• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai   »  2014   »  Oct2014   »   பொக்கிஷம்


சிந்திக்க..

பொக்கிஷம்

A.N.M. முஹம்மது யூசுப் ஹக்கிய்யுல் காதிரிய் - கத்தார்

பொக்கிஷ­ம் என்பது புதையல், விலை மதிப்பற்றது, உயர்வானது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. அது கிடைப்பதற்கரியது என்பதும் உலக வழக்கில் பண மதிப்பில் உயர்வானது என்பதும் நன்கு தெரியும். ஆனால் இங்கு ஹதீஸ் குதுஸியில்  இறைவன் “நான் மறைக்கப்பட்ட பொக்கி­ஷமாக இருந்தேன். என்னை அறிய நாடி அனைத்தையும் படைத்தேன்” எனக்கூறும் அந்த இறையின் பொக்கிஷ­ம் எது என்பதையே நாம் அறிய நாடுகிறோம்.

ஆதி நிலையில் இறைவன் “அமா” நிலையிலேயே இருந்தான். அதில் இப்போது வெளியான அனைத்துமே அமைந்திருந்தது என்பதால்தான் இன்று தோற்றத்திலுள்ள அனைத்தும் மேலும் மறைவான அனைத்தும் அதனிருந்தே வெளியாகியுள்ளது. இல்லாத ஒன்று தோன்றாது. தோற்றத்தின் மூல வஸ்து என்பது எப்படியும் இருந்தே தீரும்.

திருக்குர்ஆன் என்பது இறைவனின் இறுதி வேதம் என்பதும் அதிலுள்ள அனைத்தும் சத்திய உண்மையே என்பதும், அதில் உலக ஆதி முதல் இறுதி வரையுள்ள அனைத்து விஷ­யங்களும் வெளியாகியுள்ளன என்பதும் எவரும் அறிந்ததே. குறிப்பாக அறிஞர் பெருமக்கள் இதை நன்கு உணர்ந்தேயுள்ளனர்.  இப்போது நாம் அதிலிருந்து மறைக்கப்பட்ட பொக்கி­ஷமாக இறைவன் இருந்ததைப் பற்றி ஆராய்வோம்.

இறைவனிலிருந்து தோன்றிய தன்னை அறியும் அறிவான அறிவுதான் நூரே முஹம்மதிய்யாவாக இறைவனின் ஆசையைப் பூர்த்தியாக்க வேண்டி வெளியானது.  இப்படி வெளியான இறைவனின் பூரண அறிவான நூரே முஹம்மதிய்யாவிலிருந்து படிப்படியாக பஞ்ச பூதங்களும், அதிலிருந்து உயிரினங்களும், தாவரங்களும் உண்டாயின. நூரே முஹம்மதிய்யாவிலிருந்து இவை அனைத்தும் வெளியானாலும் இறுதியில் மனித ரூபத்தில் ஆதம் அலைஹிஸ்ஸலாம் உண்டாகியது தான் நூரே முஹம்மதிய்யாவின் பரிபூரணத் தோன்று துறையாக இறைவனை அறிய வேண்டும் என்ற இறைவனின் ஆசையைப் பூர்த்தியாக்க வேண்டி வெளியாகியது. இப்படி வெளியாகிய ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களே நூரே முஹம்மதிய்யாவிலிருந்து வெளியாகி பின்பு நாமங்கள் வெளியாகத் தொடங்கின. 

எல்லோரும் இறைவனின் உண்மையை அந்த அந்த காலக் கட்டத்திலுள்ள அறிவு நிலைக்கு ஏற்ப தங்களின் தரஜாவின் நிலைக்கு ஏற்ப இறைவனின் ஆசையான தன்னை அறிய வேண்டும் என்ற நிலையைப் பூர்த்தி செய்தனர். வெளியளவில் பஞ்ச பூதங்களோ, பட்சிகளோ, தாவரங்களோ இறைவனை அறிய முடியவில்லை. அவை அனைத்தும் இறைவனின் “அமா” நிலையிலேயே அவனில் இருந்து வந்தன. ஆனால் மனிதன் வெளியாகிய போதுதான் தன்னைப் பற்றி சிந்திக்கும் நிலைக்கு உயர்த்தப்பட்டான். எனவே இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும் போது மனிதனை சிரேஷ்டமானவனாக இறைவன் வெளியாக்கியதை திருக்குர்ஆன் உணர்த்தியதை நாம் உணர இயலும். எனவே உலகத்தில் வெளியான அனைத்தும் மனிதனுக்காகவே. யார் இறைவனின் ஆசையாகிய தன்னை அறிய நாடியதை பூர்த்தி செய்கின்றார்களோ, அவர்களுக்காகவே வெளியானது என்பதை உணர இயலும்.


ஆனால் வெளியாகிய நபிமார்களோ இறைவனின் பூரண விருப்பத்தை  அவர்களுக்கு விதித்த வகையில் நிறைவேற்றி அப்போதைய முழுமையாக இருந்தார்கள். ஆனால் தோன்றிய பின்பு மனிதர்களோ உலகத்திலுள்ள வஸ்துக்களின் மேல் மோகங் கொண்டு இறைவனைப் பற்றி சிந்திக்காமலே உலக மாயையில் சிக்கிக் கொண்டனர்.

இறுதியாக காதமுன் நபி, சர்தாரே ஆலம், ரஹ்மத்துன் லில் ஆலமீன் நாயகம்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவதரித்தது முதல் இறைவனின் நாட்டம் முழுமைபெறத் தொடங்கியது. தன்னுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்ய தான் விரும்பிய தன்னுடைய மறைக்கப்பட்ட பொக்கி­ஷம் நூரே முஹம்மதிய்யாவின் வெளித் தோற்றமாய் மனித ரூபத்தில் வெளியாகியது. எந்த நபியைப் படைக்கவில்லை என்றால் வானம், பூமி மற்றும் அகிலங்கள் அனைத்தையும் படைத்திருக்க மாட்டேன் என்று இறைவன் கூறினானோ அந்த அருள் பூமியில் மனிதராக இயங்கியது. இப்போது நாம் சிந்திக்க வேண்டியது எல்லாம் மறைக்கப்பட்ட பொக்கிஷ­மாகிய இறை அறிவின் பூரணமாய் ரசூலுல்லாஹ் வெளியாவதற்குத் தான் இந்த பிரபஞ்சத்தில் அனைத்தும் தோன்றின. அதிலேதான் நாமும் வாழ்கிறோம் என்பதும் இது அவர்களின் உலகம் என்பதால் எக்காலமும் எச்சமுதாயமும் அவர்களுக்கு நன்றிக் கடன்பட்டது என்பதும் தெளிவாகிறது.

இறைவன் தன்னுடைய இரகசியங்களை தன்னிலுள்ள எல்லா அற்புதங்களையும் ரசூலுல்லாஹ் அவர்கள் மூலமாக திருக்குர்ஆனிலே கூறியதும், மிஃராஜிலே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழைத்து உலகத்தின் அனைத்து இரகசியங்களைக் காட்டியதுமே இறைவன் விரும்பிய பொக்கிஷ­ம் ரசூலுல்லாஹ்தான் என்பதை இறைவன் தெளிவு படுத்திவிட்டான். அது மட்டுமல்ல தன்னை அறியும் இறைவனின் ஆவலைப் பூர்த்தி செய்தவர்களும், அதைத் தொன்று தொட்டு மக்கள் அறிந்து கொள்ள இஸ்லாம் என்ற அமைதி வழியைத் தோற்றுவித்ததால் நம் அனைவருக்கும் அவர்கள் செய்த பேருதவி என்பதை உணர்ந்து இறைவனின் பொக்கி­த்தை, நூரே முஹம்மதிய்யாவைப் போற்றி அதன் மூலம் இறைவனைப் பெற்று நாமும் உயர்வு பெற வேண்டும்.


இறைவனைப் போற்றிய தன்னுடைய பரிபூரண அறிவாகிய நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நாமும் போற்றிப் புகழ்வதன் மூலமும் அவர்களைப் பின்பற்றி நடப்பதன் மூலமும் இறைவனின் திருப் பொருத்தத்தைப் பெற முடியும் என்றும் இவ்வுலகுக்கே பொக்கிஷ­மாய் விளங்கிய நாயகம் அவர்கள் எத்துணை மேன்மை உள்ளவர்கள் என்பதால் அவர்களின் மூலம் இக, பர நன்மைகளை அல்லாஹ்வின் விருப்பப்படி பெற முடியும் என்பதும் விளங்க வேண்டும்.

இதனால்தான் இறைவன் திருக்குர்ஆனிலே “யார் ரசூலுல்லாஹ் வுக்கு வழிபடுகிறாரோ அவர் திட்டமாக அல்லாஹ்வுக்கு வழிபட்டார்” என்றும், எவர் அல்லாஹ்வின் தூதரை (மொழியாலோ, செயலாலோ) துன்பப்படுத்துகிறார்களோ அவர்களுக்கு நோவினையுடைய வேதனையுண்டு என்றும்,

இன்னும் இவை போல் பல இடங்களில் தன்னோடு தனது பொக்கி­ஷமாகிய சர்தாரே ஆலம், நூரே முஹம்மதிய்ய ஜோதி, சாந்தி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களையும் இணைத்தே கூறுகிறான். எனவே இறைவனின் அறிவு கொண்டு அவனை முழுவதும் அறிந்து அதன் மூலம் இறை விருப்பத்தை நிறைவேற்றுவதில் செம்மல் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே இறைவனில் இருந்த மறைக்கப்பட்ட பொக்கி­ஷம் என்பது நம் அனைவருக்கும் தெளிவாகிறது அல்லவா? இனி அவர்களைப் பின்பற்றுவதனால் மட்டுமே ஈருலக நன்மைகளைப் பெற்று மனிதர்கள் உயர முடியும் என்பதும் விளங்குகிறதல்லவா?

அறிவு கொண்டு ஆராய்ந்தால் நன்மைகளைப் பெறலாம். இல்லையெனில் அல்லலுற்று இறையின் பேரன்பை இழந்து நரகத் தீயில் வேக நேரிடும். நம் அனைவரையும் இறைவன் தனது அருட் பொக்கிஷ­மான  பெருமானார் அவர்களைப் போற்றி, அவர்களைப் பின்பற்றி அவர்களின் பேரன்பைப் பெற்று அதன் மூலம் உலக அரசனான அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெறும் கூட்டத்தில் நம்மையும் நமது சந்ததிகளையும் என்றென்றும் ஆக்கி அருள்வானாக! ஆமீன் ஆமீன். யா ரப்பல் ஆலமீன்.
வஸ்ஸலாம்.