• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

அறிவியல்

வலிமார்களின் ஆபரணம்
வலிகளின் நிவாரணம்
தொழுகை

 


விண்ணில் உள்ள விண்மீண்கள், சூரியன், சந்திரன் மற்றும் அனைத்துக் கோள்களும் (பூமி உட்பட) அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்கின்றன! விண்ணில் உள்ள அனைத்துக் கோள்களும் தங்களுக்குள்ளே நீள்வட்டப் பாதையில் சுழன்று வருகின்றன. அவை கணக்கின்படியே சுழல்கின்றன. இறைவனின் கட்டளையின்படி நீள்வட்டப் பாதையில் வல்லான் வகுத்தபடி சுழன்று வருவதே அவைகளுக்கு உள்ள சிரவணக்கம் ஆகும். இதுபோல பூமியில் உள்ள மலைகளும் நிலையாக நின்று ஸுஜூது செய்கின்றன. நபி தாவூத் (அலை) அவர்கள், காலையிலும் மாலையிலும் மலைப்பகுதியிலிருந்து கொண்டு அல்லாஹ்வின் புகழைப்பாடும் பொழுது (தஸ்பீஹ்  செய்த பொழுது) மலைகளும் தங்கள் எதிரொலியின் மூலமாக தாவூத் (அலை) அவர்களுடன் சேர்ந்து கொண்டு தஸ்பீஹு செய்ததை இறைவன் கீழ்க்காணும் வசனத்தின் வாயிலாகச் சுட்டிக் காட்டுகிறான்.

நிச்சயமாக நாம் மலைகளை அவருக்கு (தாவூதுக்கு) வசப்படுத்திக் கொடுத்தோம்; மாலை வேளையிலும் காலை வேளையிலும் அவை அவருடன் சேர்ந்து (நம்மைத் துதித்து) தஸ்பீஹு செய்தன (ஸாத் - 38:18)

அடுத்து, விலங்கினங்கள் பொதுவாக நான்கு கால்களால் நின்றுகொண்டு, தலையைக் கீழ்நோக்கிய வண்ணம் வைத்துக் கொண்டு ருகூஉ நிலையிலேயே உள்ளன. ஆனால் அமரும் போது ஸஜ்தா நிலைக்குச் செல்கின்றன. இவை மிருகங்களின் வணக்க முறையாகும்.

மலக்குகள் (வானவர்கள்) ஸுஜூது செய்வதைப் பற்றிக் கீழ்க்கண்ட வசனங்கள் எடுத்தியம்புகின்றன.

மேலும் மலக்குகள் கூறுகிறார்கள்; குறிப்பிடப்பட்ட ஓர் இடம் இல்லாதவராகத் திடமாக எங்களில் எவருமில்லை. நிச்சயமாக,  நாங்கள் (அல்லாஹ்வின் ஏவலை எதிர்பார்த்து) அணிவகுத்தவர்களாகவே (நிற்கின்றோம்) மேலும் நிச்சயமாக நாங்கள் (அல்லாஹ்வைத் துதி செய்து) தஸ்பீஹு செய்பவர்களாக இருக்கிறோம்.  (அஸ்ஸாஃப்ஃபாத் - 37:164, 165, 166)

மலக்குகள் (வானவர்கள்) அங்கிங்கெனாதபடி எல்லா விடங்களிலும் (வானம், பூமி) அவரவர்களுக்குரிய குறிப்பிட்ட இடத்தில் இருந்து இறைவனது கட்டளைகளுக்குப் பணிந்து (ஸுஜூது செய்து) இட்ட வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். மேலும் அல்லாஹ்வைப் புகழ்ந்து தஸ்பீஹ் செய்த வண்ணமும் இருக்கிறார்கள். ஸுப்பூஹுன் குத்தூஸுன் றப்புல் மலாயிக் கத்தி வர்றூஹி என்பது மலக்குகளது தஸ்பீஹுகளில் ஒன்று என்று கூறப்படுகிறது.

ஆக, இவ்வாறு தாவரங்கள், பறவைகள், பிராணிகள் ஆகிய உயிரினங்கள் ருக்கூவிலோ ஸஜ்தாவிலோ இறைவனைத் தஸ்பீஹ் செய்த வண்ணமிருக்கின்றன. மிருகங்கள் பொதுவாக ருக்கூவில் ஸுப்ஹான றப்பியல் அலீம் என்று கூறப்படுவது மர்த்தபத்துல் ஹைவானை (மிருக நிலையை) குறிக்கும். தாவரங்கள் எப்பொழுதும் ஸுஜூதில் இறைவனைத் தஸ்பீஹ் செய்கின்றன. ஸுஜூதில் ஸுப்ஹான றப்பியல் அஃலா என்பது மர்த்தபத்துன் நபாத்தை (தாவர வர்க்க நிலையைக் குறிக்கும்)

ஆனால் இறைவன் மனிதனை மட்டும் ருக்கூவிலோ அல்லது ஸுஜூது நிலையிலோ படைக்காமல் நிமிர்த்தி நிற்கச் செய்துள்ளான். அல்ஹம்து லில்லாஹ். தலைப்பகுதியை நிமர்த்து இரு கைகளையும் கொடுத்து மற்ற உயிரினங்களுக்கு இல்லாத ஓர் உன்னத நிலையில் மனிதனை இறைவன் படைத்திருக்கிறான்.

