உமர் ( ரலி ) புராணம்
ஆசிரியர் ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா அல்ஹாஷிமிய் நாயகம் அவர்கள்
அகழ்யுத்தம்
( கலிவிருத்தம் )
ஒப்பிலா நாயகி ஒர்ந்தநன் வினையினால் தப்பியே யோடினர் தகையிலாப் பகைவர் துப்பை யறிந்து சொல்லிட வந்தவன்
செப்பிட வாயிலாச் செத்து மடிந்தனன் .
கொண்டுகூட்டு :
ஒப்பிலா நாயகி ஸபிய்யா அவர்கள் ஓர்ந்த நன் வினையினால் தகையிலாப் பகைவர் தப்பியே யோடினர். துப்பையறிந்து சொல்லிட வந்த யூதன் செப்பிட வாயிலாச் செத்து மடிந்தனன் .
பொருள் :
ஒப்பற்ற நாயகியாகிய ஸபிய்யா அவர்கள் ஆராய்ந்து அறிந்து செய்த நல்ல செயலினால் தகுதியற்ற பகைவர்கள் தப்பியோடினர். துப்பறிந்து சொல்லிட வந்த தூத யூதன் சொல்ல வாய் இல்லாது செத்து மடிந்தனன் .
குறிப்பு :
ஓர்தல் : ஆராய்ந்துஅறிதல் , வினை : செயல் , துப்பு : உளவு .