொள்ள வேண்டிவரும். “மனதில் இப்படித்தான் செய்ய வேண்டுமென எண்ணுவதுதான் நிய்யத்” என்பது. அது ஒரு புரோகிராம் (திட்டமிடல்) மாதிரி. நிய்யத் இல்லாத எந்த ஒருசெயலும் ஏற்றுக்கொள்ளப்படாது! வஹ்ஹாபிகளுக்கு ஏற்றுக் கொள்ளப்படும்!? ஏனெனில் கண்ணை மூடிக்கொண்டு கண்டமாதிரி தொழுவதால் அவர்களுக்கு அது சரி! அவர்கள் தொழுவதில்லையே! விழுந்து விழுந்து எழுவதுதானே! உண்மையான முஸ்லிம்களுக்கு கட்டாயம் நிய்யத் இருக்கவேண்டும்.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் எந்த நோக்கமுமின்றிச் சென்று சும்மா வெறுமனே புத்தகத்தை வாசித்து நோட்டிலே கிறுக்கிவிட்டு வந்தால் படித்ததாகுமா? ஓர் ஆசிரியர் பிள்ளைகளுக்குப் பாடம் போதிக்குமுன் நான் இன்று இந்தப் பாடத்தைத்தாம் படிப்பிக்கப்போகிறேன் என அதற்குத்தகுதியான முறையில் தயாராகிச் செல்ல வேண்டும். நிய்யத் என்பது விளையாட்டல்ல! வஹ்ஹாபிகள் நிய்யத்தை ஒரு பக்கத்திலே போட்டு பர்ளை மறுகையில் போட்டு பந்து விளையாடுவதுபோல விளையாடுகிறார்களே அதுபோன்ற விஷயமல்ல. நீங்கள் இத்தனை காலமும் நிய்யத் இல்லாமல் தொழுது வந்து இருந்தால் அத்தனையும் வீணாகப் போய்விட்டதென நினைத்துக் கொள்ளுங்கள். மறுமைக்குப் போனபின்தான் தெரியும்! நிய்யத் இன்றி இரண்டு ரக்அத் தொழுது முடித்துவிட்டால் கையை விட்டு விட்டு மீண்டும் நிய்யத்தை வைத்து தொழுதாக வேண்டும். தக்பீர்கட்டுவதற்கு முன் நிய்யத் வைத்துக் கொள்ள வேண்டும். நிய்யத் வேண்டாம் என்பதெல்லாம் வஹ்ஹாபிகளின் பேச்சு! கவனமாக இருக்க வேண்டும்.
ஸலவாத்தின் சிறப்பு!
அப்போது ஒருவர் சலவாத்தைப்பற்றி விளக்கவேண்டுமென வேண்டிக் கொண்டார்! அதற்கு வாப்பா நாயகம் அவர்கள்....
ஸலவாத்து என்பது பிரபஞ்சத்துக்கே ஒரு முழு துஆவாகும்! ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருநாமம் அதில் கூறப்படும் ! அவர்களின் பெயர் அதில் மகிமைப்படுத்தப்படுவதால் ஸலவாத்து வேண்டாம்! வேண்டாம்! என வஹ்ஹாபிகள் தடுக்கிறார்கள். நாங்கள் எத்தனை தடவை ஸலவாத்து ஓதிக்கொண்டு போகிறோமோ அத்தனை தடவை அது நமக்கு உதவி செய்யும்! நாம் முன்னரே ஒரு நிகழ்ச்சியை உங்களுக்குக் கூறியிருக்கிறோம். உங்களுக்கு நினைவில் இருக்கிறதோ இல்லையோ! (அதனை மீண்டும் கூறுகிறோம்).
நடந்த நிகழ்ச்சி!
