• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்களின் 79 ஆம்
பிறந்ததினப் பெருவிழா

உரைகள் தொகுப்பு : மெளலவி , ஏ . ஹக்கீம் பாஷா யாஸீனிய் , திருச்சி .

       


சங்கைக்குரிய ஷைகு நாயகம் குத்புஸ்ஸமான் ­ ஷம்ஷுல் வுஜூது ஜமாலிய்யா அஸ்ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகமவர்களின் புனித 79- ஆவது பிறந்த நாள் விழா 13.08.2014 புதன் கிழமையன்று காலை 10.00 மணி முதல் மாலை 04.30 மணி வரை , மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அறபுக் கல்லூரியில் குத்புல் அக்தாப் ஜமாலிய்யா அஸ்ஸய்யிது யாஸீன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் ( ரலி ) அவர்களின் நினைவரங்கில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது .


இவ்வாண்டு விழாவினை இரண்டு அமர்வுகளாக விழாக்குழுவினர் பிரித்திருந்தனர். முதல் அமர்வு கருத்தரங்கம் காலை 10.00 மணி முதல் மதியம் 01.30 மணி வரை நடைபெற்றது . முதல் அமர்வினை சங்கைமிகு ஸய்யிது மஸ்ஊது மெளலானா அல்ஹாதி அவர்கள் தலைமையேற்று சிறப்பாக நடத்தித் தந்தார்கள் . மெளலவி சத்தார்கான் ஆலிம் யாஸீனிய் ஆரம்பமாக கிராஅத் ஓதித் தொடங்க , மெளலவி ஹகீம் பாஷா யாஸீனிய் , மெளலவி பீர் முஹம்மது யாஸீனிய் இருவரும் வஹ்தத்துல் வுஜூது பாடலைப் பாட , மெளலவி ஹாபிழ் முஹம்மது ஹஸன் யாஸீனிய் மற்றும் மெளலவி ஹாபிழ் முஹம்மது ஜக்கரிய்யா இருவரும் நபி புகழ்ப்பா இசைக்க விழாவின் துவக்கம் சிறப்பாக அமைந்தது . திருச்சி மெளலவி ஷாஹுல் ஹமீது ஆலிம் ஃபைஜி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி விழாவினைத் தொடங்கி வைத்தார்கள் .


ஜனாப் ஸாலிஹ் ஹக்கிய்யுல் காதிரிய் ( தஞ்சை ) மதுக்கூர் கலீபா முஹம்மது முஸ்தபா ஹக்கிய்யுல் காதிரிய், ஜனாப் அஹ்மது கபீர் ஹக்கிய்யுல் காதிரிய் ஆகியோர் மெய்ஞ்ஞான கீதம் இசைத்து விழாவினை மேலும் சிறப்பித்தனர்.

ஆரம்பமாக சங்கைமிகு ஸய்யிது மஸ்ஊது மெளலானா அல்ஹாதி அவர்கள் தலைமை உரையாற்றினார்கள். பின்னர் சிறப்புச் சொற்பொழிவு  இடம் பெற்றது .


அஸ்ஸய்யிது யாஸீன் அலி மெளலானா அல்ஹாதீ அவர்கள் உரை .

நாம் ஷைகின் மூலம் பலவித நன்மைகளையும்மகிழ்வையும், குடும்ப நலன்களையும், ஞானம் சம்மந்தமான சந்தேகங்களுக்கு விடையும் பெறுகிறோம். மனிதனை மனிதனாக வாழ வைப்பதே அற்புதம். அதையே எம் பாட்டனார் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்தார்கள் எனக்கூறும் சங்கைமிகு வாப்பா நாயகம் அவ்வற்புதத்தை நம்மிடையே இச்சமுதாயத்திடையே செய்கிறார்கள் .



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் :  நான் உங்களிடம் இரண்டு விஷயங்களைச் சொல்கிறேன்.  அதை நீங்கள் பின்பற்றும் வரை வழி தவறமாட்டீர்கள்  (1) திருக்குர்ஆன் (2) எனது குடும்பத்தினர்கள் .

மேலும் நபிகளாரின் மேன்மையையும் அவர்களின் புனிதக் குடும்பத்தினரின் மேன்மையையும் ஹதீஸில் கூறப்பட்டதை எடுத்துக் கூறினால் , இது ஸஹீஹானது அல்ல ளஈபானது என்று கூறி ஹதீஸில் ஸஹீஹ், ழயீப் என வாதாடுகிறார்கள் .

எனது தோழர்கள் வானில் ஜொலிக்கும் நட்சத்திரத்தைப் போன்றவர்கள். அவர்களில் யாரை நீங்கள் பின்பற்றினாலும் ஜெயம் பெறுவீர் என்ற நபிகளாரின் வாக்கை மதிக்காது மறுத்து ஸஹாபாக்கள் , இமாம்கள் போன்றோரின் வழியைப் பின்பற்றக் கூடாதுஅவர்களின் கூற்றை ஏற்கக் கூடாது என்று வஹ்ஹாபிகள் கூறி வருகின்றனர் ! ஸஹாபாக்களை விட நம் அறிவே மேலானது , மேன்மையானது என்று அறிவுக்கு முதலிடம் கொடுத்து அழிவில் வாழ்கின்றனர். நபிகளாரின் கூற்றை விட தன் அறிவுக்கு முதலிடம் கொடுத்து அழிந்துப் போனவர்கள் .



நபி நூஹ் ( அலை ) அவர்கள் கப்பல் செய்து வெள்ளம் வரப் போகிறது. ஈமான் கொண்டு இதில் ஏறிக் கொள்ளுங்கள் என மக்களைப் பார்த்து கூற , சிலர் ஈமான் கொண்டனர் . பலர் ஈமானை ஏற்கவில்லை . அது மட்டுமின்றி வெள்ளம் வந்தால் மலையின் மீது ஏறிக் கொள்வோம் என்று கூறினர் . நபியின் சொல் கேட்காமல் தன் அறிவின்படி நடந்ததால் அழிந்து போனார்கள் எனக் குர்ஆன் கூறுகிறது . அதே நிலைதான் இந்த வஹ்ஹாபிகளுக்கும் .



குருவே மேன்மை


மனிதன் தன் வாழ்வில் நற்செயல்களுடன் வாழ நற் சிந்தனைகள் அவசியம். நற்சிந்தனைகளைப் பெற ஓர் அறிஞர் 200 புத்தகங்களைப் படித்தார் . அவரின் தேவை நிறைவேற வில்லை . காலம் கடந்த பின் ஞான குருவிடம் பைஅத் பெற்றார் .  தன் ஞான குருவிடமிருந்து 200 புத்தகங்களில் கிடைத்திடாத அற்புத விஷயங்களை நான் பெற்றுக் கொண்டேன் என தனது புத்தகத்தின் முன்னுரையில் அவ்வறிஞர் குறிப்பிடுகிறார் . உலகில் எண்ணற்ற விஞ்ஞானிகள் உள்ளனர் . முதன்மையானவர் ஓர் உயரிய கருத்தைக் கூறுவார் . அதன் பின் வருபவர் ஓர் உயரிய கருத்தைக் கூறுவார். இவ்வாறே உலக முடிவு நாள் வரை விஞ்ஞானிகளின் கருத்தும், செயலும் ,பாவனையும், கொள்கையும் மாறுபடும். ஆனால் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொன்று தொட்டு இன்று வாழும் மெய்ஞ்ஞானிகள் வரை கெள்கை ஒன்றே ! வேறுபாடு இல்லை !  இனி வருபவர்களும் அதனையே பின்பற்றுவர் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் முஸ்லிம் , யூதர் ஆகியோரின் பிரச்சனை தீர்வுக்காக வந்தது . அதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தீர்ப்பு யூதனின் பக்கம் நீதிமிருக்க அவருக்கே சாதகமாக அமைந்தது. இதை ஏற்க மறுத்த முஸ்லிமானவர் அபூபக்கர் ( ரலி ) அவர்களிடம் விஷயம் கூறித் தீர்ப்பு கேட்டார் . அவர்கள் உனக்கு நீதமான தீர்ப்பு கொடுக்க வேறொருவர் உள்ளார் என்று கூறி உமர் ( ரலி ) அவர்களைக்கை கட்டினார்கள் . உமர் ( ரலி ) அவர்கள் இதைக் கேட்டு வாள் எடுத்து தலையை வெட்டி விட்டார்கள் .  இது தான்உனக்குத் தீர்ப்பு. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதற்கு மேல் உலகில் யாரும் சிறந்த தீர்ப்பினைக் கூற முடியாது என்றார்கள். இது போன்றே ஒவ்வொரு சீடரும் தன் குருவை மதிக்க வேண்டும். அதுவே பரிபூரண ஈமானாகும் .



கலீபா .ER. ஷஹாபுத்தீன் BE.MBA; ஹக்கிய்யுல் காதிரிய் ,


நான் சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்களிடம் போனில் பேசினேன் . அனைத்துப் பிள்ளைகளுக்கும் எமது ஸலாமைக் கூறுங்கள் . அல்லாஹ் அவர்களுக்கு எல்லாப் பாதுகாப்பும் வழங்குவான் என்றும் கூறுங்கள் என நமக்கு இவ்விழாவின் பொருட்டால் கூறினார்கள் .


ஒருவர் சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்களுடன் கோடான கோடி ஆண்டுகள் இருந்தாலும் அவர்களைப் பற்றி சிறிதளவும் அறிய முடியாது என்பதே உண்மையாகும் . ஒரு கணம் சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்கள் கூறினார்கள் : இப்போது முஹய்யுத்தீன் இப்னு அறபீ ( ரஹ் ) அவர்கள் வாழ்ந்தால் அவர்கள் எமது வீடுதேடி வந்து சந்தித்து விட்டு எம்மைக் கண்ணியம் செய்வார்கள் .


இதைச் சிந்தித்துப் பார்த்தால் நமது வாப்பா நாயகத்தின் உயர்வு , ஆன்மீகம் , மேன்மை போன்றவைகளுக்கு எல்லையில்லை என்பது தெளிவாகிறது .


மற்றொரு முறை வாப்பா நாயகம் அவர்களிடம் , வாப்பா ! தாங்கள் இவ்வாறு கூறினீர்களே ! என்றோம் . மெய் தான் . அவ்வாறு கூறியதற்கு இரண்டு காரணம் உண்டு என்றார்கள் .


(1) நாங்கள் புனித ஸய்யிது வமிசம் . (2) எங்களது ஞானம் . மற்றொரு முறை போனில் வாப்பா ! தாங்கள் எங்களுக்கு கிடைத்தது எங்களின் பாக்கியமா ? அல்லது எங்களது மூதாதையர்களின் பாக்கியமா ? என்று கேட்டேன் . உடனே கூறினார்கள் உங்கள் மூதாதையர்கள் செய்த பாக்கியம் தான் .( அல்ஹம்துலில்லாஹ் )


நாம் எந்தவொரு சந்தேகம் கேட்டாலும் தாமதமின்றி உடனுக்குடன் பதில் கிடைக்கிறது . சுவிட்ச் போட்டவுடன் லைட் எரிகிறது .( மனம் பிரகாசிக்கிறது )


இன்று உலகமே கையடக்கத்தில் வந்து விட்டது . இணையதளம் மூலம் எவ்வளவோ பயனும் உள்ளதுபாதிப்பும் உள்ளது. அதன் மூலம் பயனடைபவர்களை விட பாதிப்படைவர்கள்தாம் அதிகம் . சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்களின் பிள்ளைகளாகிய நாம் பாதுகாக்கப்பட்டுள்ளோம் .


சரியாக பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்கள் துபைக்கு திருவிஜயம் செய்தார்கள் . அவர்களின் திருப்பாதம் துபை மண்ணில் வைத்த நாள் முதல் துபைநாட்டின் பொருளாதாரம் உட்பட அனைத்தும் முன்னேற்றம் அடைந்துள்ளது . இதை துபை ஷேக்மார்கள் அறிந்தார்களோ இல்லையோ உண்மை தான் . உலகில் உள்ள அனைத்தும் இன்று துபையில் உள்ளன .


சங்கைமிகு வாப்பா நாயகம் என்ன சொல்கிறார்களோ அதனை அப்படியே செய்ய வேண்டும் . அதில் தனக்கு சாதகமானது மட்டும் செய்வது , கேள்விகள் கேட்பது , இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும் , அப்படிச் செய்தால் நன்றாக இருக்கும் என தனது சொந்த அறிவையோ , ஆலோசனையோ பயன்படுத்தக் கூடாது . அவர்களின் சொல்லை அப்படியே செய்தால் அதுவே பரக்கத் .  நமக்கு உதாரணமாக மலேசியா சாதிக் அவர்கள் உள்ளார் . வாப்பா நாயகத்தின் ஒரு வர்த்தைக்காக 42 லட்சம் செலவழித்து மதுரஸாவில் 4 ஆவது கட்டடத்தைக் கட்டிக்  கொடுத்தார் . அதை தான் செய்ததால் பல கோடி ( லாபம் ) பெற்றேன் என்று கூறினார் . வாப்பா நாயகத்தின் பாதத்தில் நம்மை சரணாகதியாக்குவதே  ஜெயமாகும் .  அதுவே இம்மைக்கும் மறுமைக்கும் வெற்றியாகும் .



மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அறபுக் கல்லூரி முதல்வர் மகதூம் ஜான் MA.,B.Ed ஹக்கிய்யுல் காதிரிய் .


ஷைகுமார்கள் அவசியமா ?


நான் தொழுகிறேன் . நோன்பு வைக்கிறேன் . தர்மம் செய்கிறேன் இன்னும் இது போல நல்ல அமல்கள் பல செய்கிறேன் . எனக்கு ஷைகு அவசியமா எனப் பலர் நம்மிடையே கேட்கின்றனர் . நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள் :


ஒரு கூட்டத்திற்கு ஷைகுமார்கள் என்பவர்கள் ஒரு சமுதாயத்திற்கு அனுப்பப்பட்ட நபிமார்களைப் போன்றவர்கள் . சமுதாய மக்களை எப்படி நபிமார்கள் வழி நடத்தினார்களோ , அப்படித்தான் ஷைகுமார்களும் . நாம் தொழுகிறோம் . நோன்பு வைக்கிறோம் . ஆனால் அது சரியானது தானா , இறைவனைச் சென்றடைகிறதா எனக் கேட்டால் நம்மால் பதில் கூற இயலாது . நமது வணக்க வழிபாடுகள் சரியானதாகவும் , இறைவன் சமுகம் சென்றடையவும் ஷைகுமார்கள் கட்டாயம் தேவை .


ஒவ்வொரு சமுதாயத்தினரும் அவருக்கு அனுப்பப்பட்ட நபிமார்களைப் பின்பற்றித் தான் நாளை மறுமையில் நிற்பார்கள் . நபிமார்களை பின்பற்றாதவனை அல்லாஹ் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை . அதைப் போன்று தான் ஷைகுமார்களும் அவர்கள் அவசியமா ? பின்பற்ற வேண்டுமா ? எனக் கேட்போரின்  நிலை ?( பரிதாபம் )



விளக்கம் தேவையில்லையா ?


நீங்கள் காலம் காலமாக வாழ படைக்கப்பட்டீர்கள் என்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்ஆனால் நாம் அவ்வாறு வாழ்வதில்லை. 60 அல்லது 70 வயதில் இறையடி சேர்ந்து விடுகிறோம். அப்படியானால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னது பொய்யா ?  இது போன்ற அல்லாஹ்வுடைய , அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய கூற்றுகளுக்கும், கொள்கைக்கும் நோக்கத்திற்கும் விடை எங்கே ?  அதற்குத் தான்ஷைகுமார்கள் அவசியம்.


நம் சிற்றறிவுக்கு எட்டாத எத்தனையோ அமல்களையும் , கருத்துக்ளையும் நாம் செய்வதில்லை . அவற்றை விளக்கி முழுமையான முறையில் செய்ய வைத்து , அல்லாஹ்வின் அருளையும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்பையும் நாம் பெற்று இம்மையிலும் மறுமையிலும் வாழ நம்மை வழி நடத்துகிறார்கள்.



ஷைகுமார்களுக்காக விழா கொண்டாடுவதின் அவசியம் ?


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல் , செயல் , நடை , உடை , பாவனை அனைத்தையும் முழுமையான முறையில் பின்பற்றி வாழ்ந்து காட்டி நம்மையும் வழி நடத்தும் ஷைகுமார்களின் விழா அவசியத்திலும் அவசியம் . ஷைகுமார்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் ? அவர்களின் நடை முறைகள் என்ன ? அவர்களின் மாண்பும் மாட்சியும் என்ன என்பதனை நாம் அறிந்து நம் வாழ்வில் கடைப்பிடிக்க இது போன்ற விழாக்கள் கொண்டாடுவதின் மூலம் அறிகிறோம் . அனைத்து மக்களும் ஷைகுமார்களை அண்டி , அவர்களிடத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணித்து வாழ ஹக்கு அருள் புரியுமாக ! ஆமீன் .



தியாகி M. முஹம்மது ராவுத்தர் ஹக்கிய்யுல்காதிரிய்


நாங்கள் யார் ?


நாங்கள் யாரென வாப்பா நாயகம் பின்வருமாறு கூறுகிறார்கள் .


நமது முரீதுகளின் நலனுக்காகவும், பலனுக்காகவும் , நன்மைக்காகவும் ஹக் நம்மை அனுப்பியது . எம் முரீதுப் பிள்ளைகளின் கேள்விக்கு நாம் பதிலாக உள்ளோம் . அவர்களின் இரத்தத்திலும் , நரம்புகளிலும் நாம் உள்ளோம் .



ஷைகுக்கு சங்கை செய்வோம் :


சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்கள் அமர்ந்திருந்தால் அவர்கள் அருகில் நெருங்கி நிற்கின்றோம் . நம்முடைய ஆடை அவர்களின் ஆடை மீது உராய்கிறது. இதுவெல்லாம் ஒழுங்கீனம் . பல மணி நேரம் பயணம் செய்து வந்தால் அவர்களுக்கு ஓய்வு விடுவதில்லை . வந்தவுடன் தனது கஷ்டத்தையும் கவலையையும் அவர்களிடம் கொட்டித் தீர்த்து விடுவது . நீண்ட பயணத்திலிருந்து வந்துள்ளார்களே , சாப்பிட்டார்களா ? ஓய்வு தேவையே என்றெல்லாம் சிந்திப்பதில்லை . உடனே நான் சந்தித்து விட்டு ஊருக்குச் செல்ல வேண்டும் . வேலைக்குச் செல்ல வேண்டும் என்கிறோம் . அவர்களின் நிலையை நாம் சிந்திப்பதில்லை .

பேசும்போது எச்சில் பறக்கிறது . இதுவெல்லாம் ஒழுங்கீனமானது . சங்கைமிகு வாப்பா நாயகமும் தமது உரைகளில் முரீதுகள் எப்படியெல்லாம் ஷைகிடம் இருக்க வேண்டுமெனக் கூறுகிறார்கள் . நாம் அதனைக் கடைபிடிப்பதில்லை . நாம் எப்படியெல்லாம் இருந்தாலும் அவர்கள் நம்மை அன்புடனும் கருணையுடனும் தாம் பார்க்கிறார்கள் . மேலும் நம்மைப் பார்த்து நல்லவர் , நல்லவர் என ( நாம்தவறிழைத்த போதிலும் ) கூறுகிறார்கள் .


ஒரு ஞானியின் ( மகானின் ) வீட்டில் திருடன் எதையோ தேடிக் கொண்டிருந்தான். ஞானி வந்து தம்பி , எதை நீ தேடுகிறாய் ?  சொல் நானும் உன்னுடன் தேடிக்கொடுக்கிறேன் என்றார் . ஐயா , நான் திருடன் . உங்கள் வீட்டில் திருட வந்துள்ளேன் . நீங்களே எடுத்துக் கொடுக்கிறீர்களா ? என வியப்புடன் கேட்டான் . நான் என் வேலையைச் செய்கிறேன் . நீ உன் வேலையைச் செய் . நீ செய்யும் தொழிலை ( திருட்டை ) நன்றாகச் செய் என்று கூறி ஞானி அனுப்பி வைத்தார் . ஒரு நாள்திருடன் மக்களிடையே மாட்டிக்கொண்டான் . அவனை நீதிபதி விசாரித்து விட்டு உன் தரப்பில் வாதாட யாரும் உள்ளார்களா ? என்று கேட்டார் . திருடனின் உறவினர்கள் அங்கு இருந்தனர் . ஆனால் திருடனுக்காக யார் சிபாரிசு செய்வார் ? ஒருவரும் வரவில்லை . சற்று நேரம் சென்று எனக்கு இன்ன ஞானியைத் தெரியும் என்றான். அனைவரும் கோபப் பட்டனர். ஏன்டா திருட்டுப்பயலே உனக்கு ஞானியைத் தெரியும் என்று பொய் சொல்கிறாயா ? என நீதிபதி கேட்டார் . திருடனும் இல்லை ... ஞானியை அழைத்து வாருங்கள் என்றான். ஞானி வந்து எனக்கு அவனைத் தெரியும் . அவன் நல்லவன் என் பங்காளி என்று மக்கள் மத்தியில் ஞானி கூறி அவனுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார் . அவர் செல்கையில் திருடிய நபர் அவரைப் பின்பற்றினான் . என்னை ஏன் பின்பற்றுகிறாய் ? நீ விடுதலை அடைந்து விட்டாய் . உன் வழியில் செல் என்றார் ஞானி . ஐயா நான் திருடன் . என்னைப் பார்த்து நல்லவன் என்று கூறிய நபர் நீங்கள் தான் . இனி எனக்கு எல்லாமே தாங்களே தான் என்று சரணடைந்தாம் .( சீடரானார் )


நம்மைப் பார்த்ததும் நம்முடைய ஷைகு நாயகம் நல்லவர் எனக் கூறுகிறார்கள் . அவர்கள் நம்மீது வைக்கும் அன்பை இது வெளிப்படுத்துகிறது .


ஷைகை இழிவுபடுத்தியவர் யார் ?

ஷைகு நாயகத்தை உயிரை விட அதிகமாக நேசிக்க வேண்டும். அவர்களின் சொல்படி நடக்க வேண்டும் . சிறிதும் மாற்றம் செய்யக் கூடாது . யார் எமது சொல்லைக் கேட்கவில்லையோ ( சொல்படி நடக்கவில்லையோ ) அவர் எம்மை இழிவுபடுத்தியவர் ஆவார் என்பதாக சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள் . அவர்கள் சொல்வதை செய்துவிட்டு தான் மறுவேலை . அப்படி நடப்பதில் தான் வெற்றியுண்டு .



கவிஞர் . கிளியனூர் இஸ்மத் , சென்னை .


மதுரஸாவில் நான் பேசுவது இது தான் முதல் முறை . நன்றி . நான்ஆரம்பக் காலத்தில் வஹ்ஹாபியாக இருந்தேன். 1985- ஆம் ஆண்டு அந்நஜாத் எனும் வஹ்ஹாபி மாத இதழ் பத்திரிகை முதல் முதலாக ( துபைக்கு ) எனக்கு வந்தது. அப்பத்திரிகையை துபை முழுவதும் கொண்டு செல்ல வேண்டுமென அதிகம் பாடுபட்டேன் . நான் அப்போது துபையிலுள்ள இஸ்லாமிய எழுச்சி மையத்தில் உறுப்பினராக இருந்து வந்தேன் .



முஹம்மது சபீக் எனும் எனது நண்பருடன் இவ்வேலையில் ஈடுபட்டேன். தற்செயலாக கலீபா முஹம்மது காலித் அண்ணன் அவர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு ஏற்பட்டது . அதில் நான் எனது கொள்கையை ( வஹ்ஹாபிய்யத்தை ) வலுப்படுத்திப் பேசினேன். அவர்கள் அதற்குண்டான மறுப்புகளை ஆதாரத்துடன் எடுத்து வைத்தார்கள் . அதில் நான் இப்னு அறபி ( ரஹ் ) அவர்களைப் பற்றி மிகவும் தவறான கருத்துக்களைக் கூறினேன் . நான் கூறியது அனைத்தும் எனது சொந்தக் கருத்துக்கள் இல்லை . அந்நஜாத் என்ற பத்திரிக்கையில் உள்ளது தான் . இதனை அறிந்த காலித் அவர்கள் உண்மையை எடுத்துக் கூறினார்கள் .



அதன் பின் சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்களின் திருக்கரத்தைப் பிடித்தேன் . என் வாழ்வில் பல மாற்றங்கள் ( நல்லதாக ) ஏற்பட்டன . எனது பாஸ் ( முதலாளி ) 5 ஆண்டு காலமாக சிகரெட் பிடிக்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்த நவீன ஊசிகளையும் , மருந்துகளையும் மேற்கொண்டார் . ஆனால் அவரால் விட முடியவில்லை . என்னிடமும் அதைக் கூறியுள்ளார் . நான் ஏறத்தாழ 15 ஆண்டுகளாக புகைப்பழக்கம் உள்ளவன் . சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்களிடம் பைஅத் பெற்றபின் புகைப்பிடிப்பது கேடு , இஸ்லாத்திற்கு முரணானது என்று அவர்கள் கூறியதும் எந்தத் தயக்கமும் இன்றி உடனே புகையை விட்டுவிட்டேன் . அல்லாஹ்வின் கிருபையால் இன்று வரை அதைத் தொட்டது கூடக் கிடையாது .  இன்றும் என்னைப் பார்த்தால் சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்கள் புன்னகையுடன் அதை நீங்க புகைப்பதில்லையே என்று கேட்பார்கள் . இல்லை என்று கூறுவேன் . நான் எனது பாஸை ( முதலாளியை ) ப் போன்று எந்த மருத்துவமும் செய்யவில்லை . குருவின் சொல்லே அனைத்திற்கும் போதுமானது . குருநாதரின் சொல்லைக் கேட்டு அதன்படிச் செய்வதால் மனம் பவர் பெறும் .( இறை ஒளியால் ஜொலிக்கும் )



ஆதங்கம் :


இணைய தளத்தையார் யாரோ எப்படி எப்படியோ பயன்படுத்து கிறார்கள் . ஆனால் நாம் நமது சங்கைமிகு வாப்பா நாயகத்தின் கருத்துக்களை உலகிலுள்ள மக்களுக்கு எடுத்து வைக்க எந்த நடவடிக்கையும் செய்யவில்லை . நம்மிடையே அதிகமான இளைஞர்கள் இருக்கின்றனர் . அவர்களையும் சரியான முறையில் பயன்படுத்துவதில்லை . சங்கைமிகு வாப்பா நாயகத்தின் ஆக்கங்களை வெளிமக்களிடையே எடுத்துச் செல்ல எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . இந்த சபையை வளர்ப்பது நம்மில் ஒவ்வொருவர் மீதும் கடமை .



கொச்சின் A. பஷீர் அஹ்மது ஹக்கிய்யுல் காதிரிய் .


இப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருக்கின்றார்களா ? ஸஹாபாக்கள் இருக்கின்றார்களா ? என்றால் , நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நபித்தோழர்களும் இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது தான் உண்மை .  அவர்கள் இஸ்லாத்தை ( ஏகத்துவத்தை ) மக்களுக்கு மத்தியில் எடுத்து வைத்தது போல ஷைகு மார்களும் அப்பணியைச் செவ்வனே செய்து வருகிறார்கள் .


குறிப்பாக நமது சங்கைமிகு வாப்பா நாயகம் இறைவனைப் பற்றிய ஞான விளக்கங்கள் தருவது மட்டுமல்லாது , வாழ்வியல் , பொருளாதாரம் என எல்லாத் துறைகளிலும் நமக்கு வழி காட்டுகிறார்கள் . செல்வத்தின் விளைவு !


ஏறத்தாழ 17 ஆண்டுகளுக்கு முன் திருமுல்லை வாசலில் எளிய வாப்பா நாயகம் அவர்களின் தர்பாரில் , சங்கைமிகு நமது வாப்பா நாயகமும் ,8  நபர்கள் மட்டும் உடன் அமர்ந்திருந்தோம் . அப்போது நான் வாப்பா ! ஃபைஜி தரீகாவில் உள்ள முரீதுகள் அனைவரும் பெரும் செல்வந்தராக இருக்கின்றனர் . ஆனால் நமது பிள்ளைகள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் எனக் கேட்டேன் .

நமது பிள்ளைகள் செல்வந்தராக ஆகுவது பெரும் விஷயமல்ல . ஆனால் அவர்கள் செல்வம் வந்தால் மாறிவிடுவார்கள் .( பெருமை , பணிவு இல்லாமை , உயர்வை விரும்புதல் , பதவிக்கு ஆசைப்படுதல் , ஒற்றுமையின்மை ) என்பதைத் தான் நாம் கவலைப்படுகிறோம் என்று சங்கைமிகு வாப்பா நாயகம் விளக்கம் கூறினார்கள் .


சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்கள் கூறியதை இன்றளவும் நாம் பார்க்கிறோம் . ஆரம்பக் காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு வாப்பா நாயகமவர்களின் மூலம் ( கிருபையால் ) தொழில்தொட்டு , செல்வம் பெற்றவர்கள் இன்று எந்தநிலையில் ( அழிவில் ) உள்ளார்கள் என்பதை பார்க்கிறோம் . எந்நிலையிலும் அவர்கள் காலடியில் வாழும் நற்கிருபையை ஹக்கு எனக்கும் உங்களுக்கும் தந்தருளுமாக ! ஆமீன் .



கிப்லா ஹள்ரத் , மெளலவி N. அப்துஸ் ஸலாம்ஆலிம் B.Com;H.Q  திருச்சி .


சங்கைமிகு வாப்பா நாயகத்தின் ஆசைகள் , இலட்சியங்கள் நிறைவேறி வருவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம் . ஏறத்தாழ 18 ஆண்டுகள் நமது மதுரஸாவில் ஒரு கட்டடம் தான் இருந்தது . ஹக்கின் கிருபையால் இரண்டு ஆண்டுகளில் இப்போது மதுரஸாவில் 4 கட்டடங்கள் உள்ளன . முன்பை விட மதுரஸா வளர்ச்சியடைந்துள்ளது . மேலும் சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்கள் கூறியதைப் போன்று பல்கலைக் கழகத்தின் பக்கம் தனது தடையில்லாப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறது மதுரஸா .


ஆண்டுதோறும் துபை மெய்ஞ்ஞான சபையின் மூலமாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் புனித மீலாதை முன்னிட்டு இணையதளத்தில் கேள்வி - பதில் போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டது. அதே போன்று இவ்வாண்டும் பெருமானாரின் வாழ்க்கை வரலாறை ( முழுமையாக ) மக்கள் படித்து பயன்பெற வேண்டும் என்பதால் இணையதளத்தில் கேள்விகள் கேட்கப்பட்டது போல் நேரடியாகக் கடிதத்தின் மூலம் கேட்கப்பட்டிருந்தது. இவ்வாண்டு தமிழ்நாடு முழுவதுமாக 1890 நபர்கள் போட்டியில் பங்கு பெற்றிருந்தனர் . இதனை சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்களிடம் திருச்சி இரட்டை வாய்க்கால் திரு இல்லத்தில் காட்டினோம் . அவர்கள் உண்மையிலேயே அத்தனை பேரும் எழுதினார்களா ? என வியப்புக் கலந்த மன மகிழ்வுடன் கேட்டார்கள் . ஆம் என்று பதில் கூறப்பட்டது . உண்மையில் சபை இப்பொழுது தான் செல்ல வேண்டிய பாதையில் செல்கிறது என்று சங்கைமிகு வாப்பா நாயகமவர்கள் கூறினார்கள் .


தமிழ்நாட்டில் பிரபல பத்திரிகைகளின் மூலம் நடத்தப்படும் கேள்வி - பதில் போட்டிகளில் 200,300 அல்லது 400 போட்டியாளர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர் . நமது சபையின் ( துபையின் ) மூலம் நடத்தப்பட்டதில் 1800 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் .( இதுவும் சாதனையே ).



மதுரஸாவில் தங்கி படிப்பதற்குத் தகுதியற்றவர் , தனது ஆடைகளைத் தன்னால் துவைக்க இயலாதவர் , அறபு மற்றும் தமிழ் ஆகிய இரு கல்விகளையும் சேர்ந்தார் போல பயில முடியாதவர் ( சிறுவர் ) என்ற காரணத்தினால் அப்போதுள்ள கல்விக் குழுவினரால் மதுரஸாவில் சேர்க்கப் படாதவர் மெளலவி K. முஹம்மது யாஸீனிய் . அந்தப் பையனை அனுமதியுங்கள் . எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் , அவனை ப்படிக்க வைக்கிறேன் . அப்படி முடியாவிட்டால் எனது சம்பளத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்பதாக பேராசிரியர் காளமேகம் M.A.,M.Phil M.A.,( தமிழ்ஆசிரியர் ) அவர்கள் கல்விக் குழுவிடம் அனுமதி கேட்டுப் படிக்க வைத்தார்கள் . நமது மதுரஸாவில் 7 ஆண்டுகள் படித்து மெளலவி யாஸீனிய் பட்டம் பெற்று வெளியில் சென்று +1,+2 படித்து நல்ல மதிப்பெண் (1093) பெற்றுள்ளார் . இவரைக் கண்டு சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்கள் பேரானந்தம் கொண்டார்கள் . அவர்தற்போது M.B.B.S. படிக்க ஆக்கமும் , ஊக்கமும் , வாழ்த்தும் கூறியுள்ளார்கள் சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்கள் .


திருச்சி சிங்காரத் தோப்பில் தையற் கடை வைத்துள்ள ரப்பானீ தரீக்காவின் கலீபா எனக்கு நல்ல நண்பர் . அவர் மதுரஸா காலண்டரைப் பார்த்து விட்டு கிப்லா ஹள்ரத் அவர்களே , உங்கள் மதுரஸாவிற்கு ஹஸனைன்  என்று பெயர் வைத்தது யார் ? என்று கேட்டார் . எங்களது சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்கள் தாம் அந்தப் பெயரை தங்களது மதுரஸாவிற்கு வைத்தார்கள் எனக்கூறி , நமது ஷய்கு நாயகமவர்களைப் பற்றியும் எடுத்துக் கூறினேன் . நீங்கள்அங்கே என்னவாக உள்ளீர்கள் ? நான் கல்விக்குழுவின் ஓர் உறுப்பினராவேன் வாரம் இருமுறை சென்று மாணவர்களின் கல்வியை அறிந்து வருகிறேன் என்றேன் .



இதையெல்லாம் கேட்டுவிட்டு அவர் பின்வரும் வரிகளைப் பேரானந்தத்துடன் கூறினார் . அவை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவைகள் .



சிலர் மதுரஸதுல் ஹஸன் அல்லது மதுரஸதுல் ஹுஸைன் என்று பெயர் வைப்பார்கள் . ஆனால் உங்களது மதுரஸாவிற்கு மதுரஸதுல் ஹஸனைன் என இமாம் ஹஸன் ( ரலி ), இமாம்ஹுசைன் ( ரலி ) ஆகிய இருவரின் பெயரையும் வைத்துள்ளீர்கள் . நீங்கள் யாரும் மதுரஸாவிற்குச் செல்லாவிட்டாலும் ( இன்ஷாஅல்லாஹ் ) கியாமத் நாள் வரை எந்தத் தடையுமின்றி மதுரஸா மிகச் சிறப்பாக நடைபெறும் என்பதாகக் கூறினார் .


இந்நிகழ்வை சங்கைமிகு வாப்பா நாயகமவர்களிடம் கூறியபொழுது மிகவும் மகிழ்ந்தார்கள் . மற்றொரு முறை சொல்லுங்க என்று கூறி பேரானந்தமடைந்தார்கள் .இமாம் ஹஸன் , ஹுசைன் ( ரலி ) அவர்கள் இருவர் மீதும் எவ்வளவு அன்பு வைத்திருந்தால் இவ்வாறு அவர் ( தையற்காரர் ) கூறியிருப்பார் . அவர் சொர்க்கவாதி எனக் கூறுங்கள் என என்னிடம் கூறினார்கள் . இந்தச் சுபச்செய்தியை அவரிடம் கூறியதும் மகிழ்ந்து போனார் .15 ஆண்டு காலமாக எனது ஷைகிடம் கலீபாவாக உள்ளேன் . அவர்கள் கூட என்னை இவ்வாறு ( சுவர்க்கவாதியென ) கூறியதில்லை என்றார் .


இவைகளெல்லாம் நமது சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்களின் புகழும், சபையின் வளர்ச்சியும்மதுரஸாவின் மாண்பும் உயர்வடைந்துள்ளன என்பதைக் காட்டுகின்றன. மேலும் வளர்ச்சியடைய நாம் ஒவ்வெருவரும் பாடுபடுவோம். இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் ,


  • சங்கைமிகு அஸ்ஸய்யித் மஸ்ஊது மெளலானா அல்ஹாதி அவர்கள் ,

  • சென்னை பொறியாளர் ஹைதர் நிஜாம் BE., அவர்கள் ,

  • திருச்சி முனைவர் பேராசிரியர் A.கான் முஹம்மது M.A.,M.Phil., P.hd., அவர்கள் ,

  • திண்டுக்கல் கலீபா .ஆலீம் புலவர் S.ஹுஸைன் முஹம்மது மன்பயீ அவர்கள் ,

  • மதுக்கூர் கலீபா காலித் ஷா ஆகியோரின் உரைகள் இடம் பெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்