முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின்
வாழ்க்கை வரலாறு !
மூலம் : திருநபி சரித்திரம் . தொகுப்பு : முஹம்மதடிமை , திருச்சி
கைபர்ச் சண்டை ஹிஜ்ரி 7- வது வருடம்
இது வரை நடந்த சண்டைகளெல்லாம் தற்காப்புச் சண்டைகளாகவே இருந்தன . முஸ்லிம்கள் அந்நிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்றது இது தான் முதல் தடவை . இஸ்லாத்தின் முக்கிய நோக்கம் , மக்களை இஸ்லாத்திற்கு அழைப்பது தான் . ஆனால் ஒரு சமூகத்தார் இஸ்லாத்திற்கு இடையூறு செய்யாமலிருந்தால் அச்சமூகத்துடன் , முஸ்லிம்களுக்கு யாதொரு பிணக்கும் கிடையாது. முஸ்லிம்கள் அச்சமூகத்தைத் தன் ஆட்சிக்கு உட்படுத்தவும் அவசியமில்லை . அச்சமூகத்துடன் ஒரு சமாதான உடனபடிக்கை செய்து கொள்வதே போதுமானது . அதற்கு உதாரணங்கள் இஸ்லாமியச் சரித்திரத்தில் நிரம்ப இருக்கின்றன . ஆனால் ஒரு சமூகம் இஸ்லாத்திற்கு விரோதம் செய்வதையே நோக்கமாகக் கொண்டு அதை நசுக்க முயற்சி செய்யுமானால் அப்போது தான் அதை அடக்க முஸ்லிம்கள் தங்கள் கைகளில் வாளை ஏந்துவர் .
இம்முறையில் முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்பட்ட நாடுகளில் முதன்மையானது கைபர் தான் . முன்னர் அரபிகள் தங்கள் தேசத்தின் பழைய வழக்கப்படி யுத்தத்தை ஜீவனத்திற்கு ஒரு தொழிலாகக் கருதியிருந்தார்கள் . இச்சண்டையில் தான் முதலாவதாக அவர்களின் பழங்கால எண்ணங்கள் அகற்றப்பட்டன . அதற்காகவே அல்லாஹ்வுடைய பாதையில் சண்டை செய்து அவனுடைய திருவசனங்களை மேம்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டவர்கள் மட்டும் சண்டையில் சேர வேண்டும் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உத்தரவிட்டார்கள் .
ஹுதைப்பிய்யாவில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சென்று ,உயிர்த்தியாகம் செய்ய மரத்தடியில் பிரமாணம் செய்து கொடுத்த 1400 ஸஹாபாக்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு அவர்களும் புறப்பட்டார்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நிபந்தனைப்படி மேற்கொண்டு 200 வீரர்களும் கூடச் சேர்ந்து கொண்டார்கள் .
கத்பான் கூட்டத்தாரையும் யூதர்களையும் அடக்குவதற்காகப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ரி 7 ஆம் வருடம் முஹர்ரம் மாதத்தில் மதீனாவை விட்டுப் புறப்பட்டார்கள். புறப்படுமுன் மதீனாவின் காரியங்களைக் கவனிப்பதற்காக ஸபா உப்னு அர்பத்தல் கிபாரீ ( ரலி ) அவர்களைத் தங்கள் பிரதிநிதியாக நியமித்துவிட்டுச் சென்றார்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஹுதைபிய்யாவில் கலந்து கொண்டிருந்த உம்முல் முஃமீனின் ஹலரத் உம்மு ஸல்மா ( ரலி ) அவர்கள் மட்டுமே சென்றார்கள் .அவர்களுடன் மொத்தம் 1600 பேர் சேனையில் சேர்ந்து புறப்பட்டார்கள் . அவற்றில் 200 பேர்கள் கொண்ட குதிரைப்படையும் மீதி காலாட்படையுமாயிருந்தன .