எங்கள் ஊரில் உள்ள ஒரு முஸ்லிம் இன்ஸ்பெக்டர். அவர் பள்ளிக்கு வந்து தொழுது விட்டு வெளியே வந்திருக்கிறார். அவருடன் கூட வந்த போலீஸ்காரர் அங்குமிங்கும் சுற்றிப்பார்த்து விட்டு வந்து “நீங்கள் இப்போது வெளியே போக வேண்டாம்! இங்கேயே இருங்கள். நான்கைந்து பேர் உங்களைத் தாக்குவதற்குக் காத்திருப்பது போலத் தெரிகிறது; எனவே வெளியே போகவேண்டாம்! எனத் தெரிவித்தார்! அப்போது இன்ஸ்பெக்டர் இல்லை... இல்லை... அந்த வழியாகத்தான் செல்ல வேண்டும்! வரும்போது நீ காரை ஓட்டிவந்தாய்! இப்போது நான் ஓட்டிவருகிறேன் என்று கூறி காரில் ஏறிப் போகிறார்கள்.
அப்போது சிலர் அவருக்குப் பின்னாலிருந்து துப்பாக்கியை எடுத்து சுடுவதற்கு குறிவைத்தார்கள். உடனே அவர் கீழே பாய்ந்து எதிரிகளை சுடத்தெடங்கினார். அவர்களின் மீது குண்டு பட்டிருக்கிறது. அவர்கள் ஓடிவிட்டார்கள். இவருக்கு எந்தக்காயமும் இல்லை. சுற்றிப்பார்த்ததில் குண்டடிபட்டவன் மட்டும் இருந்தானாம். அப்போது அவர் சொன்னாராம். நான் காப்பாற்றப்பட்டதன் ரகசியம் என்ன தெரியுமா? தொழுது முடித்து விட்டு இத்தனை தடவை ஸலவாத் ஓதிவிட்டுத்தான் வெளியேவந்தேன் என்றாராம்.
ஸலவாத்தின் சிறப்பைப்பாருங்கள்! இது எங்கள் கண்முன்னே நடந்தவிஷயம். எங்கள் வீட்டுச்சுவரிலெல்லாம் புல்லட் பட்டிருந்தது. கொஞ்சம் நிமிர்ந்து நின்றிருந்தால் எங்களுக்கும் பட்டிருக்கும். எங்கள் மகளார் கிணற்றடியில் இருந்தார். அங்கே ஒரு லெட் இருந்தது. அந்த சுவர் மறைப்பு இல்லை யென்றால் கதவைப்பிய்த்துக் கொண்டு உள்ளே வந்திருக்கும். அவருக்கு இத்துனை பெரிய ஆபத்துவந்தும் சலவாத்தால் அல்லாஹ் அவரைக் காப்பாற்றி இருக்கின்றானே! அல்லாஹ் நமக்கு இந்த சலவாத்தை வழங்கியிருப்பதற்கு இதுதான் காரணம். பதினைந்து தடவை சலவாத்து ஓதிவிட்டு வெளியே செல்லுங்கள் அல்லாஹ் உங்களைப்பாதுகாப்பான்! பிஸ்மில்லாஹில்லதீ எப்போதும் ஓதிவாருங்கள். சலவாத்தை மறந்து விடாதீர்கள் அது மிக முக்கியமானது!
அப்போது ஒருவர் எழுந்து
நம்மில் ஒன்றித்தபோது பாபங்கள் நீங்கும்!
என கஸீதத்துல் அஹ்மதிய்யாவில் தங்களின் வாரிதாத்து பைத்தில் குறிப்பிட்டுள்ளது பற்றி விளக்கவேண்டும் வாப்பா! எனக் கேட்டுக்கொண்டார்.
அதற்கு சங்கைமிகு செய்குநாயகம் அவர்கள்....
அல்லாஹ்வை நாடியவரது பாபமெல்லாம் போய்விடும் அல்லாஹ்வை நாடாதவரின் பாபங்கள் அவரிடம் இருந்து கெண்டே இருக்கும்.
அங்கே “நாம்” எனச் சொன்னது எம்மைக் கருதிச் சொன்னதல்ல இப்படிச்சொல்வது ஞான இலக்கியத்தில அது ஒரு போக்கு (சிரித்துக் கொண்டே) நான் என்ன சொல்வது? என்று கூறினார்கள்)