மறைஞானப் பேழை நிறுவனர்
அஷ்ஷைகுல் காமில்
குத்புஸ்ஸமான் ஷம்ஸுல் வுஜூத்
ஜமாலிய்யா
அஸ்ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா
அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள்
தரீக்காக்கள் ஒற்றுமையை வளர்ப்பதற்காகவே உண்டாயின. ஒற்றுமையென்னும் போது அங்கு யாவற்றிலும் ஏகத்துவத்தைக் காண்பதாகும். ஏகத்துவத்தைக் காணுமிடத்தில் பிரிவினை இராது. பிரிவினை உண்டாகும் போது தரீக்காவின் தாற்பரியத்தை அடைதல் இயலாது போகும். எனவே, தரீக்காக்கள் நோக்கமிழந்து சங்கங்களாக மாறி அவற்றின் புனிதத்தன்மையும் நீங்கிவிடுகின்றது.
சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள்
ஷரீஅத்தும் ஹகீகத்தும் பூமியும் வானமும் போன்றது. அதுவே உயிரும் உடலும் போன்றது. ஷரீஅத்தின் படியில் ஏறியவர்கள் அப்படியே நின்றுவிடாது ஹகீகத்தின் படியில் நிச்சயம் ஏறுதல் வேண்டும். உயிர் இல்லாவிட்டால் உடல் என்ன செய்யும்? உயிரில்லாத உடல் பிணமாகும். உயிரே மாபெரும் சக்தி. அது எதையும் செய்ய முடியுமானது. அதுவே ஜோதிப்பிரவாகம்.
உலகமே பொய்யானது. அதில் உள்ள எல்லாம் பொய்யானவை. வெளியிலே நம் கண்ணுக்குப் புலப்படும் அனைத்தும் பொய்யானவையே! அவற்றின் இரகசியமே (பாத்தினிய்யா) உண்மையானது. அது இல்லை என்னும் இரகசியத்தில் பொதிந்திருக்கும் உண்டு என்னும் மாபெரும் உண்மையாகும்.
(சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் கலீபா எஸ். அப்துல் கரீம் ஜமாலி அவர்களுக்கு அருளிய பட்டோலையிலிருந்து- நூல்: மனிதா))
• நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹள்ரத் ஸையிதுனா ஹஸன் (ரலி), ஹுஸைன் (ரலி), அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி), அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) போன்ற பருவமடையாத சிறார்களுக்கு பைஅத்துக் கொடுத்தார்கள். (தப்ரானி கபீர் - மஜ்மவுஸ்ஸவாயித்)
• பைஅத்துப் பெற்றுக்கொள்ளாமல் இறப்பவன் மடமைக்காலத்தில் இறப்பவனைப் போலாவான். (முஸ்லிம்)
• ஸய்யிதுனா ஹள்ரத் இமாம் ஷாபியீ (ரஹ்) அவர்கள் அதிகமாக ஸூஃபிய்யாக்களுடைய சபைகளுக்குச் சென்றுவரும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். அத்துடன் ஃபகீஹாக (மார்க்க சட்ட நிபுணராக) இருப்போர் அனைவரும் ஸூஃபிய்யாக்களுடைய இஸ்திலாஹைத் தெரிந்திருப்பது அவசியமாகும் என்றும், அவர்களுடைய சபைகளுக்குச் செல்வதால் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம் என்றும்; மேலும் ஸூஃபிய்யாக்களின் பாதையைப் பின்பற்றுவது எனக்கு இவ்வுலகில் மிகப்பிரியமான விஷயங்களில் ஒன்றாகும் என்றும் கூறினார்கள்.
மனிதனின் ராஜ்யத்தில் மானிட ஆத்மா அர்ஷ் என்னும் பீடமாய் இருக்கிறது. இதயம் தலையான அமரர் போன்றுள்ளது. மூளை குர்ஸியாகவும் சிந்தனையின் பொக்கிஷ அறை லெளஹ் ஆகவும் உள்ளன. இறைவன் இப்பிரபஞ்சத்தை ஆட்சி செய்வது போல எங்குள்ளது என்று சுட்டிக் காட்ட முடியாத ஆத்மா சடலத்தை ஆட்சி செய்கிறது.
அல்லாஹ் மகாப் பெரியவன் என்றால் இறைவன் தன் சிருஷ்டிகளை விடப் பெரியவன் என்று அர்த்தமல்ல. ஏனெனில் சிருஷ்டி என்பது அவனிலிருந்து வெளிப்பட்டதுதான். இது சூரியனிலிருந்து வெளிச்சம் வெளிப்படுவது போன்றதாகும். சூரியன் தன் வெளிச்சத்தை விடப்பெரிது என்றா சொல்வோம்? எனவே அல்லாஹ் மகாப் பெரியவன் என்பதன் அர்த்தம் இறைவனின் மகத்துவம் நமது அறியும் சக்தியைக் கடந்தது. தன்னை அறிந்தவன் தன் இறைவனை அறிந்தவனாவான். உன்புறத்தோற்றத்தை வைத்துக் கொண்டு உடல், முகம், கைகள் மற்றும் அவயவங்களை நீ தெரிந்துள்ளாய் என்ற நிலையில் நான் என்னை அறிவேன் என்று நீ கூறினால் அந்த அறிவு இறைவனை அறியும் ஞானத்துக்கு ஒருக்காலும் திறவுகோலாக இருக்க முடியாது. தம் ஆத்மாவின் ஜீவித நிலை கொண்டு இறைவனின் உள்ளமையை அறிந்து கொள்ள முடியும்.
மனிதனொருவன் இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றி சிறிது சிறிதாக உணர வேண்டுமாயின் அவன் ஒவ்வொரு மன நிலை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். அப்படிப் பார்த்தால் அவன் எத்தனை கோடிப் பிறவிகள் எடுத்தாலும் வெளிப்பட்ட இந்தப் பிரபஞ்சத்தினை முற்றிலுமாக அவனால் அறிந்து கொள்ள முடியாது. எல்லையற்ற காலம் கடந்தாலும் சரி, பிரபஞ்சத்தில் உள்ள எல்லா சக்திகளும் மனிதனின் ஆத்மா (ரூஹு) ஜீவித நிலை கொண்டுதான் இறைவனை அறிய முடியும்.