Pezhai » 2014 » Oct2014 » அருள்மழை பொழிவாய்
திருமறை ஆய்வுரை
அருள்மழை பொழிவாய்!
மேலும் (நபியே) நாமே வானத்திலிருந்து தூய்மையான நீரையும் இறக்கிவைக்கிறோம் - (அல்ஃபுர்கான்)
இன்னும் காற்றுகளைச் சூல்கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம்; பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம் - நீங்கள் அதனைச் சேகரித்து வைப்பவர்களும் இல்லை.
மழையைத் தன்னுடைய கிருபை (அருட்கொடை) என்று உவமையாகச் சொல்லி மழைநீரே உலகுயிர்க்கெல்லாம் உயிர்நீர் என்பதை இறைவன் உணர்த்துகிறான். அவனது கிருபைக்கு முன்னே பருவக் காற்றுகள் நன்மாராயமாக அனுப்பப்படுகின்றன. பருவக் காற்றுகள் சூல்கொண்ட மேகங்களை இழுத்துச் சென்று எல்லா இடங்களிலும் பரவலாக மழையைப் பெய்விக்கின்றன. இந்தியாவில் வீசக்கூடிய பருவக் காற்றுகளை நாம் அறிவோம். வடகிழக்குப் பருவக் காற்று இந்தியாவின் வடகிழக்கிலிருந்து கருமேகங்களை இழுத்து வந்து இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோரமுள்ள மாநிலங்களுக்கு அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மழை பெய்விப்பதையும், தென் மேற்குப் பருவக் காற்று இந்துமாக் கடலின் தென் மேற்கிலிருந்து கருமேகங்களைச் சுமந்து வந்து மேற்குக் கடற்கரைப் பகுதிகளிலுள்ள மாநிலங்களில் ஜூலை, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் மழை பொழிவிப்பதையும் நாம் அறிவோம். இவற்றைக் குறித்தே இறைவன் மழைக்கு முன்னே நன்மாராயமாகக் காற்றுகளை அனுப்பி வைக்கிறான் என்று கூறுகிறான்.
மேலும் வானத்திலிருந்து தூய்மையான நீரை இறக்கி வைக்கிறோம்! என்று இறைவன் கூறுகிறான். மழைநீர் தூய்மையானது என்பதை அறிவியல் ஆய்வின் மூலம் அறிகிறோம். இது வாலை வடிநீருக்கு ஒப்பானது. மழைநீர் தரையை அடையும் வரை அதன் தூய தன்மையை இழக்காது. இது போல புனித மக்காவில் புனித கஃபாவை ஒட்டியுள்ள வற்றாத ஜம்ஜம் நீரூற்றிலிருந்து பெறப்படும் ஜம்ஜம் நீர் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாத தூய தன்மையுடன் நோய்தீர்க்கும் நன் மருந்தாகவும் அமைந்துள்ளது. ஜம்ஜம் நீரின் இச்சிறப்பிற்குக் காரணம் அதில் கரைந்துள்ள தனிமங்களின் அளவு விகிதமே என்கிறது அறிவியல் விளக்கம். புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகள் ஜம்ஜம் நீரை அருந்தி இறைவனது கிருபையைப் பெறுகிறார்கள்.
அடுத்து, மழைநீரை நாம் சேமித்து வைப்பதில்லை என்பதையும் தன் வசனத்தில் (15:22) சுட்டிக் காட்டுகிறான். நீர்ப் பற்றாக்குறை காலம் வரும் என்பதை முன்னறிவிப்பாகச் சொல்லும் இறைவன் நீரைச் சேமிக்க வேண்டும் என்றும் இறைவன் எச்சரிக்கிறான்.
நபியே நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச் செய்து அதன் பின் (அதை ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்தியாக்குகின்றான். அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்; இன்னும் அவன் வானத்தில் மலை(களைப்போன்ற மேகக் கூட்டங்)களிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்; அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் - அவன் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது
ஜக்காத் (தர்மம்) கொடுப்பதை மக்கள் நிறுத்திவிட்டால் வானிலிருந்து மழை வீழ்வதை அது தடுத்து நிறுத்தாமல் விடாது. விலங்குகளின் பொருட்டாலன்றி மழை மீண்டும் ஒருக் காலமும் பெய்யாமல் போய்விடும் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
மேகக் கூட்டங்கள், மழையுடன் பனிக்கட்டி, இடி மற்றும் மின்னல், அடுத்து வளி மண்டலத்தில் மழையைப் பெய்விக்கும் மேகக் கூட்டங்கள் எவ்வாறு உருவாகின்றனவென்றும், பனிக்கட்டி, இடி மற்றும் மின்னல் எவ்வாறு தோன்றுகின்றனவென்றும் இறைவன் கீழ்க்காணும் வசனங்களில் குறிப்பிட்டுள்ளதை அறிவியல் துணை கொண்டு விளக்கமாக ஆராய்வோம்.
