நல்லெண்ணம்
தமிழ் மண்ணில் வேர்கொள்ள
முடியவில்லை!
பழ. கருப்பையா
அரசியல் நிருணய சபை தேசிய மொழி குறித்து விவாதிக்கிறது. பல்வேறு வகையான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஒருவர் சமக்கிருதத்தைத் தேசிய மொழியாக ஆக்க வேண்டும் என்று கூடச் சொல்கிறார்.
ஆங்கிலமே நீடிக்க வேண்டும் என்று சொல்கிறவர்களும் இருந்தார்கள். ஆனாலும் இந்தியின் குரலே கனமான குரலாக இருந்தது.
பக்குவமடைந்த பூரணத்துவம் இல்லாத இந்தியை ஆட்சி மொழியாக ஆக்குவது பயனற்றது என்றொரு குரல் இடைமறித்து ஒலிக்கிறது. எந்த ஒன்றையும் அதன் தகுதியின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டுமே ஒழிய, எண்ணிக்கை அடிப்படையில் தீர்மானிக்கக் கூடாது என்று அந்தக் குரலுக்குரியவர் ஆணித்தரமாக இந்திக்கு எதிரான வாதங்களை அடுக்கி மொழிகிறார். இந்திக்காரர்கள் உறைந்து போய் விடுகின்றனர்.
ஆங்கிலத்தைப் பரிந்து பேசுவோர் கூட்டத்தில் இவரும் ஒருவராக இருப்பார் போலும் என்று அவர்கள் கருதிக் கொண்டிருக்கும்பொழுது, விடுதலை அடைந்த இந்தியாவின் ஆட்சி மொழியாக ஓர் இந்திய மொழியே இருக்க வேண்டும் என்று அந்தக் குரலுக்குரியவரின் வாதம் தொடர்கின்றது. அவையோ குழப்பமடைகிறது. இவர் யார்? என்ன சொல்வதற்கு அடித்தளமிடுகிறார்?
குரலுக்குரியவரின் பெயர், அவருடைய நீண்ட உடை, தொப்பி, அவர் முகத்தை அலங்கரிக்கும் தாடி இவை அனைத்தையும் கணக்கில் கொண்டு, இவர் உருது தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்று சொல்ல வருகிறவராக இருப்பார் என்று எண்ணிக் கொள்கிறது அவை.
காந்தியே உருதுவை ஒதுக்கிவிட்டு இந்தியா நிலை கொள்ள முடியாது என்று கருதினார். அதனால், அவர் இந்துத்தானி என்றொரு கலப்பு மொழியை முன்மொழிந்து பேசிக் கொண்டிருந்தார் ஈசுவர அல்லா தேரே நாம் என்றவர் காந்தி. ஈசுவரன் என்று சொன்னால் என்ன அல்லா என்று சொன்னால் என்ன என்று கேட்ட காந்தி, அவர்கள் இருவரின் மொழியையும் இணைத்து ஒரு கலவை மொழியை உருவாக்கி அதற்கு இந்துத்தானி என்று பெயரிட்டார். மொழிகளை இணைத்தால் மனிதர்கள் இணைந்து விடுவார்கள் என நம்பினார், பேரறிவுடைய பெம்மான் காந்தி. இந்துத்தானி எடுபடவில்லை. அது இந்துவுக்கும் பிடிக்கவில்லை. முஸ்லிமுக்கும் பிடிக்கவில்லை.
பேசுகிறவர் தொடர்கிறார். இந்தியா பெரிய நாடு. அதன் அலுவல் மொழியாகத் திகழத்தக்க மொழி சொல்வளம் மிக்க மொழியாக இருக்க வேண்டும். புதிய சொற்களை உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல் உடையதாக இருக்க வேண்டும். இலக்கண இலக்கிய வளமுடையதாக இருக்க வேண்டும். தொன்மையினதாகவும் இருக்கவேண்டும்.அத்தகைய மொழி தான் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். இவர் எதைச் சொல்ல வருகிறார்? உருதுவுக்கு அவ்வளவு தொன்மை இல்லை. ஒருவேளை மிகவும் தொன்மை என்பதால் சமக்கிருதமாமோ? அது தொன்மையும் எல்லாச் சிறப்புகளும் உடைய மொழிதான். அவை மேலும் குழம்புகிறது. வாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்து அவர் அழுத்தந் திருத்தமாக ஆணித்தரமாக மொழிகிறார். இந்தியாவின் ஆட்சி மொழியாகுவதற்குத் தகுதியுடைய மொழி தமிழ்தான்!
அவர் அத்தோடு முடிக்கவில்லை. அதுதான் என் தாய்மொழியும் கூட என்று சொல்லி முடிக்கிறார்.
மேசைகள் தட்டப்படவில்லை. ஆரவார முழக்கங்கள் எழவில்லை. அந்த அரசியர் நிருணய சபையில் இன்னும் பல தமிழர்கள் இருந்தார்கள். அவர்களில் யாரும் இவரை வழிமொழிந்து பேசவில்லை. அவ்வாறு பேசியவர் முஹம்மது இஸ்மாயில் சாஹிபு அவர்கள். அதுதான் அவருடைய இயற்பெயர். அவர் திருநெல்வேலி பேட்டையில் பிறந்தவர். பின்னாளில் இயற்பெயர் முற்றாக மறைந்து காயிதே மில்லத் என்ற புகழ்ப் பெயராலேயே அறியப்பட்டவர்.