இதுவரை நடந்த சண்டைகளில் சிறிய, சிறிய கொடிகளைத்தான் கொண்டு போவார்கள் . பெரிய கொடிகளைக் கொண்டு போவது வழக்கமில்லாதிருந்தது . இத்தடவை மூன்று பெரிய கொடிகள் தயார் செய்யப்பட்டன . அவைகளில் இரண்டு முக்கியமான ஸஹாபாக்களிடம் கொடுக்கப்பட்டன . ஆயிஷா ஸித்திகா ( ரலி ) அவர்களின் மேலாடையினால் தயாரிக்கப்பட்ட பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் சிறப்புக்கொடி , ஹலரத் அலீ ( ரலி ) அவர்களிடம் கொடுக்கப்பட்டது . சேனை புறப்பட்டுப் போகும் போது , ஆமீர் இப்னுல் அக்தஅ என்னும் பெயர் பெற்ற புலவர் கீழ்க்கண்ட கருத்துள்ள அறபுக் கீர்த்தனையைப் பாடிக் கொண்டு சென்றார் .
அல்லாஹ்வே! நீ நேர்வழி காட்டியிரா விட்டால் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கவும் மாட்டோம் தருமம் செய்திருக்கவும் மாட்டோம்; தொழுதிருக்கவும் மாட்டோம், நோன்பு வைத்திருக்கவும் மாட்டோம் ; நாங்கள் உனக்கு அர்ப்பணமாகியிருக்கிறோம் ; எங்களுடைய வணக்கத்தில் ஏற்படும் குறைகளைப் பொறுத்தருள் ; எங்களுக்குச் சாந்தியைக் கொடுத்தருள் ; அநியாயக்காரர்கள் எங்களுக்கு விரோதமாக வந்திருக்கிறார்கள் ; ( பித்னா ) குழப்பம் உண்டாக்க விரும்புகிறார்கள் ; அவர்களால் எங்களை அடக்க முடியாது ; உதவிக்காக நாங்கள் அழைக்கப்பட்டால் நாங்கள் சேர்ந்து விடுவோம் ; நாங்கள் சண்டை செய்வதாயிருந்தால் எங்களுடைய கால்கள் நிலையாக இருக்கும்படி செய்தருள்வாயாக ! நியாயமில்லாத விஷயத்திற்கு எங்களை யாராவது அழைத்தால் நாங்கள் அதை மறுப்போம் . நிராகரிப்பவர்கள் எங்களுக்கு விரோதமாகச் சப்தமிட்டு உதவி தேடுகிறார்கள் . யாரும் எங்களுக்கு விரோதம் செய்து கலகம் உண்டாக்க நாடினால் நாங்கள் அவர்களுக்கு இடம் கொடுக்க மாட்டோம் . உன்னுடைய கிருபை எங்களுக்கு எப்போதுமே தேவையாயிருக்கிறது
செல்லும் வழியில் பெரிய மைதானத்தை அடைந்தார்கள் . ஸஹாபாக்களின் தக்பீர் சத்தம் முழங்கிக் கொண்டிருந்தது . போகும் போதே வழி நெடுகப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மார்க்கச் சட்டங்களையும் , நீதிகளையும் மக்களுக்குப் போதித்துக் கொண்டே சென்றார்கள் . ஸஹாபாக்கள் உரத்த சப்தத்துடன் ‘அல்லாஹுஅக்பர்’ என்று தக்பீர் சொல்லுவதைக் கண்டு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் , ஸஹாபாக்களை நோக்கி ‘மெதுவாகச் சொல்லுங்கள் ; ஏனெனில் உங்களிலிருந்து தூரமாயிருக்கும் ஒருவனையோ அல்லது காது கேளாத ஒருவனையோ அழைக்கவில்லை ; நீங்கள் யாரைக் கூப்பிடுகிறீர்களோ அவன் உங்களுக்குச் சமீபமாகவே இருக்கிறான் ; அவன் உங்களுடனேயே இருக்கிறான்’ என்று சொன்னார்கள்
( நபிப்பாதம் தொடர்வோம் ...)