• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

முஹர்ரம் சிந்தனை

இஸ்லாமிய புத்தாண்டு !

அபூ பாஹிரா -



முஹர்ரம் என்றால் புனிதமானது என்று பொருள்!

அரபுகள் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னரே நான்கு மாதங்களை கண்ணியமான மாதம் என ஒதுக்கி அதில் தாங்கள் வழக்கமாகச் செய்யும் சண்டை பகைகளையெல்லாம் ஒதுக்கி புனித மாதங்களாக அதனைப் போற்றிவந்தார்கள். அதில் ஒன்று தான் முஹர்ரம்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றி இஸ்லாமிய மார்க்கத்தை வளர்த்த பின், ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் முஹர்ரம் மாத ஆஷிரா நோன்பை கடமையாக்கியிருந்தார்கள். முஸ்லிம்கள் முதன் முதலாக நோன்பு எனும் மாண்பை அனுசரித்ததே - அனுபவித்ததே முஹர்ரம் மாத இரு நோன்புகள் தாம்!

பெருமானர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்குள் நுழைந்த போது அங்கு யூதர்கள் நோன்பிருக்கக் கண்டு, எதற்காக இந்த விரதம்? எனக் கேட்க, எங்கள் நபி மூஸா (அலை) அவர்களையும் இஸ்ரவேலர்களையும் இறைவன் ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாற்றியது இந்த நாளில் தான்! என அவர்கள் கூற, மூஸா நபியவர்களுக்கு உங்களை விட உரித்தானவர்கள் நாங்கள் தாம்! எனப் பெருமானார் கூறி யூதர்கள் பிடிக்கும் ஒரு நோன்புக்கு மாற்றமாக இரண்டு நோன்புகளை நோற்கச் சொன்னார்கள் நூரு முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்!

வரலாற்றுப் பார்வையில் எல்லா நபிமார்களுக்கும் அவர்களின் வாழ்வில் நடந்த முக்கியமான - முத்தாய்ப்பான நிகழ்வுகளெல்லாம் இந்த மாதத்தின் பத்தாம் நாளில் தாம் நடந்தது என்பது வரலாறு பதிந்திருக்கும் உண்மை.

இஸ்லாமியப் புத்தாண்டின் தொடக்கமாக - ஹிஜ்ரி ஆண்டின் மகுடமாக இதனை ஹள்ரத் உமர் (ரலி) அவர்களும் ஸஹாபாக்களும் இணைந்து - ஆலோசித்து நடைமுறைப்படுத்தியதும் நோக்கத்தக்கது.

இத்துணை மகிழ்ச்சியான நிகழ்வுகளுக்குப் பின், இஸ்லாமிய வரலாற்றில் கருப்புப் பக்கங்களாகிப் போன கர்பலா நிகழ்வை இந்த முஹர்ரம் தாங்கியிருக்கிறது என எண்ணினால் நெஞ்சம் நிலைதடுமாறும். கண்கள் கண்ணீர் வடிக்கும்!

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இதயக்கனி பாத்திமா நாயகி (ரலி), அறிவின் தலைவாயில் ஹள்ரத் அலீ (ரலி), இருவரின் கண் மணிகளில் ஒன்றாகிய ஹள்ரத் இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள் கர்பலா களத்தில், சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜனநாயகத்திற்காகப் போராடி உயிர்நீத்து ­ஷஹீதான நாளும் முஹர்ரம் ஆஷிரா 10ம் நாள் என வரலாறு நினைவூட்டிக் கொண்டிருக்கிறது. 

இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள் போராடிய யஜீதுகளின் முடியாட்சி முடிந்துவிட்டதா? அறபு பூமியிலேயே மன்னராட்சி தொடர்வதால் முடியாட்சி இன்னும் முடியவில்லை என்றே முடிவாகிறது. எனவே முடியாட்சி முடியாதது வரை இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களின் தியாகமும் கர்பலாவும் தோன்றிக் கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை!