Pezhai » 2014 » Sep2014 » அழைப்போமே அண்ணலாரை
அழைப்போமே அண்ணலாரை !...
- முஹம்மது உமர் கையாம் யாஸீனிய் ஹக்கிய்யுல் காதிரிய் -
அல்லாஹ்வும் அவனது ரஸூலும், இன்னும் ஈமான் கொண்டவர்களும்
(அவ்லியாக்கள்) உங்கள் உதவியாளர்கள் ஆவார்கள். எப்படிப்பட்ட அவ்லியா என்றால் தொழுகையை நிலைநாட்டி , ஜகாத் கொடுத்து இறைவனின் கட்டளைக்கு எந்நேரமும் தலைசாய்த்து வருகின்ற அவ்லியாக்களும் உங்களின் உதவியாளர்கள்.
அல்லாஹ்வையும் , அவனது ரஸூலையும் , அவனது அவ்லியாக்களையும் யார் உதவியாளர்களாக ஆக்கிக் கொண்டார்களோ அவர்கள் தாம் உண்மையான வெற்றியாளர்கள் என்றும் அல்லாஹ்வின் கூட்டத்தினர் என்றும் ஆயத்து (05:56) இல் குறிப்பிடுகிறான் இறைவன் .
இந்த இரு ஆயத்திற்கும் மாற்றமாக சில முஸ்லிம் பெயர் தாங்கிகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உதவி தேடுவதை ஷிர்கு, குஃப்ர் என்று குரைத்துத் திரிகிறார்கள். உன்னத ஸஹாபாக்களும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உதவி தேடியிருக்கிறார்கள். ஸஹாபாக்கள் தங்களின் கஷ்டமான நேரத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உதவி தேடி அவர்களின் திருப்பெயரை உச்சரித்து அழைப்பார்கள் . அழைத்து உதவியைப் பெற்றுக் கொள்வார்கள். யமாமா போரில் முஸைலமாவுடைய படையினர் நமது முஸ்லிம் படையினரை விட அதிக எண்ணிக்கையில் காணப்பட்டனர் . யுத்தம் மிக வேகமாகச் சென்று கொண்டிருந்தது .எந்தளவு என்றால் முஸ்லிம்கள் பின்னேறுவது போன்று தென்பட அக்கூட்டத்தின் தளபதியான என்றும் தோல்வி காணாத தமது தலையின் தலைப்பாகையில் நாயகத்தின் திருமுடியை வைத்து வெற்றி பெற்ற காலித் இப்னு வலீத் அவர்கள் உடனே , அக்கால முஸ்லிம்களின் அடையாளச் சின்னமாக திருநபியின் திருப்பெயரான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயரைஅழைத்து உதவி தேடி வெற்றி பெற்றவர்கள் ஹாலித் அவர்கள்
( ஆதாரம் : பிதாயா வன்னிஹாயா 6:324)
ஹழ்ரத் அப்துல்லா ஹிப்னு உமர் அவர்களின் ஒரு பாதம் இரத்த ஓட்டம் நின்று செயலிழந்து விட்டது. அப்போது ஒருவர்
உங்களுக்கு பிரியமானவரை ஞாபகம் செய்யுங்கள் என்றார் . இப்னு உமர் அவர்கள் யா முஹம்மது ( ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் ) நபியே ! நாயகமே ! என்று கூறினார்கள். உடனே விலங்கிலிருந்து விடுபட்டவர்கள் போலானார்கள் .
( அல்அத்கார் 271)
ஹழ்ரத் அபூஉபைதா ஆமிரிப்னுல் ஜர்ராஹ் அவர்கள் ஹழ்ரத் கஅப் இப்னு ஸம்ரா ( ரலி ) அவர்களை 1000 படை வீரர்களுடன் ஹஃப் என்னும் இடத்தைக் கைப்பற்றுவதற்காக அனுப்பி வைத்தார்கள் . போர் செய்யுமிடத்தை அடைந்ததும் எதிரிகள் 5000 பேர்களுடன் தாங்கள் சண்டையிட வேண்டும் என்பது தெரிய வந்தது. யுத்தம் ஆரம்பமானது . இந்த ஆபத்தான நிலையில் பின்னால் தலைமறைவாக நின்று கொண்டிருந்த மற்றுமொரு கூட்டம் முஸ்லிம்களைச் சுற்றி வளைத்தது. இந்த பயங்கரமான சூழ்நிலையில் ஹழ்ரத் கஅப் அவர்கள் தமது கொடியை உயர்த்தி நபியே ! நாயகமே ! ( வெற்றியைத்தாருங்கள் . அல்லாஹ்வின் உதவியே நீ விரைந்து வா ) என பொருள்பட உதவியை நாடி அழைத்தார்கள் . இந்த சப்தத்தைக் கேட்ட முஸ்லிம்கள் ஒன்று திரண்டு விரோதிகளை விரட்டியடித்து வெற்றி பெற்றனர் .
( ஃபுதூஹுஷ்ஷாம் 1:196)
இதே போன்று அப்துல்லாஹிப்னு அப்பாஸ் ( ரலி ) அவர்களிடம் அமர்ந்திருந்த ஒருவரின் பாதமும் திமிர்ந்து சோர்ந்து போக இப்னு அப்பாஸ் ( ரலி ) அவர்கள் உனக்கு மனித வர்க்கத்தில் விருப்பமானவரை ஞாபகம் செய்து கொள் என்றார்கள் . அவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் என்றார். அவர் கூறியவுடனே அவரது பாதம் நன்றாகிவிட்டது .
( அல்அத்கார் 271)
அன்று வாழ்ந்த ஸஹாபாக்களுக்கு ஏதேனும் கஷ்டம் ஏற்பட்டால் முஸ்லிம்களின் சின்னமான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை அழைத்து தங்கள் நிலையை முறையிட்டு வெற்றி பெற்றார்கள்.எனவே நாமும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை அழைத்து உதவி கோரி பலனடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டியும், வள்ளல் நபி மீது ஸலவாத் கூறியும் நிறைவு செய்கிறோம் .