ஜமாலிய்யா தோட்டத்தில் கொய்த மலர்!
மகான்களின் உள்ளங்களிலிருந்து உதித்தெழுந்த ஊற்றே ஞானமாயும் அவர்களின் நடைவழியே ஞானமார்க்கமாயும் திகழ்தல் உணரற் பாலது.
வலீமார்கள் ஏனையோரின் வணக்கங்களைவிடச் சிறப்பு மிக்க வணக்கங்களையுடையோராவர் என்பதை உளத்தே கசடற அறிந்தவர்களே நன்கறிவர். இத்தகையோரின் உடலும் உடலின் உறுப்புகள் யாவும் உடலிலும் உறுப்புகளிலும் பொதிந்துள்ள தசைகள் நரம்புகள், நரம்புகளில் ஓடும் இரத்தம், உரோமங்கள் முதலாம் அனைத்தும், உடலின்கண் அமைந்துள்ள பஞ்ச பூதங்கள் ஐந்தும், ஆவி, அசைவு, அமைதி, நாட்டம், சக்தி, உள்ளம், எண்ணம், கருத்து, பார்வை, கேள்வி, பேச்சு, நுகர்வு, உணர்வு, உருசிப்பு, உண்ணல், உடுத்தல், குடித்தல், சிரிப்பு, அழுகை, தொழில் முதலாம் அனைத்தும்; இருக்கை, படுக்கை, நிலை, நடை, உறக்கம், விழிப்பு, மயக்கம், கனவு, நனவு, நினைவு, மூச்சு, முதலாம் யாவும் ஹக்கில் ஹக்காய் (சத்திய சிவத்தில் நித்தியம்) இரண்டறக்கலந்த வணக்கமாகவே என்றுமிருக்கும். இத்தகையோரே தம்மையும் அறிந்து தம் இறைவனையும் அறிந்தோராவர்.
நாம் எமது ஆதிநிலையை அறியாது உண்டும் உடுத்தும் உறவாடியும் பகைகொண்டும் பொறாமை, பெருமை முதலான உள்ளத்தின் அசுத்தங்களை உள்ளத்தினுள் வைத்துக்கொண்டும் மக்களையும் இறைவனையும் ஏமாற்றி உலக வாழ்வையே உத்தமம் எனக் கொண்டு மரணத்தைச் சற்றுஞ் சிந்திக்காது வீணாய் வாழ்கின்றோம்.
நாம் இவ்வுலகின் கண்ணே பிறந்ததன் தாற்பரியம் உலகிலேயே இறையின்பங்களை அடைதலோடு இவ்வுலகத்தில் உடலுடன் இருப்பதோடே ஹக்காகிய இறையோடு இரண்டறக் கலந்து பேரின்பப் பரவசமடைதலாகும்.
ஆத்மாவின் அந்தரங்கத்தை அறிதலும் ஆத்மாவிற்கலந்து அதன் சத்தியெய்தலுமே பெரும்பேறாகும். இப்பேற்றினையடையும் ஆற்றலே இறையருளும் மெய்ப்பாடாகும். இது பொதுமனிதனால் அடையவியலாத சிறப்பு மிக்க சத்தியாகும்.
யான், எனது என்னும் இருவகைப் பற்றும் அஞ்ஞானத்தால் ஏற்படுவன. அவை அற்றுப்போவதாற் சுய நலமற்று பிறர் நலம் பேணும் தன்மை தன்னிலுண்டாகும்.