Pezhai » 2014 » Sep2014 » கலீபா பெருந்தகைகள்
கலீபா பெருந்தகைகள்
கலீபா வலிய்யுல் கறீம்
எல்லாவற்றிற்கும் மேலாக நமது சங்கைமிகு வாப்பா நாயகமவர்கள் புனித இந்திய விஜயம் செய்தருள்வதற்கு முழுமுதல் காரணமாய் விளங்கியவர் வலிய்யுல் கறீம் ! அன்னவர்களின் தொடரில் ... சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்கள் அப்துல் கறீம் ஆலிம் ஜமாலி அவர்களுக்கு அருளிய பட்டோலை ஒன்றினை இவ்விதழில் காண்போம் !
எம் பாட்டனார் ஞானானந்த ஞான ஜோதி ஆதி பிம்பம் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குடும்பம் , தொழில் , நண்பர்களோடு கூடிய வாழ்க்கை , போதனை , சாதனை இவைகளோடு ஹக்கோடு இரண்டறக் கலந்து ஆத்ம உலக சஞ்சார சீவியம் முதலியன நடத்தி வந்தார்கள் . இதுவே எமது அடிப்படை . இதன் தாற்பரியம் ஹக்கை எங்கும் எதிலும் சம்பூரணமாய்க் காணலாம் என்பதுவாகும் . இலெளஹீகமும் தேவை . ஆத்மீகமும் தேவை . இலெளஹீகத்தையும் ஆத்மீகத்தையும் நாம் பிரித்தறிதல் நல்லதல்ல. ஆத்மீகமும் இலெளஹீகமும் ஒன்றே எனக் கொண்டு இரண்டறக் கலத்தல் வேண்டும் .
வானங்களையும் பூமியையும் வளர்க்கும் இறைவன் அவனே . நாம் முன் கடிதங்களில் எழுதிய விளக்கங்கள் போல் இதன் இரகசியம் வானங்கள் ரூஹூகளாகும் , பூமி சரீரமாகும் . எனவே இகத்தில் வாழும் போது இகமும் பரமும் தேவை . இப்படி யாயின்நாம் பரலோகம் சென்ற போது இகமும் பரமும் நாமாவோம் .எனவே பரிபூரண நிலையையடைய இகம்பரம் என்னும் வித்தியாசம் தேவையில்லை . இகமே பரமாயும் பரமே இகமாயும் ஆதல் வேண்டும் .
நாம் ஆலமே இன்ஸானில் உள்ளதால் எமக்குத் தொழில் , குடும்ப வாழ்வு , சமூக உறவாடல் ஆகியன மிக்க அவசியம் . மனித இனத்தோடு சம்பந்தப்படும் போது நம் உள்ளமையை மறைத்து மனித இனமாக வேண்டும் . அவ்வாறே எல்லா இனங்களோடும் உயர்திணை , அஃறிணை என்ற பேதம் மறைய வேண்டும். அப்போது வேறுபாடுகள் மறைய வேண்டும் ; அப்போது சத்திய ஜோதி உள்ளிருந்து கிளம்பும் . பூமி அசைக்கப்படும் போது அதன் சுமைகளை வெளியாக்கும் . உடலோடு இருக்க உடல் என்ற நாமம் மறைய உடலும் உயிரும் பேதமின்றி ஒன்றாய் சம்பந்தப்பட அதன் நிலையில் பூமியாகிய உடல் உள்ளமையால் கிளப்பப்பட அதன் உள்ளிருக்கும் உண்மைகளாகிய சத்திய ஹக்கின் தாற்பரியங்கள் வெளிவரும் . எனவே ஆழ்கடாகிய எம் உள்ளக் கடலில் மூழ்கி மறைந்து கிடக்கும் முத்துகளாகிய சத்திய ஹக்கின் ஏக ஞான சித்தானந்த ஜோதிகள் உள்ளக் கடலில் உண்டாகும் தத்துவம் , ஏகாந்தம் , ஞானம் , சத்தியசிந்தனை , சந்தேகமறல் , வித்தியாசங்கள் , பேதங்கள் அற்றுப் போதல் முதலான அலைகள் ஒன்றோடொன்று மோதி மேலும் கீழும் வீச ஏக ஞானங்கள் எனும் முத்துக்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் பிரகாசிக்கும் . இவற்றை முத்துக்கள் என அறிந்தவர்கள் அவற்றை அயராது முயற்சியாலும் பெரும் பிரயத்தனத்தாலும் பெற்று உன்னத ஜீவன் அடைவர் . அறியாதோர் அதை அடைதலின்றி அது வெறும் கற்கள் என நகையாடித் தள்ளிவிடுவர் . இவர்களே சாந்தியடையாதோர் ஆவர் . தெளஹீதால் சாந்தியும் சமாதானமும் நிலவுக ! நீடு நிலவுக !! யாங்கனும் நிலவுக !!!
எனவே , உடலை பாதிக்கும் முறையில் எவ்வித அப்பியாசங்களும் செய்தல் நல்லதல்ல . உடல் சக்தியுடையாதல் வேண்டும் . அப்போதே ரூஹின் வலிமையும் உண்டாகும் . விழித்திருத்தல் உணவைக் குறைத்துக் கொள்ளல் ஆகியன உடலை வருத்திச் செய்யக் கூடாது . உடலின் விருப்பத்திற்கு நாம் இடம் கொடுத்தே முடியுமான வரை ஆரம்பத்தில் சிறிது சிறிதாகவே குறைத்துக் கொள்ளும் தன்மைகளை வைத்துக் கொள்ள வேண்டும் . ரூஹின் சக்தியை இவ்வாறு கூட்டிக் கொள்ள வேண்டும் . உடனடியாகக் குறைத்துக் கொள்ளுதல் நல்லதல்ல . உடல் செளகரியத்தையும் கவனித்து உடலை பாதிக்காத முறையில் நடந்து கொள்ளுங்கள் .ரூஹின் சக்தி கூடக் கூட எங்கள் பக்குவம் ஒரு நிலையையடையும். இவையெல்லாம் ஆரம்பத்தில் ஒரு தொடராயின்றி செய்தும் செய்யாமலுமாய் தொடரான பழக்கத்துக்கு வரல் வேண்டும் . மக்களோடு பேசுதல் , மெளனம் சாதித்தல் இவையும் இப்படியே. ஹக்கு உங்களின் நோக்கங்களைப் பூர்த்தியாக்குமாக . ஹக்கில் ஹக்காய்த் திகழ வைக்குமாக .