நல்லவற்றையும், தீயவற்றையும் பிரித்து அறியும் பகுத்தறிவு, எழுத்தாற்றல், எழுத்தொலியுடன் தெளிவாகப் பேசும் திறன், சிரிக்கும் பண்பு, மற்ற உயிரினங்களை அடக்கியாளும் திறன், அறிவியல் ஆராய்ச்சி, ஆத்மிக சிந்தனை போன்ற இன்னோரன்ன பல சிறப்பியல்புகளைப் பெற்று மனிதன் உயர்ந்து நிற்கின்றான்.  அதனால்தான் திடமாக நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம் (95 : 4) என்று இறைவன் கூறுகின்றனான். நாம் மற்ற படைப்பினங்களைப் போல ருகூஉ, ஸஜ்தா ஆகிய நிலைகளில் இல்லாத ஒரு நிலையில் படைக்கப்பட்டிருப்பதால் நாமும் அவற்றைப் போல ருகூஉ, ஸஜ்தா செய்து இறைவனைத் துதி செய்ய வேண்டும் என்பதற்காகவே நமக்குத் தொழுகை வல்ல நாயனால் கடமையாக்கப்பட்டுள்ளது எனலாம். மேலும் பிற படைப்பினங்க ளெல்லாம் படைத்தவனையே வணங்குவதுபோல மனிதனும் தன்னைப் படைத்தவனையே வணங்க வேண்டும் என்பது படைத்தவனது கட்டளை. இவற்றைக் கீழ்க்காணும் இறைவசனங்கள் அறிவிக்கின்றன.

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஉ செய்யுங்கள் இன்னும் ஸஜ்தாவும் செய்யுங்கள்; இன்னும் உங்கள் இறைவனை வணங்குங்கள்; மேலும், நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு நன்மையே செய்யுங்கள்.    ( அல்ஹஜ் - 22:77)


நம் வசனங்களின் மேல் நம்பிக்கை கொண்டோர் யாரெனில் அவர்கள், அவற்றின் மூலம் நினைவூட்டப்பட்டால், அவர்கள் விழுந்து ஸுஜூது செய்தவர்களாய்த் தம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பார்கள்; அவர்கள் பெருமையடிக்கவும் மாட்டார்கள்.  (அஸ்ஸஜ்தா - 32:15)


ஆக, தொழுகை இஸ்லாத்தின் தூண் என்று அறிகிறோம். தொழுகையை நிறைவேற்றாதவர்களுக்கு இஸ்லாத்தில் எவ்விதப் பங்கும் கிடையாது என்று நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ளார்கள். தொழுகை சுவர்க்கத்தின் சாவி ஆகும். மேலும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி நிலைகளை எடுத்துக் காட்டுவதற்காகத் தொழுகை அமைந்திருப்பதை விலங்கியல் அறிஞர்கள் வியந்து ஏற்றுக் கொள்வர்.

யோகா பயிற்சி செய்பவர்கள் தொழுபவர்களைத் தொழுது கொண்டிருக்கும் நிலையில் கண்டால் தொழுகையாளிகள் யோகா பயிற்சியில் ஈடுபட்டிருப்பது போல் காணப்படும் யோகாசனங்களில் ஒருவகை “வஜ்ராசனம்” எனப்படும். வஜ்ராசனம் என்பது வலது காலை மடக்கி அந்தக் காலை வலது புட்டத்திற்குக் கீழும், அதுபோல் இடதுகாலை மடக்கிப் பாதத்தை இடது புட்டத்திற்குக் கீழும் வைத்து முழங்கால்கள் இணைந்த நிலையில் உள்ளங்கையைத் தொடையின் மேல் பாகத்தில் வைத்து உடலைத் தளர்வாக வைத்து நேராக நிமிர்ந்து உட்காரும் நிலை (த்வே) ஆகும்.  இவ்வாறு செய்வது தியானம் செய்வதற்கு ஏற்றது என்று யோகாசனத்தில் சொல்லப்படுகிறது. இந்த யோகாசனம் மூட்டுத் தசைகளைத் தளர்த்தி வயிற்றின் கீழ்ப்புறப்பகுதி அதிக இரத்த ஓட்டத்தைப் பெறச் செய்கிறது. இந்த வஜ்ராசன நிலையைப் போன்றே தொழுகையில் ஸஜ்தாவிற்குப் பின், இருப்பில் அமரும் நிலை (இஃதிதால் அல்லது ஜல்ஸா) உள்ளது. மேலும் யோகாசனப் பயிற்சியில் உள்ள பல நிலைகளில் முதுகை நேர்க்கோடு போல் நேராக நிற்கும் ஸ்திதி நிலை உள்ளது.  இது தொழுகையில் சமநிலையில் நிற்கும் கியாம் நிலை போன்றதே.


அடுத்து யோகாசன முறையில் இடுப்பைக் கீழ்நோக்கி வளைத்துத் தரையை நோக்கி குனிந்திருக்கும் நிலை (த்ரீனி) உண்டு. இது தொழுகையில் உள்ள ருகூஉ நிலையைப் போன்றதே. இவ்வாறு தொழுகை மனதை ஒருமுகப்படுத்தி இறைவனை வணங்குவதற்கு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தைப் பெறவும் வழிவகுக்கிறது.  தொழுகை வலி நிவாரணியாகவும் திகழ்கிறது என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களுடைய ஹதீஸின் வாயிலாக அறிகிறோம்.


நான் வயிற்றுவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். நபியவர்கள், அபூஹுரைராவே! வயிற்று வலியா? என்று என்னிடம் வினவினார்கள். அதற்கு நான் ஆம் யாரஸூலல்லாஹ்! என்றேன். அதற்கவர்கள் எழும்பித் தொழுவீராக! நிச்சயமாகத் தெழுகையில் நோய் நிவாரணம் உண்டு என்று எனக்குக் கட்டளையிட்டார்கள் (நூல்: இப்னு மாஜா, அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி))


தொழுகை இஸ்லாத்திற்கு யோகா என அறிஞர் அஷ்ரஃப் எஃப் நிஜாமி தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார்.