காயிதே மில்லத் அரசியல் நிருணய சபையில் வைத்த வாதத்தால் இந்திய அளவில் இந்தி குறித்த நிலையில் மாற்றமோ, தமிழுக்கு ஏற்றமோ வந்துவிடவில்லை என்றாலும், தமிழ்நாட்டு உணர்வுப் போக்கில் அவருடைய அழுத்தமான சிந்தனைப் போக்குப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியது. அரசியல் நிருணய சபையில் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் பேசியது 1949 செப்டம்பர் 14 ல். அந்த காலக்கட்டம் அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் முளைவிட்டிருந்த காலம். பெரியார் ஒரு பக்கம். அண்ணா இன்னொரு பக்கம். பாணினி சமக்கிருதத்திற்கு வரைந்த மொழி இலக்கணம் என்பதற்கு மேலே பல படிகள் சென்று, தமிழுக்கு எழுத்து, சொல் ஆகியவற்றின் இலக்கண வரையறைகளோடு, பொருளிலக் கணமும் வரைந்தான் தொல்காப்பியன். உலக மொழிகளிலேயே பொருளிலக்கணம் பெற்ற ஒரே மொழி தமிழ்தான்.
மொழி, இன உணர்வில் திராவிட இயக்கத்தோடு, காயிதே மில்லத் கைகோர்த்து நின்றது திராவிட இயக்கம் வலிமை பெறவும் தமிழன் என்னும் இன உணர்வு கெட்டிப்படவும் மிகப் பெரிய அளவுக்குக் காரணமானது.
முஹம்மது இஸ்மாயில் சாயுபு அவர்கள் காயிதே மில்லத் என்று அழைக்கப்ட்டது போல, முஹம்மது அலி ஜின்னா காயிதே ஆசம் என்று அழைக்கப்பட்டார்.
பாக்கிஸ்த்தானின் தந்தையான முஹம்மது அலி ஜின்னாவோடு காயிதே மில்லத்திற்கு நல்ல உறவு இருந்தது. அவருடைய கராச்சி மாநாட்டுக்கெல்லாம் முற்காலங்களில் சென்று வந்தாலும் கூட, முஸ்லிம் என்பதை காயிதே மில்லத் தன்னுடைய நாட்டுப் பற்றுக்கும் மொழிப் பற்றுக்கும் குறுக்கே வர அனுமதிக்கவில்லை.
இந்தியாவில் இரண்டு விதமான விநோத மாநிலங்கள் இருந்தன. ஒன்று: காசுமீர், இன்னொன்று: ஐதராபாத். காசுமீரில் முஸ்லிம்களே பெரும்பான்மையினர். அதை ஓர் இந்து மன்னர் ஆண்டார்!
ஐதராபாத்தில் இந்துக்களே பெரும்பான்மையினர். இதை ஒரு முசுலிம் மன்னர் ஆண்டார்! காசுமீர் இந்து மன்னரால், சேக் அப்துல்லா போன்ற மக்கள் தலைவரின் ஆதரவுடன், இந்தியாவில் இணைக்கப் பட்டது.
ஆனால், ஐதராபாத் நிசாம் இந்தியாவுடன் இணைய மறுத்து முரண்டு பிடித்தார். போலீஸ் நடவடிக்கையால் சில மணி நேரங்களில் நிசாமை மண்டியிட வைத்தார் இரும்பு மனிதர் வல்லபாய் படேல். அந்த நடவடிக்கையை ஆதரித்தார் காயிதே மில்லத். எல்லாவற்றிற்கும் மேலாக, சீனா 1962 - இல் இந்தியா மீது பாய்ந்த போது, அந்தப் போரில் பங்கு கொள்ள தன்னுடைய ஒரே மகனைப் போர்முனைக்கு அனுப்புவதாக நேருவுக்கு எழுதுகிறார். நெகிழ்ந்து போகிறார் நேரு. யாருக்கும் எந்தப் பரிந்துரையுமே செய்து பழக்கப்பட்டிராத இராசாசி, காயிதே மில்லத்தின் பேத்திக்கு மருத்துவக் கல்லூரிக்கு இடமளிக்கச் சொல்லிப் பரிந்துரைத்தபோது, ஒரு தேச பக்தரின் பேத்தி என்று அடையாளப்படுத்துகிறார்.
காயிதே மில்லத் அடிப்படையில் திருநெல்வேலித் தமிழன். அந்த உணர்வு அவருடைய இரத்த அணுக்களில் கலந்திருந்தது. காயிதே ஆசம் முஹம்மது அலி சின்னாவிடமிருந்து வேறுபட்டு நிற்க காயிதே மில்லத்தால் முடிந்தது. காயிதே மில்லத் நல்ல முசுலீமாகவும் இருந்தார். அவர்களுடைய உரிமைகளுக்குப் பாடுப்பட்டார். குரல் கொடுத்தார். போராடினார்.
