மறைஞானப் பேழை நிறுவனர்
அஷ்ஷைகுல் காமில்குத்புஸ்ஸமான் ஷ ம்ஸுல்வுஜூத்
ஜமாலிய்யா அஸ்ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா
அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள்
குர்ஆன் , ஹதீஸிலுள்ள சட்ட திட்டங்கள் , இஸ்லாமிய ஒழுக்க முறைகள் , இஸ்லாமிய நற்பண்புகள் , நடை உடை பாவனைகளைக் கற்பித்து இஸ்லாத்தில் நிறைந்த பற்று உண்டாகும் வகையில் பிள்ளைகளுக்கு போதனைகள் வழங்க வேண்டும். நல்லவர்களுடன் கூடல் , குர்ஆன் நல்ல முறையில் ஓதல் , தொழுகைகளைப் பழக்குதல் , புறங்கூறல் , பொய்பேசல் , களவு , நயவஞ்சகம் , கோபம் , பொறாமை , இழிநடத்தை முதலான பாப காரியங்களில் இறங்காதிருக்கச் செய்தல் , வயதில் மூத்தவர்களுக்கு மரியாதைசெய்தல் , எதையும் செய்ய முடியாதவர்களுக்கு உதவி செய்தல் முதலான நல்ல காரியங்களை சிறு வயதிலிருந்தே கற்பிக்க வேண்டும் .
--- சங்கைமிகுசெய்கு நாயகம் அவர்கள்
தலையங்கம்
ஆன்மிகம் என்றும் மலரும் !
இன்று உலகையே கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு செய்தி இராக்கில் ஐ . எஸ் . எனப் பெயர் கொண்ட இயக்கத்தின் தண்டனைகள் !
இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக திரைமறைவில் சதி செய்யும் மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் நேரத்தில் அவர்களின் செயல்கள் அமைந்துள்ளன!
அமெரிக்கா , பிரிட்டிஷ் ராணுவம் இவர்கள் செய்வதை விட மிகக் கொடூரமான கொலைகளை முஸ்லிம் நாடுகளின் மக்களுக்கு சிறையிலும் - ரகசியமாகவும் கொடுத்து கொண்டு தான் இருக்கிறார்கள் .
ஏன் , பலஸ்தீனத்தில் குழந்தைகளாகப் பார்த்துக் கொன்ற இஸ்ரேலின் செயல் மட்டும் நியாயமானதா ?
இருந்தாலும் ....
நடுநிலை நின்று பார்க்கும் மக்கள் இவர்களின் தண்டனைகளால் இஸ்லாத்தின் மீதும் - முஸ்லிம்கள் மீதும் வெறுப்புக் கொள்ளும் நிலையே ஏற்பட்டிருக்கிறது !
அது மட்டுமல்ல! இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்படாத - முன் மாதிரி இல்லாத தண்டனை தான் கழுத்தை அறுத்துக் கொள்வது !
தவிர குற்றம் செய்தவர்களுக்குத் தான் தண்டனை கொடுக்க இஸ்லாம் அனுமதிக்கிறதே தவிர குற்றமேதும் செய்யாத நிரபராதிகளை எதிரியின் இனம் என்பதற்காக உயிர் வாங்குவதற்கு இஸ்லாம் இடமளிக்கிவில்லை .
முஸ்லிம் உலகம் இந்தச் செயல்களை வேறு விதமாகவும் சந்தேகிக்கிறது .
முஸ்லிம்களின் பெயரால் இச்செயல்களைச் செய்பவர்கள் மேலை நாடுகளின் கைக்கூலிகளாக இருக்குமோ எனும் ஐயமும் இதில் உள்ளது .
இந்த நடவடிக்கைகளால் முஸ்லிம்கள் மீதும் இஸ்லாத்தின் மீதும் வெறுப்பை விதைக்கும் சதியாகக் கூட இருக்கலாம் என அறிவாளிகள் நினைக்கிறார்கள் .
எது எப்படியிருப்பினும் மனித சமுதாயம் தான் யார் என்பதையும் தனது மூலம் என்ன என்பதையும் மறந்து போனதால் இந்த விரும்பத்தகாத செயல்களெல்லாம் இருபுறமும் நடக்கின்றன .
இறப்பவனும் தானே - இருப்பவனும் தானே எனும் உள்ளமையை உண்ர்ந்தால் மற்ற உயிர் அனுபவிக்கும் துன்பம் தனக்கும் வலிக்கும் நிலை உணரப்படுமல்லவா?