அவன் எத்தகையவன் எனின் அச்சத்தையும் ஆதரவையும் தரக்கூடிய நிலையில் மின்னலை அவன்தான் உங்களுக்குக் காட்டுகிறான். கனத்த மேகத்தையும் அவனே உண்டாக்கு கிறான். (அர்ரஃது - 13:12).
மழையைப் பொழிவிக்கும் ஒரு வகையான மேகத்திற்கு குமுலோனிம்பஸ் மேகம் என்று பெயர். இது சாதாரணமாக விண்ணில் வெண்பஞ்சுக் கூட்டத் திரள் போல் இருப்பதை நாம் காணலாம். இது 2கி.மீ முதல் 6 கி.மீ வரை வியாபித்துள்ளது. இம் மேகங்கள் மழையை மட்டும் தருவதில்லை; பனிக்கட்டி மற்றும் மின்னலையும் தோற்றுவிக்கின்றன என்பதை வானிலை ஆராய்ச்சியாளர்கள் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்கள். முதலில் குமுலோனிம்பஸ் மேகங்கள் சிறுசிறு துண்டுகளாகத் தோன்றிப் பின்னர் அவை ஒன்றாக இணைந்து பெரிய மேகத்தைத் தோற்றுவிக்கின்றன. பின்னர் அதிக அளவில் மேகத்தின் மையப் பகுதியில் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு குவிந்து செங்குத்தாக மழைபோல் வளர்கிறது. இவ்வாறு குளிரான பகுதியை அடையும் பொழுது மழைத்துளிகளாகவும் ஐஸ்கட்டியாகவும் மாறுகின்றன. நீர்த்துளிகளும், மழைத்துளிகளும் மேலும் கீழும் மேகத்தினுள்ளே சுழல்கின்றன. அவைகள் ஒன்றுக் கொன்று மோதிக் கொள்வதால் அவைகளில் நிலை மின்னோட்டம் உண்டாகிறது. மின்சாரம் வெளியே கடந்து செல்ல வழியில்லாமல் அங்கேயே திடீரெனக் கண்ணைப் பறிக்கும் மின்னல் ஒளிப்பிழம்பாக வெளிவருகிறது. இதனால் ஏற்படும் வெப்பம் சுற்றியுள்ள காற்றைத் திடீரென விரிவடையச் செய்வதால் இடிமுழக்கம் ஏற்படுகிறது. இவ்வாறு பனிக்கட்டி மின்னல் உருவாக முக்கியக் காரணியாக அமைந்துள்ளது.
மேலே சொல்லப்பட்டுள்ள அறிவியல் விளக்கத்தைத்தான் திருக்குர்ஆன் வசனத்திலும் கண்டோம். அதாவது மேகங்கள் ஒன்றின் மீது ஒன்று இணைந்து பெரிய அடர்த்தியான மேகத்தைத் தோற்றுவிக்கின்றன என்றும், அதன் நடுவிலிருந்து மழை வெளியாகின்றன வென்றும், பனிக்கட்டி மின்னொளிக்குக் காரணமாக அமைகிறது என்றும் அல்குர்ஆன் வசனம் அறிவிக்கிறது.
இறைவன் தன் வசனத்தில் மழையைக் கிருபை என உருவகப் படுத்தியது போல பனிக்கட்டியாக உறைந்த கனத்த மேகத்தை மலை என வர்ணித்துள்ளான். இறைவனது வசனத்தில் அச்சத்தையும் ஆதரவையும் தரக்கூடிய நிலையில் மின்னலைக் காட்டுகிறான் என்று சொல்லப்பட்டுள்ளது. மின்னலைத் தொடர்ந்து வரும் இடி பூமியில் விழும்பொழுது அதன் அச்சத்தை (பாதிப்பை) நாம் அறிவோம். ஆனால் ஆதரவு தரக்கூடிய நிலையில் மின்னல் எவ்வாறு அமைந்துள்ளது? மின்னல் மின்னுவதைக் கண்டால் மழை வரும் என்ற ஆறுதலில் அதன் மீது ஆதரவு வைக்கின்றோம்.
அது மட்டுமல்ல; மின்னல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மின்னல் காற்றிலுள்ள நைட்ரஜன் வாயுவை நைட்ரேட் உப்பாக மாற்றுகிறது. இந்த நைட்ரேட் உப்புகள் மழைநீரில் கரைந்து பூமியை வந்தடைகின்றன. இவற்றைத் தாவரங்கள் வேர்களின் மூலம் உட்கிரகித்துப் புரதத்தைத் தயாரித்து வளர்கின்றன. இதன் காரணமாகவும் ஆதரவு தரக்கூடிய நிலையில் மின்னலை இறைவன் வெளிப்ப டுத்துகிறான். இனி எதிர்காலத்தில் அறிவியல் முன்னேற்றத்தால் மின்னலிலிருந்து மின்சாரத்தைப் பெற்று அதைச் சேமித்து மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வழியையும் மனிதன் கண்டு பிடிக்கலாம்.