நாங்கள் ஷரீஅத் சட்டத்தைக் கடைப்பிடிப்பதிலும், எங்கள் மார்க்க முறைப்படி மணந்து வாழ்வதிலும் உங்களுக்கென்ன சிரமம் இருக்கிறது? என்னும் கேள்வியைச் சீற்றத்துடன் எழுப்பும்போது அவர் சிறுபான்மை மக்களின் காவலனாக வெளிப்படுகிறார்.
முஹம்மது அலி ஜின்னாவின் பார்வை முற்றாக மதவழிப்பட்டது. அவருக்கு மதம்தான் நாட்டுக்கான அடிப்படை. நீங்கள் வேறு. நாங்கள் வேறு; நாகரீகம் வேறு வேறு; பண்பாடு வேறு; பழக்கவழக்கங்கள் வேறு வேறு; வாழ்க்கை முறை வேறு வேறு; மொழி வேறு; இனம் வேறு; நீங்களும் நாங்களும் ஒன்றாக இருக்க முடியாது என்றார் சின்னா.
எல்லாவற்றிலும் முக்கியமானது, இந்துக்களாகிய நீங்கள் பெரும்பான்மையினர். முஸ்லிம்களாகிய நாங்கள் சிறுபான்மையினர். எங்களை அடித்துத் துவைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவீர்கள். உங்களுக்குக் குற்றேவல் செய்து வாழ நேரிடும். ஆகவே, இந்தியாவை மதவழியாக உடையுங்கள் என்றார், சின்னா. அவருடைய பேச்சில் பொருளில்லை என்று சொல்ல முடியாது. குடியாட்சி என்பது குறைகளே அற்ற ஆட்சி இல்லை. குறைவான குறைகளை உடையது. அவ்வளவு தான். ஆனால், குடியாட்சியில் பொறுத்துக் கொள்ள முடியாத, மிகவும் கேவலமான தன்மை ஒன்று உண்டென்றால், அது பெரும்பான்மை மக்கள் சிறுபான்மை மக்களைக் கொத்தடிமைகளாக்கி விட முடியும் என்பதுதான்.
இதைச் சட்டப்படியே செய்ய முடியும். எண்ணிக்கை வலிமைதானே குடியாட்சி. மொழி வழிச் சிறுபான்மையரும், மதவழிச் சிறுபான்மையினரும் அச்சமின்றி வாழ்ந்தால்தான் இந்தியா ஆசியாவின் இரண்டாவது பெரிய நாடாக வரைபடத்தில் எஞ்சும் என்பது எம்மான் காந்திக்குப் புரிந்திருந்தது. குசராத் போர்பந்தரில் அந்தப் பத்லிபாய் ஒரு புத்திரனைப் பெற்றிருக்காவிட்டால், இந்தியா ஏது? வெள்ளைக்காரன் பங்கு பிரித்துக் கொடுத்துவிட்டுத்தான் கப்பல் ஏறி இருப்பான். காந்தியின் செல்வாக்கும், நேரு போன்றவர்களின் நடை முறையும், சமயச் சார்பின்மை, மற்றும் மொழி வாரி மாநிலங்களும், மதவழி வெறுப்பும், அதன்வழி எதிர்ப்பும் ஏற்படாதவாறு தடுத்தன. அதனால் தான் காயிதே மில்லத் இந்திக்கு எதிராகக் கச்சை கட்டினார்.
தமிழ்ப் போரில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கு கொண்டனர். கால்டுவெல்லும், போப்பும், பெசுகி முனிவரும் வளர்த்த தமிழ்தானே. அதே மொழிப் போரில் இசுலாமியர்கள் பங்கு கொண்டதற்கும், தமிழின உணர்வாளிகளாக அவர்கள் முன்னின்றதற்கும், முசுலீம் லீக் மட்டுமே தங்களின் கட்சியாக இருக்க முடியும் என்று கருதாமல், தமிழன் என்னும் அடிப்படையில், திராவிட இயக்கங்களில் பெரியார் மற்றும் அண்ணாவைப் பின்பற்றுவோராக அவர்கள் திகழ்ந்ததற்கும், மொழிப் போரில் காயிதே மில்லத் போன்றவர்கள் முன்கை எடுத்ததுதானே காரணமாய் இருக்க முடியும். மதவழிக் கேள்விகளுக்கு முசுலீமாய் நின்று முடிவு கண்டார் காயிதே மில்லத். தமிழா? இந்தியா? என்ற கேள்விக்குத் தமிழனாய் நின்று முடிவு கண்டார். வங்கதேசப் போரில் இந்தியாவா பாக்கிஸ்த்தானா என்னும் கேள்விக்கு இந்தியனாய் நின்று முடிவு கண்டார்.
மத வழி நாடு கொண்டார் காயிதே ஆசம் முஹம்மது அலி ஜின்னா. இன வழியாக வங்க தேசம் உடைந்து போனது. தமிழ் இன வழி அடையாளங் கண்டார் காயிதே மில்லத். தமிழ் மண்ணில் இந்துத்துவா வேர் கொள்ள முடியவில்லை!